பார்வையற்றோர் குறித்தும், பார்வையின்மை பற்றியும், உரையாட, பார்வையற்றோரின் படைப்பாக்கத்தை உலகிற்கு முன்வைக்க, விழிச்சவால், விரல்மொழியர் வரிசையில் மற்றுமோர் புதிய முயற்சி ‘தொடுகை’
படியுங்கள். மற்றவர்களுக்கும் பகிர்ந்து ஆதரவு தாருங்கள்.
https://thodugai.in

நடுவண் அரசின் நிதிநிலை அறிக்கை கடந்த பிப்பரவரி 1ஆம் தேதி, நாடாளுமன்றத்தில் நடுவண் நிதியமைச்சர் திருமதி. நிர்மலா சீதாராமன் அவர்களால் தாக்கல் செய்யப்பட்டது. இந்த நிதிநிலை அறிக்கையில் மாற்றுத்திறனாளிகள் நலன் புறக்கணிக்கப்பட்டுள்ளதாகவும், இதனை எதிர்த்து மாற்றுத்திறனாளிகளின் அமைப்புகள் எதிர்ப்புப் போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும் எனவும், ஊனமுற்றோருக்கான தேசிய மேடை (NPRD) அறிக்கையின் வாயிலாகக் கேட்டுக்கொண்டுள்ளது.
இதனையடுத்து, அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகள் சங்கம் (Taratacg) மாநிலமெங்கும் நடுவண் அரசின் பட்ஜெட்டை எதிர்த்துத் தீவிரப் போராட்டங்களுக்கு அறைகூவல் விடுத்து நேற்று 02.02.2023 அன்று அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் சட்டத்தை அமல்படுத்துவதற்கு கடந்த ஆண்டு ஒதுக்கப்பட்ட ரூ. 240.39 கோடியில் இருந்து 150 கோடி ரூபாயாக (90 கோடி ரூபாய்) கடுமையாக நிதி குறைப்பு.!
· மத்திய அரசு தரும் மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை பங்கு, தற்போது வரை ரூ.300 மட்டுமே.! அதுவும் நாட்டிலுள்ள மொத்த மாற்றுத்திறனாளிகளில் 3.8 சதவீதம் பேருக்கு மட்டுமே அதாவது வறுமைக்கோட்டுக்கு கீழுள்ள 80 சதவீதத்துக்கு மேல் ஊனம் உள்ளவர்களுக்கு மட்டுமே வழங்குகிறது.! பத்தாண்டுகளுக்கு மேலாகியும், மோடி அரசு இதனை உயர்த்த மறுப்பு.!
· கிராமப்புற மாற்றுத்திறனாளிகளும் பயன்பெற்றுவரும் 100 நாள் வேலை திட்டத்திற்கு அதிர்ச்சி அளிக்கிற வகையில் 30% நிதி – ரூ.13,000 கோடி குறைப்பு.!
· உலக வறுமை பட்டியலில் மிக மோசமாக 107வது இடத்திற்கு இந்தியா தள்ளப்பட்டுள்ள நிலையில், ஊட்டச்சத்து இல்லாதது மாற்றுத்திறனாளிகளை கூடுதலாக உருவாக்குகிற அபாயம் உள்ள நிலையில், ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து-ஐசிடிஎஸ். பிரதம மந்திரி போஷன் யோஜனா மற்றும் உணவுத் திட்டங்களுக்கான ஒதுக்கீடுகளுக்கு கடும் நிதி வெட்டு.!
· உரிமைகள் சட்டம்-2016 அமலுக்கு வந்த 5 ஆண்டு காலத்துக்குள் அனைத்து பொதுக்கட்டிடங்களும் மாற்றுத்திறனாளிகள் அணுகத்தக்க வகையில் மாற்றி உருவாக்க உரிமைகள் சட்டம் விதித்தபோதிலும், மோடி அரசு நிறைவேற்ற மறுப்பு.!
· பொதுத்துறையில் வேலை வாய்ப்புகள் குறைந்து வருவதால், வேலைவாய்ப்பு நெருக்கடியை சமாளிக்க, தனியார் துறையில் மாற்றுத்திறனாளிகளை பணியமர்த்த நிறுவனங்களுக்கு ஊக்கத்தொகைகள் அறிமுகப்படுத்த உரிமைகள் சட்டம் வலியுறுத்துகிற நிலையில், இதனை செய்ய மோடி அரசு மறுப்பு.!
மாற்றுத்திறனாளிகளை – ஏழைகளை ஒட்டுமொத்தமாக புறக்கணிக்கும், ஏமாற்றும், கார்ப்பொரேட் முதலாளிகளுக்கு ஆதரவான மோடி அரசின் மோசடி பட்ஜெட்டை கண்டித்தும், எதிர்ப்பு தெரிவிக்கிற வகையிலும் ஆங்காங்கே கண்டனப் போராட்டங்கள் நடத்த அகில இந்திய சங்கம் – ஊனமுற்றோர் உரிமைகளுக்கான தேசிய மேடை அறைகூவல் விடுத்துள்ள நிலையில், அதனை ஏற்று தமிழகம் முழுவதும் ஆங்காங்கே உடனடியாகப் போராட்டங்கள் நடத்திட தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் மாநில தலைமையின் சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.!” என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Be the first to leave a comment