அன்பு ஒளி, இன்பநாள்

அன்பு ஒளி, இன்பநாள்

,வெளியிடப்பட்டது

ஒவ்வொன்றுக்கும் பெயர் உண்டு. ஒவ்வொரு பெயரும் ஒவ்வொரு வார்த்தை உருவெடுத்தது.

ஆன் சலிவனின் கன்னத்தில் ஹெலன்கெல்லர் தன் விரல்களை வைத்து, பேச்சின் ஒலியைக் கற்றுக்கொள்வதாகச் சித்தரிக்கப்பட்டுள்ள இந்தப் படம், 1953-ல் வெளியான ஹெலன்கெல்லர் திரைப்படத்தின் ஒரு காட்சியாகும்.

என் வாழ்நாளிலேயே முக்கியமான அன்று என் உபாத்தியாயினி, ஆன் மான்ஸ்பீல்டு ஸல்லிவன் என்கிற பெயருடையவள், என்னை வந்து அடைந்தாள். என் முந்திய வாழ்க்கையையும் இந்தத் தேதிக்குப்பின் என் வாழ்க்கையையும் ஒப்பிட்டுப் பார்த்து அந்த இரண்டுக்கும் உள்ள பிரமாதமான வித்தியாசங்களை எண்ணுந்தோறும் நான் ஆச்சரியத்தில் மூழ்குகிறேன். அவை இரண்டும் இரண்டு கோடிகள், முற்றிலும் புதுமையான வாழ்வு தொடங்கிற்று எனக்கு அன்று.

1887-ல் மார்ச் மாதம் 3-ந் தேதி அது. எனக்கு ஏழு வயதாக இன்னும் மூன்று மாதங்களிருந்தன.

அந்த முக்கியமான தினத்தன்று மாலை, நான் வெளி வாசலில் நின்றேன். ஊமையாக, இன்னது என்று விவரிக்க முடியாத ஒரு பரபரப்புடன் நின்றேன். என்ன எதிர்பார்ப்பது என்று எனக்கு நிச்சயமாகத் தெரியாது. ஆனால் என் தாயாரின் பெருமூச்சுகளும், அவள் குறுக்கும் நெடுக்கும் நடந்து செய்துகொண்டிருந்த ஏற்பாடுகளும் அமர்க்களம்களும் எனக்குத் தெளிவாகவே அறிவுறுத்தின; ஏதோ அசாதாரணமான ஒரு விஷயம் நிகழப்போகிறது என்று, ஆகவே நான் வெளியே வாசலில் போய் நின்றுகொண்டு வருவதை வரவேற்கத் தயாரானேன். வீட்டு வாசலிலே படர்ந்திருந்த காலை மந்தாரை புஷ்பக் கொடிகளில் சூரிய ஒளி தாக்கிப் பசுமையை பத்துமடங்காக்கியது. நிமிர்ந்திருந்த என் முகத்திலும் சூரிய ஒளி தாக்கியது; எனக்கு ஒளி தெரியாவிட்டாலும் வெப்பம் தெரிந்தது. இனிமையான தென் பிராந்தியத்து வஸந்தத்தை வரவேற்கத் தலைக் காட்டியிருந்த தளிர்களும் மொக்குகளும் என் கைவிரல்களுடன் ஆனந்தமாக அளவளாவின. நிகழப்போகும் அதிசயம் என்ன என்று எனக்குத் தெரியாது.

நான் அந்தச் சமயம் எதையும் பற்றி அதிகமாகக்  கவலைப்படவில்லை. கையாலாகாத ஒரு ஆத்திரம் ஓய்ந்து அப்போதுதான் எல்லையற்ற அமைதியில், சிந்தனையற்ற அமைதியில் ஆழ்ந்திருந்தேன்.

ஆழ்ந்து சூழ்ந்துள்ள அடர்த்தியான மூடுபனியில் கடலில் கப்பலில் பிரயாணம் செய்திருக்கிறீர்களா? சுற்றிலும் ஒரே வெண்மையாக இருக்கும்; ஆனால் இருளையும்விட அதிபயங்கரமானது அது; எதிரில் உள்ளது எதுவும் தெரியாது. ஒவ்வொரு அங்குலமாகக் கப்பல் கரைநோக்கி சர்வஜாக்கிரதையாக நகரவேண்டியதாக இருக்கும். எந்த நிமிஷம் என்ன நடக்குமோ என்று அறியாமல் உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு எல்லோரும் காத்திருப்பார்கள். எனக்குக் கல்வி புகட்டும் முயற்சிகள் தொடங்குவதற்குமுன் மூடுபனியில் திக்குத் திசை தெரியாமல் மாட்டிக்கொண்ட அந்தக் கப்பல்போல் இருந்தேன் நான். திசைகாட்டும் கருவியோ, ஆழம் பார்க்கும் கயிறோகூட இல்லாத கப்பல். என் கடற்கரை எவ்வளவு அருகில் இருக்கிறது என்று அறிந்துகொள்ள எனக்கு எவ்வித துணையும் கிடையாது. “வெளிச்சம்/சிறிதாவது வெளிச்சம் வேண்டுமே!” என்று என் ஆத்மா வார்த்தைகள் அற்ற ஒரு மௌனத்தில் தங்கியது. அந்த நிமிஷத்திலே உய்யவழி, எனக்கு ஏற்பட்டது. எனக்கு வழிகாட்ட ஒரு அன்பு ஒளி தோன்றியது.

என்னை யாரோ அணுகி வருகிற காலடிச் சப்தம் கேட்டது. என் தாயார்தான் வருகிறாளாக்கும் என்று எண்ணி என் கைகளை நீட்டினேன். யாரோ என் கையைப் பிடித்துக்கொண்டாள். என்னைக் கட்டி அணைத்து இறுகத் தழுவிக்கொண்டாள் ஒருத்தி, உலகில் உள்ளதையெல்லாம் எனக்குச் சொல்லித்தர ஒருத்தி வந்துவிட்டாள். அதெல்லாவற்றையும்விடப் பெரிதாகச் சொல்ல வேண்டியது இதுதான்; தன்பால் என் உள்ளத்தைக் கவர்ந்து அடிமைகொள்ள அவள் வந்துவிட்டாள்.

என் உபாத்தியாயினி வந்ததற்கு மறுநாள் காலையில் அவள் என்னைத் தன் அறைக்குள் அழைத்துச் சென்றாள், என்னிடம் பொம்மையைக் கொடுத்தாள். பெர்கின்ஸ் ஸ்தாபனத்திலுள்ள கண்களில்லாத குழந்தைகள் எனக்கு வெகுமதியாக அளித்திருந்த பொம்மை அது. லாரா ப்ரிட்ஜ்மனே அதற்கு ஆடைகள் தைத்து அணிவித்திருந்தாள் என்பது எனக்கு அப்போது தெரியாது; பின்னர்தான் தெரிந்துகொண்டேன். பொம்மையை வைத்துக்கொண்டு சிறிது கேம் விளையாடினேன். பிறகு மிஸ் சல்லிவன்மெதுவாக என் கையைப் பிடித்து உள்ளங்கையில் d-o-l-l (பொம்மை) என்று எழுத்துக்கூட்டி எழுதினாள். இந்த விளையாட்டு எனக்கு ஆரம்பத்திலேயே பிடித்துவிட்டது. அவள் விரலால் எழுதிய மாதிரியே நானும் அவள் கையில் எழுதினேன். d-o-l-l என்று சரியாக எழுத அறிந்துகொண்டதும் எனக்கே தோன்றிய ஆனந்தத்தையும் பெருமையையும் சொல்லிமாளாது. குழந்தைத்தனமான பெருமைதான் அது; குழந்தைத்தனமான ஆனந்தம்தான். அதனாலென்ன? உடனேயே கீழே ஓடிப்போய், என் அம்மாவின் கையைப் பிடித்து அவளுடைய உள்ளங்கையில் d-o-l-l என்கிற எழுத்துக்களை எழுதினேன். வார்த்தைகள், எழுத்துக்கள் என்பது எதுவுமே எனக்கு அப்போது தெரியாது. மிஸ் ஸல்லிவன் செய்த மாதிரியே நானும் செய்தேன்; அவ்வளவுதான். இந்த மாதிரிப் பின்தொடர்ந்த பல நாட்களில் அவ்வளவாக அர்த்தம் புரியாத பல வார்த்தைகளை எழுத்துக்கூட்டி விரலால் எழுதக் கற்றுக்கொண்டேன் நான்; குண்டூசி, தொப்பி, கோப்பை, நில், நட, உட்கார் என்பவை போன்ற பல வார்த்தைகளைக் கற்றுக்கொண்டேன். உபாத்தியாயினி வந்த பல வாரங்களுக்குப் பிறகுதான் எனக்குத் திடமாகத் தெரிந்தது; உலகில் உள்ள ஒவ்வொன்றுக்கும் தனித்தனியே பெயர் உண்டு என்கிற விஷயம் பல வாரங்களுக்குப் பிறகுதான் எனக்குத் தெரியவந்தது.

ஒருநாள் நான் புதுப் பொம்மையை வைத்து விளையாடிக்கொண்டிருந்தேன், என்னுடைய பெரிய துணிப்பொம்மையை என் மடிமேல் போட்டாள் மிஸ் சல்லிவன். அதேசமயம் என் உள்ளங்கையில் விரலால் d-o-l-l என்று எழுதினாள். பொம்மை என்கிற பெயர் இரண்டு பொம்மைகளுக்குமே பொருந்தும் என்று எனக்கு அறிவூட்ட முயன்றாள். அதே தினம் காலையில் “சொம்பு, தண்ணீர்” என்கிற வார்த்தைகள் பற்றி எனக்கும் மிஸ் சல்லிவனுக்கும் ஒரு போராட்டம் நடந்தது. சொம்பு என்றால் சொம்புதான் என்றும், தண்ணீர் என்றால் தண்ணீர்தான் என்றும் எனக்குத் தெரிவிக்க மிஸ் ஸல்லிவன் வெகுவாகப் பாடுபட்டாள். ஆனால் எனக்குப் பிடிபடவில்லை. சொம்பைத் தண்ணீர் என்றும், தண்ணீரைச் சொம்பு என்றும் எழுதினேன் நான். அதிகமாகத் தொந்தரவு செய்யாமல் அந்த விஷயத்தை அத்துடன் விட்டுவிட்டாள் அவள். ஆனால் கூடிய சீக்கிரமே மறுபடியும் சந்தர்ப்பம் கிடைத்தவுடன் சொம்பு, தண்ணீர் என்று மிஸ் ஸல்லிவன் ஆரம்பித்தாள். எனக்கு ஒரே ஆத்திரமாக வந்தது. புதுப் பொம்மையை எடுத்துத் தரையில் ஓங்கி அடித்தேன். அது தூள் தூளாக உடைந்து தெறித்தது. காலடியில் கிடந்த பொம்மைத் துணுக்குகள் எனக்கு எல்லையில்லா ஆனந்தமூட்டின. எனக்கு ஏற்பட்ட கோபத்தையும், அதன் விளைவாக நான் இழந்துவிட்ட பொம்மையையும் பற்றி எனக்கு எவ்வித வருத்தமும் தோன்றவில்லை. அப்படி அந்தப் பொம்மையிடம் எனக்கு ஒன்றும் பிரியமோ பிடித்தமோ ஏற்பட்டுவிடவில்லை. நான் குடியிருந்த அந்த இருள் உலகில் அன்பு என்கிற தளைகள் இன்னும் ஏற்படவில்லை. விருப்பு வெறுப்பு என்கிற உனர்ச்சிகள் அப்படி ஒன்றும் என் வாழ்வில் ஆட்சி செலுத்தவில்லை. உடைந்த பொம்மையைக் கூட்டி ஓர் ஓரமாக என் உபாத்தியாயினி ஒதுக்குவதை நான் உணர்ந்தேன். எனக்கு ஒரு திருப்தி ஏற்பட்டது; எந்தவிதத்திலோ எனக்குத் தொந்தரவு கொடுத்துக்கொண்டிருந்த அந்தப் பொம்மை சிதறிவிட்டது பற்றி எனக்குக் கொஞ்சம் ஆறுதலாகக்கூட இருந்தது.

என் தொப்பியை எடுத்து வந்தாள் மிஸ் சல்லிவன். வெளியே, வெப்பமான சூரிய ஒளியில் போகப்போகிறோம் என்று ஊகித்துக்கொண்டேன், வார்த்தைகள் அற்ற ஒரு நிலையைச் சிந்தனையென்று சொல்லலாமா? அது எனக்குத் தெரியாது. ஆனால் இந்த எண்ணம் என்னை ஆனந்தக் கூத்தாடச் செய்தது. குதித்துக் குதித்துக்கொண்டே கிளம்பினேன்.

தோட்டத்திலே இருந்த கிணற்றை நோக்கி நடந்தோம். வழிநெடுகக் காலை மந்தாரையின் நறுமணம் நிறைந்திருந்தது. கிணற்றுப் படிமேலும் மந்தாரைக்கொடி, அடர்த்தியாகப் படர்ந்து ஏராளமாகப் பூத்திருந்தது. யாரோ கிணற்றிலிருந்து ஜலம் இழுத்து ஊற்றிக்கொண்டிருந்தார்கள். ஜலம் ஓடிய தாரையில் கை வைக்கச் சொன்னாள் மிஸ் சல்லிவன். என்னுடைய ஒரு கையில் குளுகுளுவென்று கிணற்று ஜலம் ஓட, இன்னொரு கையில் மிஸ் சல்லிவன் w-a-t-e-r (தண்ணீர்) என்று முதலில் வேகமாகவும் பிறகு மெதுவாகவும் எழுதிக் காட்டினாள். நான் அசையாமல் நின்றேன்; கையிலிருந்து என் மனத்திற்குள் பாய்ந்த அறிவை வாங்கிக்கொண்டு நின்றேன். ஏதோ மறந்துவிட்ட ஒரு விஷயம் தெளிவாக, அழுத்தமாக எனக்குத் திடுதிப்பென்று ஞாபகம் வந்ததுபோல இருந்தது. என் மனத்தில் சிந்தனைகள் உருவெடுக்கத் தொடங்கிவிட்டன. பாஷையின் ரகஸியம் என் உள்ளத்தில் உருவாகிவிட்டது. தண்ணீர் என்றால் இதுதான் என்பது எனக்கு நிதரிசனமாகத் தெரிந்துவிட்டது. என்ன அதிசயமான குளுமை! என்ன அதிசயமான ஓட்டம்! உயிருள்ள அந்த வார்த்தை என் உள்ளத்தைக் கவ்வியது. இருளில் பிரகாசமான ஒளி ஏற்படுத்தித் தந்தது. என் உள்ளம் விரிந்து விசாலித்தது. எல்லையில்லாத ஆனந்தத்தைத் தண்ணீர் என்கிற வார்த்தையிலே கண்டேன் நான். என்னைத் தடைப்படுத்தி நிறுத்திய தளைகள் இன்னும் எத்தனையோ இருந்தன. ஆனால் காலக்கிரமத்தில் அவையெல்லாம் அறுந்து விழுந்துவிடும் என்கிற நம்பிக்கை, வார்த்தைகளில் அகப்படாத ஒரு நம்பிக்கை, நானும் அறியாமலே என்னுள்ளே உதித்தது.

கிணற்றடியிலிருந்து நான் கிளம்பும்போது கற்றுக் கொள்ளக்கூடியதையெல்லாம் கற்றுக்கொண்டுவிடுவது என்கிற ஒரு துடிப்புடன் கிளம்பினேன், ஒவ்வொன்றுக்கும் பெயர் உண்டு. ஒவ்வொரு பெயரும் ஒவ்வொரு வார்த்தை உருவெடுத்தது. ஒவ்வொரு வார்த்தையையும் தொடர்ந்து ஒரு சிந்தனை ஓட்டம் இருந்தது. வீடு திரும்பும் வழியில் நான் தொட்ட ஒவ்வொரு பொருளும் உயிர்பெற்றுத் துடிப்பதுபோல இருந்தது. மூடிய கண்களைக்கொண்டு நான் உலகில் உள்ள எல்லாவற்றையும் புதுப்பார்வை பார்த்தேன். வீட்டுக்குள் வரும்போது உடைந்து நொறுங்கிய என் பொம்மையின் ஞாபகம் வந்தது. மூலையில் கிடந்த துணுக்குகளைத் தடவித் தேடி எடுத்தேன். அவற்றைச் சேர்த்து மீண்டும் பொம்மையாக்க முயன்றேன். என் கண்களில் நீர் நிறைந்துவிட்டது. நான் செய்துவிட்ட காரியத்தின் முழு அர்த்தமும் எனக்கு அப்போதுதான் புரிந்தது. தவறு செய்துவிட்ட உணர்ச்சியும், மன்னிப்புக் கேட்கிற பாவமும், வருத்தமும் என் மனத்திலே தோன்றின.

அன்று புது வார்த்தைகள் பலவற்றைக் கற்றுக்கொண்டேன். என்னென்ன வார்த்தைகளை அன்று முதல்தடவையாகக் கற்றுக்கொண்டேன் என்று இப்போது சொல்லத் தெரியவில்லை எனக்கு. அம்மா, அப்பா, தங்கை, உபாத்தியாயர் முதலிய வார்த்தைகள் அன்று எனக்குத் தெரியவந்தன. உலகம் என்கிற தத்துவம் “ஆரானின் கோல்போல” பூத்துக் குலுங்கியது என் உள்ளத்தில். அன்று நான் படுக்கையில் படுத்து உறன்கப்போகுமூன் மறுநாள் பொழுது எப்போது விடியும், கற்றுக்கொள்வதை எப்போது மீண்டும் தொடங்குவோம் என்று ஏங்கினேன். அதைப் போன்ற இன்பநாள் அதற்குமுன் என் வாழ்வில் இருந்ததேயில்லை.

***ஹெலன்கெல்லரின் சுயசரிதையான தி ஸ்டோரி ஆஃப் மை லைஃப் (the story of my life) என்ற புத்தகத்தை தமிழில் ‘என் கதை’ என்ற பெயரில் தமிழ் இலக்கிய முன்னோடியான திரு. க.நா. சுப்ரமண்யம் மொழிபெயர்த்துள்ளார். ஜோதி புத்தக நிலையத்தால் 1955-ல் வெளியிடப்பட்ட அந்தப் புத்தகத்தின் நான்காம் அத்தியாயம் சவால்முரசு வாசகர்களுக்காக இங்கு தரப்பட்டுள்ளது.

ஏப்ரல் 14: ஹெலன்கெல்லரின் ஆசிரியரான ஆன் சல்லிவன் அவர்களின் பிறந்தநாள்.

பிறப்பு: 14-ஏப்ரல்-1866. மறைவு 20-அக்டோபர்-1936.

பகிர

Be the first to leave a comment

உங்கள் கருத்தை உள்ளிடுங்கள்