ஒப்புநோக்க, நல வாரியப் பிரதிநிதிகளைக் காட்டிலும் ஆலோசனை வாரியப் பிரதிநிதிகளின் தேர்வு மனநிறைவைத் தருகிறது.



ஒரு வழியாக மாற்றுத்திறனாளிகள் நல வாரியத்தின் உறுப்பினர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் மாநில ஆலோசனை வாரியத்தின் உறுப்பினர்கள் யார் என அறிவிக்கப்பட்டு, பந்தயம் (race) ஒரு முடிவுக்கு வந்துவிட்டது. நல வாரியம், ஆலோசனை வாரியம் என மொத்தம் ஏழு பார்வையற்றவர்கள் பார்வையற்ற சமூகத்தின் சார்பில் பிரதிநிதிகளாக அரசால் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள்.
ஒப்புநோக்க, நல வாரியப் பிரதிநிதிகளைக் காட்டிலும் ஆலோசனை வாரியப் பிரதிநிதிகளின் தேர்வு மனநிறைவைத் தருகிறது. காரணம், நல வாரியத்தின் நான்கு உறுப்பினர்களில் ஓரிருவர் பார்வையற்ற சமூகத்திடம் போதிய அறிமுகமே இல்லாமல் ஒருவித விலக்கத்தோடே இருப்பவர்கள். ஆனால், ஆலோசனை வாரியத்தின் மூன்று உறுப்பினர்களுமே பார்வையற்றோர் சமூகத்தில் நன்கு அறிமுகமானவர்கள், பார்வையற்றோர் தொடர்பான தளங்களில் தொடர்ச்சியாக இயங்கிக்கொண்டிருப்பவர்கள்.
மாற்றுத்திறனாளிகளுக்கான நல வாரியத்தை ஏற்படுத்திய பெருமை முன்னால் முதல்வர் ஐயா கலைஞர் மு. கருணாநிதி அவர்களையே சாரும். அன்றைய நிலையில் துறை ஊனமுற்றோர் நலத்துறை என்ற பெயரில் சமூகநலத்துறையின் ஒரு பிரிவாக இயங்கிக்கொண்டிருந்தது. சமூகநலத்துறையின் அமைச்சர்தான் ஊனமுற்றோர் நலத்துறைக்கும் அமைச்சர். நல வாரியத்தின் தலைவராகவும் அவரே செயல்பட்டார். ஆனால், 2010 மார்ச் மாதத்தில் நடைபெற்ற தமிழக சட்டமன்றக் கூட்டத்தில் சில முக்கிய அறிவிப்புகளை அன்றைய முதல்வர் கலைஞர் வெளியிட்டார். அவை:
*இனி ஊனமுற்றவர்கள் மாற்றுத்திறனாளிகள் என்று அழைக்கப்படுவர்.
*ஊனமுற்றோர் நலத்துறை மாற்றுத்திறனாளிகள் நலத்துறை எனப் பெயர் மாற்றம் செய்யப்படும்.
*மாற்றுத்திறனாளிகள் நலத்துறைக்கு தனிச் செயலர் நியமிக்கப்படுவார்.
*புதிதாக உருவாக்கப்பட்டுள்ள மாற்றுத்திறனாளிகள் நலத்துறை முதலமைச்சரான தனது நேரடிக் கட்டுப்பாட்டில் செயல்படும்.
மேற்கண்ட அறிவிப்புகள் ஐக்கிய நாடுகள் அவையின் 2007ஆம் ஆண்டின் தீர்மானங்களுக்குச் செயல்வடிவம் தருகிற வகையில் இந்தியாவிலேயே முன்னுதாரண நடவடிக்கைகளாக அமைந்தன. இந்த நடவடிக்கைகள் மூலம், தான் மாற்றுத்திறனாளிகளுக்கான மறுவாழ்வுப் பார்வையை கருணைத்தளத்திலிருந்து உரிமைகள் தளத்திற்கு நகர்த்திச் செல்ல விரும்புவதாகவும் கலைஞர் முரசொலியில் எழுதினார். ஆனாலும் ஓராண்டில் ஆட்சி மாற்றம் நிகழவே, மீண்டும் சமூகநலத்துறை அமைச்சரின் பொறுப்பிலேயே மாற்றுத்திறனாளிகள் நலத்துறை விடப்பட்டது.
கடந்த பத்தாண்டுகால அதிமுக ஆட்சியில் நலவாரியக் கூட்டங்கள் அவ்வளவாக நடைபெறவில்லை. அதேநேரம், மாவட்ட ஆட்சியர் தலைமையில் மாற்றுத்திறனாளிப் பிரதிநிதிகள் அடங்கிய குழு எல்லா மாவட்டங்களிலும் ஏற்படுத்தப்பட்டது. குழுவானது மாதம் ஒருமுறை கூடி மாற்றுத்திறனாளிகள் தொடர்பாக விவாதித்து, முக்கியப் பரிந்துரைகளை அரசுக்கு அனுப்ப வேண்டும் என்பதே அது ஏற்படுத்தப்பட்டதன் முதன்மையான நோக்கம். ஆனால், பல மாவட்டங்களில் மாதக் கணக்கில் அத்தகைய கூட்டங்களே நடைபெறவில்லை என்பதுதான் மாற்றுத்திறனாளிகளின் குமுறலாக இருந்தது.
எல்லாம் சரி, உண்மையில் வாரியத்தில் உறுப்பினராக இருத்தல், மாவட்ட குழுக்களில் மாற்றுத்திறனாளிகளின் பிரதிநிதிகளாக இடம்பெறுவது போன்றவற்றால் என்ன நிகழ்ந்துவிடப்போகிறது என ஒரு சாமானியப் பார்வையற்றவருக்கு எழும் கேள்விகள் இயல்பானவை. கேள்விகளுக்கான பதில்களை நாம் இதுவரை நிகழ்ந்தவற்றிலிருந்துதான் கண்டடைய வேண்டும்.
கடந்த காலங்களின் சில தருணங்களில் நல வாரியம் எப்படி செயல்பட்டது என்பதற்கு நான் அறிந்த இரண்டு நிகழ்வுகளை இடம், காலம், நபர் தவிர்த்து இங்கு சான்றாகச் சொல்லலாம் என நினைக்கிறேன்.
நிகழ்வு 1:
அது ஓர் இனிய காலை வேளை. ஒரு கூடத்தில் பலர் வெவ்வேறு காரணங்களுக்காக அழைக்கப்பட்டு குழுமியிருந்தோம். அந்தக் கூட்டத்துக்கு நல வாரிய உறுப்பினர்களும் அழைக்கப்பட்டிருந்தார்கள். அவர்களுள் எனக்கு அறிமுகமான ஒருவரும் இருந்தார். அமைச்சரின் வருகை நிகழ்ந்தபோது அனைவரும் எழுந்து வணக்கம் சொன்னோம். அப்போது எனக்கு அறிமுகமான அந்த ஆளுமை அமைச்சரிடம் மிகக் கனிவான குரலில் “நாங்கள் ஏன் அழைக்கப்பட்டிருக்கிறோம்?” எனக் கேட்டார். மாற்றுத்திறனாளிகள் தொடர்பாக அரசின் ஒரு முக்கியத் திட்டத்தை இந்தக் கூட்டத்தில் தொடங்கவிருப்பதாகவும் அதற்காகவே வாரிய உறுப்பினர்கள் உட்பட பல பயனாளிகள் அழைக்கப்பட்டிருப்பதாகவும் அமைச்சர் கனிவான குரலில் சொன்னார்.
நிகழ்வு 2:
நலவாரியக் கூட்டத்தில் ஒரு விவாதம் எழுகிறது. “ஊனத்தைப் பிறப்பிலேயே கண்டறியவும், ஊனமுற்ற குழந்தைகளின் பிறப்புவீதத்தைக் கட்டுப்படுத்தவும் நாம் ஏதாவது திட்டமிட வேண்டும்” என அமைச்சர் சொல்கிறார்.
பல ‘ஆமாம் ஆமாம் அம்மா’ என்ற பின் பாட்டுகளைத் தாண்டி ஒரு குரல் ஒலிக்கிறது.
“இது சுகாதாரத்துறையின் பணி. நமது பணி என்பது பிறந்துவிட்ட ஊனமுற்றவர்களுக்கு மறுவாழ்வு வழங்க்உவது. எனவே, சுகாதாரத்துறையின் பணிகளைச் சிந்திப்பதைவிடுத்து மறுவாழ்வு தொடர்பாக ஏதேனும் திட்டமிடலாம்”
இந்தக் குரலுக்கு அந்த ‘ஆமாம் ஆமாம்கள்’ இல்லை. ஒற்றைக்குரல் என்பதால் எளிதில் அந்தக் குரலில் பொதிந்திருந்த உண்மையும் மிகச் சாதாரணமாக ஓரங்கட்டப்பட்டுவிட்டது.
ஆனாலும், நலவாரியத்தால் ஏற்பட்ட நன்மைகளும் அதிகம். நலவாரிய அட்டை வைத்திருக்கும் ஒரு மாற்றுத்திறனாளியின் இறப்புக்கு ஈமக்கடன் பணம், விபத்தில் காயம் அடையும் மாற்றுத்திறனாளிக்கு சிகிச்சைக்கு பணம் வழங்கியது, பல்வேறு கடன்கள் குறித்து மாற்றுத்திறனாளிகளிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தியது, சாமானிய மாற்றுத்திறனாளிக்கும் அரசுக்கும் இடையே ஓர் உறவுப்பாலமாய் செயல்பட்டது போன்றவை நலவாரியத்தால் விளைந்த நற்பலன்கள். அத்தோடு, அதுவரை கழிவிரக்கத்தாலும் பரிதாப உணர்ச்சியாலும் நிறைவேறிய மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கைகளுக்கு அரசியல் சார்ந்த புதுத்தளத்தை ஏற்படுத்தியதில் நல வாரிய அமைப்புக்கு முக்கியப் பங்குண்டு. அத்தகைய ஓர் தளத்தைச் செழுமைப்படுத்த வேண்டியவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட அதன் அங்கத்தினர்கள்.
உறுப்பினர்கள் என்ன செய்ய வேண்டும்:
வெவ்வேறு வகை மாற்றுத்திறனாளிகளுக்கு அவர்களின் இயலாமையின் அடிப்படையில் எழும் தேவைகள் மாறுபட்டவை. அதற்கான தீர்வுகளை நோக்கிய செயல்பாடுகளிலும் மாறுபட்ட அணுகுமுறைகளையே கையாள வேண்டும். ஆனால், மாற்றுத்திறனாளிகள் என்று பொதுமைப்படுத்தி முன்மொழியப்படும் அரசின் திட்டங்களில் இந்தக் கருத்து வெகுவாகப் புறந்தள்ளப்படுகிறது என்பதே நடைமுறையாக உள்ளது. இந்த மிகப்பெரிய குறைபாட்டை அரசுக்குச் சுட்டிக்காட்டி, அதனால் அரசின் ஆவணப்பட்டியலில் பின்வரிசையில் இருக்கிற பார்வை மாற்றுத்திறனாளிகள் போன்ற சமூகத்திற்கு ஏற்படுகிற பாதிப்புகளை அரசின் கவனத்துக்கு எடுத்துச் செல்ல இத்தகைய வாரிய உறுப்பினர் பொறுப்புகள் வெகுவாகப் பயன்படும்.
உதவித்தொகைகள், ஊன்றுகோல்கள், மூக்குக்கண்ணாடிகள் மட்டுமே மறுவாழ்வு அல்ல. இதுவரை பார்வையற்றோர் கல்வி தொடர்பில் அரசு புதுமையாகவோ, பலமாகவோ எதுவும் சிந்தித்ததாகத் தெரியவில்லை. இன்றைய சூழலில், பார்வையற்றவர்களின் கல்வி என்பது அரசின் பகுப்பாய்வற்ற பல்வேறு திட்ட அமலாக்கங்களால் சிதைந்து கிடக்கிறது. தரமற்ற ஒழுங்குபடுத்தப்படாத கல்விமுறையால் ஏற்படும் பக்க விளைவுகள் ஒரு தலைமுறை தாண்டிதான் வெளியே தலைகாட்டும் என்பதால் தரவுகள் கொண்டு இப்பிரச்சனையை அணுகவும் முடியாது. எனவே, வாரிய உறுப்பினர்கள் இதில் கூடுதல் அக்கறையோடு செயல்பட வேண்டும். கல்வி தொடர்பில் தான் கண்டவற்றை மட்டுமே உண்மையென முன்னிறுத்தாமல், அது சார்ந்து இயங்கும் பார்வையற்ற குழுக்கள், சிறப்புப்பள்ளி ஆசிரியர்களின் கருத்தையும் கேட்டுத் தெளிவுபெற வேண்டும்.
பார்வையற்றோருக்காக ஏற்படுத்தப்பட்ட தொழிற்பயிற்சிகளில் சில காலத்தால் பாழ்பட்டுவிட்டன. இனி அதற்கான தேவைகள் இல்லை என்றானபிறகு, புதுமையான, பணிவாய்ப்பை ஏற்படுத்துகிற பயிற்சி மற்றும் தொழில் வாய்ப்புகள் குறித்து புதிய ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். அத்தோடு, பார்வையற்றோருக்கான பயிற்சி நிறுவனங்களின் போக்குகளையும் ஆராய்ந்து, அதன் செயலோட்டத்தில் புத்தாக்கம் ஏற்பட வழிவகை செய்ய வேண்டும்.
எந்த ஒரு சமூகமும் அரசு மற்றும் அரசு சாரா நிறுவனப் பணிகளை மட்டுமே சார்ந்திருப்பதில்லை. அதனால்தான், ஒரு சமூகத்தின் பெரும்பான்மை எண்ணிக்கையில் இருப்பவர்கள் சுயதொழில் செய்து வருமானம் ஈட்டும் தொழில்முனைவோர். ஆனால், பிற சமூகங்களை ஒப்பிடுகையில், சுய தொழில் செய்து வருமானம் ஈட்டும் பார்வையற்றவர்களின் நிலை மிக மோசமாகக் காணப்படுகிறது. தங்களின் அன்றாடத்தை அன்றாடம் ஓட்டுவதே அவர்களுக்கு மிகச் சிரமமான செயலாக இருக்கிறது. இந்தச் சூழலில், அவர்களுக்கான புதிய வாய்ப்புகளைக் கண்டறிதல், ஏற்கனவே அமலிலிருக்கிற அரசின் திட்டங்களைச் செறிவாகப் பயன்படுத்தி அவர்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்துவது குறித்தும் உறுப்பினர்கள் சிந்திக்க வேண்டும்.
நாம் என்ன செய்ய வேண்டும்:
ஒரு நல்ல முன்னெடுப்பால் விளைகிற நற்பலன்கள் தன்னோடே சில பக்க விளைவுகளையும் கூட்டிக்கொண்டுவரும் என்பது பொதுவிதி. நலவாரியத்தின் தொடக்க காலங்களில் அதில் உறுப்பினர்களாகப் பங்கேற்றவர்களில் சிலர், ஆணையர் முதல் மாவட்ட மறுவாழ்வு அலுவலர் வரை, ஏன் ஒரு சாமானிய மாற்றுத்திறனாளியிடம்கூட ஏதோ தனக்கு மாவட்ட செயலாளர் பொறுப்பே கிடைத்துவிட்டதுபோல ஒருவித கெத்து காட்டி பேசித் திரிந்ததையெல்லாம் நான் பார்த்திருக்கிறேன். இன்றும்கூட அப்படியான மனநிலைகளில் சிலர் இருக்கத்தான் செய்வார்கள். போர்ட் மெம்பர் என்கிற ஒற்றை அங்கீகாரம், துறையில் அவர்கள் நுழைந்து எந்த ஒரு அதிகாரியையும் எளிமையாகச் சந்தித்துவிடுவதற்கான ஒருவித அனுமதிச் சீட்டை அவர் கையில் வழங்கியிருக்கிறது. அதனை வைத்துக்கொண்டு, பொது முன்னுரிமைகளைச் சிதைத்து, விதிகளை வளைத்துத் தனக்கும் தனக்கு வேண்டியவர்களுக்கு மட்டும் வேண்டியதைச் சாதித்துக்கொள்கிற சில பண்பாளர்களிடம் விழிப்புடன் இருக்க வேண்டியதும், அதுகுறித்த அறிதலை அரசுக்கும் பார்வையற்ற சமூகத்துக்கும் தெரிவிப்பது அறிவார்ந்த தளத்தில் இயங்கும் பார்வையற்றவர்களின் கடமை.
ஆக்கபூர்வமாகச் செயல்படும் உறுப்பினர்களை அங்கீகரிப்பது, அவர்களின் பணிகளை சமூகத்திடம் எடுத்துச் செல்வது போன்றவை அவர்களை ஊக்கமடையச் செய்யும். மேலும், தனிப்பட்ட முன்முடிவுகளைக் களைந்து, உறுப்பினர்களிடம் தொடர் உரையாடலில் இருப்பது அவசியம். தொழில்நுட்பம் அதற்கு வெகுவாகத் துணை செய்யும்.
இறுதியாக ஒன்று, நமது தேவைகள் கோருகிற வேகத்திற்கு அரசு இயந்திரங்களின் நடைமுறைச் சுழற்சி ஒருபோதும் ஈடுகொடுக்காது. எனவே, நிகழும் தாமதத்திற்கும் சுணக்கத்திற்கும் உறுப்பினர்களின் செயலற்ற தன்மையே காரணம் என முடிவுக்கு வராமல், அவர்களை எந்தவகையிலெல்லாம் முடுக்கிவிடலாம் என்பதை மட்டும் சிந்தித்துச் செயலாற்றுவோம். நமது தனிப்பட்ட ஏமாற்றங்களை பொதுச்சமூகம் அடைந்துவ்இட்ட ஏமாற்றங்களாகக் கற்பிதம் செய்துகொண்டு கங்கனம் கட்டுவதையெல்லாம் இனியேனும் நிறுத்துவோம்.
வீரியமாகக் காரியம் ஆற்றிட வாரிய உறுப்பினர்களுக்கு வாழ்த்துகள்.
***ப. சரவணமணிகண்டன்
உண்மை, ஆமாம் போடுவதை நிறுத்திவிட்டு எதற்காக நியமிக்கப்பட்டார்கள் என்பதை உனர்த்து வீரியத்துடன் காரியத்தை செய்ய வாரிய உறுப்பினர்களுக்கு வாழ்த்துகள்.
ஆம் எதற்காக வாரியம் தொடங்கப்பட்டது, தமக்கு ஏன் இந்த பதவி கொடுக்கப்பட்டது ஆமாம் போடுவதற்காக அல்ல என்பதை உனர்த்து வீரியத்துடன் காரியத்தை செய்ய வாரிய உறுப்பினர்களுக்கு வாழ்த்துகள்