கனவு மெய்ப்பட கைகொடுங்கள்!

கனவு மெய்ப்பட கைகொடுங்கள்!

,வெளியிடப்பட்டது

இசைத்துறையில் பெரிய அளவில் சாதிக்கத் துடிக்கும் சபரீஷின் மனதில் ஆழப் பதிந்திருக்கும் ஒரு கனவு ஒலிப்படம் (audio film).
திரு. சபரீஷ் அவர்களைத் தொடர்புகொள்ள:
9843846714

சபரீஷ்
சபரீஷ்

கோவையைச் சேர்ந்த இசைக்கலைஞர் சபரீஷ். இசையையே தன் வாழ்க்கையாகக்கொண்ட பார்வையற்ற இளைஞன்.

இதுவரை 14 இசைத்தொகுப்புகளை வெளியிட்டிருக்கிறார். திரைப்பட நடிகர் திரு. பாக்கியராஜ் அவர்களின் கைகளால் இவருடைய இரண்டு இசைத்தொகுப்புகள் வெளியிடப்பட்டு, வரவேற்பைப் பெற்றுள்ளன.

இசைத்துறையில் பெரிய அளவில் சாதிக்கத் துடிக்கும் சபரீஷின் மனதில் ஆழப் பதிந்திருக்கும் ஒரு கனவு ஒலிப்படம் (audio film). Spotify போன்ற பாட்காஸ்ட் தளங்களின் வழியே ஆடியோ கதைகள், உரைகள், நாடகங்களுக்கான வரவேற்பு பெருகியிருக்கிறது. எனவே, முழுக்க முழுக்க பார்வையற்றவர்கள் பங்களிப்பில் ஒரு ஆடியோ ஃபிலிம் செய்து, மறைந்து கிடக்கும் பல பார்வையற்றவர்களின் திறமையைப் பொதுச்சமூகத்திடம் எடுத்துச் செல்ல நினைக்கிறார் சபரீஷ்.

ஒரு உண்மை நிகழ்வைத் தழுவித் திட்டமிடப்பட்டிருக்கிற இந்த ஆடியோ படத்தின் கதையில்  திறமையும் நல்ல குரல் வளமும் கொண்ட பார்வையற்றவர்கள் கதைமாந்தர்களாக நடிக்கவிருக்கிறார்கள். இது தவிர, வசனகர்த்தா, பாடல் ஆசிரியர், பாடகர்கள் இசைக்கலைஞர்கள் என முழுக்க முழுக்க இது பார்வையற்றவர்களின் பங்களிப்பாய் மிளிரப்போகும் படம் என்கிறார் சபரீஷ்.

தனது இந்த முயற்சியின் வழியாக, காட்சி ஊடகமான திரைத்துறையிலும் பார்வையற்ற நம்மவர்கள் குரல் மற்றும் மொழி சார்ந்த டப்பிங், இசை, கதைவசனம் போன்ற களங்களில் கால்பதிக்கும் வாய்ப்பு உருவாகும் என நம்பிக்கையாகச் சொல்கிறார்.

படப்பிடிப்பு அரங்கமோ, ஒளிப்படக் கேமராக்களோ படத்துக்குத் தேவைப்படாது. மொத்தமும் குரல்களின் மூலமாக, துல்லியமான இசையின் வழியே கேட்போரின் மனதைக் கவரும் வகையிலான முயற்சி இது. ஒலிப்பதிவுக்கூடம் (recording theatre), கலைஞர்களுக்கான ஊதியம் என இந்த முயற்சிக்கு ஆகும் செலவினை, கூட்டுநிதி (Crowd Funding)மூலமாகத் திரட்டவும் முடிவுசெய்திருக்கிறார் சபரீஷ்.

கேட்போர் மனம் கவரும் குரலுக்குச் சொந்தக்காரர்களாய், இசைக்கருவி மீட்டுவதில் கைதேர்ந்த கலைஞர்களாய், புத்தாக்க சிந்தனைகொண்ட படைப்பாளிகளாய்  இருந்தும்கூட, தன்னுடைய திறமையை எங்குமே வெளிப்படுத்த இயலாமல், உள்ளுக்குள் குமைந்துகொண்டிருக்கும் பல திறமையான பார்வையற்றவர்கள் நம்மிடம் இருக்கிறார்கள். அரசுப்பணி, ஆசிரியர் என உலகியல் சார்ந்து அவர்களுள் சிலர் அமைந்துவிட்டாலும், டெலகிராம், வாட்ஸ் ஆப் எனக் குறுகிய வட்டத்துக்குள்ளேனும், இறக்கிவைக்கவே இயலாமல்ப்போன தன்னுடைய கனவின் தீற்றல்களைப் பொழிந்தபடி இருக்கிறார்கள்

அத்தகைய நம்மவர்கள் சபரீஷ் அவர்களின் முயற்சிக்கு ஊக்கமும் ஆக்கமும் வழங்கலாம்.

இதை வாசிக்கும் பொதுமக்களும் தங்களுடைய கொடைகளின் வழியே சபரீஷின் உயரிய நோக்கத்தில் ஒன்றிணையலாம்.

உண்மைக் கலைஞனின் உயரிய கனவு இது. மெய்ப்பட கைகொடுங்கள்.

திரு. சபரீஷ் அவர்களைத் தொடர்புகொள்ள:

9843846714

Be the first to leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *