மாற்றுத்திறனாளிகள் நலன் என்பது சமத்துவத்தையே தன் இறுதி இலக்காகக் கொண்டது.
அரியலூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ஒரு சிறப்பான முன்னெடுப்பைத் தொடங்கியிருக்கிறார். தன்னுடைய மாவட்டத்தில் இருக்கிற பார்வைத்திறன் குறையுடைய மாணவர்களை அருகாமையிலிருக்கிற தஞ்சைப் பார்வைத்திறன் குறையுடையோருக்கான அரசு மேல்நிலைப்பள்ளியில் சேர்த்து கல்வி வழங்குவதற்காகவே சிறப்பு முகாம் ஒன்றை மாவட்ட ஆட்சியரின் தலைமையில் நடத்தி முடித்திருக்கிறார்.
வேறு எந்த மாற்றுத்திறனாளி மாணவர்களைவிடவும் பார்வைத்திறன் குறையுடைய மாணவர்களுக்கு சிறப்புக்கல்வி இன்றியமையாதது, உள்ளடங்கிய கல்விமுறையில் அவர்கள் சேர்ந்து பயில்வது அவர்களுக்கான கற்றல் முழுமையை வழங்காது என்ற ஆழ்ந்த புரிதல் அவரிடம் இருக்கிறது. உண்மையில் மாற்றுத்திறனாளிகளுக்கான மறுவாழ்வில் முதலிடம் வகிப்பது அவர்களின் சிறப்புத் தேவையைக் கருத்தில்கொண்டு அவர்களுக்கு வழங்கப்படுகிற தரமான கல்விதான். ஆனால், மாற்றுத்திறனாளிகள் என்றாலே உதவித்தொகைகள், உதவி உபகரணங்கள் என்ற சிந்தனைதான் எல்லா மட்டங்களிலும் முதன்மையாக விரவிக்கிடக்கிறது.
இந்தச் சிந்தனையைத் தன்னளவில் உடைத்திருக்கிற அரியலூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் நன்றிக்கும் போற்றுதலுக்கும் உரியவர்.
பொதுவாகவே சிறப்புப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கை என்று தொடங்கினாலே ஒரு சிறப்புப்பள்ளி ஆசிரியராக எங்கள் மனதில் முதலில் தோன்றுவது மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர்கள்தான். காரணம், அவர்கள்தான் மாற்றுத்திறனாளிகள் என அடையாளம் காணப்படும் நபர்களுக்கு மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை வழங்கும் பொறுப்பை உடையவர்கள். எனவே, அடையாள அட்டை பெற்ற மாற்றுத்திறனாளிகளின் ஒரு தொகுப்புப் பட்டியல் மாற்றுத்திறனாளிகளுக்கான மாவட்ட அலுவலகங்களில் பராமரிக்கப்படும். அங்கு சென்று, பள்ளிவயதடைந்த பார்வைத்திறன் குறையுடைய குழந்தைகள், சாதாரணப் பள்ளியில் பயிலும் பார்வைத்திறன் குறையுடைய மாணவர்களின் தொடர்பு விவரங்களைப் பிரித்துத் திரட்டி வருவோம்.
இப்படித் தொடங்குகிற முயற்சியில் சில மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர்கள் நல்ல ஒத்துழைப்பை வழங்குவார்கள். இன்னும் சிலர் தங்கள் பணிச்சுமை காரணமாக எங்களோடு இணைந்து செயல்பட முடியாதசூழலில் இருப்பார்கள். காரணம், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர்ப் பணி என்பது, மாவட்டத்தின் வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறை தொழில்த்துறை எனப் பல்வேறு துறைகளுடன் ஊடும் பாவுமாகப் பின்னிப்பிணைந்தது. ஆனாலும், பலர் சுமூக உரையாடல்கள், பரஸ்பர முகமன்கள் வழியாக எங்கள் முயற்சியை அங்கீகரிப்பார்கள்.
இதில் மூன்றாம் தரப்பு ஒன்று இருக்கிறது. இவர்கள்தான் முரண்பாட்டின் தொடக்கப்புள்ளிகள். துறையில் ஒப்பீட்டளவில் இவர்களின் எண்ணிக்கை கணிசமானது.
இவர்களுக்கு சிறப்புப்பள்ளி குறித்து எவ்வித அக்கறையோ, சிறப்புப்பள்ளி ஆசிரியர்கள் மீது மரியாதையோ இருப்பதில்லை. பல்வேறு கோரிக்கைகளுடன் அணுகும் மாற்றுத்திறனாளிகளிடம் தங்களை மாவட்ட ஆட்சியர் போன்றே பாவனை செய்துகொள்வார்கள்.
பார்வைத்திறன் குறையுடைய மாணவர்களின் விவரத்தைக் கேட்டு ஒரு சிறப்புப்பள்ளி ஆசிரியர் இவர்களை அணுகினால், அதிலும் அந்த ஆசிரியர் ஒரு பார்வையற்றவராக இருந்துவிட்டால், தன்னுடைய அதிகாரத்தைக் காட்டத் தொடங்கிவிடுவார்கள். குறைந்தபட்சம் அவர் ஒரு ஆசிரியர் என்ற கண்ணியத்தைக்க்ஊடப் பேண மாட்டார்கள். “தகவல் சொல்லாம வரக்கூடாது, எனக்குப் பல வேலைகள் இருக்கு” என்று குரல் உயர்த்துவார்கள். குறைந்தபட்சம் அமரச்சொல்லவோ, ‘சார்’ என்று விலிக்கக்கூட அவர்களுக்கு மனமிருக்காது. நாமும் கொஞ்சம் குரல் உயர்த்தத் தொடங்கும்போது நிலைமை சுமூகம் அடைந்து, “தம்பி நீங்க அலைய வேண்டாமேனுதான் நான் அப்படிச் சொன்னேன்” என இறங்கிவருவார்கள்.
இது எனக்கே நடந்திருக்கிறது. இதுபோன்ற நிகழ்வுகள்தான், ஏன் நம் பார்வையற்ற போராளிகள் எப்போதும் ஒருவிதக் குரல் உயர்த்திகளாகவே இருக்கிறார்கள்ள் என்பதை எனக்குப் புரியவைத்தது.
இவற்றுக்கெல்லாம் உச்சமாக, அதே தஞ்சைப் பள்ளியின் தலைமை ஆசிரியருக்கு ஒரு கசப்பான நிகழ்வு நடந்திருக்கிறது. தங்களுடைய அரியலூர் முன்னுதாரண முயற்சியை திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்களிலும் செயல்படுத்தலாம் என தொடர்புடைய மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர்களை நேரில் அணுகி இருக்கிறார் தலைமை ஆசிரியர்.
நாகப்பட்டினம் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலரோ, ஒரு பள்ளியின் தலைமை ஆசிரியர் என்றுகூட யோசிக்காமல், ஒருவித அசட்டை மனப்பான்மையிலேயே அவரை எதிர்கொண்டிருக்கிறார். “இப்படி முகாம் நடத்துறதால எனக்கென்ன லாபம்?” என்று கேட்டு, தன் பிசுக்கடைந்த அதிகார முகத்தைக் காட்டியிருக்கிறார் அவர்.
சிறப்புக்கல்வி குறித்த அடிப்படைப் புரிதலோ, சிறப்புப்பள்ளிகள் குறித்த அக்கறையோ இல்லாத இத்தகைய மனப்பான்மை கொண்ட இவர்களைத்தான் துறையும் சிறப்புப்பள்ளிகளை ஆய்வு செய்யுங்கள் என அனுப்பி வைக்கிறது. இவர்களின் அதிகாரமும் ஆணவமும் கொண்ட வினாக்களை எதிர்கொள்ளும் தலைமை ஆசிரியர், அந்தப் பணிக்குத் தன்னைக் கல்வியால் முழுமையாகத் தகுதிபடுத்திக்கொண்டவர் என்பதெல்லாம் துறைக்கு ஒரு பொருட்டே இல்லை.
உண்மையில் மாற்றுத்திறனாளிகளின் நலன் என்ற கருத்துருவாக்கம் அவர்கள் பெறும் தரமான கல்வியை முதன்மை நோக்கமாகக் கொண்டே சிந்திக்கப்பட வேண்டும். அத்தகைய கருத்துருவாக்கத்தைச் சிறப்பான முறையில் அமல்ப்படுத்த ஏதுவாக, இனிவரும் காலங்களில் மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் நியமனங்களில் மூன்றில் இரண்டு பங்கு நேரடி நியமனங்களாக இருக்க வேண்டும்.
அத்தகைய நியமனங்களுக்கு அடிப்படைத் தகுதியாக, அவர்கள் இளங்கலை சிறப்புக் கல்வியல் (B.Ed in Special Education) முடித்திருப்பதைக் கட்டாயமாக்க வேண்டும். இந்தத் தகுதியோடு, சமூகவியல் (sociology), உளவியலில் (psychology) பட்டம் பெற்றவர்களாக இருந்தால், அவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும்.
ஏற்கனவே பணியாற்றும் மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர்கள், சிறப்புப்பள்ளி ஆசிரியர்கள் என மாற்றுத்திறனாளிகளின் மறுவாழ்வில் தொடர்புடைய அனைத்துத் தரப்பினருக்கும், மாற்றுத்திறனாளிகள் தொடர்பான பல்வேறு சட்டங்கள், மாற்றுத்திறனாளிகள் தொடர்பான அரசின் கொள்கைகள், பல்வகை மாற்றுத்திறனாளிகளுக்கான உடலியல் மற்றும் உளவியல் தொடர்பான சிறப்புத் தேவைகள் மற்றும் அதற்கான தீர்வுகள் போன்ற பொருண்மையில் அவ்வப்போது பணியிடைப் பயிற்சிகள் வழங்கப்பட வேண்டும்.
மாற்றுத்திறனாளிகள் நலன் என்பது சமத்துவத்தையே தன் இறுதி இலக்காகக் கொண்டது. அந்த இறுதி இலக்கை அடைகிற பயணத்தில் இணைந்திருக்கிற ஒவ்வொருவரும் தங்களை சமத்துவம் படைக்கும் பணியாளர்களாகச் சமைத்துக்கொள்ளவும் அமைத்துக்கொள்ளவும் முன்வர வேண்டும்.
***ப. சரவணமணிகண்டன்
உண்மையான தகவல். அரசு உண்மைகளை ஆய்வு செய்து சிறப்புக் கல்வியில் புதுமைகளைப் புகுத்த ஆவனசசெய்தால் சிறப்புக் குழந்தைகள் பயனடைவர்.