தயங்கும் அதிகாரிகள்! தடுமாற்றத்தில் மாற்றுத்திறனாளி மாணவர்கள்! சிக்கலில் சிறப்புப்பள்ளி மாணவர் சேர்க்கை

தயங்கும் அதிகாரிகள்! தடுமாற்றத்தில் மாற்றுத்திறனாளி மாணவர்கள்! சிக்கலில் சிறப்புப்பள்ளி மாணவர் சேர்க்கை

,வெளியிடப்பட்டது

இதுவரை அரசாணை வெளிவராத காரணத்தால் ஈரோடு மற்றும் விருதுநகர் பள்ளிகளில் மேல்நிலை வகுப்பு முதலாம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை தொடங்கவில்லை.

ஈரோடு சிறப்புப்பள்ளியின் முகப்புப்படம்
ஈரோடு சிறப்புப்பள்ளியின் முகப்பு

கடந்த ஏப்ரல் 21ஆம் நாள், தமிழக சட்டமன்றத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் 2022-23 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை மீதான மானிய கோரிக்கை விவாதம் நடைபெற்றது. வரலாற்றில் முன் எப்போதும் நிகழாத வகையில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் அமைச்சரான மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் மாற்றுத்திறனாளிகள் நலன் சார்ந்த பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார்.

*மாற்றுத்திறனாளிகளுக்கான திருமண உதவித்தொகை திட்டத்தில் முழுத்தொகையையும் ரொக்கமாக வழங்குதல்,

*மாற்றுத்திறனாளிகளுக்கான பணிவாய்ப்பில் நான்கு விழுக்காடு இட ஒதுக்கீடு முறையாகப் பின்பற்றப்படுவதைக் கண்காணிக்க குழு,

*மாற்றுத்திறனாளி உலமாக்கள் ஓய்வூதியம் பெறும் வயது 50லிருந்து 40ஆக குறைப்பது உள்ளிட்ட 25க்கும் மேற்பட்ட அறிவிப்புகள் ஒவ்வொன்றும் மாற்றுத்திறனாளிகள் மட்டுமின்றி அனைத்துத் தரப்பினராலும் வெகுவாகப் பாராட்டப்பட்டன.

அனைத்திற்கும் மேலாக, அரசின் அறிவிப்புகள் வெறும் அறிவிப்புகளாக மட்டும் நின்றுவிடாமல், அவற்றை விரைந்து செயல்படுத்தும் வண்ணம் அந்த அறிவிப்புகளுக்கான அரசாணைகளும் ஒன்றன்பின் ஒன்றாக வெளிவந்துகொண்டிருக்கின்றன.

இந்த நிலையில், மானியக் கோரிக்கை விவாதத்தின்போது மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் கீழ் செயல்படும் சிறப்புப்பள்ளிகளில் சில இந்தக் கல்வியாண்டில் தரம் உயர்த்தப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டது. அதன்படி, ஈரோடு மற்றும் விருதுநகர் செவித்திறன் குறையுடையோருக்கான அரசு உயர்நிலைப்பள்ளிகள் மேல்நிலைப்பள்ளிகளாகவும், புதுக்கோட்டை செவித்திறன் குறையுடையோருக்கான அரசு நடுநிலைப்பள்ளி உயர்நிலைப்பள்ளியாகவும் இந்தக் கல்வியாண்டு தரம் உயர்த்தப்படும் என்ற அறிவிப்பும் வெளியானது. ஆனால், அந்த அறிவிப்பிற்கான உரிய அரசாணைகள் இதுவரை வெளிவராததால், பத்தாம் வகுப்பு முடித்து பதினோராம் வகுப்பிற்கு தன்னுடைய பள்ளியிலேயே சேர்ந்துவ்இடலாம் என ஆவலுடன் காத்திருந்த மாணவர்கள் தற்போது பெரும் குழப்பத்திற்கும் நெருக்கடிக்கும் ஆளாகியுள்ளனர்.

தமிழகம் முழுவதும் பதினோராம் வகுப்புக்கான மாணவர் சேர்க்கை நேற்று (27/ஜூன்/2022) தொடங்கிய நிலையில், மேல்நிலைப்பள்ளிகளாகத் தரம் உயர்த்தப்படவிருக்கிற ஈரோடு மற்றும் விருதுநகர் செவித்திறன் குறையுடையோருக்கான அரசு உயர்நிலைப்பள்ளிகளில் பதினோராம் வகுப்பு மாணவர் சேர்க்கை தொடங்கவில்லை. இதுகுறித்து சில சிறப்புப்பள்ளி ஆசிரியர்களிடம் பேசினோம்.

“இதுவரை அரசாணை வெளிவராத காரணத்தால் ஈரோடு மற்றும் விருதுநகர் பள்ளிகளில் மேல்நிலை வகுப்பு முதலாம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை தொடங்கவில்லை. பள்ளிக்கல்வித்துறைப் பள்ளிகளைப் பொருத்தவரை இதுபோன்ற சூழல்களில் அருகாமையில் இருக்கும் அரசுப்பள்ளிகளில் மாணவர்களைச் சேர்த்துக்கொண்டு, அரசாணை வெளிவந்த பின்னர், அந்த மாணவர்களை தரம் உயர்த்தப்பட்ட அவர்களுடைய பள்ளிகளுக்கு இடமாற்றுவதே நடைமுறையாக உள்ளது. ஆனால், சிறப்புப்பள்ளி மாணவர்களைப் பொருத்தவரை, அந்த நடைமுறையைக் கைக்கொள்ள முடியாது. ஏனெனில், விடுதியுடன் கூடிய அவர்களுக்கான மாற்று சிறப்புப்பள்ளி என்பது வேறொரு மாவட்டத்தில் தொலைவில் அமைந்திருக்கும் என்பதால், பெட்டி படுக்கைகளுடன் மாணவர்களை இங்கும் அங்குமாக அலைச்சலுக்கு உள்ளாக்க இயலாது. எனவே, பதினோராம் வகுப்பு சேர்க்கைக்காகக் காத்திருக்கும் செவித்திறன் குறையுடைய மாணவர்களின் நலனைக் கருத்தில்கொண்டு, ஒரு சிறப்பு அறிவிப்பின்மூலம், ஈரோடு மற்றும் விருதுநகர் செவித்திறன் குறையுடையோருக்கான அரசு உயர்நிலைப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கையைத் தொடங்கலாம்.” என்றனர் விரிவாக.

இந்த ஆண்டு தன்னுடைய பள்ளியிலேயே பதினோராம் வகுப்பு சேர்ந்துவிடலாம் என்ற நம்பிக்கையும் ஆவலும் கொண்ட மாற்றுத்திறனாளி மாணவர்களின் எண்ணம் நிறைவேறும் வகையில் நிச்சயம் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் சிறப்பு அறிவிப்பு ஒன்றினை வெளியிடுவார் என வேறு எந்தப் பள்ளியையும் நாடாமல் நம்பிக்கையோடு காத்திருக்கிறார்கள் அந்த மாணவர்களின் பெற்றோர். ஆனால், முதல்வரின் மேலான கவனத்திற்கு இந்த விடயத்தைக் கொண்டுசெல்வதில் துறை அதிகாரிகளிடம் காணப்படும் தயக்கமே இந்த விவகாரத்தில் பெரும் முட்டுக்கட்டையாக இருக்கிறது என்பதைக் களத்தில் நம்மால் உணர முடிகிறது.

மாணவர்களின் கனவு மெய்ப்படுமா?

கைவசமானது அவர்களுக்கு விரைவில் கிட்டுமா?

தொடர்புடைய பதிவுகள்:

“தமிழக அரசுக்கு நன்றி!” ஹெலன்கெல்லர் மாற்றுத்திறனாளிகள் நலச்சங்கம்

சரித்திர சாதனை

பகிர

2 thoughts on “தயங்கும் அதிகாரிகள்! தடுமாற்றத்தில் மாற்றுத்திறனாளி மாணவர்கள்! சிக்கலில் சிறப்புப்பள்ளி மாணவர் சேர்க்கை

உங்கள் கருத்தை உள்ளிடுங்கள்