கரோனா பெருந்தொற்று காலத்தைக் கடந்து, பார்வையற்ற பணிநாடுனர்கள் எதிர்கொள்ளும் முக்கியமான தேர்வு இது.

தமிழக அரசுத்துறையில் காலியாக உள்ள சுமார் 5529 பணியிடங்களை நிரப்பிடும் வகையில் கடந்த 21 மே 2022 அன்று டிஎன்பிஎஸ்சி குரூப் 2 மற்றும் 2ஏ தேர்வுகள் நடைபெற்றன. மொத்தம் 4000 மையங்களில் நடைபெற்ற இந்தத் தேர்வுக்கு ஏறத்தாழ 11 லட்சத்து 78,000 தேர்வர்கள் விண்ணப்பித்திருந்தனர். இவர்களுள் 14,000 மாற்றுத்திறனாளிகளும் அடக்கம். பல்வேறு காரணங்களால் சுமார் ஒரு லட்சத்து 83,000 தேர்வர்கள் தேர்வில் பங்கேற்காத நிலையில், சுமார் ஒன்பது லட்சத்து 90,000 பேர் இந்தத் தேர்வை எதிர்கொண்டனர்.
கரோனா பெருந்தொற்று காலத்தைக் கடந்து, பார்வையற்ற பணிநாடுனர்கள் எதிர்கொள்ளும் முக்கியமான தேர்வு இது. தமிழுக்கு முக்கியத்துவம் வழங்கும் வகையில் டிஎன்பிஎஸ்சி தனது தேர்வுகளை வடிவமைக்கத் தொடங்கியிருப்பது வரவேற்புக்குரிய ஒன்று. அதேவேளை, தமிழ்மொழியை சரளமாகப் பேசவும் எழுதவும் அறிந்த பதிலி எழுத்தர்களை (scribes) நியமிப்பதில் ஆணையம் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியது அவசியம் என்பதைத் தேர்வெழுதிய சில பார்வையற்ற பணிநாடுனர்களின் பின்னூட்டங்கள் நமக்குத் தெரிவிக்கின்றன.
தேர்வின்போது சில பதிலி எழுத்தர்கள் திக்கித் திணறித்தான் தமிழ் வாசித்திருக்கிறார்கள். பொருத்துதல், கூற்று காரணம் ஆய்தல் போன்ற வினா மாதிரிகளை விளங்கிக்கொள்வதில் இவ்வகை பதிலி எழுத்தர்களால் பார்வையற்ற தேர்வர்கள் தவிர்க்க இயலாத மன உலைச்சலுக்கு ஆளாகியிருக்கிறார்கள். இந்நிலையில், செய்யுள் பகுதிகளை வாசித்துப் புரிந்துகொள்வதில் பார்வையற்ற தேர்வர்கள் எத்தகைய இடையூறுகளைச் சந்தித்திருப்பார்கள் என்பதை எளிதாகவே ஊகித்துக்கொள்ள முடியும். தமிழ்தான் என்றில்லை, சில பதிலி எழுத்தர்கள் கணிதக் குறியீடுகளை வாசிப்பதிலும் தடுமாறியிருக்கிறார்கள்.
ஆங்கில மயமாக்கப்பட்டுவிட்ட இன்றைய நமது கல்விச் சூழலில், பெரும்பாலான இளைஞர்கள் தமிழ் பேசவோ, எழுதவோ மிகவும் தடுமாறுகிறார்கள் என்பதே கள எதார்த்தம். இப்படியிருக்க, ஆணையத்தால் தெரிவு செய்யப்படும் பதிலி எழுத்தர்களின் மொழித்திறனைச் சோதித்தறிவது இன்றியமையாத கடமையாகும். எனவே, இனிவரும் காலங்களில் பார்வையற்ற தேர்வர்களின் நலனைக் கருத்தில்கொண்டு சில முன் தயாரிப்புகளை டிஎன்பிஎஸ்சி தேர்வாணையம் திட்டமிடலாம். அவை:
- டிஎன்பிஎஸ்சி தேர்வினை எழுதவுள்ள மொத்தத் தேர்வர்களின் எண்ணிக்கையைப் பராமரிப்பது போலவே, பதிலி எழுத்தர்கள் தேவைப்படும் தேர்வர்களின் எண்ணிக்கையும் கணக்கிடப்பட்டு, வெளிப்படையாக அறிவிக்கப்பட வேண்டும்.
- தேர்வுக்கு ஓரிரு நாளுக்கு முன்னதாகவே பதிலி எழுத்தர்கள் கண்டறியப்பட்டு, அவர்களுக்கு தேர்வு தொடர்பான சில முன் ஆலோசனைகள் வழங்கப்பட வேண்டும். ஏற்கனவே போட்டித்தேர்வுகளை எதிர்கொண்டு வெற்றிபெற்று பணியிலுள்ள பார்வையற்ற அரசு ஊழியர்களை இந்தப் பணிக்கு ஆணையம் பயன்படுத்திக்கொள்ளலாம்.
- பதிலி எழுத்தர்களின் மொழித்திறன், கணிதம் மற்றும் அறிவியல் குறியீடுகள் தொடர்பான அறிதல் திறன்களை முன்கூட்டியே சோதித்தறிய வேண்டியது அவசியம்.
- ஒவ்வொரு போட்டித்தேர்வுக்கு முன்பும் பின்பும் தேர்வு தொடர்பான ஆக்கபூர்வ கருத்துகள் மற்றும் ஆலோசனைகளை அனைத்துத் தரப்பினரிடமிருந்து பெறும் வகையில் கருத்துக்கேட்பு கூட்டங்களை ஆணையம் நடத்திட வேண்டும். குறிப்பாக, மாற்றுத்திறனாளிகளிடையே இத்தகைய கூட்டங்களை நடத்துவது, தேர்வில் அவர்களுக்கான சம வாய்ப்பையும், சம பங்கேற்பையும் அவர்களின் தரப்பில் நின்றே உறுதி செய்வதாக அமையும்.
மேற்கண்ட ஆலோசனைகளைக் கோரிக்கை மனுக்களாக டிஎன்பிஎஸ்சி ஆணையத்துக்கு வழங்குவதோடு, அவர்களோடான தொடர் உரையாடலில் இருப்பது பார்வையற்றோர் நலன் சார்ந்து செயலாற்றும் அமைப்புகளின் கடமை.
ஒரு நீண்ட இடைவெளிக்குப் பின், இறுதி இலக்காகிய அரசு வேலையை அடைவதற்கான பயணத்தில் போட்டித்தேர்வு என்கிற முதல் கதவு திறந்துவிட்டது. கதவைத் திறந்துவிட்டதற்கு நன்றி பகரும் அதேநேரம், பாதையில் சில கற்களும் முட்களும் இருப்பதையும் கொஞ்சம் கவனிக்க வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறோம்.
***ப. சரவணமணிகண்டன்
பதிவில் விடுபட்டுவிட்ட ஏதேனும் கருத்துகள் மற்றும் ஆலோசனைகள் இருந்தால் அதனைக் கீழே உள்ள கருத்துப் பெட்டியிலோ, (comment box) அல்லது savaalmurasu@gmail.com என்ற மின்னஞ்சல் வழியாகவோ தெரிவிக்கலாம்.
மேலும், தங்கள் கருத்துகள் மற்றும் ஆலோசனைகளை ஒலி அல்லது வரிச் செய்திகளாக (voice notes or short texts) 9789533964 என்ற வாட்ஸ் ஆப் எண்ணில் பகிரலாம்.
Be the first to leave a comment