கவிதை: குரல்வழிப் பேறு: ஒலிமயக்கூத்தன்

கவிதை: குரல்வழிப் பேறு: ஒலிமயக்கூத்தன்

,வெளியிடப்பட்டது

வாசகர்களே! உங்கள் படைப்புகளை savaalmurasu@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம்.

கைகள் கோர்த்திருக்கும் இருவர் தங்கள் நெருக்கத்தைச் சொல்வதான சித்தரிப்புப்படம்
சித்தரிப்புப் படம்

குரல்தான் முதல் தூண்டில்;

மொழியெல்லாம் பொருட்டில்லை!

எது சொன்னாலும் கற்கண்டுதான்.

ஒவ்வாதவைகளைத் தவிர்த்து,

ஒன்றுதல்களிலேயே உறைந்து,

“அதைத்தான் நானும் நினைத்தேன்”,

“அதேதான் என் கருத்தும்”,

நகல் நகல் எண்ணங்களை

நட்பென்று கொண்டாடி,

பகல் இரவு விழுங்கி,

பரஸ்பரம் பரிமாறி,

முடுக்கிய மொழி வாகனத்தில்,

மூலை முடுக்கெல்லாம் சுற்றி,

சிலாகிப்பு, சிரிப்பு,

சிலிர்ப்பு, சினுங்கல்,

கொஞ்சல், கோபங்களில்

உள் காற்று ஓடிவந்து

உதடு பிரிப்பதாய்,

‘க’, ‘த’ வல்லெழுத்துகள்

மேலும் கனத்து

கடைவாய் வாசம்

காதில் மணப்பதாய்,

நொடிச்சிரிப்பில் குரல்வளையின்

பனிக்கூழ் சொட்டி,

நோவு படர்வதாய்,

சொல் தேடும் யோசனையின்

சின்னச் சின்ன இடைவெளிகளில்

ஒரு குழந்தை தவழ்வதாய்,

மறுப்புரைக்கும் மையமான ஊஹூம்களுக்கு

உருகுவதா, இறுகுவதா என

உதடுகள் குழம்புவதாய்,

கழுத்து புடைத்தெழும்

கண்டிப்பு தொனிக்கு,

கைவிரல்களும் விரைந்து வந்து

கன்னம் கிள்ளுவதாய், – இப்படி

ஒருநூறு காணொளிகள்

உட்கண்ணில் விரிய,

கொஞ்சம் கொஞ்சமாய்

சொற்களும் சுருங்க,

மெல்ல மெல்லமாய்

மௌனமோ நெருங்க,

காரணம் ஆய்ந்ததில்

பாஷையின் சலிப்போ?

ஸ்பரிஸ அவா துளிர்ப்போ?

கணக்கை நேர் செய்யத்தான்

காதல் என்ற பிறப்போ?

***ஒலிமயக்கூத்தன்

தொடர்புக்கு: savaalmurasu@gmail.com

பகிர

Be the first to leave a comment

உங்கள் கருத்தை உள்ளிடுங்கள்