கவிஞர் முனைவர் பட்ட ஆய்வாளர்

ஆண்டாண்டு காலங்களாய்
அனுமதியின்றி
உடலோடு சேர்த்து உடன் அனுப்பப்படுகின்ற
ஆயிரமாயிரம்
கண்களே!
மண்ணுக்குள் நீங்கள் அழும் அழுகுரல்
எனக்குக் கேட்கிறது
நீங்கள் மண்ணுக்குள் அழுகின்றீர்கள்
நான்
எனது மனதிற்குள் அழுகின்றேன்
மண்ணும் மனமும் என்றும் ஒன்றுதானே!
எங்கு அழுதால் என்ன
அழுகை அழுகைதானே!
உங்களது உடன்பாடு இல்லாமல்
உங்களை உடன்கட்டை ஏற்றிய
தானவான்களிடத்தில்
தயவாய்
இறுதியாய் ஒருமுறை
உருதியாய் மறுமுறை
உருக்கமாய்க் கேட்கின்றேன்
நிட்சயமாய்க் கேட்கின்றேன்
ஓ மனித இணமே!
நூலகம் சென்று
எதையுமே நுகராது
ஏக்கத்துடன் வெறுமையாய் திரும்பி வந்ததுண்டா?
உங்களுக்குப் பிறந்த
முதல் குழந்தையின் முகத்தினை
பார்க்க முடியாமல் பரிதவித்ததுண்டா?
இரந்துகிடக்கும் தாய் தந்தையின் முகத்தினை
கடைசியாய் கூட ஒருமுறை பார்க்க முடியாமல்
மனது நோக அழுததுண்டா?
நான் கர்ப்பமாய் இருக்கின்றேன் என்று
நற்செய்தி சொல்லும் மனைவியின்
வெட்கத்தால் மலர்ந்த முகத்தைப் பார்க்க முடியாமல்
மனதிற்குள் வெம்பியதுண்டா?
தனது மலழை குழந்தையின்
சேட்டை விளையாட்டுக்களைக் காண முடியாமல்
மனம் முடங்கிக் கசிந்து அழுததுண்டா?
கீழே விழுந்த பொருள்
அருகிலேயே இருப்பது தெரியாமல்
தேடித் தேடித் திணறியதுண்டா?
ஒருவரின் உண்மைமுகம் புரியாது
காதில் கேட்கும் பேச்சை மட்டுமே நம்பி
வாழ்க்கையில் ஏமாற்றம் அடைந்ததுண்டா?
பருவமடைந்த தனது மகளின்
பிரகாச முகத்தைக் காண முடியாமல்
பெற்ற தாய்மை படும் பாட்டை
ஒருமுறையாவது பார்த்ததுண்டா?
ஆசைக் காதலியின்
அழகு முகத்தை
அனுபவிக்க முடியாமல்
அதுவோ? இதுவோ? என மனம் அலைந்ததுண்டா?
நினைத்த இடத்திற்கு
நினைத்த உடனே செல்ல முடியாமல்
நித்தம் நித்தம் நினைத்து நினைத்து
நிலை குலைந்ததுண்டா?
விழா காலங்களில் ஏக்கத்தோடு
எந்தவித அசைவும் இசைவும் இல்லாமல்
காட்சிப் பொருளாய் இருந்ததுண்டா?
அந்தந்த வயதிற்கே உரிய
ஞாயமான ஆசைகளை அணுபவிக்க முடியாமல்
நித்தம் நினைவுகள்
மனதை கடைந்ததுண்டா?
கடவுளரை கண்ணாறக் கண்டால்
கவலை விலகும் என்றதைக் கேட்டு
என்றும் நீங்காத கவலை அடைந்ததுண்டா?
தொட்டதற்கெல்லாம் துனையைத் தேடும்
துயர நிலையை
காதில் கேள்விப் பட்டதாவதுண்டா?
அன்று கண்ணப்பன் என்றொருவன்
தனது கண்ணைப் பெயர்த்து அப்பினான்
கடவுள் சிலைக்கு!
இன்று ஆயிரமாயிரம் கண் அப்பர்கள்
மண்ணைப் பெயர்த்து அப்புகிறார்கள்
மனித சிலைக்கு!
உணர்வுள்ள
உயிருள்ள
மனித இணமே!
மனக்குமுறலை உருக்கமாய்ச் சொல்லத்தான் நினைத்தேன்
மனம் அது உடன்படவில்லை
ஓ மனித இணமே!
இறுதியாய் ஒருமுறை
உறுதியாய் மறுமுறை
சொல்கிறேன்
கண்களை உடன்கட்டை ஏற்றாதிர்!
கண்களை உடன்கட்டை ஏற்றாதிர்!
***ஜிகுனா சுந்தர்
முனைவர்பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை
P.S.G. கலை மற்றும் அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர்.
தொடர்புக்கு: 8098386884
அருமையான ,அழகான பதிவு🤝💪🏻👍👌👏👏👏👏👏👏👏💐💐💐
உருக்கமான உன்மையான உணர்வு வெளிப்பாடு. வாழ்த்துக்கள்.
100% fact
அருமை