பார்வையற்ற தோழர்களே! எது உங்கள் தெரிவு?

பார்வையற்ற தோழர்களே! எது உங்கள் தெரிவு?

,வெளியிடப்பட்டது

அரசு பிரெயில் வள மையம் ஒன்றை (State Braille Resource Centre) ஏற்படுத்துவது காலத்தின் உடனடித் தேவையாகும். உரியவர்கள் அரசுக்கு இதை முக்கியக் கோரிக்கையாகக் கொண்டு செல்லுங்கள்.

லூயி பிரெயில்
லூயி பிரெயில்

பார்வையற்றவர்கள் பிரெயில் புத்தகங்களைத் தவிர வேறு போக்கிடம் இன்றித் திரிந்த காலங்கள் மலையேறிவிட்டன. ஒலிப்புத்தக காலம் அடுத்த வெர்ஷனுக்குத் தாவி, எல்லாம் இயந்திர ஒலிமயம் என்ற காலத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். இன்றைய சூழலில், ஒரு பார்வையற்றவரால் பிரெயிலை முற்றிலுமாகத் தவிர்த்துவிட்டு, தன் படிப்பை முன்னெடுத்து முனைவர் பட்டமே வாங்கிவிடலாம். எதுவும் தடையாக இருக்கப்போவதில்லை.

ஏனெனில், அவர் கணினியில் கை தேர்ந்தவராக இருப்பார். அறிதலின் உள்ளீட்டுக்காக செவியால் கேட்டு, பல புத்தகங்களை வாசித்துக்கொள்வார். அதன்வழியே அவருக்குள் பெருகும் சிந்தனைகளை அதே கணினிகொண்டு தட்டச்சு செய்து தன் கருத்துகளாக வெளியிடுவார். அவரை அறிஞர், சாதனையாளர், தொழில்நுட்ப நிபுணர் என்றெல்லாம் உலகம் போற்றும். “முகக் கண்ணில் ஒளியில்லை என்றாலும், தன் அகக்கண்ணில் சூரியனையே வைத்திருப்பவர்” என்றெல்லாம் தாங்களும் புலகாங்கிதம் அடைந்து, அவரையும் புல்லரிக்கச் செய்துவிடுவார்கள் மக்கள்.

ஆனால், அவரின் அகத்தில் ஓர் ஆழமின்மையின் உறுத்தல் எப்போதும் அவரைத் தொந்தரவு செய்தபடியே இருக்கும். பக்கம் பக்கமாகத் தட்டச்சு செய்தாலும், பத்தி பத்தியாக மயங்கொலிப் பிழைகள் மண்டிக்கிடப்பதில் அவர் உள்ளூரப் புழுங்குவார். எல்லாம் ஒலிமயம், யாவும் மனனம் என்று பழக்கப்பட்ட அவருக்கு எழுத்துகளின் ஒலிவடிவம் மட்டுமே பரிட்சயம். அச்சோ, பிரெயிலோ, வரிவடிவம் அறிமுகமில்லாததால் தன் மனக்கண்ணில் எழுத்துகள், அவை திரண்டு உருவாகும் சொற்கூட்டத்தின் முகங்களை அவரால் காண இயலாது.

கண்ணை மூடிக்கொண்டு,  தங்கள் பெயரை அச்சுப் பிசகாமல் எழுதும் பார்வையுள்ளவர்களைப் பார்த்திருப்பீர்கள். இதற்குக் காரணம், மொழி அவர்களின் ஆழ்மனதில் தனக்கான ஒரு முகத்தோடு அமர்ந்திருக்கிறது. பொதுவாகவே, தொடுகைக்கு உட்படாத வண்ணங்கள், பண்புகள், உடனடியாக கைக்கு எட்டிவிடாத எது ஒன்றும் எனப் பார்வையற்றவர்களுக்கு இந்த உலகின் சகலமும் சொற்களாகவே அறிமுகம் ஆகின்றன. முதலில் சத்தமாக, ஒலியாக அறிமுகமாகும் அந்தச் சொற்களை, பார்வையற்றவர்கள் தங்களின் எழுத்து வடிவமான பிரெயில் வழியே கையாண்டு, ஆழ்மனதில் சம்மனம் இட்டு அமரச் செய்துவிடுகிறார்கள்.

அறிவுத் தளத்திலோ, அன்றாடத்திலோ, பிரெயிலின் அவசியம் குறித்து ஒரு பார்வையற்றவரிடம் கேட்டுப் பாருங்கள். அவர் தரும் பதில்கள் அகம் சார்ந்தவையாக இருக்கும். இத்தனைக்கும் நடைமுறையில் அவர் திரைவாசிப்பான்கள் வாயிலாக மொபைலையும், கணினியையும் பயன்படுத்திக்கொண்டிரு்ப்பார். பிரெயில் எழுதியோ வாசித்தோ பல ஆண்டுகள் கடந்திருக்கும். பள்ளிப்படிப்போடு பிரெயில் வாசிக்கவில்லை என்று சொல்வார். ஆனாலும், அவரின் சிந்தனைத் தளத்தின் மொழி பிரெயில் முகத்தையே சூடிக்கொண்டிருக்கும். இன்றைய துரித கதி அன்றாடத்தில் எவருக்கும் அகம் சார்ந்தெல்லாம் சிந்திக்க நேரம் ஏது? இங்கே எல்லாமே ஃபாஸ்ட் டெலிவரிகள் ஆகிப்போனது காலத்தின் கட்டாயம் என்று பொறுத்துக்கொண்டிருந்தால், ரீஹாபிலிட்டேஷனையும் பேக் செய்து ஃபாஸ்ட் டெலிவரி செய்யத் துணிந்துவிட்டார்கள்.

ஆறு புள்ளிகள்
ஆறு புள்ளிகள்

உண்மையில், இன்றைய சூழலில் உள்ளடங்கிய கல்வி முறைதான் என்றில்லை, சிறப்புப்பள்ளிகளிலும் பிரெயிலுக்கான முக்கியத்துவம் தடமழிந்து வருகிறது என்பதே எதார்த்தம். பிரெயில் என்றால், அது மொழிப் பாடங்களை எழுதப் படிக்க மட்டும்தான் என்ற கருத்து ஒரு பழக்கமாகவே மாறிவிட்டது. கணிதம் சார்ந்த பிரெயில்முறை பற்றியெல்லாம் யாரும் கருத்தில்கொள்வதே இல்லை. ஒவ்வொரு ஆண்டும் பார்வையற்றோருக்கான நடுவண் அரசு நிறுவனத்தால் வழங்கப்படும் மாணவர்களுக்கான பிரெயில் பைகளில் (Kit Bag) பிரெயில் எழுதுபலகைகள் மட்டும் இருப்பதில்லை. கூடவே, பிரெயில் அளவுகோல்கள், அச்சு மற்றும் பிரெயில் எழுத்துகள் பொறிக்கப்பட்ட தமிழ் ஆங்கில எழுத்துரு பலகைகள், பிரெயில் எண்ணுரு பொறிக்கப்பட்ட வடிவியல் கோணமானிகள் இவைகளும் இருக்கத்தான் செய்கின்றன. ஆனால், அதைக் கையாள்வது குறித்த தெளிவு ஆசிரியர்களுக்கே இருப்பதில்லை. விளைவு, கணிதம் கற்பித்தலுக்கான நிமித் பிரெயில்முறை அழிந்து, இன்று கணிதப் பாடத்துக்கான புத்தகங்களே பிரெயிலில் அச்சடிக்கப்படுவதில்லை என்றாகிவிட்டது.

அத்தோடு, மாணவர்களின் முழுத் தேர்ச்சி என்கிற அழுத்தம் ஆசிரியர்கள் மீது அப்படியே கவிழ்க்கப்பட, பாடங்கள் எல்லாம் பிரெயில் புத்தகங்களாக இருந்தும் பயனில்லை. மாணவன் வினாவிடைக் குறிப்பேட்டையே எதிர்பார்க்கிறான் என்பதால், ஜீபி ஜீபிகளாக குரல்வழிப்பதிவுகளில் பாடப்பகுதியின் வினாவிடைகள் மாணவர்களுக்கு வழங்கப்படுவது தவிர்க்க இயலாததாகிவிடுகிறது.

இவ்வாறு உருவாக்கப்படும் ஒலிப்பதிவுகள் எளிய, தன் பிடிக்குள் அடங்குகிற, எங்கும் எடுத்துச் செல்கிற வசதியைக் கொண்டிருப்பதால் ஒலிவழிக் கற்றலே மாணவர்களின் முதல்த் தெரிவாகவும் இருக்கிறது. அதிக பொருட்செலவு, அதிக இடமடைத்தல் என்பவை பிரெயில் முறையின் மிகப்பெரிய குறைகள். இன்றைய நிலையில், பத்தாம் வகுப்பின் ஓராண்டுக்கான வரலாற்றுப் பாடங்கள் 13 பெரிய பெரிய புத்தகங்களாக அறையை நிறைத்துக்கிடப்பதில் ஒருவித துணுக்குறல் ஏற்படத்தான் செய்கிறது.

சரி, தொழில்நுட்பமாவது இந்தக் குறைகளை நிவர்த்தி செய்து, பிரெயிலைக் கையடக்கமாக மாணவர்களிடம் கொண்டு சேர்க்கும் என நம்பினால், அவை விலை உயர்ந்தனவாக இருக்கின்றன. சரி, எத்தனை விலைகொடுத்தேனும் ஒரு கருவியைக் கைவசப்படுத்தினால், அது உருவாக்கும் இயந்திரவியல் கோளாறுகள், அதனால் உண்டாகும் மன உலைச்சல்கள் ஏராளம். போதாதற்கு, பிரெயிலை நவீனப்படுத்துகிறோம் என்ற பெயரில் ஏதோ ஒரு கருவியைச் செய்து அதை வியாபாரம் செய்து இலாபம் பார்க்கத் துணிந்துவிட்டார்கள் சில தொழில்நுட்பக் கயவர்கள்.

இதற்கெல்லாம் என்னதான் தீர்வு?

  1. முதலில் பார்வையற்றவர்களுக்கு அடிப்படை பிரெயில் பயிற்சியைக் கட்டாயமாக்க வேண்டும்.
  2.  பள்ளி வயது பார்வைத்திறன் குறையுடைய குழந்தையின் கற்றல் மற்றும் கற்பித்தல் நடவடிக்கைகளில் பிரெயில் உள்ளிட்ட சிறப்புப் பயிற்சிகள் இடம்பெறுவதை அரசு உறுதி செய்ய வேண்டும்.
  3.  பார்வைத்திறன் குறையுடையோருக்கான அரசு தொடக்கப்பள்ளிகளை நடுநிலை வரையிலாவது தரம் உயர்த்திட வேண்டும்.
  4. பார்வைத்திறன் குறையுடையோருக்கான சிறப்புப் பள்ளிகளில் சிறப்பு பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் போதுமான அளவில் பணியாற்றுவதை அரசு உறுதி செய்ய வேண்டும்.
  5. தற்போது செயல்பாட்டில் இல்லாமல் முடங்கிக் கிடக்கிற அரசு பிரெயில் அச்சகத்துக்குப் புத்துயிர் அளிக்கப்பட வேண்டும்.
  6.  இவை அனைத்தையும் செயல்படுத்தும் வகையில், தொடர் கண்காணிப்புக்கு உட்படுத்தி மேம்படுத்தும் வகையில் அரசு பிரெயில் வள மையம் ஒன்றை (State Braille Resource Centre) ஏற்படுத்துவது காலத்தின் உடனடித் தேவையாகும். உரியவர்கள் அரசுக்கு இதை முக்கியக் கோரிக்கையாகக் கொண்டு செல்லுங்கள்.
  7.  இறுதியாக, ஜனவரி 4 லூயி பிரெயில் அவர்களின் பிறந்தநாளை, ‘பார்வையற்றோர் கல்வி வளர்ச்சி நாளாக’ தமிழக அரசு அறிவிக்க வேண்டும்.

அன்றாடம் புழங்க ஒலிநுட்பம் போதும்,

அகம் துலங்க பிரெயில் நுட்பம் வேண்டும்.

பார்வையற்ற தோழர்களே! எது உங்கள் தெரிவு?

***சகா

தொடர்புக்கு: anbullasaga@gmail.com

***ஜனவரி 4, பிரெயில்முறையைக் கண்டறிந்த லூயி பிரெயில் அவர்களின் பிறந்தநாள்.

தொடர்புடைய கட்டுரைகள்:

பிரெயில் பழக்குவோம், பரவலாக்குவோம்

அனைவருக்கும் பிரெயில்தின வாழ்த்துகள்

பிரெயில் தின வாழ்த்துகள்

பகிர

1 thought on “பார்வையற்ற தோழர்களே! எது உங்கள் தெரிவு?

உங்கள் கருத்தை உள்ளிடுங்கள்