'எண்ணும் எழுத்தும்' கண் எனத் தகும்

‘எண்ணும் எழுத்தும்’ கண் எனத் தகும்

,வெளியிடப்பட்டது

ஆடல், பாடல், விளையாட்டு போன்றவை ஒரு பார்வை மாற்றுத்திறனாளி குழந்தையிடம் பேசுதல் மற்றும் கேட்டல் திறனையே வளர்க்கும்.

தமிழக முதல்வர் எண்ணும் எழுத்தும் திட்டத்தைத் தொடங்கிவைத்தார் என்ற செய்தியைத் தாங்கிய தி இந்து நாளிதழின் மின்பக்கம்

கரோனா முடக்கத்தால் ஆரம்பக் கல்விய்யில் குழந்தைகளிடம் ஏற்பட்டுவிட்ட கற்றல் பின்னடைவுகளைக் களையும் நோக்கத்தோடு, மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களால் ‘எண்ணும் எழுத்தும்’ திட்டம் தமிழகப் பள்ளிகளில் தொடங்கிவைக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் மூலம், 1ஆம் வகுப்பு முதல் 3ஆம் வகுப்புவரை பயிலும் குழந்தைகளுக்கு ஆடல், பாடல், விளையாட்டு வாயிலாக மொழி, கணிதம், அறிவியல் பாடங்கள் கற்பிக்கப்பட உள்ளன.

திட்டத்தைச் சீரிய முறையில் நடைமுறைப்படுத்தும் பொருட்டு, அதற்கான கற்பித்தல் பயிற்சி முறைகள் வடிவமைக்கப்பட்டுள்ளதோடு, வகுப்பு வாரியாக அவற்றை நடைமுறைப்படுத்துவதற்கான பயிற்சிக் கையேடுகளும் தயாரிக்கப்பட்டுள்ளன. திட்டத்தின்படி, 1,2,3 வகுப்புக் குழந்தைகள் முறையே அரும்பு, மொட்டு, மலர் எனப் பிரிக்கப்பட்டு, மேற்கண்ட பாடங்கள் படிப்படியாகக் கற்பிக்கப்படுகின்றன. சான்றாக, அரும்பு நிலையில் குழந்தைக்கு மொழியின் எழுத்துகள் அறிமுகப்படுத்தப்படும். மொட்டு நிலையில், வார்த்தைகளும், மலர் நிலையில் சொற்றொடர்களும் கற்பிக்கப்படும்.

இந்தத் திட்டம் முறையாக அமலாக்கம் பெறும் நிலையில், 2025ஆம் ஆண்டில் தமிழகப் பள்ளிகளில் பயிலும் எட்டு வயதுக்கு உட்பட்ட குழந்தைகளிடம் மொழி மற்றும் கணிதம் தொடர்பான திறன்களில் வரவேற்கத் தக்க மாற்றங்கள் நிகழும் என்கிற மாண்புமிகு முதல்வர் அவர்களின் பெருவிருப்பமும் நிறைவேறும்.

அதேசமயம், திட்டத்திற்காக வகுக்கப்பட்டுள்ள கற்பித்தல் முறைகளில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான சிறப்புத் தேவைகள் கணக்கில் கொள்ளப்பட்டுள்ளனவா என்பதையும் அரசு ஆராய வேண்டும். அதிலும் குறிப்பாக, உள்ளடங்கிய கல்விமுறையில் (Inclusive Education) பயிலும் பார்வை மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு எழுத்துகளைக் கற்பிப்பதில் எத்தகைய முறை கையாளப்படும் என்பது தெரியவில்லை. பிரெயில் வழியே எழுத்தைக் கற்றல், கணிதம் கற்பிக்க டைலர் ஃபிரேம் பயன்படுத்துவது போன்றவைதான் ஆரம்ப நிலையில் ஒரு பார்வை மாற்றுத்திறனாளி குழந்தைக்கு உகந்த முறை.  அப்படியிருக்க, வெறும் ஆடல், பாடல், விளையாட்டுகள் அந்தக் குழந்தையின் மனனத்தை மட்டுமே வளர்க்கும். மாறாக, மொழியையும் கணிதத்தையும் உள்ளார்ந்து புரிந்துகொள்வதில் அந்தக் குழந்தைகளிடம் எதிர்பார்க்கும் மாற்றத்தை நிகழ்த்த முடியாது.

[சாதாரணக் குழந்தை கற்றலின் ஆரம்ப நிலையில், அடைய வேண்டிய பேசுதல் (speaking), கேட்டல், (listening), எழுதுதல் (writing), வாசித்தல் (reading) ஆகிய அடிப்படைத் திறன்களைப் பெற ‘எண்ணும் எழுத்தும்’ திட்டம்  சீரிய முறையில் பங்காற்றும் என நம்பலாம். அதேசமயம், ஆடல், பாடல், விளையாட்டு போன்றவை ஒரு பார்வை மாற்றுத்திறனாளி குழந்தையிடம் பேசுதல் மற்றும் கேட்டல் திறனையே வளர்க்கும். எஞ்சிய திறன்களில் தேக்கம் ஏற்பட்டு, அதன் கற்றல் வளர்ச்சி பாதிக்கப்படும். ஏனெனில், ஒரு சாதாரண குழந்தை, தனது 85 விழுக்காடு அறிதலைப் பார்வைப்புலத்தின் வழியே பெறுகிறது. ஒரு பார்வை மாற்றுத்திறனாளி குழந்தை எதிர்கொள்ளும் இந்த இழப்பு, அதன் எஞ்சிய புலன்களான தொடுதல், கேட்டல், முகர்தல், சுவைத்தல் போன்ற புலன்களைத் தூண்டுவதன் வாயிலாகப் பெருமளவில் ஈடுசெய்யப்படுகிறது. இத்தகைய சிந்தனைகளை உள்ளடக்கியதாக திட்டத்தின் கற்பித்தல் முறைகள் வடிவமைக்கப்பட்டிருக்கின்றனவா என்பதில் தெளிவில்லை.

ஒருவேளை கற்பித்தல் முறையில் மேற்கண்ட இத்தகைய சிந்தனைகளும் உள்ளடக்கம் கொண்டுள்ளன என்பதாகக் கருதினால், ஆடல், பாடல், விளையாட்டு முறைகளோடு பார்வை மாற்றுத்திறனாளிக் குழந்தைகளுக்கு பிரெயில், கணிதம் ஆகியவற்றைக் கற்பிக்கும் சிறப்புப் பயிற்சி முறைகளில்  பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் பள்ளிக்கல்வித்துறை பள்ளிகளில் போதிய அளவில் இருக்கிறார்களா எனத் தெரியவில்லை. ஒரு வகுப்பறையில் 40 சாதாரணக் குழந்தைகளுக்குக் கற்பிக்கும் ஆசிரியர் இந்தக் குழந்தையையும் கணக்கில் எடுத்துக்கொண்டு தனித்த சிறப்புக் கற்பித்தலை நிகழ்த்துவது சாத்தியமா என்பதையும் சிந்திக்க வேண்டும்.

இதுபற்றியெல்லாம் அரசின் கவனத்திற்குக் கொண்டுசெல்ல மாற்றுத்திறனாளிகளுக்கான அமைப்புகள் முயல வேண்டும். ‘எண்ணும் எழுத்தும்’ கற்பித்தல் முறையை சிறப்புப்பள்ளி மாணவர்களுக்குக் கற்பிக்கும் வகையில், போதிய தகவமைதல்களுடன் (adaptations) அதனை வடிவமைத்து, சிறப்புப்பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சிகள் வழங்கிட மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் கீழ் செயல்படும் சிறப்புப்பள்ளிகள் பிரிவு  ஆக்கபூர்வமான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

ஏனெனில், பிற எவரையும்விட பார்வை மாற்றுத்திறனாளிகள் போன்ற விளிம்புநிலைச் சமூகத்துக்குத்தான்,

‘எண்ணும் எழுத்தும்’

கண் எனத் தகும்.

***ப. சரவணமணிகண்டன்

1 thought on “‘எண்ணும் எழுத்தும்’ கண் எனத் தகும்

  1. ஆரம்ப நிலை மாணவர்கள் கற்றல் மேம்பட எண்ணும் எழுத்தும் என்ற முறை பலன் தரும் ஆனால் அனைத்துநிலை மாணவருக்கும் பொருந்தும் என்பது கேள்வி கூறிதான் இந்த செய்தி உரியவர்களிடம் சென்று சேர வேண்டும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *