எழுத்தாளர் சாரு நிவேதிதாவுக்கு ஒரு பதில்க்கடிதம்

எழுத்தாளர் சாரு நிவேதிதாவுக்கு ஒரு பதில்க்கடிதம்

,வெளியிடப்பட்டது

நீங்கள் வாழவே லாயக்கற்றதாகக் கருதும் இந்தச் சென்னைதான், பெரும்பாலான பார்வையற்றவர்களுக்கு விருப்ப நகரமாக இருக்கிறது.

மரியாதைக்குரிய அன்பு எழுத்தாளர் திரு. சாரு நிவேதிதா அவர்களுக்கு,

கடந்த 2021ஆம் ஆண்டுவரை நான் உங்கள் எழுத்தைத் தீவிரமாகப் படித்ததில்லை. உங்கள் எழுத்தைப் படிக்க வேண்டும் என முடிவு செய்து நான் கிண்டிலில் தேர்ந்த முதல் நூல் ‘0 டிகிரி’. அவ்வளவுதான் எல்லாம் முடிந்துவிட்டது. காரணம், ஒன்றுமே புரியவில்லை என்பதுதான். அத்தோடு உங்கள் வலைப்பதிவுகளோடு மட்டும் நின்றுகொள்ளலாம் என முடிவு செய்தேன். இப்போது விஷ்ணுபுரம் விருது தங்களுக்கு என அறிவிக்கப்பட்டபோதுதான் உங்களுடைய நூல்களைப் படிக்கும் எண்ணம் மீண்டும் துளிர்த்தது. ஆகவே, ‘ராஸலீலா’வை முதலில் படித்தேன். ஏதோ புரிந்தது. ஆனாலும் திருப்தி இல்லை. சரி இனி இவருடைய கட்டுரைத் தொகுதிகளைப் படிக்கலாம் என பழுப்புநிறப் பக்கங்கள், கோணல்ப்பக்கங்களை கையில் எடுத்தேன். அதுதான் சரியான முடிவு என கண்டுகொண்டேன்.

நான் இதுவரை படித்த உங்களின் எழுத்துகள் எல்லாவற்றிலும் ஏதாவது ஒரு தொனியில் தனிமனித சுதந்திரம் மிக மிகமிகமிக அடிப்படையான விழுமியமாக வலியுறுத்தப்படுவதை உணர்கிறேன். உங்கள் எழுத்துகளை ‘உவ்வே’ எனக் கடப்பவர்களும்கூட அன்றாடம் அந்த உவ்வேக்களுடன்தான் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். அதை நீங்கள் அப்பட்டமாய் சொல்லிவிடுவதில் எழுகிற திடுக்கிடல் என்றுதான் அவைகளைப் புரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது. இதுவரை மனிதகுலம் பேசிவருகிற அனைத்துவிதமான புனிதக் கட்டமைப்புகள் எல்லாமே தனிமனித சுதந்திரத்தைப் பேணாவிடில் அவை அழிந்துபட வேண்டும் என்பதே உங்கள் ரவுத்திர முழக்கமாக  இருக்கிறது. அன்றாடம் நீங்கள் சந்திக்கும் மனிதக் கீழ்மைகள் உங்கள் உள்ளுணர்வுகளை அதிகம் தொந்தரவு செய்கின்றன.

ஆகவேதான்  நீங்கள் எண்ணி எடுத்து அடுக்கிவைத்த நேர்மறை மொழிகளைக் கைக்கொள்ளாமல், முகத்தில் அறைந்து ‘நான் சென்ஸ்’ என்ற ரீதியில் எழுதவேண்டியிருக்கிறது. அப்படித்தான் நீங்கள் சென்னை பற்றியும் எழுதிவருவதாக நினைக்கிறேன். மாற்றம் என்கிற ஏக்கத்த்ஐ அழுத்தமாகத் தன் ஆழத்தில் கொண்டிருக்கிற வசைகள்தான் உங்களுடையது என்பதையும் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால், பார்வையற்றோர் பற்றிய உங்களின் மனச்சித்திரத்தைத்தான் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை.

சென்னையின் ஆட்டோக்காரர்களைத் திட்டப் புகுந்து நீங்கள் உங்கள்

சென்னை

என்கிற முதல் பதிவில் இப்படி எழுதியிருக்கிறீர்கள்.

“என்னதான் வழி சொன்னாலும் கண் பார்வை இல்லாதவர்களைப் போலவே வழி கேட்டு உயிரை எடுப்பார்கள்.” அப்படி உங்களை பார்வையற்றவர் வழிகேட்டு உயிரெடுத்த நிகழ்வுகள் ஏதேனும் இருக்கிறதா? அதையும் உங்கள் ்நடையிலேயே எழுதுங்களேன்.

தன் எழுத்துகளில் அதிகம் மனிதம் பேசுகிற, எல்லாவற்றிலும் ஓர் அறத்தின் பார்வையை முன்னிறுத்துகிற, உங்களுடைய எண்ண ஆழத்திலிருந்து இப்படி ஒரு வாக்கியமா என்பதில்தான் எம்மைப் போன்றவர்களுக்கு ஒருவித அதிர்ச்சி, நெருடல். தன் எழுத்துகளால் தமிழ்ச்சமூகத்துக்கே வழிகாட்டுபவர், தன் சாலைப் பயணத்தில் ஒரு பார்வையற்றவருக்கு வழி சொல்லிப் புரியவைப்பதில் இவ்வளவு எறிச்சல் அடைகிறார் என்பதை நினைக்கையில், வலிக்கத்தான் செய்கிறது. நடிகர்களை நடிப்போடு கடந்துவிடுவதைப்பொல் எழுத்தாளர்களை வெறும் எழுத்துகள் என்று கடந்துவிட இயலாத ஒரு சாமானிய வாசகனின் வலி அது.

ஐயா! நான் உங்களுக்குப் பார்வையற்றோர் குறித்தோ, எங்களின் அன்றாடப் பாடுகள் குறித்தோ எழுதப்போவதில்லை. ஆனால், ஒன்றை மட்டும் என்னால் உறுதியாய்ச் சொல்ல முடியும். நீங்கள் வாழவே லாயக்கற்றதாகக் கருதும் இந்தச் சென்னைதான், பெரும்பாலான பார்வையற்றவர்களுக்கு விருப்ப நகரமாக இருக்கிறது. நீங்கள் ஒரு குறிப்பிட்ட இடத்துக்கு உங்கள் சொந்த டாக்சியில் சென்றால் ஆகும் நேரத்தைவிட குறைவான நேரத்திலேயே நாங்கள் அந்த இடத்தை அடைந்துவிடுவோம். காரணம், சாலை கடப்பதற்காக ஊன்றுகோலுடன் மூன்று நிமிடங்களுக்கு மேல் நாங்கள் எங்குமே காத்திருப்பதில்லை. எங்கிருந்தாவது ஒரு கை எங்கள் தோளில் விழுந்து “சார் எங்க போகணும்?” என வழிகாட்டும். “உயிரை எடுக்கிறார்கள்”என்று எற்இச்சல் அடையாது.

மேடும் பள்ளமும் நிறைந்து செறிந்த சென்னை தெருக்களில், மழை நேரங்களைக் கற்பனை செய்துகொள்ளுங்கள். தண்ணீர் எது தரை எது என்று அறியாமல், பசக் என்று கால்வைத்தால் சலப் என்று கூட்டிச் செல்பவரின் பேண்டிலோ சட்டையிலோதான் அந்த அழுக்குத் தண்ணீர் தெறிக்கும். அதையும் சகஜமாக எடுத்துக்கொண்டு, அப்போதும் எம்மை சாலை கடத்திவிடத் தயாராகவே இருப்பார்கள் இவ்வூர் மக்கள்.

தமிழகத்தின் வேறெந்த நகரத்திலும் எமக்கு வாய்க்காத புத்தக வாசிப்புக் கூடங்கள் (Reading Centres), தேவை அறிந்து, கல்வியில், எங்கள் அன்றாடத்தில் எங்களுக்கு உதவ முன்வரும் தன்னார்வலர்கள் (volunteers) சென்னையில்தான் அதிகம்.

எல்லாவற்றிற்கும் மேலாக, இங்குதான் நாங்கள் நாங்களாக வாழ்கிறோம். எங்கள் ஊர்களில் அன்றாடம் நாங்கள் எதிர்கொள்ளும் “ஐயோ பாவம்” என்கிற பரிதாபச்சொற்கள், பல உச் உச் உச்களெல்லாம் இந்த நகரில் பெரும்பாலும் இல்லை.

‘சரப சாஸ்த்திரி’,

‘ரே சார்லஸ் (Raycharles)’

என நாங்கள் அறியாத அரும்பெரும் வரலாற்றுத் தகவல்களை ஆவனப்படுத்தும் தாங்கள், ஒரு ஔரங்கஷீப் போல், ஒரு தியாகராஜர் போல் பார்வையற்றோர் வாழ்வியல் குறித்தும் அறிந்து, ஆய்ந்து ஒரு நாவல் எழுத வேண்டும். அதாவது நீங்களே உங்களை ஒவ்வொரு நாளும் உயிரெடுத்துக்கொள்ள  வேண்டும் என விழைகிறேன்.

அன்பும் நன்றிகளுடன்,

ப. சரவணமணிகண்டன்,

தமிழ்ப் பட்டதாரி ஆசிரியர்,

பார்வைத்திறன் குறையுடையோருக்கான அரசு மேல்நிலைப்பள்ளி,

பூவிருந்தவல்லி.

பகிர

1 thought on “எழுத்தாளர் சாரு நிவேதிதாவுக்கு ஒரு பதில்க்கடிதம்

  1. இதைவிட காத்திரமாக வெரெப்படி பதில் சொல்லிவிட முடியும்? என்னளவில் சாருவைவிட தேர்ந்த எழுத்தாளர் நிங்கள்

உங்கள் கருத்தை உள்ளிடுங்கள்