சல்யூட்விக்ரம்சல்யூட்

சல்யூட்! விக்ரம் சல்யூட்!

,வெளியிடப்பட்டது

விக்ரமின் வழிகாட்டி எத்தகைய புரிதலும், நிதானமும் பொறுமையும் கொண்டவர் என்பதை நம்மால் எளிதாக ஊகிக்க முடிகிறது.

இந்தியாவின் வடக்கு எல்லை இமயமலை என வரலாற்றுப் பாடநூல்களில் படித்தது மட்டுமல்ல, சில மேம்படுத்தப்பட்ட வரைபடங்களில் (Embossed and Tactile Maps) இமயமலையை வேறுபடுத்திக் காட்ட வேண்டும் என்பதற்காக புடைத்த மேடுகளாக வடிவமைத்திருப்பதைத் தொட்டுப் பார்த்திருக்கிறேன். இமயமலை என்று சொன்னாலே என் நினைவில் உடனே நிற்பது அந்த வரைபடங்களும் நடிகர் ரஜினிகாந்த் அவர்களும்தான். இனி இந்தப் பட்டியலில் விக்ரமும் சேர்ந்துகொள்வார். கதாநாயகன் அல்ல, உண்மை நாயகன் அஸ்ஸாமைச் சேர்ந்த முழுப் பார்வையற்றவர்ஆன விக்ரம் ஜோதிதாஸ் (Bikram Jyothi Das).

பிறவிப் பார்வையற்றவர் அல்ல விக்ரம். சுரங்கப் பொறியாளரான (Mining Engineer) விக்ரம், மங்களூரிலுள்ள ஒரு சுரங்கம் சார் தனியார் நிறுவனத்தில் நல்ல ஊதியத்துடன் பணியாற்றியவர். தனது 33ஆவது வயதில் தொழில்சார் விபத்து ஒன்றில் சிக்கி பார்வை நரம்புகள் மற்றும் விழித்திரை மொத்தமாகப் பாதிக்கப்பட்டதால் முழுப் பார்வையற்றவராக மாறிவிட்டார். ஆனால், சோர்ந்துவிடாமல் தன்னம்பிக்கையோடு முறையான பயிற்சிகளைப் பெற்று, தன்னுடைய அன்றாடத்தைத் தகவமைத்துக்கொண்டிருக்கிறார்.

அடுத்த ஒரே ஆண்டில் தேர்வெழுதி, எஸ்பிஐ வங்கியில் அலுவலராகப் பணியில் சேர்ந்து தற்போது அதே வங்கியின் மேலாளராகப் பதவி உயர்வும் பெற்றுவிட்டார். மலையேற்றத்தில் சிறுவயதிலிருந்தே தனக்கிருக்கும் ஆர்வத்தை அவ்வப்போது தன்னுடைய அலுவலக நண்பர்களிடம் பகிர்ந்துகொண்டிருக்கிறார் விக்ரம். அப்படி ஒரு சமயம், தன் நண்பர் ஒருவர் பங்கேற்ற மலையேற்றப் பயிற்சி முகாமில் ஒரு பார்வையற்றவரும் பங்கேற்றிருப்பதாகச் சொன்னதில் பரவசமடைந்த விக்ரம், கடந்த ஓராண்டாக அதற்காக முயன்று, எவரெஸ்ட் பேஸ் கேம்ப் (EBC) வரை மலையேறி சாகசத்தை நிகழ்த்தியிருக்கிறார். விக்ரமின் அழுத்தமான முயற்சியையும் வெற்றியையும் உள்வாங்கிக்கொள்ள வேண்டுமானால், நாம் முதலில் எவரெஸ்ட் பேஸ் கேம்ப் (EBC) மலையேற்றம் குறித்து அறிந்துகொள்ள வேண்டும். அடுத்துவரும் பத்திகளில் விக்ரமோடு நாமும் சேர்ந்து மலையேறுவதாய்க் கற்பனை செய்துகொண்டு வாசிப்பைத் தொடர்வோம்.

கடல் மட்டத்திலிருந்து சுமார் 8848.86 மீட்டர் அல்லது 29031.7 அடி உயரத்தில் இமயமலையின் கிழக்கு எல்லையாக அமைந்திருக்கும் உலகத்தின் மிகப்பெரிய சிகரம்

எவரெஸ்ட்.

மலையேற்றத்தில் எவரெஸ்ட் உச்சியைத் தொடுவதென்பது சாகசத்தின் உச்சம். உறுதியான இலட்சியக் கனவும், வாழ்க்கையையே அர்ப்பணித்து மேற்கொள்ள வேண்டிய கடுமையான, கொஞ்சம் செலவு பிடிக்கும் சாகசப் பயிற்சி அது என்கிறார்கள். அந்த இலட்சியத்தை எட்டிப்பிடிக்கும் முயற்சியின் தொடக்கமாகவோ, அல்லது செம்மாந்து நிற்கும் இமயத்தின் அழகின் சிறு பகுதியைத்  தன் நேரடி அனுபவமாகக் கொள்ள வேண்டும் எனும் தீராத வேட்கை கொண்டோரின் தெரிவாகவோ இருப்பது எவரெஸ்ட் பேஸ் கேம்ப்

(Everest Base Camp EBC)

என்கிற இலக்கு. இதை நாம் நம் வசதிக்காக ஈபிசி என சுருக்கிக்கொண்டு தொடர்வோம்.

வடக்கே சீனா மற்றும் திபெத்திலும், தெற்கில் நேபாளத்திலும் என எவரெஸ்ட் சிகரத்தின் இரு மருங்கிலும் இரண்டு ஈபிசிகள் அமைந்திருக்கின்றன. பாரம்பரியமாகவும், சீனாவின் கெடுபிடிகள் காரணமாகவும், பெரும்பாலான மலையேறுபவர்களின் தெரிவாக இருப்பது தெற்கு ஈபிசிதான்.

காட்மாண்டிலிருந்து வடகிழக்கே சுமார் 150 கி.மீ. (90 மைல்) தொலைவில் அமைந்திருக்கும் இந்த ஈபிசிக்கு மலையேற்றப் பயணம் செய்து திரும்ப இரண்டு வாரங்கள் தேவைப்படும்.

பெரும்பாலோர் காட்மாண்டு வந்து தங்கள் வழிகாட்டிகளுடன் லக்லா

(Lukla)

என்ற சிறு நகரத்துக்கு விமானத்தில் சென்று அங்கிருந்து நடக்கத் தொடங்குகிறார்கள். உலகின் மிக ஆபத்தான தரையிறங்கள்கள் நிகழ்வது லக்லாவிலுள்ள

டென்சிங் ஹிலரி

விமான நிலையத்தில்தான் என்கிறார்கள்.

கடல் மட்டத்திலிருந்து சுமார் 2850 மீட்டர் அல்லது 9350 அடி உயரத்தில் அமைந்திருக்கும் லக்லாவிலிருந்து தொடங்கும் மலையேற்றப் பயணம், பூவரசு மற்றும் பைன் மரங்கள் அடர்ந்த காடு,

தூத் கோஷி

ஆற்றின் கரையினைக் கடந்து ஃபாக்டிங் கிராமத்தை அடைகிறது. பிறகு ஒரு தற்காளிக இரும்புப் பாளத்தின் வழியே தூத் கோஷி ஆற்றைத் தாண்டி, நாம்ச் பஜார்

(Namche Bazaar)

என்ற நகரத்தை அடைகிறது.

உலகிலேயே மிகச் சிறந்த ஆற்றல் வாய்ந்த மலையேறிகளான

ஷெர்பாக்களின்

அறிவிக்கப்படாத தலைநகரம் இந்த நாம்ச் பஜார். கடல் மட்டத்திலிருந்து சுமார் 3435 மீட்டர் அல்லது 11270 அடி உயரத்தில் அமைந்திருக்கும் இந்த நகரில்ல் ஒருநாள் இளைப்பாறும் மலையேற்றப்பயணிகள், அங்கு பல ஷெர்பா மலையேறிகளைச் சந்தித்து உரையாடும் வாய்ப்பைப் பெறுகிறார்கள். பிரபல

எவரெஸ்ட் வியூவ்

என்ற உணவகம் இங்குதான் உள்ளது. இந்த ஹோட்டலிலிருந்து எவரெஸ்ட் சிகரத்தை தெளிவாகப் பார்க்க முடியுமாம்.

நாம்ச் பஜாரிலிருந்து டெங்பாச் (tengboche) என்ற கிராமத்தை நோக்கி பயணம் தொடர்கிறது. சுமார் 3890 மீட்டர் அல்லது 11760 அடி உயரத்திலிருக்கும் இந்த கிராமத்தில்தான் உலகப் புகழ்பெற்ற

டெங்பாச் புத்த மடாலயம்

உள்ளது. டெங்பாச்சிலிருந்து டிங்பாச் 4360 மீட்டர் அல்லது 14300 அடியை அடைந்ததுமே நிலத்தோற்றமானது தன் பசுமையிலிருந்து கரடுமுரடான பாறைகளுக்கு மாறிவிடுகிறது. அங்கிருந்து

கும்பு கிலேசியர் (Khumbu Glacier),

லாபுச் (Lobuche),

கோரக்‌ஷேப் (Gorakshep)

எனக் கடினமான பயணத்தினூடே எட்டாம் நாளில் 5364 மீட்டர் அல்லது 17600 அடி உயரத்தில் இருக்கிற ஈபிசி என்கிற இலக்கை அடைகிறார்கள் சாகச விரும்பிகள்.

ஒருநாளில் சராசரியாக ஆறுமணி நேர மலையேற்றத்தைக் கோரும் பயணம். சம வெளிகளில் அல்ல, ஒழுங்கற்ற கூர்த்த பாறைகளில் கால்வைத்து ஏற வேண்டும். சுமார் 20 கிலோ எடைகொண்ட தன் கைப்பையைத் தோளில் போட்டுக்கொண்டு வழிகாட்டியின் கைபிடித்து இந்தத் தொலைவைக் கடந்திருக்கிறார் விக்ரம். அப்படியானால், விக்ரமின் வழிகாட்டி எத்தகைய புரிதலும், நிதானமும் பொறுமையும் கொண்டவர் என்பதை நம்மால் எளிதாக ஊகிக்க முடிகிறது. நிச்சயம் இப்போது நீங்கள் அவரோடு மானசீகமாய் கைகுலுக்கியிருப்பீர்கள். நான் அவர் கையை இறுக்கமாய்ப் பற்றி என் கண்களில் ஒற்றி சில நிமிடங்கள் உறைந்து நிற்கிறேன்.

நடுவயது பார்வை இழப்பு என்பது, ஒருவரின் மனதில் ஏற்படுத்தும் பாதிப்புகள் ஆழமானவை, கற்பனைக்கே எட்டாதவை. நேற்றுவரை தான் பார்த்த அழகு வண்ணங்கள், அசையும் உருவங்கள் என எல்லாமே இருட்டுக்குள் புதைந்து, வெறும் செவியோசைகளாய், தொடுபிண்டங்களாய் மாறிப்போவதில் எழுகிற ஆற்றாமைக்கு எவர் ஆறுதல் சொல்ல இயலும்?

இதுவரை தன்னை வியந்தவர்கள், ரசித்தவர்கள், ஒப்பார் குழுவென ஒன்றுகூடி திழைத்தவர்கள், ஏன் உகந்த எதிரியாய் துரத்திக்கொண்டிருந்தவர்களும்கூட உதிர்க்கும் அனுதாப மொழிகள்தான், அணு அணுவாய் சாகடிக்கும் அன்பு ஆயுதங்கள் எனும்போது அவற்றை எப்படி எதிர்கொள்வது?

விருவிரு வேகநடை தொலைந்து, அடுத்த அடி வைப்பதற்குள் அச்சம், கலக்கம், பதட்டம் என ஆயிரம் முறை உள்ளுக்குள் செத்துப் பிழைக்கிற அவஸ்தைக்கு என்ன மாற்று? விறைப்பும் முறுக்குமாய் மிடுக்கான உடல்மொழிக்குப் பழகிய கைகளும் கால்களும் கொண்டிருக்கிற கட்டுப்படுத்தவே முடியாத நடுக்கத்தால் நாற்றமெடுத்து நைந்துபோகிற அகத்தை எப்படி உய்விப்பது?

உரிய பயிற்சிகளோடும் முயற்சிகளோடும் ஒருவர் இந்த பரிணாம காலத்தை (Transitional Period) கடக்க முடியும். பலருக்கு அது அத்தனை எளிதாக இருப்பதில்லை. துடிப்பும் தன்னம்பிக்கையும் ஒருவித சாகச மனப்பான்மையையும் தங்கள் இயல்பாகப் பெற்றவர்கள் இதிலிருந்து மெல்ல மீண்டுவிடுகிறார்கள். எதிர்பாராத தற்செயல்களின் கூட்டுப்பிணைப்பே வாழ்க்கை என்பதைப் புரிந்துகொண்டு, அடுத்து என்ன என மன உறுதியோடு சிந்திப்பவர்கள் பார்வையை இழந்தபோதும், தாங்கள் ஏற்கனவே நன்கு அறிந்துவைத்திருக்கிற பொது உலகத்தோடு ஒரு பார்வையற்றவராகத் தங்களைத் துல்லியமாகப் பொருத்திக்கொள்வார்கள். நடுவயதில் பார்வையின்மைக்கு (Middle Blind) ஆளானவர் என்கிற முன் வரலாறும் உடன் பயணித்து, அவர் குறித்த ஒரு மென் தயை மற்றும் உற்சாக உணர்வைப் பிறரிடம் தோற்றுவிக்கும் என்பதால், பொதுச்சமூகத்தின் ஏற்பும் அணுகிப் பழகும்வாய்ப்பும் எளிதில் கைகூடும். இவற்றின் துணைகொண்டு, தங்கள் புதிய வாழ்க்கையில் அசாத்திய வெற்றிகளையும் புகழையும் ஈட்டுவார்கள். இதைத்தான் சுருக்கமாக “இது என்னுடைய மறு அவதாரம்” என்கிறார் விக்ரம்.

ஈபிசி மலையேற்றத்தை முடித்த பார்வையற்றவரான திரு. விக்ரம் அவர்களுக்கு

திருநீர்மலைப்

படிக்கட்டுகளிலேயே திக்குமுக்காடிப்போய், இப்போது

சோளிங்கர் நரசிங்கபெருமாள் கோவிலின்

ஆயிரம் படிக்கட்டுகளில் ஏறிவிட முடியுமா என ஆராய்ச்சி செய்துகொண்டிருப்பவனின் பலமான சல்யூட்.

***ப. சரவணமணிகண்டன்

படங்கள்: நன்றி விக்கிப்பீடியா மற்றும் இந்தியா டுடே.

வெளி இணைப்புகள்:

Visually-impaired Assam man reaches Everest base camp, sets an example of ‘nothing is impossible’

*

Everest Base Camp Guide: What to Know Before You Go

1 thought on “சல்யூட்! விக்ரம் சல்யூட்!

  1. எதிர்பாராத தற்செயல்களின் கூட்டுப்பிணைப்பே வாழ்க்கை /////அருமை!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *