பொன்னியின் செல்வனும் புரையோடிப்போன மெத்தனமும்

பொன்னியின் செல்வனும் புரையோடிப்போன மெத்தனமும்

,வெளியிடப்பட்டது

மாநிலத்தின் நூற்றாண்டு பாரம்பரியம் கொண்ட பார்வையற்றோருக்கான அரசு மேல்நிலைப்பள்ளி பூவிருந்தவல்லியில் கடந்த ஒரு வாரகாலமாக பொறுப்பு என்ற பெயரில்கூட எவரும் தலைமை ஆசிரியர்/முதல்வராக நியமிக்கப்படவில்லை என்பது உங்களுக்குத் தெரியுமா?

பொன்னியின் செல்வன் போஸ்டர்

பள்ளி கல்லூரி பயிலும் பார்வையற்ற மாணவர்களுக்கான வாசிப்பாளர்களை ஒருங்கிணைக்கும் தன்னார்வக்குழு அகல். இன்று இந்த அமைப்பினரின் ஏற்பாட்டில் வடபழனி கமலா திரையரங்கில் காலை எட்டு மணிக்கு பொன்னியின் செல்வன் திரைப்படம் ஒலிவழிக் காட்சி விவரணையுடன் (Audio Description) திரையிடப்படுகிறது.

உண்மையில் மிகச் சிறப்பான முயற்சி. ஆனால், இந்த முயற்சியின் பலனை அனுபவிக்க எங்கள் பள்ளி மாணவர்களுக்குத்தான் கொடுத்துவைக்கவில்லை. யார் செய்த சதியும் இல்லை. சிறப்புப்பள்ளி உயர் அலுவலர்களின் மெத்தனமே கைக்கு எட்டிய வாய்ப்பை வாய்க்கெட்டாதபடி செய்துவிட்டது.

இதற்கும் அவர்களுக்கும் என்ன தொடர்பு என்றா கேட்கிறீர்கள்?

Govt. H.S. School for Visually Impaired Poonamallee

மாநிலத்தின் நூற்றாண்டு பாரம்பரியம் கொண்ட பார்வையற்றோருக்கான அரசு மேல்நிலைப்பள்ளி பூவிருந்தவல்லியில் கடந்த ஒரு வாரகாலமாக பொறுப்பு என்ற பெயரில்கூட எவரும் தலைமை ஆசிரியர்/முதல்வராக நியமிக்கப்படவில்லை என்பது உங்களுக்குத் தெரியுமா? கடந்த 31.அக்டோபர்.2022 அன்று அன்றைய முதல்வர் திருமதி. ஜாக்லின்லதா பணி ஓய்வு பெற்றார். அவருக்கு வழங்கப்பட்ட பணிவிடுவிப்பு ஆணையில்கூட “இன்னாரிடம் பொறுப்பை ஒப்படைத்துச் செல்லுங்கள்” என்ற குறிப்பு இல்லை.

நூற்றுக்கும் மேற்பட்ட பார்வையற்ற மாணவர்கள் தங்கிப் படிக்கும் மேல்நிலைப்பள்ளி, பள்ளிசார் விடுதி, புத்தகக் கட்டுனர்ப் பயிற்சி, வயதான பார்வையற்ற பெண்களுக்கான சாந்தம் மறுவாழ்வு இல்லம், பார்வையற்றவர்களுக்கான தொழிற்பயிற்சிக்கூடம், அதற்கான விடுதிகள் என 31 ஏக்கரில் அமைந்த ஒட்டுமொத்த வளாகத்தையும் நிர்வகிக்கும் முதல்வர் பொறுப்பில் கடந்த ஒருவாரமாக யாரும் நியமிக்கப்படவில்லை. இந்த நிலையில், திரைப்படம் பார்க்க மாணவர்களை வளாகத்திலிருந்து வெளியே அழைத்துச் செல்ல வேண்டும். யார் பொறுப்பில் இதைச் செய்வது? சரி முயன்று பார்க்கலாம் என சிறப்புப்பள்ளி உதவி இயக்குநரைத் தொடர்புகொண்டிருக்கிறார்கள் அமைப்பினர். உகந்த பதிலில்லை. மாற்றுத்திறனாளிகளுக்கான ஆணையர், அவரின் உதவியாளர் என எந்தத் தொடர்பும் கிடைக்கவில்லை. ஒரு சிறப்பான, தங்கள் வாழ்வில் மறக்கவே இயலாத அனுபவத்தை மாணவர்கள் இழக்கிறார்களே என்ற பதைபதைப்பை துறை அதிகாரிகளுக்கு எப்படிச் சொல்லிப் புரியவைப்பது? அத்தகைய உளப்பூர்வ புரிதல் இருந்திருந்தால் தலைமையே இல்லாமல் பார்வையற்றவர்கள் புழங்கும் நிறுவனத்தை கடந்த ஒருவாரகாலமாக அக்கடா என்று விட்டிருப்பார்களா?

மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சிறப்புப்பள்ளி உயர் அலுவலர்களின் அசாத்தியமான அலட்சியத்திற்கு் இந்த நிகழ்வு ஒரு சோற்றுப்பதம்தான். பல ஆண்டுகளாகவே போதுமான ஆசிரியர்கள் அற்ற திருச்சி, தஞ்சை மேல்நிலைப்பள்ளிகள், விஷப் பாம்புகளும் வெறிநாய்களும் சகஜமாக உலவும் பூவிருந்தவல்லிப் பள்ளியின் மோசமான கட்டடங்கள் என எது பற்றியும் இவர்களுக்கு அக்கறையோ மெனக்கெடலோ கிடையாது. காரணம் யார் கேட்கப்போகிறார்கள் என்ற அழுத்தமான நம்பிக்கை.

உண்மையில் மாண்புமிகு தமிழக முதல்வரின் நல்லாட்சிக்கும், நற்பெயருக்கும் அவர் நிர்வகிக்கும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சிறப்புப்பள்ளிகள் பிரிவு அதிகாரிகள்தான் தொடர்ச்சியாக ஊறு ஏற்படுத்திக்கொண்டிருக்கிறார்கள். ஒரு புற்றுக்கட்டியைப் போல அவர்களின் மெத்தனம் வளர்ந்தபடியே இருக்கிறது. உடனடியாக அறுவை சிகிச்சை செய்து, சிறப்புப்பள்ளிகளை பள்ளிக்கல்வித்துறை கட்டுப்பாட்டில் ஒப்படைக்க வேண்டுமென மாண்புமிகு தமிழக முதல்வர்அவர்களை கரம் கூப்பிக்கேட்டுக்கொள்கிறேன்.

பின்குறிப்பு: நான் கடந்த 25.அக்டோபர்.2022 அன்று, இதே வடபழனி கமலா திரையரங்கில், தங்கை மோனிஷா அவர்களின் இடையிட்ட வாய்ஸ் ஓவரின் துணையோடு பொன்னியின் செல்வன் பார்த்தாகிவிட்டது. எனவே, ஆதங்கத்துக்குப் பின்புலமாக படம் பார்க்கும் என் ஆசை இருக்கிறது எனக் குறிப்பிட எவ்வித முகாந்திரமும் இல்லை என்பதை கனம் பொருந்திய சமூகத்துக்குத் தெரிவித்துக்கொள்கிறேன்.

***ப. சரவணமணிகண்டன்,

பட்டதாரி ஆசிரியர்,

பார்வைத்திறன் குறையுடையோருக்கான அரசு மேல்நிலைப்பள்ளி,

பூவிருந்தவல்லி.

***

சகித்துக்கொள்ளவும் முடியவில்லை, வெளியே சொல்லவும் தைரியம் இல்லை

சிறப்புப் பள்ளிகளில் துரித கதியில் தீர்வு காணப்படவேண்டிய பிரச்சனைகள்: மாற்றுத்திறனாளிகள் நல ஆணையருக்கு ஹெலன் கெல்லர் மாற்றுத்திறனாளிகள் நலச்சங்கம் முன்வைத்த கோரிக்கைகள்:

மாண்புமிகு முதல்வர் அவர்களுக்கு, ஓர் இறுதி நம்பிக்கைகொண்ட இறைஞ்சல்

இங்கே சிலம்பம், அங்கே கராத்தே

பகிர

1 thought on “பொன்னியின் செல்வனும் புரையோடிப்போன மெத்தனமும்

  1. பார்வைத்திறன் குறையுடையோருக்கான அரசு சிறப்பு பள்ளியின் நிலை மிகவும் வருத்தம் அளிப்பதாக உள்ளது

உங்கள் கருத்தை உள்ளிடுங்கள்