சரித்திர சாதனை

சரித்திர சாதனை

,வெளியிடப்பட்டது

இதற்கு முன் செவித்திறன் குறையுடையோருக்கான அரசு சிறப்புப் பள்ளி ஒன்று எப்போது தரம் உயர்த்தப்பட்டது என்று கேள்விக்கான பதிலைத் தேடினால் இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன் என்ற அதிர்ச்சியை ஏற்படுத்தும் விடை கிடைக்கும்.

கா. செல்வம்
கா. செல்வம்

2022 – 2023 நிதி ஆண்டிற்கான மானியக் கோரிக்கையில் 21.4.2022 அன்று மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மானியக் கோரிக்கை நடைபெற்றது. அதில் செவித்திறன் குறையுடையோருக்கான அரசு சிறப்புப் பள்ளிகளில் மூன்று பள்ளிகள் தரம் உயர்த்தப்பட்டுள்ளன. புதுக்கோட்டையில் நடுநிலைப்பள்ளி உயர்நிலைப் பள்ளியாகவும், ஈரோடு மற்றும் விருதுநகரில் உயர்நிலைப் பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாகவும் தரம் உயர்த்தப்பட்டுள்ளன. இதனுடன் இன்னும் சில பாராட்டத்தக்க அறிவிப்புகளும் வெளியாகியுள்ளன. அத்தனை அறிவிப்புகளிலும் இந்த மூன்று சிறப்புப் பள்ளிகள் தரம் உயர்த்தப்பட்ட அறிவிப்பு ஈடு இணையற்ற சாதனையாகும். அது ஏன் அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பது ஒருமுறையாவது ஏதேனும் ஒரு சிறப்புப் பள்ளியைப் பார்த்தவர்களுக்கு நிச்சயமாகப் புரியும்.

மாற்றுத்திறனாளிகள் பயிலும் எந்தவொரு சிறப்புப் பள்ளிக்கும் வருகின்ற நன்கொடையாளர் அல்லது பெற்றோர் பின்வரும் இரண்டு கேள்விகளைக் கேட்காமல் விடுவதில்லை. முதலாவது கேள்வி, இந்தப் பள்ளியில் எந்த வகுப்பு வரை உள்ளது; இன்னொரு கேள்வி, இந்தப் பள்ளியில் படித்த முடித்த பிறகு வேறு எங்கு சென்று படிக்க வேண்டும்? சாதாரண மாணவர்கள் பயிலும் பள்ளிகள் எதிர்கொள்ளாத இக்கேள்விகளை, மாற்றுத்திறனாளிகள் பயிலும் சிறப்புப் பள்ளிகள் எதிர்கொள்வது ஏன்? ஏனென்றால் மாற்றுத்திறனாளிகளுக்கு என்று தனியாக சிறப்புக் கல்வி முறை இருக்கிறது என்பதும், அதன்படி இயங்கும் சிறப்புப் பள்ளிகள் இருக்கின்றன என்பதும் பொதுவெளியில் பலருக்கும் தெரிவதில்லை. மேலும் இத்தகைய சிறப்புப் பள்ளிகள் எண்ணிக்கையில் மிகவும் சொற்பமானவை; அந்த சொற்பமானவைகளில் பெரும்பாலான பள்ளிகள் நன்கொடையை வைத்து அல்லது நன்கொடைக்காக நடத்தப்படுகின்ற தொடக்க அல்லது நடுநிலைப் பள்ளிகள் ஆகும்.

இவ்வளவு நெருக்கடியான சூழலில் ஒரு மாற்றுத்திறனாளிக் குழந்தையின் பெற்றோர் ஒரு சிறப்புப் பள்ளியைக் கண்டடைந்து, அந்தப் பள்ளியிலேயே தமது குழந்தை பத்து அல்லது பன்னிரண்டாம் வகுப்பு வரை பயின்றுவிடும் என்பது அவர்களுக்கு எவ்வளவு மன ஆறுதலைத் தரும் என்பதை சொற்களால் விளக்கவோ உணர்த்தவோ முடியவே முடியாது. செவித்திறன் குறையுடையோருக்கான அரசு சிறப்புப் பள்ளிகள் தமிழ்நாட்டில் பத்து உள்ளன. தற்போதைய மானியக் கோரிக்கை அறிவிப்பிற்குப் பிறகு தருமபுரி, தஞ்சாவூர், ஈரோடு, விருதுநகர் ஆகிய நான்கும் மேல்நிலைப் பள்ளிகள்; காஞ்சிபுரம், சேலம், உதகமண்டலம், புதுக்கோட்டை ஆகிய நான்கும் உயர்நிலைப் பள்ளிகள்; தாம்பரம் மற்றும் கடலூர் இரண்டும் நடுநிலைப்பள்ளிகள் ஆகும். ஆக மொத்தம் பத்தில் எட்டுப் பள்ளிகளில் பயிலும் ஒவ்வொரு மாற்றுத்திறனாளி மாணவரும் அதே பள்ளியிலேயே பத்து அல்லது பன்னிரண்டாம் வகுப்பு வரை பயில முடியும் என்பது நிச்சயமாக சரித்திர சாதனையாகும்.

இதற்கு முன் செவித்திறன் குறையுடையோருக்கான அரசு சிறப்புப் பள்ளி ஒன்று எப்போது தரம் உயர்த்தப்பட்டது என்று கேள்விக்கான பதிலைத் தேடினால் இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன் என்ற அதிர்ச்சியை ஏற்படுத்தும் விடை கிடைக்கும். அப்படியானால் இருபத்தைந்து ஆண்டுகளுக்கும் மேலாக எந்தவொரு முன்னேற்றமும் இன்றி ஒரு துறையின் பள்ளிகள் இயங்கி வருகின்றன என்பதை நம்ப முடிகின்றதா? இதன் காரணமாக ஒரு பள்ளியைத் தரம் உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கை எழும்போது சிறப்புப் பள்ளிகளைத் தரம் உயர்த்த வேண்டுமா என்ற தயக்கமும் அதற்கு எந்த நடைமுறையைப் பின்பற்றுவது என்ற விடை தெரியாத கேள்வியும் எழுகிறது. இந்தத் தயக்கத்தை உடைத்து, அந்தக் கேள்விக்கு விடையைக் கண்டறிந்ததன் சாதனை அடையாளமாகவே இந்த மூன்று பள்ளிகள் ஒரே அறிவிப்பில் தரம் உயர்த்தப்பட்டுள்ளன.

இந்த நேரத்தில் பார்வைத் திறன் குறையுடையோருக்கான அரசு சிறப்புப் பள்ளிகள் பத்தும் எப்படி உள்ளன என்பதையும் பார்க்க வேண்டும். மூன்று பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாகவும், மூன்று பள்ளிகள் நடுநிலைப் பள்ளிகளாகவும், நான்கு பள்ளிகள் தொடக்கப் பள்ளிகளாகவும் உள்ளன. அதாவது பார்வை மாற்றுத்திறனாளி மாணவர் ஒருவர் ஒரே பள்ளியிலேயே பத்து அல்லது பன்னிரண்டாம் வகுப்பு வரை பயிலும் வாய்ப்பு வெறும் மூன்று பள்ளிகளில் மட்டுமே கிடைக்கிறது. இந்த மிக விரைவாக மாற்றப்பட வேண்டிய மிகவும் அவசியமாகும். செவித்திறன் குறையுடையோருக்கான, பார்வைத் திறன் குறையுடையோருக்கான தலா பத்துப் பள்ளிகளும் பன்னிரண்டாம் வகுப்பு வரை பயிலும் மேல்நிலைப் பள்ளிகளாக இருக்க வேண்டும் என்பதே அவசியமான தேவையாகும். ஒவ்வொரு சிறப்புப் பள்ளியும் கல்லூரிக் கல்வி வரை வழங்கும் உயர்கல்வி நிறுவனமாக உயர்த்தப்பட வேண்டும் என்பது இலட்சியம்; குறைந்தபட்சமாக பள்ளிக்கல்வி முழுமையாக ஒரே பள்ளியில் வழங்கப்படும் வகையில் ஒவ்வொரு சிறப்புப் பள்ளியும் இருக்க வேண்டும் என்பது நிச்சயம்.

***கா. செல்வம்

கட்டுரையாளர், ஈரோடு, செவித்திறன் குறையுடையோருக்கான அரசு உயர்நிலைப்பள்ளியின் கணிதப் பட்டதாரி ஆசிரியர்.

சமகால சமூக மற்றும் அரசியல் நிகழ்வுகளின் மீதான தனது பார்வையினைத் தொகுத்து ‘அறம் வெல்லும்’ என்ற நூலை எழுதியுள்ளார்.

தொடர்புக்கு: teacherselvam@gmail.com

‘அறம் வெல்லும்’ நூல் வாங்க:

Be the first to leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *