தேவ கிருபை: சிறுகதை

தேவ கிருபை: சிறுகதை

,வெளியிடப்பட்டது

ப. சரவணமணிகண்டன்

பள்ளியின் ஓர் உணவு இடைவேளையின்போது பாலு சார் ஃபோன் செய்தார்.

 “தம்பி தமிழ்வாணா! புதுக்கோட்டைல ஃபிலிப்ஸ் சர்வீஸ் சென்டர் இருக்கா?”

 “ஏன் சார் என்ன விஷயம்?”

 “ஒரு ஃபிலிப்ஸ் ரேடியோ வாங்கனும் தம்பி”.

 “என்ன சார் இன்னமுமா ரேடியோ கேட்குறீங்க?”

 “அட எனக்கில்லப்பா. டெய்சி அக்காவுக்கு. உனக்கு நியாபகம் இருக்கா? ஹெலன் ஹோம்ல இருந்தாங்களே. அவங்க ரொம்ப நாளா ரேடியோ ஒன்னு வேணும்னு கேட்டுட்டே இருக்காங்க. ஃபிலிப்ஸ்தான் நல்ல தரமாவும் சரியாவும் இருக்கும். நீ புதுக்கோட்டைல இருக்கானு விசாரிச்சு சொல்லு. நான் வந்து அவங்களுக்கு வாங்கிக் கொடுத்துட்டு வந்துடுறேன். இல்லைனா, நான் மதுரை டவுன் ஹால்தான் போய்ட்டு வரனும். போறதப் பற்றியெல்லாம் பிரச்சனையில்லை” என்று அவர் பேசிக்கொண்டிருந்தபோதே, “புதுக்கோட்டைல அவங்க எங்க சார் இருக்காங்க?” என்றான் தமிழ்.

 “மச்சுவாடில ஒரு ஹாஸ்டலுல இருக்காங்களாம். நானும் போனதில்ல. ஃபோன்லதான் பேசிட்டிருக்கேன். ரொம்ப போரடிக்குதாம். அதான் ஒரு ரேடியோ வாங்கித்தரலாம்னு” எனப் பொறுப்பை அவனிடம் கொடுத்துவிட்டு அழைப்பைத் துண்டித்தார்.

 பாலு சார் பார்வையற்றவர்; ஓய்வுபெற்ற பட்டதாரி ஆசிரியர். 90-களில், ஒரு கிறித்துவ சபையினால் நடத்தப்படும் பார்வையற்றோருக்கான நடுநிலைப்பள்ளியில் தமிழ்வாணன் படித்துக்கொண்டிருந்தபோது, அந்த ஊரின் அரசு உயர்நிலைப்பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றியிருக்கிறார். அவரைப்போலவே, இப்போது தமிழ்வாணனும் ஒரு பட்டதாரி ஆசிரியர்.

 தமிழ்வாணன் படித்த அந்தப் பள்ளியின் பின்னாலிருந்த சுற்றுச்சுவரைத் தாண்டினால், பாலு சார் வீடு இருந்ததாக ஒரு மங்கலான நினைவு. ஆனால், அவர் சொன்ன ஹெலன் ஹோம் அவனுக்கு நன்றாக நினைவிருக்கிறது. அது அவனுடைய பள்ளி வளாகத்தின் மற்றொரு மூலையில், ‘குட்டிக்கிளாஸ்’ என்று அழைக்கப்பட்ட பார்வையற்ற குழந்தைகளுக்கான நர்சரி பள்ளி சகிதம் இயங்கிக்கொண்டிருந்தது. எட்டாம் வகுப்புக்கு மேல் படிப்பு வராத அக்காள்மார்கள், தன் ஊனத்தின் காரணமாக உறவுகளால் புறக்கணிக்கப்பட்ட வயதான பார்வையற்ற பெண்கள் ஹெலன் ஹோமில் இருந்தார்கள்.

 ஹெலன் ஹோம் போலவே, பார்வையற்ற அண்ணன்மார்கள், வயதான பார்வையற்ற ஆண்களுக்கு ஜான்சன் ஹோம் அவனது விடுதிக்கு அருகிலேயே இருந்தது. இருபது வயதிற்கு மேற்பட்ட இருபாலரும் தங்கி, தறி நெய்யும் பணி செய்துகொண்டிருந்தார்கள். பள்ளி சகிதம் அனைத்தும் திருச்சபையின் நிர்வாகத்தின்கீழ் இயங்கியது. பையன் என்பதாலும், தூரம் காரணத்தாலும் அவன் ஹெலன் ஹோம் சென்றதில்லை. ஒருவேளை ஒன்றிரண்டு முறை சென்றிருந்தால்கூட அவனுக்கு அது இப்போது நியாபகத்தில் இல்லை.

 ஆனால், ஜான்சன் ஹோம் அப்படியல்ல. தனது விடுதிக்கு அருகிலேயே இருந்ததால், தமிழைப்போலவே பெரும்பாலான பையன்கள் தங்கள் மாலை நேரங்களை அங்குதான் கழித்திருக்கிறார்கள். பள்ளிக்கான விடுதியில், பதினைந்து பேர் கூட்டமாக ஓர் அறையில் தங்கி, தரையில் பாய்களை வரிசையாக விரித்து, இரண்டு பாய்களுக்கு மூன்று பேர் என்று புழங்கியதாலோ என்னவோ, ஜான்சன் ஹோமில், இரண்டு அல்லது மூன்று பேருக்கு ஒதுக்கப்பட்டிருந்த அறைகள், அங்கு போடப்பட்டிருந்த நாடாக் கட்டில்கள், படிப்பு, வீட்டுப்பாடம் என்ற சுமைகள் ஏதுமின்றித் தங்களுக்கே சொந்தமான வானொலிப்பெட்டிகளில் சுதந்திரமாக அண்ணன்மார்கள் பாடல் கேட்டது எனப் பையன்களை அந்தப் பக்கமாய் ஈர்த்த காரணங்கள் அனேகம். இது குறித்து மாணவர்கள் ஆசிரியர்களால் பலமுறை கண்டிக்கப்பட்டிருக்கிறார்கள். ஆனாலும், அவர்களின் வலசைபோதல் தொடரவே செய்தது.

 மாணவர்கள் மட்டுமல்ல; அண்ணன்மார்களும் அவர்களின் வரவை அதிகம் விரும்பினார்கள். மாணவர்களின் உறைதலில் தங்கள் மடியும், உரையாடலில் மனமும் நிறையக் கண்டிருப்பார்கள் போலும். தோள்களில் அவர்களைத் தூக்கிக்கொண்டு, ஜெயராம் அண்ணனின் அலமாரிக்கடையில் அண்ணன்மார் வாங்கித்தந்த சூடமிட்டாய்களின் சுகந்தம் நீர்த்துப்போகாது. இப்போதும் நினைவடுக்குகளை நிறைப்பதில் நெகிழ்ந்துபோகிறான் தமிழ். ‘அது, புறக்கணிப்பால் அவர்களுக்குள் சீழ்கட்டி புரையோடிப் போயிருந்த அகப்புண்களைப் பிதுக்கி, எங்களை அறியாமலேயே நாங்கள் களிம்பு தடவிக்கொண்டிருந்த பேரன்பின் பொற்காலம்’ எனத் தனக்குள்ளேயே சொல்லிக்கொள்கிறான் தமிழ்.

 காலம் அந்த இரு இல்லங்களையும் இன்று இல்லாமல் செய்துவிட்டது குறித்து தமிழ் வேதனையடைகிறான். எல்லோரும் எங்கே போயிருப்பார்கள்? பலர் இறந்திருக்கக்கூடும். அப்போதே ஜெயராம் அண்ணனுக்கு ஐம்பது வயதாகி இருந்தது என மனம் காலத்தால் பின்னோக்கி நடக்கத் தொடங்குகிறது.

 அவனுக்கு டெய்சி அக்காவெல்லாம் நினைவில் இல்லை. ஹெலன் ஹோம் என்றாலே, அவன் நினைவுகளில் நெருஞ்சி தூவும் பெயர் ‘தேவகிருபை’. எல்லோரும் கிருபா என்றே அழைத்தார்கள். டெய்சி அக்கா, வேர் முரிந்து வீழ்ந்த மரங்களினூடே வனம் அகன்றவள். ஆனால் கிருபா அக்கா, அவள் காலத்திலேயே செழித்துக்கிடந்த சோலையிலிருந்து சிறகொடிக்கப்பட்டு கூடுகடத்தப்பட்டவள்.

 கிருபா தேவனின் குழந்தை. அவள் சிறுவயதிலிருந்தே அந்தப் பள்ளியால் வளர்க்கப்பட்டவள். தாயின் மடியறியாதவள். தாதிகளின் அழுத்தமான வறண்ட சொற்களினூடே தன் சிறுபிராயம் கழித்தவள். அன்பு, அரவணைப்பு, சுற்றம் என வாழ்வு தனக்கு மறுதலித்த எது பற்றியும் பிரக்ஞை இல்லாதவளாய், இயேசுவின் சுவிசேஷ வார்த்தைகளைப் பற்றிக்கொண்டே தன் இருபதைக் கடந்திருந்தாள்.

 தறியின் ‘கடக் கடக்’ சத்தத்திற்கிடையே, கிருபா அக்காவைத் தவிர எல்லா அக்காள்களும் அண்ணன்களும் பேசிக்கொண்டிருப்பார்கள். இயலாமைகளை எள்ளல் கலந்து பெருசுகள் சிலாகித்துக்கொண்டிருக்க, விடலைகளுக்கோ பேசாமல் மிக அழுத்தமாய் காரியமாற்றிக்கொண்டிருக்கும் கிருபா அக்காவின்மீதே கவனம் குவிந்திருக்கும். அதிலும், சுந்தரம் அண்ணன் எப்போதும் கிருபா அக்காவை சீண்டிக்கொண்டே இருப்பார்.

 கிருபா இருவரிடம் மட்டுமே மனம் விட்டுப் பேசுவாள். ஒருவர் தேவனாகிய கர்த்தர். இன்னொருவர், மூப்பு காரணமாகப் படுத்த படுக்கையாகிவிட்ட, தன் இல்லத்தைச் சேர்ந்த தேசம்மாள் ஆயா. தேசம்மாளுக்குப் பணிவிடை செய்வதைத் தனது அன்றாடக் கடமையாக்கிக்கொண்டிருந்தாள் கிருபா. பணி நேரத்தில் நடந்த எல்லாவற்றையும் தேசம்மாளிடம் கிருபா சொல்வாள். குறிப்பாக, சுந்தரத்தின் சீண்டலும், அவளடையும் எரிச்சல் பற்றியும் கடுகடுத்துக்கொள்வாள். தேசம்மாள்தான் அவளை ஆற்றுப்படுத்துவாள். ‘உன்னைப்போல் பிறரையும் நேசி, ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தையும் காட்டு’ போன்ற தேவ வாக்கியங்களைச் சொல்லி, கிருபாவை அமைதிப்படுத்தும் வழிமுறை தேசம்மாளுக்குத் தெரிந்திருந்தது.

சுந்தரத்திற்கு இப்போது வயது 25. கிருபாவின் நிலையைவிட மோசமானது சுந்தரத்தின் சூழல். அன்புகாட்டிய பெற்றோர், செழித்துக்கிடந்த செல்வம், ஒட்டிக்கொண்டு உறவாடிய உறவுகள் என அத்தனையையும் ஒன்றன் பின் ஒன்றாக இழந்து, தனது ஏழாம் வயதில் நிற்கதியாக நின்றான் சுந்தரம். கூடவே பார்வையின்மை என்ற பிரச்சனை வேறு. ஆனாலும், அவன் மகிழ்ச்சியாகவே காணப்பட்டான். அவன் இருக்கும் இடங்களில் கலகலப்புக்கு பஞ்சம் இருக்காது என்பதால், எப்போதும் அவனைச் சுற்றியே ஒரு கூட்டம் நிலைகொண்டிருந்தது.

 சில நாட்களாகவே அந்தத் தொழிற்கூடத்தில் எல்லோரும் தங்கள் சகாக்களான பாண்டி பொன்னம்மாளைப் பற்றியே பேசிக்கொண்டிருந்தார்கள். உவப்பத் தலைகூடி அவர்கள் மேற்கொண்ட உடன்போக்கு சிலருக்கு வீரச்செயலாகவும், சிலருக்குக் கீழ்ப்படியாத்தனமாகவும் பட்டது. இவர்களுள் கிருபா இரண்டாம் தரப்போடு உடன்பட்டாள். அவளைப் பொறுத்தவரை, நிறுவனத்திற்கு விசுவாசமாக இல்லாத தன் தோழி பொன்னம்மாளின் செயல் அருவருப்பாகத் தோன்றிற்று. இருவருக்கும் தைரியம் கொடுத்து, அவர்களைப் பத்திரமாக வழியனுப்பி வைத்ததே சுந்தரம்தான் என எல்லோரும் பேசிக்கொண்டார்கள். அதனால் கிருபாவுக்கு சுந்தரம் மீதிருந்த வெறுப்பு மேலும் அதிகமானது.

 “அண்ணே! பெரிய ஆளுணே நீ. கூடவே இருக்கேன். எனக்கே தெரியாம எம்புட்டு பெரிய காரியம் பண்ணிறுக்க?” மோசஸ் கேட்டான்.

 “டேய்! நீ சின்னப்பயடா”, சுந்தரம் சிரித்தான்.

 “அதேதான்ணே நம்ம பெருசு ராமண்ணனும் சொன்னுச்சு. ‘சுந்தரத்த நாம என்னவோ நெனச்சோம். எவ்லோ பெரிய காரியம் பண்ணிட்டான் பாத்தியா’னு ராமண்ணே சொல்ல, ‘இளங்கன்றுப்பா’னு சொல்லிக்கிட்டே நம்ம குமாரண்ணன் சிரிக்கிறாரு. பாஸ்டர் உன்மேல ரொம்பக் கோபமா இருக்காறாம்; நம்ம நாடிமுத்து அண்ணன் சொன்னாரு. அக்காங்க எல்லாரும்கூட உன்னப்பத்தித்தான்ணே பேசிக்கிறாங்க”.

 “அக்காங்கனா யார்யாருடா?” என்று எதையோ எதிர்பார்த்துக் கேட்டான் சுந்தரம்.

 “எல்லாரும்தான்ணே. டெய்சி அக்கா, சாந்தி அக்கா. அதுலயும் சாந்தி அக்காவோட முகத்தப் பார்க்கனுமே! எனக்கென்னவோ உன்னோட உதவி அடுத்து சாந்தி அக்காவுக்குத்தான் தேவைப்படுமுனு நெனக்கிறேன்”.

 “டேய்! அன்பு, தேவகிருபை இதுங்கலாம் எதுவும் சொல்லலையோ?” ஆர்வத்தில் கேட்டான் சுந்தரம்.

 “யாரு அந்த அமுக்கினிகளா? அதுக பேசுறது அதுகளுக்கே கேக்காது. கிருபாகூட பாட்டு, வசனமுனா சத்தம் வருது. இந்த அன்பு, பாடுனாக்கூட கிணத்துல இருந்து பாடுற மாதிரிதான கேக்குது. ரொம்ப அழுத்தம் புடுச்சதுக. அதுகலாம் சபையோட பிள்ளைகள். நிச்சயம் சபைக்குத்தான் விசுவாசம் காட்டும். அதுலயும் இந்த கிருபாக்கா, எப்பப் பாத்தாலும் பாட்டு ஜெபமுனு. சே, சே”, கடிந்துகொண்டான் மோசஸ்.

 “டேய்! பெரிய மனுஷா! ரொம்பப் பேசாத, வேலையப்பாரு” என்று கொஞ்சம் சில்லறைகள் தந்து, ஜெயராம் அண்ணன் கடைக்கு அனுப்பி வைத்தான் சுந்தரம்.

 ‘அமுக்கினிக, அழுத்தம் புடுச்சதுக’, மோசசின் வார்த்தைகள் அவனுக்குள் எதிரொளித்துக்கொண்டிருந்தன. சிவப்பா, அழகா இருந்தாலே அழுத்தமும் கர்வமும் இருக்கத்தானே செய்யும். கிருபாவைத் தனக்குள்ளாகவே வரைந்துகொண்டான் சுந்தரம். தான் நிறங்கள் அறியாதவன் என்றாலும், சிவப்புதான் அழகு என்பது கேள்வியின் பயனால் அவனுக்கு விளைந்த ஞானம். ஆனால், கிருபா சிவப்பு, அழகு என்று அவன் நினைத்துக்கொள்வதெல்லாம் அவளுடைய குரலை வைத்துதான். எத்தனை மென்மையான, பளிச்சென்ற குரல். அதிலும், அந்த ‘ஸ்தோத்திரம்’ என்கிற பதம், அவள் தொண்டை கடந்து இதழ் பிரிக்கும்போது, அடடா! அந்த ‘இஸ்’ஸுக்கு மட்டும் இந்த உலகத்தையே எழுதித் தந்தாலும் தகாது. மனிதர்களை ஸ்தோத்திரம் என்ற சொல்லை அடிக்கடி ஜெபிக்குமாறு பண்ணின கர்த்தருக்கு அவன் ஸ்தோத்திரம் சொன்னான்.

 “இவனுக்கு எவ்லோ தைரியம் பாத்தியா?” பல்லைக் கடித்தாள் கிருபா.

 “யாருக்கு?” அசட்டையாகக் கேட்டாள் தேசம்மாள்.

 “அதான் அந்த சுந்தரம். கொஞ்சம்கூட கீழ்ப்படிதல் இல்லை ஆயா. பொன்னம்மாளையும் பாண்டியையும் இவன்தான் தூண்டிவிட்டிருக்கான்; உதவியும் செஞ்சிருக்கான். கத்திக்கத்தி ஜெபம் பண்ணிட்டா போதுமா? இதுலவேற இன்னக்கி பிரேயர்ல என்ன வசனம் சொன்னான் தெரியுமா?”

 “என்ன சொன்னான்?” தேசம்மாள் கேட்டாள்.

 “கர்த்தருக்குப் பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம். இதைச் சொல்ல இவனுக்கு என்ன யோக்கியதை இருக்கு? கர்த்தருக்கும் அவர் உண்டு பண்ணின சபைக்கும் கீழ்ப்படியாம நடந்துக்கிற இவனையெல்லாம் உடனே கழுத்தைப் பிடிச்சு வெளிய தள்ளனும்” என்று மீண்டும் பல்லைக் கடித்தாள் கிருபா.

 “கிருபா! தேவன் நூறு நீதிமான்களுக்காக அல்ல, மனம் திருந்தும் ஒரே ஒரு பாவிக்காகத்தான் உலகத்தில் வந்தார். இந்த வசனத்தை மறந்துட்டியா?” என்று தனது தளர்ந்த குரலில் கேட்டு, கிருபாவை அமைதிப்படுத்திய தேசம்மாளின் உடல்நிலை திடீரென மோசமானது. அருகிலுள்ள சபை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஹெலன் ஹோம் வார்டன் எஸ்தர் அக்காவோடு, தானாகவே முன்வந்து தேசம்மாளுக்குப் பணிவிடைகள் செய்தான் சுந்தரம்.

 இப்போது தனது அறையில் தேசம்மாளின்றித் தனித்து விடப்பட்டிருந்தாள் கிருபா. அவளுக்கு அழத் தோன்றியது. உடனே தேசம்மாளைப் பார்க்கவேண்டும்போல் இருந்தது. ‘சும்மாவே எஸ்தர் எரிஞ்சு விழும். இப்போ தேசம்மாளை என்னவெல்லாம் பாடுபடுத்துதோ?’ என மருகிக்கொண்டே, குறைப்பார்வையுடைய தன் சக தோழியோடு மருத்துவமனை வந்த கிருபாவிடம், சுந்தரம் தனக்குச் செய்யும் பணிவிடைகள் பற்றி தேசம்மாள் ஒடுங்கிய குரலில் சிலாகித்தார். உயிர்த்தெழுதலின்போது இயேசுவின் கைகளையும் கால்களையும் பிணைத்திருந்த சங்கிலிகள் போன்று, அவனைப் பற்றிய கிருபாவின் அபிப்பிராயங்கள் எல்லாம் ஒவ்வொன்றாய் பொடிந்து நொறுங்கத் தொடங்கியது.

 அக்கறையின்மை, சகிப்பின்மை காரணமாக தனது பொறுப்புகளினின்று அவ்வப்போது நழுவிக்கொள்ளும் எஸ்தர் வார்டனின் செயலால், கிருபா தேசம்மாளோடு மருத்துவமனையில் தங்க நேர்ந்தது. புதிய இடத்தில், அறிமுகமற்ற சூழலில் தனியாக ஒரு அடிகூட எடுத்து வைத்திராத அவளுக்கு, அதெல்லாம் தொடக்கத்தில் கொஞ்சம் கடினமாகத்தான் இருந்தது. ஆனால், தன்னைப்போலவே பார்வையில்லாத சுந்தரம் எதற்கும் தயங்காமல் நடமாடுவது அவளிடம் புது உத்வேகத்தை அளித்தது.

 “எஸ்தர் அக்கா என்னையே தங்கச் சொல்லிட்டாங்க”, கிருபா முதன்முறையாக அவனோடு பேசினாள். அவனுக்குள் சொல்ல முடியாத பரவசம் ஏற்பட்டது. இப்போது அவனை ஏதோ ஒரு தேவச்செயல் ஆண்டுகொண்டிருப்பதாகவே உணர்ந்தான் சுந்தரம். ஆடு மேய்ப்பவர்களுக்கு மேசியாவின் பிறப்பை அறிவித்த தேவதூதனின் குரலாகவே அவள் குரலைக் கண்டுகொண்டான்.

 தான் சொன்னது கேட்கவில்லையோ என்ற ஐயத்தில், கொஞ்சம் தொண்டையை செருமியபடி, “எஸ்தர் அக்கா” என்று அவள் தொடங்கிய மாத்திரத்திலேயே, “ஆமா. அவுங்களுக்கு சர்ச் போகனும், பிரேயர் பண்ணனுமுனு ஏகப்பட்ட வேலை இருக்கே”, பதில் சொன்னான் சுந்தரம். அவனது கிண்டல் அவளுக்குப் புரிந்தது.

 “ஏன் இப்படி இரக்கம் இல்லாம இருக்காங்க?” அவள் கேட்டாள்.

 “அதான், ஏழு எழுபதுதடவை தேவன் மன்னிப்பாருல்ல. அந்த தைரியம்தான்”. அவன் பதில் கேட்டுக் குலுங்கிச் சிரித்தாள் கிருபா.

 ‘கிருபா! நீயா சிரிக்கிறாய்? உனக்கு சிரிக்கக்கூடத் தெரியுமா?’ தனக்குள்ளேயே கேட்டுக்கொண்டான் சுந்தரம். நிகழ்வதெல்லாம் அவனுக்கு விருப்பமானதாகவும், ஆனால் வியப்பானதாகவும் இருந்தது. அந்த கணத்தில் உலகத்திலுள்ள சகல மனிதரினின்றும் தன் ஒருவன்மீதுதான் தேவகுமாரனின் நித்தியப் பார்வை நிலைகுத்தி நிற்பதாக உணர்ந்தான் அவன்.

 தேசம்மாளின் மரணம் இழுத்துக்கொண்டே போனது. அவளது படுக்கையைச் சுத்தம் செய்வது, மலம் அள்ளுவது என எல்லாவற்றையும் மிகுந்த சிரத்தையோடு செய்தான் சுந்தரம். இதுவரை தனக்குச் சுவிசேஷிக்கப்பட்ட வார்த்தைகளுக்குத் தனது செயல்களால் உருவம் கொடுத்துக்கொண்டிருந்த சுந்தரத்தின்மீது கிருபாவுக்குப் பிரியம் உண்டானது. அந்தப் பிரியமும், சுந்தரத்தின் ஆறுதலான வார்த்தைகளும் தேசம்மாளின் இழப்பிலிருந்து கிருபாவை மீட்டது.

 தேசம்மாளின் இறப்பிற்கு வந்திருந்த பாண்டி பொன்னம்மாள் ஜோடியிடம்  சகஜமாகப் பேசினாள் கிருபா. அவர்கள் இருவரின் அன்யோன்யத்தோடு தன்னையும் சுந்தரத்தையும் பொருத்திப் பார்ப்பது அவளுக்கு உவப்பாக இருந்தது. தேசம்மாவைத் தன்னிடம் அழைத்துக்கொண்ட தேவனாகிய கர்த்தர், ‘நான் உன்னைவிட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை. இதோ! மரண பரியந்தம் மட்டும் நான் உன்னுடனேகூட இருப்பேன்’ என்று சொன்ன தனது வாக்குத்தத்தம் நிறைவேறும்படியாக, சுந்தரத்தைத் தனக்காக அனுப்பியிருப்பதாகவே அவள் முழுமையாக நம்பினாள். தனது காதல் குறித்து மனம் திறக்க, அடுத்த வாரத்தில் வரவிருக்கிற புனிதவெள்ளி நாளைத் தேர்ந்தெடுத்தாள் கிருபா.

 அவளுக்கு ஒருவாரம் ஒரு யுகமாகக் கடந்தது. புனிதவெள்ளி நாளில், சிலுவைப்பாதை தியானத்திற்குச் செல்ல ஆயத்தமான அவளுடைய சக தோழிகளிடம், தான் சிறிது நேரத்தில் வந்துவிடுவதாகச் சொல்லி அவர்களை தேவாலயம் அனுப்பி வைத்தாள். தன் விடுதி அறைக்கு அழைத்து, தனியே  யாருமற்ற சூழலில் சுந்தரத்தைச் சந்தித்தாள். விடுதியின் வராண்டா தூணில் சாய்ந்தபடி சுந்தரம் நின்றுகொண்டான். அவன் எதிரே நின்றிருந்த கிருபா, உயரத்தில் தன்னைவிட கொஞ்சம் சிறியவள் என்பதைத் தெரிந்துகொண்டான்.

 “எல்லாரும் போயாச்சா?” சுந்தரம் கேட்டான்.

 “ஆமா. எஸ்தர்கூட போயிடுச்சு”.

 “நீ போகல?” வியப்பாகக் கேட்டான் சுந்தரம்.

 “உடம்பு சரியில்லைனு பொய் சொல்லிட்டேன். நான் சிலுவைப்பாதை தியானத்துக்குப் போகாதது வாழ்க்கையிலே இதுதான் முதல் தடவை”.

 எல்லாம் தனக்காகத்தான் என்பதில் ஒருவித பெருமிதமும், பூரிப்பும் கொண்டான் சுந்தரம். ஒரு பெண்ணின் அன்பையும், கருணையையும் இத்தனை நெருக்கத்தில் தரிசிப்பது அவனுக்கும் அதுதான் முதல் தடவை. அவள் மனம் திறந்து பேசத் தொடங்கினாள்.

 “நாம கல்யாணம் பண்ணிக்கலாம். ஆனா பாண்டி பொன்னம்மாள் போல இல்ல. இதே சர்ச்சில பண்ணிக்கலாம்”, மிகுந்த நம்பிக்கையோடும், உறுதியோடும் சாந்தமான குரலில் சொன்னாள் கிருபா. சுந்தரத்திற்கு எல்லாம் வியப்பாக இருந்தது. முழங்காலிட்டு தேவனாகிய கர்த்தருக்கு நன்றி சொல்லத் தோன்றிற்று. அவன் பதில் பேசுவதற்குள் தொடர்ந்து பேசத் தொடங்கினாள் கிருபா.

 “உனக்குத் தெரியுமோ, தெரியாதோ. நான் இந்த சபையால தூக்கி வளர்க்கப்பட்டிருக்கேன். இங்கேயே என்னைப்போல இன்னும் ஐந்தாறு பிள்ளைகள் வளர்க்கப்படுறாங்க. அப்பா, அம்மா இல்லைனாலும், சொந்தமுனு சொல்லிக்கவாவது உனக்கு யாராவது இருப்பாங்க. ஆனா, எங்களுக்கு எல்லாமே இந்த இடம்தான்”, மிகுந்த முதிர்ச்சியோடும் நிதானமாகவும் பேசினாள்.

 “நம்ம பள்ளித் தாளாளர் கிலாடியம்மா, எங்க மேல நிறைய பிரியமும் அன்பும் வச்சிருக்காங்க. அவங்க வெளிநாட்டுல இருந்து இன்னும் ஒருவாரத்துல திரும்பினதும், நாம ரெண்டுபேரும் அவங்களைச் சந்திச்சுப் பேசுவோம். நிச்சயம் அவங்க புரிஞ்சிக்குவாங்க” என்றாள் தீர்க்கமாக. சுந்தரத்திற்கும் அது சரியென்று பட்டது; சம்மதித்தான்.

 “நம்ம கல்யாணம் நிச்சயம் நடக்கும்” என்றான் சுந்தரம்.

 “எப்படிச் சொல்லுற?” கிருபா கேட்டாள்.

 “தேவ கிருபை என் கூடவே இருக்கே”. அவனது பதிலை சிலாகித்து, சிரித்து, சிலிர்த்தாள். பளிங்குத் தரையில் முத்துப் பரல்கள் சிதறி ஓடுவதாகவே உணர்ந்தான் சுந்தரம்.

 அவனுக்கு அவளைத் தொட்டுப்பார்க்க வேண்டும்போல் இருந்தது. மருத்துவமனை திண்ணையில் எத்தனையோ தடவை இருவரும் கைப்பிடித்து நடந்திருந்தாலும், இப்போது அந்தக் கைகளும், கைவிரல்களும் அவனுக்கு உரிமையாகிவிட்டதில் எழுந்த ஆசை அது. ஆனால், எப்படிக் கேட்பது? தயங்கிய அவனுக்குள் இன்னொரு கேள்வியும் எழுந்தது. இப்போது அவள் மனதிலும் இதே ஆசை துளிர்த்திருக்குமா என்பதுதான் அது.

 இப்படி அவன் யோசித்துக்கொண்டிருக்கையில், கிருபா தன் அறை நோக்கி நடந்தாள். அறையின் பாதி வழியை அடைத்தவாறு மூடியிருந்த கதவில் அவள் நெற்றி உரசியதில் சுந்தரத்திற்கு வலித்தது. தன் வலக்கையில் எதையோ பிடித்தபடி, இடக்கையை நீட்டி, கதவு தன்மேல் மீண்டும் உரசிடாதபடிக்கு மெதுவாக அறையைவிட்டு வெளியேறி, அவனிடம் ஒரு காராச்சேவு பாக்கெட்டை நீட்டினாள்.

 “என்ன இது?” சுந்தரம் கேட்டான்.

 “சேவு. இன்னக்கிப் புனிதவெள்ளியாச்சே. மதியம் அகத்திக்கீரைக்குப் பதிலா இதைக் கடிச்சுக்கோ. உனக்குத்தான் அகத்திக்கீரை பிடிக்காதே. அதான் கடைக்குப்போன ரெஜி அக்காகிட்ட வாங்கிட்டு வரச் சொன்னேன். என்ன யோசிக்கிற? நேத்து நீ தறிக்கூடத்துல பொன்னையாகிட்ட பேசிட்டிருந்ததைக் கேட்டேன். பட்டினியாலாம் இருக்காதே. அப்புறம் நானும் பட்டினி கிடப்பேன்”, நாணமும் கொஞ்சலுமாகச் சிணுங்கினாள் கிருபா.

 சிலிர்த்துப்போன சுந்தரம், சேவோடு அவளின் கையையும் அழுந்தப் பற்றினான். தன் பக்கமாக அவளை இழுத்தான். “ஹேய் லூசு! விடு”, ஒப்புக்குச் சொல்லி விருப்பத்தோடே சிறைபட்டு நின்றாள் கிருபா. சில வினாடிகளே என்றாலும் இருவருக்குள்ளும் ஏதேதோ ஒளிவட்டங்கள் தோன்ற, அவர்கள் புதிய வெளிச்சத்தைக் கண்டுகொண்டிருந்தார்கள்.

 “கிருபா!” திடீரென ஒரு குரல். வார்டன் எஸ்தர் என்று அறிந்துகொண்ட இருவரும் திடுக்கிட்டார்கள்.

 “என்ன இது? சர்ச்சுக்குப் போகாம இங்க என்ன பண்ணுறீங்க. என்ன சுந்தரம், தியானத்துக்குப் போகல? எத்தனை நாளா இது நடக்குது?” அதட்டலும் அதிகாரமுமாய் கேட்டாள் எஸ்தர். இருவரும் பதிலேதும் சொல்லாமல் மிரட்சியோடே நின்றார்கள். அவர்களை அங்கேயே வைத்துப் பூட்டிவிட்டு, விஷயத்தை நிறுவனத்தின் பொறுப்புகளைத் தற்காலிகமாகக் கவனித்துவரும் பாஸ்டர் பீட்டரிடம் சொல்ல சர்ச் நோக்கி ஓடினாள் எஸ்தர்.

 கிருபா தேம்பினாள். இனி என்ன நிகழும் என்று யோசிக்க யோசிக்க அவளுக்கு தாங்க முடியாமல் அழுகை பீரிட்டது. சுந்தரத்திற்கு ஒன்றும் புரியவில்லை. நிச்சயம் ஏதோ பயங்கரம் நடக்கப்போவதை மட்டும் அவன் உணர்ந்தான். இருந்தும் கிருபாவை சமாதானம் செய்துகொண்டு இருந்தான்.

 வாசலில், எஸ்தரோடு ஐந்தாறு இளைஞர்களின் குரல்கள் கேட்டது. சில குரல்கள் சுந்தரத்திற்குப் பரிட்சயமானவை. அவர்கள் நிறுவனத்தின் பல்வேறு பிரிவுகளில் பணியாற்றும் ஊழியர்களின் மகன்கள். ஏற்கெனவே அவன்மீது கடுமையான கோபத்தில் இருக்கிற பாஸ்டர்தான், தியானத்திற்குச் சென்றிருந்த அவர்களை இங்கு அனுப்பியிருக்க வேண்டும்.

 கதவைத் திறந்துகொண்டு சுந்தரத்தை நோக்கிப் பாய்ந்தான் ஜார்ஜ். அவன் கோவில் பிள்ளையின் மகன்; வெளியூரில் போலீசாக இருக்கிறான். அவர்கள் சுந்தரத்தை இழுத்துக்கொண்டு போனார்கள். கிருபா கதறினாள். அப்போது சிலுவைப்பாதை தியானத்திற்கான முதல் மணி அடிக்கும் சத்தம் கேட்டது. அந்த ஓசையில் அன்று கருணைக்குப் பதிலாக அபாயம் உறைந்திருப்பதாக உணர்ந்தாள் கிருபா. எஸ்தர் கிருபாவை இழுத்துக்கொண்டு போனாள். சிலுவைப்பாதை தியானம் தொடங்கிற்று.

 “ஏன்டி குருட்டுச் சனியனே! போடுற சாப்பாட்டைத் தின்னுட்டுக் கெடக்க முடியலையோ? கொழுத்துப்போய் திரியுற. நானும் உன்னை கவனிச்சிட்டுதான்டி இருக்கேன்” என்று கிருபாவின் கன்னத்திலும் முதுகிலுமாக மாறிமாறி அடித்தாள் எஸ்தர். அவள் கை ஓங்கும் திசைகூட அறிய இயலாத கிருபாவின் உடல் முழுதும் அச்சம் படர்ந்தது. அழுதுகொண்டே தரையில் சரிந்துகிடந்தாள் கிருபா.

 ‘இதோ! தேவகுமாரன் நம்முடைய பாவச்சிலுவையைச் சுமந்துகொண்டு கொல்கதா மலையைக் கடந்துபோகிறார்’ என்று பாஸ்டர் பிரசங்கித்துக்கொண்டிருப்பது அவளுக்குக் கேட்டது. அவள் சுந்தரத்தை நினைத்தாள். இப்போது அவன் அவர்களால் மூர்க்கமாகத் தாக்கப்பட்டுக் கொண்டிருப்பான் என்று நினைத்தபோது, அவள் மேலும் கலங்கினாள். தான் சுந்தரத்திற்கு சுமக்கமுடியாத ஒரு சிலுவையாகிவிட்டதாக அவள் எண்ணினாள்.

 ஒரு பூட்டிய அறைக்குள் வைத்து அந்த இளைஞர்களால் சுந்தரம் கடுமையாகத் தாக்கப்பட்டான். எல்லாத் திசைகளிலுமிருந்து அவனுக்கு அடி விழுந்தது. “அனாதைப் பயலுக்குத் திமிரப்பாரு” என்று உதைத்தான் நாடிமுத்துவின் மகன். “எல்லாம் குருட்டுக் குசும்பு. இவனால பாஸ்டருக்கு எவ்லோ கெட்ட பெயர்” என்று சொல்லியபடி கன்னத்தில் அறைந்தான் இன்னொருவன்.

 ‘பிதாவே! இவர்களை மன்னியும். தாங்கள் செய்வது இன்னதென்று அறியாதிருக்கிறார்கள்!’ ஆலயத்தில், இயேசு சிலுவையில் உதிர்த்த முதல் வாக்கியம் தியானிக்கப்பட்டுக்கொண்டிருந்தது. ‘நான் தாகமாய் இருக்கிறேன்’ என்று கேட்கக்கூட திராணியற்றவனாய் மயங்கிக்கிடந்தான் சுந்தரம்.

 “எங்களை விட்டுடுங்க. நாங்க போறோம்” என்று எஸ்தரிடம் கெஞ்சினாள் கிருபா.

 “எங்க போவ? அந்தப் பயலோடவா? அவன் திருடனாச்சே. நம்ம வார்டன் சேவியர் சாரோட செயின் காணாமப்போச்சுனு சொன்னாங்களே; திருடுனது அவன்தானாம். இந்நேரம் அவனை ஸ்டேஷன்ல அடைச்சிருப்பாங்க. இனி அவன் வெளிய வரவே முடியாது”. எஸ்தரின் வார்த்தைகள் எதையும் கிருபா நம்பத் தயாராக இல்லை. அவள் தன்னையும் சுந்தரத்தையும் நினைத்து மேலும் மேலும் அழுதாள்.

 ஏற்கெனவே பாண்டி பொன்னம்மாள் விவகாரம்; இப்போது சுந்தரம் கிருபா; நிர்வாகத்திலும் ஏகப்பட்ட பிரச்சனைகள். தன்னிடம் பொறுப்பைக் கையளித்து வெளிநாடு சென்றிருக்கும் கிலாடியம்மாவிற்கு இவையெல்லாம் தெரிந்தால் சிக்கல் என்பதை பாஸ்டர் உணர்ந்தார். அவர் நாடு திரும்புவதற்குள் அனைத்தையும் ஒரு முடிவுக்குக் கொண்டுவர நினைத்த பாஸ்டர், இதே சபையால் நடத்தப்படும் வேறொரு நிறுவனத்திற்கு கிருபாவை அனுப்பிவிடுவது என முடிவு செய்தார். தனது முடிவை எஸ்தருக்குச் சொல்லியதோடு, அவர்தான் சில இளைஞர்களையும் எஸ்தரோடு அனுப்பியிருந்தார்.

 இனி சுந்தரம் வரமாட்டான்; தானும் இங்கிருக்கப்போவதில்லை என்று கிருபா அறிந்தபோது, வேதத்தில் சொல்லப்பட்டிருக்கிற உலகம் முடியும் நாளில் கவியப்போகிற அந்தகார இருளை அவள் இப்போதே உணர்ந்தாள். ‘என் தேவனே! என் தேவனே! ஏன் என்னைக் கைவிட்டீர்?’ அவளுக்காகக் காற்றில் கரைந்துகொண்டிருந்தது தேவகுமாரனின் சிலுவை வாக்கியம்.

 இதோ! கிருபா கூடுகடத்தப்படுகிறாள். ஆசை, விருப்பம், காதல், திருமணம், குடும்பம் என வாழ்வு தனக்கு மறுதலிக்கிற இவை எல்லாவற்றைப் பற்றியும் பிரக்ஞை கொண்டவளாகவே இப்போது போகிறாள். இரண்டு மணிநேரமாக நடந்த சிலுவைப்பாதை தியானம் முடிவுக்கு வந்தது. ‘எல்லாம் முடிந்தது’ என பாஸ்டருக்குச் சொல்லப்பட்டது.

 சில ஆண்டுகளில் திருமணம், குழந்தை என சுந்தரம் இயல்பானான். பார்வையற்றவன் என்றாலும் அவன் ஓர் ஆண். ஆனால், கிருபாவுக்கு நிச்சயம் அது சாத்தியமில்லை. பெண் என்பதைவிட, அவள் கதியற்றவள்; பார்வையற்றவள். வேறொரு நிறுவனத்தில், பிறிதொரு தேவாலய ஆராதனைகளில் அவள் பங்கேற்றுக்கொண்டிருப்பாள். இனி அவள் சிலுவைப்பாதை தியானத்திற்கு போகாமல் இருக்க வாய்ப்பில்லை.

 தன் உதடுகள் தேவ வசனங்களை ஜெபிப்பதற்கும், தன் மார்பு தேவ சிலுவையை ஏந்தவுமே தேவனால் சிருஷ்டிக்கப்பட்டிருக்கின்றன; அதுவே தேவனின் சித்தம் என்று தன்னைத் தேற்றியபடி, நிச்சயம் பிழைத்திருப்பாள் தேவ கிருபை.

***மறு வெளியீடு. முதல் வெளியீடு, விரல்மொழியர் பிப்பரவரி 2018.

பகிர

Be the first to leave a comment

உங்கள் கருத்தை உள்ளிடுங்கள்