வெற்றிகள் அல்ல, விதைகள்

வெற்றிகள் அல்ல, விதைகள்

,வெளியிடப்பட்டது

தேர்வுகள்தான் என்றில்லாமல், பார்வையற்றோர் நலன் சார்ந்த எங்களின் பல்வேறு முயற்சிகளில் நிபந்தனையின்றி எங்களுடன் தோள் கொடுக்கும் இமை ஃபவுண்டேஷன் அமைப்பின் தலைவர் திருமதி. கண்மணி அவர்கள் மற்றும் அவர் சார்ந்த ஒவ்வொருவரையும் நன்றியோடு நினைவுகூர்கிறோம்.

ஆன்சலிவன் பயிற்சி மைய லோகோ

கடந்த மே 8 அன்று, ஆன்சலிவன் போட்டித்தேர்வுகளுக்கான பயிற்சி மையத்தால் நடத்தப்பட்ட மாநில அளவிலான டிஎன்பிஎஸ்சி குரூப் 2 மற்றும் 2a மாதிரித்தேர்வில் பங்கேற்றுப் பயனடைந்த அனைவருக்கும் எங்களின் வாழ்த்துகள்.

,இப்படி ஒரு தேர்வை நடத்தலாம் என ஆலோசனை சொன்னதோடு, அதற்கான வினாத்தாள்கள் மற்றும் தேர்வில் பங்கேற்கப் கூகுல் படிவத்தை வடிவமைத்துத் தந்த திரு. சவுண்டப்பன் அவர்களுக்கு எங்களின் நெஞ்சார்ந்த நன்றிகள்.

தமிழில் மிகத் தரமானதொரு வினாத்தாளை வடிவமைத்த திரு. விஜய் அவர்களையும் நன்றியோடு நினைவுகூர்கிறோம். மேலும், பயிற்சி மையத்தின் பல தேர்வுகளுக்கான வினாத்தாள்களை வடிவமைப்பதில் எங்களுடன் கைகோர்த்துச் செயல்படும் இவர்களின் சமூக அக்கறை போற்றுதலுக்குரியது.

வினாத்தாளை சிறியதொரு பிழையுமின்றி, குறுகிய கால அவகாசத்தில் எங்களுக்காய் வலையேற்றித் தந்த தன்னார்வலர் பிரதீபா நலினி அவர்களின் பணி போற்றுதலுக்குரியது. மேலும், எங்களின் ஒவ்வொரு தேர்வினையும் அவர் தாமதமின்றியும், தங்குதடையின்றியும் வலையேற்றி வருகிறார் என்பது குறிப்பிடத் தக்கது.

தேர்வுக்கென 20க்கும் மேற்பட்ட பதிலி எழுத்தர்களை ஏற்பாடு செய்து தந்த அகல் ஃபவுண்டேஷன் தலைவர் திருமதி. அம்பிகா மற்றும் அகல் அமுதா அவர்கள் என அகல் அமைப்பின் முயற்சிக்கு எங்களின் நன்றிகளும் பாராட்டுகளும்.

தேர்வுகள்தான் என்றில்லாமல், பார்வையற்றோர் நலன் சார்ந்த எங்களின் பல்வேறு முயற்சிகளில் நிபந்தனையின்றி எங்களுடன் தோள் கொடுக்கும் இமை ஃபவுண்டேஷன் அமைப்பின் தலைவர் திருமதி. கண்மணி  அவர்கள் மற்றும் அவர் சார்ந்த ஒவ்வொருவரையும் நன்றியோடு நினைவுகூர்கிறோம்.

நெருக்கடியான இறுதிக் கட்டத்தில் சில பதிலி எழுத்தர்களை ஏற்பாடு செய்து கைகொடுத்த திரு. அகரம் சதீஷ் அவர்களுக்கும், தேர்வில் தன்னையும் தன் கணவரையும் பதிலி எழுத்தர்களாக இணைத்துக்கொண்டு, தன் சார்பாகவும் சில பதிலி எழுத்தர்களை ஏற்பாடு செய்த திருமதி. சவுந்தரியா அவர்களின் பங்களிப்பிற்கும் உளமார்ந்த நன்றிகள்.

மேலும், தனிப்பட்ட முறையில் எம்மைத் தொடர்புகொண்டு பதிலி எழுத்தர்களாக செயல்பட முன்வந்த ஒவ்வொருவருக்கும் எங்கள் நெஞ்சார்ந்த நன்றிகள். தேர்வர்களை இன்முகத்தோடு எதிர்கொண்டு, அவர்களுக்கான பதிலி எழுத்தர் பணியைச் சிரத்தையோடு மேற்கொண்ட அனைத்து பதிலி எழுத்தர்களுக்கும் எங்களின் சிரம் தாழ்ந்த வணக்கங்களும் நன்றிகளும்.

சித்ரா

முதலில் விண்ணப்பிக்கும் நூறுபேருக்கு மட்டுமே வாய்ப்பு என அறிவித்திருந்தும், 67 பார்வை மாற்றுத்திறனாளிகள் மட்டுமே பங்கேற்றனர் என்பது மன நிறைவைத் தரவில்லை. ஆனால், ஒரு இணையவழித் தேர்வை ஒருங்கிணைப்பதில் ஏற்படும் சவால்கள் குறித்து, செயல்வழியே எங்களால் அறிந்துகொள்ள முடிந்ததில் ஒருவித மகிழ்ச்சியும் மனநிறைவும் ஏற்படுகிறது.

விண்ணப்பித்தவர்களைத் தொகுப்பது, அவர்களுள் பதிலி எழுத்தர்கள் கேட்டு விண்ணப்பித்தவர்களை தனியே பிரித்தெடுப்பது, பிறகு அவர்களுக்கான பதிலி எழுத்தர்களைக் கண்டறிந்து ஒதுக்குவது என இறுதிகட்டப் பணிகள் ஒருவிதப் பதட்டமான மனநிலையை என்னுள் ஏற்படுத்திவிட்டன. அத்தகைய சூழலில் இந்த முயற்சியைக் கரை சேர்ப்பதில் முன்நின்ற எங்கள் குழுவின் திரு. பாலகிருஷ்ணன்,திருமதி. ஷியாமலா பாலகிருஷ்ணன்,செல்வி. மெடோனா  ஆகியோரின் தொழில்நுட்ப உதவிக்கு நன்றிகள். அத்தோடு, பரபரப்பும், பதட்டமும் நிறைந்த தேர்வுக்கு முந்தைய நாளில், போதுமான பதிலி எழுத்தர்கள் அமைந்திடாத சூழலில், மிகமிகமிக நெருக்கடியான நிமிடங்களில் உடனிருந்து இது தொடர்பான அனைத்துவகை செயல்பாடுகளையும் தன் தொழில்நுட்ப அறிவிற் துணைகொண்டு, விரைவாகவும், பிசிறின்றியும் ஒருங்கிணைத்த செல்வி. வெரோனிக்கா மோனிஷாவின் கைகளை இந்தத் தருணத்தில் மானசீகமாகப் பற்றிக்கொண்டு நன்றி பகர்கிறேன்.

எல்லா இறுதியாகி தேர்வுநாளை அடைந்தும் தொடர்ந்தன பல பதட்டங்கள். “மேடம் என்னோட ஆஸ்பிரண்ட் போன் எடுக்கல”, மேடம் எனக்கு ஸ்கிரைப் போன் பண்ணல,” இப்படியெல்லாம் செல்பேசியைக் கீழே வைக்க முடியாத அளவிற்கு அடுத்தடுத்த அதிர்ச்சிகள் அப்போது துணுக்குறலாகவும், இப்போது இனிக்கும் நினைவாக எஞ்சி நிற்கின்றன.

இவற்றையெல்லாம் கடந்து, தேர்வு நேரத்தில் தொழில்நுட்பம் ஏற்படுத்திய சிக்கல்கள் அனைத்தையும் தன் ஒற்றை மூளைக்குள் பொதிந்து, புரிதலோடு காரியமாற்றி, மொத்த செயல்பாட்டையும் தன் இனிய நோக்கமாகச் சுமந்த திரு. சவுண்டப்பன் அவர்களின் தொடர் ஒத்துழைப்பைப் பாராட்டியே ஆகவேண்டும். இந்த முயற்சி தொடங்கிய நாள்முதல், சின்னச் சின்ன ஆலோசனைகள்தான் என்றாலும், அவை ஒவ்வொன்றும் இந்த முயற்சியை முன் நகர்த்திய பெருவழிகள் என்றவகையில், அவற்றை வழங்கிய தம்பி சரவணமணிகண்டனுக்கும் என் நன்றிகள்.

இதுபோன்ற முயற்சிகளில் பார்வை மாற்றுத்திறனாளி பயனாளிகளின் ஒத்துழைப்பு மிகக் குறைவாகவே இருக்கும் என்பதைப் பலர் எனக்கு அறிவுரையாகவே சொல்லியிருக்கிறார்கள், சொல்லவும் செய்கிறார்கள். அவை ஒருவகையில் உண்மைதான் என்ற திறப்பை இதன்மூலம் நான் அடைந்தாலும், பார்வையற்ற சமூகம் அடையும் சிறிதினும் சிறிதான வெற்றியையே இந்தப் பயிற்சி மையம் தன் ஒற்றைக் குறிக்கோளாகக்கொண்டிருக்கிறது.

ஏனெனில்,தடுமாறி, முட்டி, மோதி, முயன்று பெறும் வெற்றிகள் வெறும் வெற்றிகள் அல்ல, அவை ஒவ்வொன்றும் விதைகள். எனவே, சிறிதும் பெரிதுமாய் விதைத்துக்கொண்டே இருப்போம்.

சமூகம் அதை அறுவடை செய்யட்டும். எதிர்வரும் டிஎன்பிஎஸ்சி தேர்வுகளில் பங்கேற்று வெற்றியை வசமாக்கிட அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கும் எங்களின் பயிற்சி மையத்தின் சார்பில் வாழ்த்துகளைத்தெரிவித்துக்கொள்கிறோம்.

U. [சித்ரா,

ஒருங்கிணைப்பாளர்,

ஆன்சலிவன் போட்டித்தேர்வுகளுக்கான பயிற்சி மையம்.

பகிர

1 thought on “வெற்றிகள் அல்ல, விதைகள்

  1. தொடர் முயற்சிக்கு பாராட்டுகள் இன்று விதைக்கப்படும் விதைகள் வரும்நாட்களில் சரியான பலன் தரும்

உங்கள் கருத்தை உள்ளிடுங்கள்