தொடர்: இருளைப் போக்குகிறதா திரை வெளிச்சம் 2.0: பகுதி - 6: பயணிகள் கவனிக்கவும் (தமிழ்த் திரைப்படம்)

தொடர்: இருளைப் போக்குகிறதா திரை வெளிச்சம் 2.0: பகுதி – 6: பயணிகள் கவனிக்கவும் (தமிழ்த் திரைப்படம்)

,வெளியிடப்பட்டது

தமிழ்த் திரைப்படங்களில் விக்ரமன் வகையறா என ஒன்று உண்டு. அதை மிஞ்சிய திரைப்படம் இது. இத்திரைப்படத்தில் எல்லோரும் நல்லவர்களாகவே இருப்பர். தவறு செய்யக்கூடிய கருணாகரன் கூட நல்ல நோக்கில் சமூக அக்கறையில் அதைச் செய்திருப்பார்.

கா. செல்வம்

பயணிகள் கவனிக்கவும் திரைப்பட போஸ்டர்

அஜீஸ் பி. தாமஸ் எழுதி, எம்சி ஜோசப் இயக்கத்தில் “விக்ருதி” என்ற மலையாளத் திரைப்படம் 2019இல் வெளியானது. விக்ருதி என்றால் திரித்துக் கூறுதல் அல்லது தவறாக வழிநடத்துதல் என்று பொருளாகும். இத்திரைப்படம் எஸ். பி. சக்திவேல் என்ற புதுமுக இயக்குநரின் முதல் படைப்பாக “பயணிகள் கவனிக்கவும்” என்ற பெயரில் தமிழில் உருவாக்கப்பட்டுள்ளது. இத்திரைப்படத்தில் விதார்த், லட்சுமிப் பிரியா, கருணாகரன் ஆகியோர் முதன்மைக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

முக்கியக் கதாப்பாத்திரங்கள்:

பயணிகள் கவனிக்கவும் திரைப்பட நடிகர்கள்

விதார்த் மற்றும் லட்சுமிப் பிரியா தம்பதியினர் இருவரும் செவித்திறன் குறைபாடு உடைய மாற்றுத்திறனாளிகள் ஆவர். விதார்த் ஒரு தனியார் பள்ளியில் நூலகராக வேலை செய்கிறார்; அவரது மனைவி லட்சுமிப் பிரியா ஒரு தனியார் நிறுவனத்தில் தையல் வேலை செய்கிறார். அவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மகள் இருக்கின்றனர். அவர்கள் மாற்றுத்திறனாளிகள் அல்லர்; அவர்கள் இருவரும் பள்ளியில் படித்துக் கொண்டிருக்கின்றனர். இன்னொரு புறம் கருணாகரன், துபாயில் வேலை செய்யும் இளைஞர் ஆவார். விடுமுறையில் ஊருக்கு வந்து, அவருக்குத் திருமணம் ஏற்பாடாகிறது. அவரது குடும்பத்தில் வயதான அம்மா, ஒரு அக்கா மற்றும் தங்கை இருக்கின்றனர். அவர் தனது அன்றாட நிகழ்வுகளான வீட்டில் சாப்பிடுவது, வெளியில் கிளம்புவது, நண்பர்களைச் சந்திப்பது என ஒவ்வொன்றையும் புகைப்படங்கள் எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிடும் வழக்கம் கொண்டவராவார்.

திரித்துக் கூறப்பட்ட திருப்புமுனையான நிகழ்வு:

ஒருமுறை விதார்த்தின் மகளுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறாள். இரவும் பகலும் உடன் இருந்து கவனித்துக் கொள்ளும் விதார்த் இரண்டு நாட்களுக்குப் பின், தனது மனைவியை மருத்துவமனையில் இருக்கச் செய்துவிட்டு வீட்டிற்கு வருகிறார். மெட்ரோ ரயிலில் வரும் விதார்த், கடந்த இரண்டு நாட்களாகத் தூங்காத சோர்வின் காரணமாக உறங்குகிறார். கடுமையான சோர்வின் காரணமாக மல்லாந்து படுத்துத் தூங்கும் அவரைப் பார்க்கும் கருணாகரன், குடித்துவிட்டு போதை மயக்கத்தில் விதார்த் படுத்துக் கிடப்பதாக நினைத்துக் கொள்கிறார். எனவே விதார்த்தை அதே கோணத்தில் சில புகைப்படங்கள் எடுக்கும் கருணாகரன், பொதுச் சொத்தை அலட்சியமாகப் பயன்படுத்தும் ஒரு குடிமகன் என்ற குறிப்புடன் அந்தப் புகைப்படங்களைச் சமூக வலைதளங்களில் பதிவிடுகிறார்.

அந்தப் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பல்வேறு மீம்களாக வைரலாகப் பரவுகின்றன. இதனால் விதார்த் தான் பணிபுரியும் பள்ளியிலிருந்து தற்காலிகப் பணி நீக்கம் செய்யப்படுகிறார்; உடன் படிக்கும் நண்பர்கள் தனது தந்தை குறித்துக் கேலி செய்வதால் மகன் பள்ளிக்குச் செல்ல மறுக்கிறான்; இவ்வளவு நெருக்கடி ஏற்படுத்தும் மன அழுத்தம் காரணமாக அவரது மனைவியும் பணியாற்ற இயலாமல் தவிக்கிறார். இந்தச் சிக்கலில் இருந்து விதார்த் மற்றும் அவரது குடும்பம் எவ்வாறு மீள்கிறது, கருணாகரனுக்கு இறுதியில் என்ன தண்டனை கிடைக்கிறது என்பதாகத் திரைப்படம் நிறைவடைகிறது.

இயல்பான மாற்றுத்திறனாளிகளாக விதார்த் தம்பதியினர்:

தம்பதியினர் இருவரும் செவித்திறன் குறைபாடு உடைய மாற்றுத்திறனாளிகள் என்றாலும் இருவருக்கும் இடையில் மெலிதான வேறுபாடுகள் இருக்கும். விதார்த் சிறிதளவு பேசுவார்; ஆனால் அவரது மனைவி முற்றிலும் பேசவே மாட்டார். மற்றவர்களிடம் கொஞ்சம் பேச்சு, கொஞ்சம் சைகை என கலந்து கலந்து உரையாடும் விதார்த், தனது மனைவியிடம் மட்டும் முழுமையாக சைகை மொழியில் மட்டுமே உரையாடுவார். ஏனென்றால் பொதுவாக திரைப்படங்களில் கட்டமைக்கப்படும் மாற்றுத்திறனாளிக் கதாபாத்திரங்கள் ஒரு அடையாளத் தன்மையை (Signature style) ஏற்படுத்தும் நோக்கில் திரைப்படம் முழுதும் ஒரே மாதிரியாகக் காட்டப்படும். ஆனால் இத்திரைப்படத்தில் தனித்துவமான அடையாளத் தன்மைகளை வலிந்து திணிக்காமல் இயல்பாக நடித்துள்ள விதார்த் மற்றும் லட்சுமிப் பிரியா இருவரும் திரைப்பட இயக்குநரும் வெகுவாகப் பாராட்டப்பட வேண்டியவர்கள் ஆவர்.

அதீதமான திறன் கொண்ட, அனுதாபம் ஏற்படுத்தும் மாற்றுத்திறனாளிக் கதாபாத்திரங்கள் இல்லை:

பயணிகள் கவனிக்கவும் திரைப்பட நடிகர்கள்

திரைப்படங்களில் காட்டப்படும் மாற்றுத்திறனாளிகள் ஏதேனும் தனித்துவமான திறன் கொண்டவர்களாக அல்லது ஏதேனும் தீவிர மனவெழுச்சி கொண்டவர்களாக அல்லது இரண்டும் கொண்டவர்களாக இருப்பர். மிகப்பெரும் வெற்றி பெற்ற திரைப்படங்களான வாலி, மொழி போன்றவற்றை இதற்கு சான்றாகக் காட்டலாம். இதற்கு இன்னொரு எதிர் துருவமாக காசி போன்ற திரைப்படங்களில் அனுதாபம் ஏற்படுத்தும் கதாபாத்திரங்களாக மாற்றுத்திறனாளிகள் காட்டப்படுவர். இப்படியாக இதுவரை திரைப்படங்களில் காட்டப்பட்டதுபோல் எந்தத் தவறையும் செய்யாத இயக்குநரின் இம்முயற்சி நிச்சயமாக முன்னுதாரணமாக இருக்கிறது. விதார்த் மற்றும் லட்சுமிப் பிரியா இருவரும் வலிந்து எதையும் செய்யாமல் மிகவும் இயல்பாக நடித்துள்ளனர். அதிலும் லட்சுமிப் பிரியா வீட்டில் இருக்கும்போது தொலைக்காட்சியில் தொடர்கள் பார்க்கிறார்; வெளியில் இருக்கும்போது கைபேசியில் தொலைக்காட்சித் தொடர்களைப் பார்க்கிறார். செவித்திறன் மாற்றுத்திறனாளிகள் வசனங்கள் தேவைப்படாத கார்ட்டூன் தொடர்கள், விளையாட்டு நிகழ்ச்சிகள் போன்றவற்றைப் பார்ப்பதாகவே பெரும்பாலான திரைப்படங்களில் காட்டப்படுவர். ஆனால் அந்த மாயை வெகு இயல்பாகப் போகிறபோக்கில் இத்திரைப்படத்தில் உடைத்து நொறுக்கப்பட்டுள்ளது.

அதாவது சிறிய அளவிலோ அல்லது பெரிய அளவிலோ மாற்றுத்திறனாளிக் கதாபாத்திரங்களை ஒரு குறிப்பிட்ட சட்டகத்திற்குள் அடைத்துத் தனது மேதமையைக் காட்டிக்கொள்வதற்கே ஒவ்வொரு படைப்பாளியும் முயற்சிக்கின்றனர். அதனாலேயே மாற்றுத்திறனாளிகள் குறித்து பல்வேறு பொய்யான கருத்துகள் பொதுச் சமூகத்தில் பரவிக் காணப்படுகின்றன. ஒரு மாற்றுத்திறனாளியை நேரில் சந்திக்கும் ஒவ்வொருவரும் திரைப்படங்களில் காட்டப்படும் பெரும்பாலான கதாபாத்திரங்கள் சிறிதளவு கூட உண்மைக்குப் பொருந்தாதவை என்பதை உணர முடியும். ஆனால் எல்லோருக்கும் எல்லா வகையான மாற்றுத்திறனாளிகளுடன் பழகும் வாய்ப்புக் கிடைப்பதில்லை. அந்த வகையில் மாற்றுத்திறனாளிகள் பற்றிய எந்தவொரு மிகைப்படுத்தலும் இல்லாமல் இயல்பான கதாபாத்திரங்களைக் கட்டமைத்த இயக்குநர் சக்திவேல் அவர்களுக்கு மிகுந்த நன்றியும் வாழ்த்துகளும் உரித்தாக வேண்டும்.

இயக்குநரின் விக்ருதித் தனம்:

தமிழ்த் திரைப்படங்களில் விக்ரமன் வகையறா என ஒன்று உண்டு. அதை மிஞ்சிய திரைப்படம் இது. இத்திரைப்படத்தில் எல்லோரும் நல்லவர்களாகவே இருப்பர். தவறு செய்யக்கூடிய கருணாகரன் கூட நல்ல நோக்கில் சமூக அக்கறையில் அதைச் செய்திருப்பார். விதார்த்தைப் பணி நீக்கம் செய்யும் பள்ளி முதல்வர், தந்தையைத் தவறாகப் புரிந்துகொள்ளும் விதார்த்தின் மகன் உட்பட அனைவரும் உடனடியாக மன்னிப்புக் கேட்டுத் திருந்திவிடுகின்றனர். ஆனால் ஒரே ஒரு கதாபாத்திரம் மட்டும் திருந்தாமல், திருத்தப்படாமல் அப்படியே விடப்பட்டிருக்கும். மாற்றுத்திறனாளிகள் சங்கத்தின் பொறுப்பாளராக உடல் குறைபாடு உடைய மாற்றுத்திறனாளி ஒருவர் இருப்பார். அவர் சக மாற்றுத்திறனாளி ஒருவரைத் துணையாக வைத்துக்கொண்டு மாற்றுத்திறனாளிகள் தொடர்பான பிரச்சினைகளில் பேசி சமாதானம் செய்வதாகக் கூறிக்கொண்டு பணம் பறிப்பார். விதார்த் பிரச்சினையிலும் அவர் அதையே தொடர்வார். ஆனால் விதார்த் அவரைக் கடுமையாகக் கண்டித்து விடுவார்; அப்போதும் அவர் திருந்துவதில்லை. இதில் மிகமிக நல்லவராக ஒரு காவல்துறை அதிகாரி ஒருவர் வருவார். தவறு செய்பவர்களுக்கு நுணுக்கமான தண்டனைகள் வழங்கி எல்லோரையும் திருத்துவார். ஆனால் அவரும் கூட தவறு செய்கின்ற மாற்றுத்திறனாளிகள் சங்கப் பொறுப்பாளரைத் திருத்த சிறிதளவு கூட முயற்சிக்காமல் திட்டி வெளியேற்றுவார்.

விளிம்பு நிலைச் சமூகத்தைச் சார்ந்த மாற்றுத்திறனாளி ஒருவரைக் கெட்டவராகக் காட்டுவதே சிறிதும் அறமற்ற செயலாக இருக்கும்போது, அவருடன் சேர்த்து அவர் சார்ந்த சங்கத்தையும் இழிவுபடுத்துவதாக காட்சி அமைத்திருப்பதை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள இயலாது. சாதாரணமாக ஒவ்வொரு குடிமகனுக்கும் கிடைக்கின்ற விசயங்கள் ஒரு மாற்றுத்திறனாளிக்கு எவ்வளவு எட்டாத தொலைவில் இருக்கின்றன என்பது இந்த இயக்குநருக்குத் தெரியுமா? படிப்பதற்குக் கல்வி நிறுவனங்களில் இடம் பெறுவது தொடங்கி, போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற்றாலும் நிராகரிக்கப்படும் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள் ஒவ்வொன்றையும் போராடியே பெற வேண்டிய இச்சமூக சூழலில் மாற்றுத்திறனாளிகள் சங்கம் ஒன்றின் அவசியம் எவ்வளவு பெரிதென்று இத்திரைப்படத்தின் இயக்குநர் கண்டிப்பாகத் தெரிந்துகொள்ள வேண்டும். திரித்துக் காட்டிய (விக்ருதி) இத்திரைப்படக் கதாபாத்திரம், தனது தவறை உணர்ந்து திருந்தியது போல, இத்திரைப்பட இயக்குநரும் தனது விக்ருதித் தனத்தை உணர்ந்து தன்னைத் தானே திருத்திக்கொள்ள வேண்டும். இதை மட்டும் தவிர்த்து இத்திரைப்படத்தின் முதன்மைக் கதாபாத்திரங்களை மாற்றுத்திறனாளிக் கதாபாத்திரங்களுக்கு அளவுகோலாகவும் முன்னுதாரணமாகவும் தமிழ்த் திரைப்படப் படைப்பாளிகள் பின்பற்ற வேண்டும். மேற்குறிப்பிட்ட தவறை உணர்ந்து திருந்துவார் என்ற நம்பிக்கையில், மாற்றுத்திறனாளிக் கதாபாத்திரங்களைக் கொண்டு இயல்பான ஒரு திரைப்படத்தை உருவாக்கியுள்ள இயக்குநர் சக்திவேல் அவர்களுக்கு மீண்டும் ஒருமுறை வாழ்த்துகளும் பாராட்டுக்களும்.

***

தொடரின் முந்தைய பகுதிகளைப் படிக்க:

தொடர்புக்கு: teacherselvam@gmail.com

பகிர

Be the first to leave a comment

உங்கள் கருத்தை உள்ளிடுங்கள்