இந்தச் செயல்முறையைச் செயல்படுத்த வேண்டுமானால், 500 கேபிக்கு மிகாத பிடிஎஃப் அல்லது ஜேபிஜி வடிவிலான ஆதார் பதிவேற்றுவது கட்டாயம்

அரசாங்கத்தின் கராரான உத்தரவைப் பின்பற்றாவிட்டால் நான் என்ன குடிமகன்? உடனே எனது மின் இணைப்பு என்னோடு ஆதார் எண்ணையும் இணைத்துவிட முடிவுசெய்தேன்.
இந்தச் செயல்முறையைச் செயல்படுத்த வேண்டுமானால், 500 கேபிக்கு மிகாத பிடிஎஃப் அல்லது ஜேபிஜி வடிவிலான ஆதார் பதிவேற்றுவது கட்டாயம் என்பதால், அருகிலிருந்த மையத்தில் அதை ஸ்கேன் செய்து எடுத்துவந்தேன். அங்கேயே இணைப்பைச் சாத்தியமாக்கியிருக்கலாமே என்று நீங்கள் கேட்கலாம்.
அப்படிச் செய்துவிட்டால் சமுதாயத்தின் மீதான எனது போற்றுதலுக்குரிய அக்கறையை நிரூபிக்கும் ஒரு வாய்ப்பு பரிபோய்விடுமே. எப்படியும் அரசாங்க இணையதளத்தில் அக்சசபிலிடி தொடர்பான பிரச்சனைகள் அதிகம் இருக்குமே! ஆனால் இந்த தளத்தில் பெரிதாக எந்த சிக்கலும்இல்லை. திரைவாசிப்பானுக்கு உகந்த மிக மிக எளிதான வழிமுறைகளாக வடிவமைத்திருக்கிறார்கள். ஒரே ஒரு இடத்தில்தான் சிக்கல். ஆனால், அதுதான் முக்கியமான இடமும்கூட.
ஒருமுறை முயன்று பார்த்தவர்கள் அந்தச் சிக்கல் எங்கே என்பதை அறிந்தே இருப்பீர்கள். எனவே, இதுவரை முயலாதவர்களுக்கு இந்தத் தளம் எளிமையானது என்பதை விளக்கவும், அந்த முக்கியமான சிக்கலை உரியவர்களுக்குக் கோடிட்டுக் காட்டவும் படிப்படியாகவே இணைப்பு பிராசசை விளக்குகிறேன்.
இணைப்பைச் செயல்படுத்த முதலில்,
https://nsc.tnebltd.gov.in/adharupload/
இந்த இணைப்பில் சென்று, அங்கே முதலில் கொடுக்கப்பட்டுள்ள எழுது கட்டத்தில் (edit box)என்னுடைய மின் இணைப்பு எண்ணை உள்ளிட்டேன்.

பிறகு, மடிக்கணினி மூலம் இதைச் செய்வதால், B பொத்தானை அழுத்தி, எண்டர் பட்டன் (enter button) என்ற இடத்தில் எண்டர் அழுத்தினேன்.
அதனைத் தொடர்ந்து வந்த அடுத்த திரையில், எனது இணைப்போடு தொடர்புடைய அலைபேசி எண் காண்பிக்கப்பட்டது. அதற்கு ஒருமுறை கடவுக்குறியீடு (OTP) அனுப்பலாமா வேண்டாமா என்பதைத் தெரிவு செய்யும் வகையில், ஆம்/இல்லை பொத்தான்களில் (yes/no Radio Buttons) ஒன்றைத் தெரிவுசெய்ய வேண்டும்.
ஆம் என்றால், அடுத்த திரையில் ஒருமுறைக் கடவுக்குறியீடு நமது எண்ணுக்கு வரும். வேறு எண்ணைத் தர விரும்பினால் இல்லை என்பதைத் தெரிவு செய்யலாம்.
அதன்பின், B பொத்தானை அழுத்தி, எண்டர் பொத்தான் என்ற இடத்தை அடைந்து அங்கே எண்டர் செய்தேன்.
அடுத்து வந்த திரையில், ஒருமுறைக் கடவுக்குறியீட்டைப் பெறவேண்டிய அலைபேசி எண்ணை உள்ளிட்டு, செண்ட் ஓடிபி என்ற பொத்தானைக் க்லிக் செய்தேன். அதனைத் தொடர்ந்து என் எண்ணுக்கு வந்த ஒருமுறைக் கடவுக்குறியீட்டை அடுத்த திரையில் உள்ளிட்டு, அந்த மொபைல் எண்ணை வேலிடேட் செய்தேன்.
தொடர்ந்து விரிந்த அடுத்த திரையில், இணைக்கப்பட வேண்டிய எனது ஆதார் எண்ணை உள்ளிட்டேன். அந்த இடத்தில் காணப்படும் மூன்று ரேடியோ பொத்தான்கள் முக்கியமானவை. மின் இணைப்பு நமக்குச் சொந்தமானது எனில், ஓனர் என்பதை டிக்செய்ய வேண்டும்.
குடியிருப்பவர் என்றால், அதற்குரிய தெரிவினை மேற்கொள்ளலாம்.
இணைப்பு நம்முடையதுதான் ஆனால், இன்னும் பெயர் மாற்றம் செய்யப்படவில்லை எனில், name not transfer என்பதைத் தெரிவு செய்ய வேண்டும்.
அடுத்ததும் முக்கியமானதுமான படியைத்தான் பார்வையற்றவர்களால் தனித்து ஏறிக் கடந்துவிட முடியாது.
500 கேபிகளுக்கு மிகாத நம்முடைய ஆதாரை நாமே பதிவேற்ற முயன்று க்லிக்கபுல் ப்ரவுஸ் என்று திரைவாசிப்பான் சொல்கிற இடத்தில் எண்டர் அழுத்தினால் எதுவும் நடப்பதில்லை. கணினியில் உள்ள பக்கவாட்டு எண்டர் பொத்தான், அருகாமை எண்டர் பொத்தான், போதாததற்கு ஸ்பேஸ் பார் என எதை எதையோ தட்டியும் குத்தியும் அடித்தும் பார்த்துவிட்டேன்.
browse என்பதை மௌஸ் கொண்டு மட்டுமே க்லிக் செய்ய முடியும் என்பதால், அங்கே பார்வையுள்ள ஒருவரின் உதவி நமக்குத் தேவைப்படுகிறது. மகளின் கைபிடித்தே அந்தப் படியேறிக் கடந்தேன்.

இறுதியாக, அவர்களின் விதிமுறைகளை ஒப்புக்கொள்வதற்கான தெரிவினை மேற்கொண்டு சப்மிட் கொடுத்தால், அடுத்த திரையில் “மின் இணைப்போடு ஆதார் எண் இணைப்பதற்கான உங்கள் கோரிக்கை பெறப்பட்டது, இணைக்கப்பட்ட விவரம் உங்களுடைய அலைபேசி எண்ணுக்குத் தெரிவிக்கப்படும்” என்ற அறிவிப்பு காண்பிக்கப்பட்டது.
திரைவாசிப்பானுக்கு உகந்த வகையில் எளிமையாக வடிவமைக்கப்பட்டுள்ள இந்தத் தளமும்கூட முக்கியமான இடத்தில் சொதப்புகிறது. எல்லாவற்றோடும் ஆதாரை ஒன்றிணைப்பதில் காட்டும் அதே நூறு விழுக்காடு அக்கறையில் பாதியையேனும், அரசுகள் அக்சசபிலிட்டிக்கும் அரசு இணையதளங்களுக்கும் இடையே ஒத்திசைவை ஏற்படுத்துவதில் காட்டலாமே!
***டெக்கிசன்
தொடர்புக்கு: savaalmurasu@gmail.com
Be the first to leave a comment