“வாசிப்பாளர் உதவித்தொகை: பார்வை மாற்றுத்திறன் மாணவர்களின் வங்கிக் கணக்கில் மட்டுமே வழங்க வேண்டும்.” வெளியானது மாற்றுத்திறனாளிகள் நல ஆணையரின் தெளிவுரை

“வாசிப்பாளர் உதவித்தொகை: பார்வை மாற்றுத்திறன் மாணவர்களின் வங்கிக் கணக்கில் மட்டுமே வழங்க வேண்டும்.” வெளியானது மாற்றுத்திறனாளிகள் நல ஆணையரின் தெளிவுரை

,வெளியிடப்பட்டது

உதவித்தொகைகளுக்கான விண்ணப்பங்களை வழங்குவதிலும் பெறுவதிலும் கால நிர்ணயம் என்ற பெயரில் செயற்கையாக பல்வேறு தடைகள் ஏற்படுத்தப்படுவதாக மாற்றுத்திறன் மாணவர்கள் கொந்தளிக்கிறார்கள்.

“2022 – 23 ஆம் கல்வியாண்டில், அரசு சிறப்புப்பள்ளிகளில் 1 முதல் 12ஆம் வகுப்புவரை பயிலும் 970 மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு ரூ. 2921000 கல்வி உதவித்தொகையாகவும், அதே பள்ளிகளில் 9 முதல் 12 ஆம் வகுப்புவரை பயிலும் 235 பார்வைத்திறன் குறையுடைய மாணவர்களுக்கு ரூ. 705000 வாசிப்பாளர் உதவித்தொகையும் வழங்குவதற்கான மாற்றுத்திறனாளிகள் நல மாநில ஆணையர் அவர்களின் செயல்முறைகள்

வெளியாகி உள்ளன.

இந்தச் செயல்முறைகளில் வாசிப்பாளர் உதவித்தொகையினை வாசிப்பாளருக்கான வங்கிக்கணக்கில் செலுத்த வேண்டும் என்கிற புதிய நடைமுறை பார்வைத்திறன் குறையுடைய மாணவர்கள் மற்றும் மாவட்ட மறுவாழ்வு அலுவலர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியிருப்பதாகத் தெரியவருகிறது.

மேற்கண்ட செயல்முறை நடவடிக்கைகள் முழுக்க முழுக்க அரசு சிறப்புப்பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கானது என்பதால், இந்த செயல்முறை ஆணை கல்லூரி பயிலும் பார்வைத்திறன் குறையுடைய மாணவர்களுக்குப் பொருந்தாது. இந்த விடயத்தில் மாற்றுத்திறனாளிகள் நல ஆணையர் அவர்கள் உடனடியாகத் தலையிட்டு, நிலவும் குழப்பத்திற்குத் தீர்வு காண வேண்டும்.” என சவால்முரசில்

செய்தி

ஒன்றினை வெளியிட்டிருந்தோம்.

இது தொடர்பான விவாதங்கள் சவால்முரசு வாட்ஸ் ஆப் குழுமத்திலும் தொடர்ந்து நடந்தது. இந்நிலையில், இன்று, உதவித்தொகை தொடர்பான மாற்றுத்திறனாளிகள் நல ஆணையர் அவர்களின் செயல்முறை நடவடிக்கைகள் மீதான தெளிவுரை ஒன்று இன்று மாற்றுத்திறனாளிகள் நல ஆணையர் அவர்களால் வெளியிடப்பட்டுள்ளது.

அந்தத் தெளிவுரையில், “மேற்படி ஒப்பளிக்கப்பட்ட கல்வி உதவித்தொகை/வாசிப்பாளர் உதவித்தொகையினை மாற்றுத்திறனாளி மாணவ/மாணவியர்களின் வங்கிக்கணக்கு/இணை வங்கிக் கணக்கிற்கு (Joint Account) ECS மூலம் மட்டுமே வழங்கிட வேண்டும்.” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

கோரிக்கையின் நியாயத்தைப் புரிந்துகொண்டு, உடனடியாக உரிய தெளிவுரைகளை வெளியிட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில ஆணையர் அவர்களுக்கும், இந்தக் கோரிக்கை உரியவர்களிடம் சென்றுசேரப் பாடுபட்ட அனைவருக்கும் சவால்முரசு தன் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறது.

அதேசமயம், இந்தச் செயல்முறை ஆணைகள் பிறப்பிக்கப்படுவதற்கு சில ஆண்டுகள் முன்பிருந்தே, வாசிப்பாளர் உதவித்தொகையைப் பெற வாசிப்பாளரின் வங்கிக்கணக்கு இணைக்கப்பட வேண்டும் என நிபந்தனை விதித்த கோவை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தின் செயல் பார்வையற்றவர்கள் குறித்த அவர்களின் மேம்போக்கான அக்கறைக்குச் சான்று பகர்கிறது. இன்னும் சில மாவட்டங்களில் உதவித்தொகைகளுக்கான விண்ணப்பங்களை வழங்குவதிலும் பெறுவதிலும் கால நிர்ணயம் என்ற பெயரில் செயற்கையாக பல்வேறு தடைகள் ஏற்படுத்தப்படுவதாக மாற்றுத்திறன் மாணவர்கள் கொந்தளிக்கிறார்கள்.

சான்றாக, தூத்துக்குடி போன்ற மாவட்டங்களில் விண்ணப்பங்களைப் பெறவும், அதை சமர்ப்பிக்கவும் மாணவர்களுக்குப் போதிய கால அவகாசம் வழங்கப்படுகிறது. ஆனால், திருச்சி போன்ற மாவட்டங்களில் விண்ணப்பம் வழங்குவது குறித்தோ, அதனைச் சமர்ப்பிப்பதற்கான கடைசித் தேதி குறித்தோ எவ்வித முறையான அறிவிப்பும் வெளியிடப்படுவதில்லை. ஒவ்வொரு ஆண்டும் மாற்றுத்திறன் மாணவர்கள் சந்திக்கும் இந்தப் பிரச்சனைக்கு இனிவரும் ஆண்டிலேனும் உரிய தீர்வு காணப்பட வேண்டும்.

கல்வி உதவித்தொகை உட்பட மாற்றுத்திறனாளிகள் நலத்துறையால் அமல்ப்படுத்தப்படும் நலத்திட்டங்கள், அறிவிப்புகள் தொடர்பான அலுவல்சார் நடைமுறைகள் மாவட்டத்திற்கு மாவட்டம் வேறுபடாமல், மாநிலம் முழுமைக்கும் ஒரே மாதிரியான நடைமுறையைப் பின்பற்றிட மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில ஆணையர் அவர்கள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அத்தோடு, பல்வேறு நலத்திட்டங்கள் சார்ந்து துறையால் வினியோகிக்கப்படும் படிவங்களும் மாநிலம் முழுமைக்கும் ஒரே மாதிரியாக (same model) வடிவமைக்கப்பட வேண்டும் என்பதே மாற்றுத்திறன் மாணவர்களின் நீண்டநாள் கோரிக்கை.

நியாயமான கோரிக்கை, நிச்சயம் வெல்லும்.

மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில ஆணையர் அவர்களின் தெளிவுரையைப் படிக்க மற்றும் பதிவிறக்க:

பகிர

Be the first to leave a comment

உங்கள் கருத்தை உள்ளிடுங்கள்