சோப்பு எண்ணெய் செலவீனமும் ஒரு சுய குறிப்பும்

சோப்பு எண்ணெய் செலவீனமும் ஒரு சுய குறிப்பும்

,வெளியிடப்பட்டது

பெரும்பாலான சிறப்புப்பள்ளிகளில் நன்கொடையாளர்களின் உதவியால் இந்தச் செலவீனங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. அரசின் ஒதுக்கீட்டை மட்டும் வைத்துக்கொண்டு எதுவும் செய்ய இயலாது என்பதே என்றைக்குமான எதார்த்தம்.

சிறப்புப்பள்ளி விடுதிகளில் மாணவர்களுக்கு தலைசீவி பவுடர் போடும் பணியாளர்கள்

மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் கீழ் செயல்படும் 22 அரசு சிறப்புப்பள்ளிகளின் விடுதிகளில் 1052 மாணவர்கள் தற்போது தங்கிப் பயில்கிறார்கள். இவர்களின் தன் சுத்தம் பேணுவதற்காகத் தலா ஒரு மாணவனுக்கு  வழங்கப்படும் சோப்பு, எண்ணெய் உள்ளிட்ட செலவுகளுக்கான தொகை ரூ. 30லிருந்து ரூ. 50ஆக உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

என் பள்ளி நாட்களில் எங்கள் விடுதிக்காப்பாளரின் அறையில் அகளமான மூடியிடப்படாத ஒரு ப்லாஸ்டிக் பெட்டி இருக்கும். அதில் நீள் செவ்வக வடிவில் பெரிய பெரிய லைபாய் சோப்புக்கட்டிகள் அடுக்கப்பட்டிருக்கும். நீண்ட நாளைக்குச் செல்லுபடியாகிற வகையில் எளிதில் கரைந்துவிடாத தனித்தன்மைக்குச் சொந்தம் கொண்டாடும் ஒரே சோப்பு லைபாய்தான். அவற்றை சிறுசிறு சதுரங்களாக வெட்டி எங்களுக்குக் கொடுப்பார்கள். கையில் தொடும்போது ஏதோ ஒருவகை கேக் நினைப்பு வந்தாலும், உள்ளுக்குள் தித்திப்பு எழுந்துவிடாதபடிக்கு அதன் வாசனை என்னை ஒவ்வாமைகொள்ளச் செய்யும். அந்த ஒவ்வாமையின் நீட்சியாகத்தான் வானோலியில் டீவியில் நான் கேட்ட “ஆரோக்கிய வாழ்வினையே காப்பது லைபாய். லைபாய் எவ்இடமோ, ஆரோக்கியம் அவ்விடமே. லைஐஐஐஐபாய்” என்ற குழுப்பாடல் நான் வெறுக்கும் ஒன்றாக மாறிப்போனது. சோப்புக்கட்டியின் மேல் லைபாய் என வார்க்கப்பட்ட அச்சை மீண்டும் மீண்டும் தடவிப் பார்த்துப் புலகாங்கிதம் அடைந்துகொள்வதே எனக்கான ஒரே ஆறுதல்.

அந்த நாட்களில் பற்பசையெல்லாம் தரமாட்டார்கள். கோபால் பற்பொடி மட்டும்தான். நரநரப்பும் தித்திப்பும் கொண்ட கோபால் பற்பொடியைச் சுவைத்துப் பார்த்த குழந்தைப் பருவம் என்னுடையதும்தான். இன்றுவரை எந்த ஒரு பற்பசைக்கும் அத்தகைய தனித்த சுவை அமைந்ததே இல்லை.

காலைச் சாப்பாடு முடிந்து பள்ளி வேளைக்கு அரைமணி நேரம் முன்னதாக வரிசையில் நின்று, விடுதி அக்காள்களிடம் தேங்காய் எண்ணெய் வாங்கித் தலையில் தேய்ப்போம். இரு கைகளையும் குவித்துவைத்து ஏதோ கோவிலில் தீர்த்தம் வாங்குவது போல் அரங்கேறும் அந்த நிகழ்வு. இதெல்லாம் சின்ன வகுப்புகளில்தான். வகுப்புகள் ஏற ஏற என் தெரிவுகள் மாறின. சோப்பு, பேஸ்ட் என நானே பெற்றோரிடம் கேட்டுவாங்கி தனியாகக் கையாளக் கற்றுக்கொண்டேன்.

இப்போது சிறப்புப்பள்ளிகளில் நிலைமைகள் மாறிவிட்டன. லைபாய் போய், ஹமாம் வந்துவிட்டது. பற்பசை தருகிறார்கள். பெரும்பாலான சிறப்புப்பள்ளிகளில் நன்கொடையாளர்களின் உதவியால் இந்தச் செலவீனங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. அரசின் ஒதுக்கீட்டை மட்டும் வைத்துக்கொண்டு எதுவும் செய்ய இயலாது என்பதே என்றைக்குமான எதார்த்தம். பிறப்பிக்கப்பட்டிருக்கிற அரசாணையும் அதனை ஆமோதிப்பதாகவே உள்ளது.

1988ல் 20 என்று நிர்ணயிக்கப்பட்ட தொகை, 2003ல் 30ஆக உயர்த்தப்பட்டது. இதனை குறைந்தபட்சம் 100 என உயர்த்துமாறு நாங்களும் கடந்த 13 ஆண்டுகளாகக் கேட்டுப் பார்த்தும் எதுவும் நடக்கவில்லை. இப்போது இந்தச் செலவீனத்துக்கான தொகை ரூ. 30லிருந்து ரூ. 50ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இன்று ஒரு குளியல் சோப்பின் விலையே 50ஐத் தொடும் என்ற நிலையில், எங்களின் கோரிக்கை இன்னும் நிறைவேறவில்லை என்றுதான் சொல்லவேண்டும். ஆனாலும், இப்படி ஒரு செலவீனம் இருப்பதை அரசு அங்கீகரித்திருப்பதாகத் தேற்றிக்கொள்வதோடு, என் பழைய நினைவுகளைக் கிளர்த்தியமைக்காய் கூடுதலாய் ஒரு நன்றியையும் சொல்லிக்கொள்கிறேன்.

***ப. சரவணமணிகண்டன்

அரசாணையைப் பதிவிறக்க:

1 thought on “சோப்பு எண்ணெய் செலவீனமும் ஒரு சுய குறிப்பும்

  1. அனைவருக்கும் வணக்கம் சிறப்பாக ஒரு எதார்த்தத்தை தொகுத்து கூறியுள்ளீர்கள். அரசு சம்மந்தப்பட்ட நபர்களை கலந்து முடிவு செய்யாததே இதுபோன்ற தவறுக்கு காரணம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *