நேர்படப்பேசு, நீதிக்கான மன்றாட்டு!

நேர்படப்பேசு, நீதிக்கான மன்றாட்டு!

,வெளியிடப்பட்டது

மாற்றுத்திறனாளிகளின் அரசியல் பங்கேற்பு குறித்து வழக்கமாக ஒலிக்கும் முழக்கக்குரல்களைக் கேட்டே பல மாதங்கள் ஆகிவிட்டது

டிசம்பர் 3, உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தை ஒட்டி, முன்னணி செய்தி ஊடகங்களில் தலையங்கம் ஏதேனும் இருக்கிறதா எனப் புரட்டினேன். ஏமாற்றமே மிஞ்சியது. அந்தக் குறையைப் போக்கும் வகையில், நேற்று, (03.12.2022) தினத்தின் முடிவில் புதியதலைமுறை தொலைக்காட்சி மாற்றுத்திறனாளிகள் பொருண்மை தொடர்பான நேர்படப்பேசு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தமை வரவேற்புக்குரியது.

அழைக்கப்பட்டிருந்த நாள்வரின் பேச்சுநடை ஒன்றுக்கொன்று மாறுபட்டவை என்றாலும் அத்தனையும் கவரும் ரகம்.

திரு. ராஜாவினுடையது பிரகடனங்கள் என்றால், திரு. தமிழ்மணியினுடையது பகடி சார்ந்த எதார்த்த உரை.

கச்சிதமான பாந்தக்குரலில் ஐயா பாலச்சந்திரன் என்றால், சிட்டுக்குருவியின் சிறகசைவுபோல அக்கா சல்மாவின் குரல்.

நாள்வரின் நிதானமான பேச்சிலும்,பல சட்டங்களைப் பிறப்பிப்பதற்குத் தேவையான அடிக்குறிப்புகள் அதிகம் இருந்தனவேயன்றி, எவருடைய உரைகளிலும் எது குறித்தும் சாடல்களோ, கூச்சல்களோ இல்லை என்பது மிகப்பெரிய ஆறுதல்.

மாற்றுத்திறனாளிகள் என்ற பொதுமைப்படுத்தலில் பார்வையற்றவர்களின் தனித்த கோரிக்கைகள் மழுங்கடிக்கப்படுகிற எதார்த்தத்தை ராஜா அழுத்தமாகவே சுட்டிக்காட்டினார்.

“மெரினா போன்ற பளபளக்கும் இடங்களை விடுங்கள், ரேஷன் கடைகளில் இதுபோன்ற தனிவரிசை ஏற்பாடுகள் இருக்கின்றனவா?” என அதிரடித்தார் தமிழ்மணி.

மாற்றுத்திறனாளிகளின் பிரச்சனைகளை மாற்றுத்திறனாளிகள்தான் பேச வேண்டும் என்கிற நிலையே சரியானது அல்ல என்றதோடு, ஆளும் அரசு கவனத்தில்கொள்ள வேண்டிய பல கருத்துகளைத் தன் உரையில் அடுக்கியபடியே இருந்தார் ஐயா பாலச்சந்திரன்.

மாற்றுத்திறனாளிகள் தொடர்பான எல்லாப் பணிகளும் கலைஞர் காலத்திலேயே தொடங்கிவிட்டதாகவும், இடையில் ஆட்சி மாற்றத்தைச் சந்தித்த பத்தாண்டுகள் அத்தனையும் தேக்கம் கண்டுவிட்டதாகவும் அரசின் பக்கம் நின்று சூழுரைக்கவெல்லாம் இல்லை, சுமூகமாகவே எடுத்துச் சொன்னார் அக்கா சல்மா.

மாற்றுத்திறனாளிகளின் அரசியல் பங்கேற்பு குறித்து வழக்கமாக ஒலிக்கும் முழக்கக்குரல்களைக் கேட்டே பல மாதங்கள் ஆகிவிட்டது என்ற குறையை நிகழ்ச்சியின் இறுதியில் தொகுப்பாளினி தீர்த்துவைத்துவிட்டார்.

நீட்டியும் முழக்கியும் முக்கால் மணிநேரம் நடைபெற்ற விவாதத்தின் எல்லாவற்றையும் ராஜா இறுதியில் கேட்ட ஒற்றை வரிக் கேள்விக்குள் அடக்குவதே மிகப் பொருத்தமானதாக இருக்கும். அது வெறும் கேள்வியோ முறையீடோ அல்ல, நிதர்சனத்தைப் பிரதிபளிக்கும் ஒற்றைக் குறியீடு.

வாழ்த்துகள் அனைவருக்கும்.

***ப. சரவணமணிகண்டன்

பகிர

Be the first to leave a comment

உங்கள் கருத்தை உள்ளிடுங்கள்