சங்கக் கடிதம் 06/0ஏப்ரல்/2022

சங்கக் கடிதம் 06/0ஏப்ரல்/2022

,வெளியிடப்பட்டது

மாற்றுத்திறனாளி நலத்துறையின் அரசு சிறப்புப் பள்ளிகள் கால் நூற்றாண்டு பின்தங்கியே உள்ளன

ஹெலன்கெல்லர் மாற்றுத்திறனாளிகள் நலச்சங்க லோகோ

பெறுநர்

மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில ஆணையர் அவர்கள்

மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில ஆணையரகம்

சென்னை 5.

ஐயா,

பொருள்: சிறப்புப்பள்ளிகள் பொருண்மையில் 6.ஏப்ரல்.2022 இணை இயக்குநர்

அவர்களின் தலைமையில் நடைபெறும் கூட்டத்தில் முன்வைக்கப்பட

வேண்டிய கோரிக்கைகள் தொடர்பாக.

பார்வை: இணைப்பில் கண்டுள்ள கோரிக்கை மனு.

     சிறப்புப்பள்ளிகள் நலன் மேம்படும் வகையில் மாற்றுத்திறனாளிகள் மாநில ஆணையரிடம் எமது சங்கம் சார்பில் பல ஆண்டுகளாகப் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து வருகிறோம். தொடர்ந்து எமது கோரிக்கைகள் புறக்கணிக்கப்பட்டு வருவது எமக்கு வேதனையளிப்பதாக இருக்கிறது.

     தற்போது இணை இயக்குநர் அவர்களால் சிறப்புப்பள்ளிகள் தொடர்பாக 6.ஏப்ரல்.2022 இன்று ஒரு கூட்டம் மாற்றுத்திறனாளிகள்உக்கான மாநில ஆணையரகத்தில் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது.

     இந்தக் கூட்டத்திலும் எங்களின் நெடுநாளைய கோரிக்கைகளை மனுவாக இணைத்து வழங்குகிறோம். வழக்கமான புறக்கணிப்புகள், கால தாமதங்களை ஒரு முடிவுக்குக் கொண்டுவந்து எமது கோரிக்கைகளுக்கு அவசர கதியில் தீர்வு காணுமாறு மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில ஆணையர் அவர்களை எமது சங்கம் சார்பில் வலியுறுத்திக் கேட்டு்க்கொள்கிறோம்.

நன்றி,

கோரிக்கைகள்:

1) பள்ளிகளைத் தரம் உயர்த்த வேண்டிய அவசரமும் அவசியமும்:

                    செவித்திறன் குறையுடையோருக்கான அரசு மேல்நிலைப் பள்ளிகள் இரண்டு (தஞ்சாவூர் & தருமபுரி) மட்டுமே உள்ளன. ஒவ்வொரு தரப்பினரும் கல்வியில் மேம்பட பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையில் சிறப்புப் பள்ளிகளில் எந்தவொரு மாற்றமும் முன்னேற்றமும் இன்றித் தொடர்வதில் எந்தவொரு பொருளும் பலனும் இல்லை. அதற்கான இரு முக்கியக் காரணங்கள் உள்ளன.

                   முதலாவதாக நடப்பு பட்ஜெட் தொடரில் ஆறு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை அரசுப் பள்ளியில் பயின்ற பெண் மாணவர்களுக்கு உயர்கல்வியை வெற்றிகரமாக நிறைவு செய்வதற்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. மேற்குறிப்பிட்ட வெறும் இரண்டு அரசு மேல்நிலைப் பள்ளிகள் மட்டுமே இருந்தால் பெரும்பாலான மாற்றுத்திறனாளி மாணவர்கள் இத்திட்டத்தின் பயனைப் பெறவே இயலாது.

                        இரண்டாவதாக ஒவ்வொரு வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் அடுத்த வகுப்பில் சேர்ந்து தொடர்ந்து பயின்று வருகின்றனரா என EMIS மூலமாகத் துல்லியமான முறையில் கண்காணிக்கப்படுகிறது. நமது துறையின் கீழ் இயங்கும் சிறப்புப் பள்ளிகள் நீண்ட காலமாகத் தரம் உயர்த்தப்படாமல் இருப்பதால் இந்தக் கண்காணிப்பின் பலன்களையும் பெரும்பாலான மாற்றுத்திறனாளி மாணவர்கள் பெறவே இயலாது.

                   இவ்வாறாக மாற்றுத்திறனாளி மாணவர்கள் பெயரளவில் கல்வி பெறுவதை அல்லது கண்டு கொள்ளப்படாமல் விடுவதைத் தடுக்க அரசு சிறப்புப் பள்ளிகள் அனைத்தும் உடனடியாகத் தரம் உயர்த்தப்பட வேண்டும்.

     மேலும், பள்ளி தொடங்கப்பட்ட நாள் முதலாகவே கோவை, தர்மபுரி, சிவகங்கை மற்றும் கடலூர் ஆகிய நான்கு பார்வைத்திறன் குறையுடையோருக்கான அரசு சிறப்புப்பள்ளிகள் எவ்வித வளர்ச்சியுமின்றி இருக்கின்றன. அனைவருக்க்உம் கல்வித்திட்டத்தின் அமலாக்கத்தால் அந்தப் பள்ளிகளின் மாணவர் சேர்க்கை படிப்படியாகக் குறைந்துகொண்டே வருகிறது. எனவே, அப்பள்ளிகளை குறைந்தபட்சம் நடுநிலைப்பள்ளிகளாகத் தரம் உயர்த்துவது அவசியமும் அவசரமுமான ஒன்று. இது தொடர்பாக சங்கத்தின் சார்பில் ஏற்கனவே விரிவான கோரிக்கை மனுவினை ஆண்டுதோறும் அனுப்பி வருகிறோம். இம்மனுவுடனும் அந்தக் கடிதம் இணைக்கப்பட்டுள்ளது.

2) கல்வித் துறைக்கு இணையாக அரசு சிறப்புப் பள்ளிகள் இயங்க வேண்டும்:

                         கல்வியில் சிறந்த தமிழ்நாட்டில் பள்ளிக்கல்வி மற்றும் உயர்கல்வியில் தொடர்ந்து சீர்திருத்தங்கள் நடைபெற்று வருகின்றன. ஆனால் அவை எதையும் மாற்றுத்திறனாளி மாணவர்கள் பெறுவதற்கு எந்தவொரு முன்னெடுப்பும் இல்லை. உதாரணமாக அரசுப் பள்ளிகளின் கட்டமைப்பை மேம்படுத்த பேராசிரியர் அன்பழகனார் திட்டம் நடப்பு பட்ஜெட் தொடரில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் பள்ளிக் கல்வித் துறை மட்டுமின்றி ஆதி திராவிடர் நலப் பள்ளிகள் மற்றும் கள்ளர் நலப் பள்ளிகளும் இத்திட்டத்தில் பயன்பெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் மாற்றுத்திறனாளி நலத்துறையின் கீழ் இயங்கும் அரசு சிறப்புப் பள்ளிகள் இத்திட்டத்தில் இணைக்கப்படவில்லை. சிறப்புப்பள்ளிகளும் இத்திட்டத்தில் இணைக்கப்படும் பட்சத்தில், மோசமான வகுப்பறைகளைக்கொண்ட பூவிருந்தவல்லி பார்வையற்றோருக்கான அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி போல, உள்கட்டமைப்புகளில் பின்தங்கிய சிறப்புப்பள்ளிகள் பயன்பெறும்.

                    இது மட்டுமின்றி மாற்றுத்திறனாளி நலத்துறையின் அரசு சிறப்புப் பள்ளிகள் கால் நூற்றாண்டு பின்தங்கியே உள்ளன. உதாரணமாக 2003 முதல் கல்வித் துறையில் ஆறாம் வகுப்பு முதல் பட்டதாரி ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு வரும் நிலையில் இன்னமும் அரசு சிறப்புப் பள்ளிகளில் எட்டாம் வகுப்பு வரை இடைநிலை ஆசிரியர்கள் மட்டுமே நியமிக்கப்படுகின்றனர். இவ்வாறு கல்வித் துறையில் இருந்து விலகி நிற்கும் அரசு சிறப்புப் பள்ளிகள், மாற்றுத்திறனாளி மாணவர்கள் ஆக்கப்பூர்வமான கல்வியை வழங்கத் திறனற்றுத் தேங்கிக் கிடக்கின்றன.

3) சிறப்பு ஆசிரியர்களுக்கான பயிற்சிப் படிப்புகளை மீண்டும் தொடங்குதல் மற்றும்   ஆசிரியர் தகுதித் தேர்வு நடைமுறையில் இருந்து விலக்கு அளித்தல்:

                    சிறப்பு ஆசிரியர்களுக்கான பயிற்சிப் படிப்புகளை நடத்தும் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் பயிற்சிப் படிப்புகளுக்கான அங்கீகாரம் தொடர்பான காரணங்களால் பல ஆண்டுகளாக அந்தப் படிப்புகள் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் சிறப்புப் பள்ளிகளில் போதிய ஆசிரியர்களை நியமனம் செய்ய இயலாமல் போகக் கூடும். ஆகவே கூடிய இந்த ஆசிரியர் பயிற்சிப் படிப்புகளை மீண்டும் தொடங்க வேண்டும்.

                          மேலும் சிறப்புப் பள்ளியில் பணிபுரியும் அனைத்து ஆசிரியர்களும் அரசால் நடத்தப்படும் ஒரே நிறுவனத்தில் பயின்றவர்கள் ஆவர்; அதுவும் இந்தப் பயிற்சிப் படிப்பை முடித்தவர்கள் மிகவும் குறைந்த எண்ணிக்கையிலேயே உள்ளனர். அனைவருமே பொதுவான ஆசிரியர்ப் பயிற்சிப் படிப்புகளோடு கூடுதலாக ஒரு பட்டயப் படிப்பையும் முடித்திருக்கிறார்கள். எனவே கல்வித் துறையில் பின்பற்றப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வு நடைமுறை சிறப்புப் பள்ளிகளுக்கு அவசியமற்றதாகும். ஆகவே சிறுபான்மையினர் பள்ளிகளுக்கு இருப்பது போல சிறப்புப் பள்ளிகளுக்கும் ஆசிரியர் தகுதித் தேர்வு நடைமுறையில் இருந்து விலக்குப் பெற வேண்டும்.

     இது தொடர்பாக நாங்கள் பலமுறை முறையிட்டும் கோரிக்கை ஏற்கப்படாததால், பத்துக்கும் மேற்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் 24 மணிநேரப்பணியான துணைவிடுதிக்காப்பாளர்களாகவே கடந்த பத்தாண்டுகளாக இறுத்திவைக்கப்பட்டுள்ளார்கள்.

4) இளநிலை உதவியாளர் உள்ளிட்ட ஆசிரியர் அல்லாத பணியிடங்கள் மற்றும்

     உடற்கல்வி ஆசிரியர் உள்ளிட்ட சிறப்பு ஆசிரியர்கள் பணியிடங்களை  

     நிரப்புதல்:

                      அரசு சிறப்புப் பள்ளிகள் அனைத்தும் விடுதியுடன் இணைந்தவை. ஆகவே தொடக்கப் பள்ளியாக இருந்தாலும் மேல்நிலைப் பள்ளியாக இருந்தாலும் நிர்வாகம் சார்ந்த பணிகள் நிறைய இருக்கும். ஆனால் இளநிலை உதவியாளர், அலுவலக உதவியாளர், தூய்மைப் பணியாளர், இரவுக் காவலர் ஆகிய பணியிடங்கள் பல பள்ளிகளில் காலியாகவும் சில பள்ளிகளில் இன்னமும் உருவாக்கப்படாமலும் உள்ளன. உதாரணமாக உயர்நிலைப் பள்ளியாக இருக்கும் சேலம், செவித்திறன் குறையுடையோருக்கான அரசு உயர்நிலைப்பள்ளியில் மேற்குறிப்பிட்ட பணியிடங்கள் இன்னமும் உருவாக்கப்படவில்லை. ஆகவே இந்தப் பணியிடங்கள் இல்லாத பள்ளிகளில் உருவாக்கி, ஏற்கனவே காலியாக இருக்கும் பணியிடங்களுடன் சேர்த்து உடனடியாக நிரப்ப வேண்டும். மேலும் உடற்கல்வி, ஓவியம், தொழிற்கல்வி போன்ற ஆசிரியர் பணியிடங்கள் பெருமளவில் நீண்ட காலமாக காலியாக உள்ளன. ஆகவே இந்தப் பணியிடங்களையும் உடனடியாக நிரப்ப வேண்டும்.

     மேலும், ஆயா, சமையலர் உள்ளிட்ட விடுதிசார் பணியிடங்கள் சில பள்ளிகளில் அதிகமாகவும், சில பள்ளிகளில் ஒரு பணியிடம்கூட தோற்றுவிக்கப்படாமலும் ஒரு சமச்சீரற்ற நிலை காணப்படுகிறது. எனவே, உடனடியாக விடுதிசார் பணியிடங்களை நிரவல் செய்திட வேண்டும்.

5) கணினி ஆசிரியர் பணியிடங்களை காலமுறை ஊதியப் பணியிடங்களாக

      மாற்றுதல்:

              அரசு சிறப்புப் பள்ளிகளில் பயிலும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு நவீன கணினிக் கல்வி அவசியமாகும். ஆகவே அரசு சிறப்புப் பள்ளிகள் அனைத்திற்கும் கணினிகள் வழங்கப்பட்டு, தொகுப்பூதிய அடிப்படையில் கணினி ஆசிரியர்கள் நியமிக்கப்படுகின்றனர். ஆனால் இந்த ஆசிரியர்கள் தற்காலிக ஆசிரியர்களாக இருப்பதால், அந்தந்த தலைமை ஆசிரியர்களின் அறிவுறுத்தல்களுக்கு இணங்கி ஏறக்குறைய அலுவலகப் பணியாளர்களாகவே பணிபுரிகின்றனர். இதனால் மாணவர்களுக்கு கற்பித்தல் பணியில் பின்னடைவு ஏற்படுகிறது. ஆகவே மற்ற ஆசிரியர் பணியிடங்கள் போன்று கணினி ஆசிரியர் பணியிடங்களை காலமுறை ஊதிய அடிப்படையில் நிரந்தரப் பணியிடங்களாக மாற்ற வேண்டும்.

6) செவித்திறன் குறையுடையோருக்கான சிறப்புப் பள்ளிகளில் செவித்திறன் குறையுடைய மாற்றுத்திறனாளிகளுக்குப் பணியிடங்கள் ஒதுக்கீடு செய்தல்:

                            பார்வைத் திறன் குறையுடையோருக்கான சிறப்புப் பள்ளிகளில் பெரும்பாலான பணியிடங்களில் பார்வை மாற்றுத்திறனாளிகள் பணிபுரிகின்றனர். ஆனால் செவித்திறன் மாற்றுத்திறனாளிகளுக்கு அம்மாதிரியான பணிவாய்ப்புகள் கிடைப்பதில்லை. ஆகவே செவித்திறன் குறையுடையோருக்கான சிறப்புப் பள்ளிகளில் உள்ள உடற்கல்வி ஆசிரியர், ஓவிய ஆசிரியர், தொழிற்கல்வி ஆசிரியர், கணினி ஆசிரியர் ஆகிய பணியிடங்களை செவித்திறன் மாற்றுத்திறனாளிகளுக்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும். மேலும் இளநிலை உதவியாளர், அலுவலக உதவியாளர், தூய்மைப் பணியாளர், இரவுக் காவலர், ஆயா, சமையலர் ஆகிய பணியிடங்களில் மூன்றில் ஒரு பங்கினை செவித்திறன் மாற்றுத்திறனாளிகளுக்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும். இதன் மூலமாக இப்பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு அரசுப் பணிவாய்ப்பு பற்றிய தன்னம்பிக்கை ஏற்படும்.

7) சிறப்புப் பள்ளிகளில் நடைபெற்றுள்ள முறைகேடான பதவி உயர்வுகளை   

    இரத்து   செய்தல் மற்றும் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் மீது உரிய 

     நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டல்:

                      காலிப் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டு, அதற்குரிய பணி மூப்புப் பட்டியல் மற்றும் தேர்ந்தார் பட்டியல் வெளியிடப்பட்டு, கலந்தாய்வு நடத்தப்பட்டு 2019ஆம் ஆண்டு முதல் முறையாக பதவி உயர்வுகள் வழங்கப்பட்டன. ஆனால் இந்த நடைமுறைகளைப் பின்பற்றாமல் 6, 7, 8ஆம் வகுப்புகளுக்கு பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை முறைகேடாக உருவாக்கி, ஒரு சிலரிடம் மட்டுமே விண்ணப்பம் பெற்று வெளிப்படைத் தன்மை இல்லாமல் பதவி உயர்வுகள் அளிக்கப்பட்டன. இந்த ஆணைகள் இரத்து செய்யப்பட்ட பிறகும் சிலர் அதே பதவி உயர்வில் நீடித்து பணி மூப்புப் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். ஆகவே இது உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு, மீண்டும் பழைய வெளிப்படையாக முறையில் இந்தப் பணியிடங்கள் உருவாக்கப்பட்டு பதவி உயர்வுகள் வழங்கப்பட வேண்டும்.

8. அனைத்து சிறப்புப்பள்ளிகளிலும் ஒரே மாதிரியான விதிமுறைகளைப் பின்பற்றுதல்:

மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில ஆணையர் அவர்களால் சிறப்புப்பள்ளிகளில் பின்பற்ற வேண்டிய பொதுவிதிகள் எதுவும் வகுக்கப்படாததால், சில தலைமை ஆசிரியர்கள் தங்கள் மனம் போன போக்கில் தங்களின் கீழ் பணியாற்றும் பணியாளர்களை மனிதநேயமற்ற வகையில் நடத்திவருகிறார்கள். உதாரணமாக, துணைவிடுதிக்காப்பாளர் பணி என்பது 24 மணிநேரப் பணியாகும். எனவே, அவர்களுக்கு மாதம் ஒருமுறை சிறப்பு அனுமதி வழங்கப்படுதல் என்ற நடைமுறை சில தலைமை ஆசிரியர்களால் பின்பற்றப்படுவதும், சில தலைமை ஆசிரியர்கள் அதை ஃபேவரைட்டிசத்தின் ஆயுதமாகக் கையாள்கிற அநீதியும் நடைபெறுகிறது. எனவே, 24 மணிநேர விடுதிப்பணியாளர்களுக்கு மாதம் ஒருமுறை சிறப்பனுமதி வழங்கிட ஆணையர் அனைத்து சிறப்புப்பள்ளிகளுக்கும் உத்தரவிட வேண்டும்.

9. பதிலி எழுத்தர் நடைமுறையை நெறிப்படுத்துதல்:

அரசுப் பொதுத்தேர்வை எழுதும் மாணவர்களுக்கு பதிலி எழுத்தர்களை (scribes) ஒருங்கிணைப்பதில் ;நிலவும் குளறுபடிகள் களையப்பட வேண்டும். இதற்காக அரசால் ஒதுக்கப்படும் நிதிகளில் முறைகேடுகள் நிகழாதபடி, பள்ளிக்கு அருகாமையிலிருக்கும் கல்லூரிகள், சில தன்னார்வக் குழுக்களைப் பயன்படுத்துமாறு தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிட வேண்டும்.

10) சிறப்புப் பள்ளிகளைக் கல்வித் துறையின் கீழ் கொண்டு வருதல்:

                   பள்ளிக்கல்வியில் ஆண்டுதோறும் படிப்படியான மாற்றங்கள் கொண்டுவரப்படுகின்றன. அந்த மாற்றங்கள் சிறப்புப் பள்ளிகளுக்கு வருவதற்குள் பல ஆண்டுகள் கடந்து விடுகின்றன. பல மாற்றங்கள் சிறப்புப் பள்ளிகளின் மாற்றுத்திறனாளி மாணவர்களை எட்டாமலேயே நின்றுவிடுகின்றன. உதாரணமாக ஒன்று முதல் எட்டு வகுப்புகளுக்கு இடைநிலை ஆசிரியர் என்று இருந்தது பாடத்திட்டத்தின் தரம் காரணமாக ஒன்று முதல் ஐந்து வகுப்புகளுக்கு மட்டுமே இடைநிலை ஆசிரியர் எனவும் ஆறு முதல் எட்டு வகுப்புகளுக்குப் பட்டதாரி ஆசிரியர் எனவும் மாற்றப்பட்டது. இந்த நடைமுறை கடந்த பதினைந்து ஆண்டுகளாக கல்வித்துறையில் பின்பற்றப்படுகிறது. ஆனால் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சிறப்புப் பள்ளிகளில் இன்னமும் ஒன்று முதல் எட்டு வகுப்புகளுக்கும் இடைநிலை ஆசிரியர்கள் மட்டுமே நியமிக்கப்படுகின்றனர். அதாவது மாற்றுத்திறனாளி மாணவர்களின் கல்விநலன்கள் கவனிக்கப்படாமல் உள்ளன. மேலும் இலவச சைக்கிள் மற்றும் லேப்டாப் வழங்குவது, ஆண்டுதோறும் பள்ளிகளைத் தரம் உயர்த்துவது, புதிய பாடப்பிரிவுகளைக் கொண்டுவருவது, அதற்கான கட்டமைப்பையும் ஆசிரியர் பணியிடங்களையும் உருவாக்குவது போன்ற முன்னேற்றங்களும் சிறப்புப் பள்ளிகளில் ஏற்படும்.

                        மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் கீழ் இயங்கும் சிறப்புப் பள்ளிகளில் மனவளர்ச்சிக் குறைபாடு உடையோருக்கான சிறப்புப் பள்ளிகள் தவிர, பார்வைத் திறன் குறைபாடு, செவித் திறன் குறைபாடு, உடல் இயக்கக் குறைபாடு உடையோருக்கான சிறப்புப் பள்ளிகளில் பொதுப் பாடத்திட்டமும் பொதுத் தேர்வு முறையுமே பின்பற்றுகின்றன. ஆகவே பள்ளிக்கல்வியில் கொண்டுவரப்படும் சீர்மிகு மாற்றங்கள் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கும் உரிய நேரத்தில் கிடைத்து, சமூகத்தில் சமத்துவமான நிலையைப் பெற மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்புப் பள்ளிகளில் மனவளர்ச்சிக் குறைபாடு உடையோருக்கான சிறப்புப் பள்ளிகள் தவிர்த்து மற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்புப் பள்ளிகளை கல்வித்துறையின் கீழ் கொண்டுவர ஆவன செய்ய வேண்டும்.

11) பிற கோரிக்கைகள்:

                  1. பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் சீருடை செலவீனங்களை மறு பரிசீலனைக்கு உட்படுத்தி தற்போதய துணி மற்றும் தையற்கூலி உள்ளிட்ட வற்றின் விலைக்கேற்ப உயர்த்தி வழங்க வேண்டும்.

                 2. கல்விச்சுற்றுலா நிதிஒதுக்கீடு தற்போது ஒன்பது, பத்து, பதினொன்று மற்றும் பனிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு  மட்டுமே வழங்கப்படுகிறது. இதை அனைத்து வகுப்பு மாணவர்களுக்கு விரிவுபடுத்த வேண்டும்.

                  3. பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாநில இயக்குநரகத்திற்கு அனுப்பப்படும் பல்வேறு வகையான கடிதங்களுக்கான தீர்வுகள் கிடைக்கப்பெறுவதில்லை.  சான்றாக பணிவரன்முறை, தகுதிகாண் பருவம், தேர்வுநிலை, சிறப்புநிலை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளுக்கான தீர்வுகள் காலம் கடந்து கிடைக்கின்றன. ஊதிய உயர்வு, ஊதிய முரன்பாடுகள், பணியிடமாறுதல், பதவி உயர்வு கோருதல், போன்ற பல்வேறு கடிதங்களுக்கு எவ்வித பதிலும் கிடைப்பதில்லை.

                 4. மாணவர்கள் , ஆசிரியர்கள், பணியாளர்கள் நலன் சார்ந்த கோரிக்கைகள் தொடர்பாக மாநில இயக்குநர் அவர்களைச் சந்திக்க வாய்ப்பளிப்பதில்லை. தற்போது வரை சிறப்புப்பள்ளிகளின் உதவி இயக்குநர் அவர்கள் ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களுக்கு எட்டாத அலுவலராகவே இருக்கின்றார். மாநில இயக்குநரகத்திற்கும் ஆசிரியர்களுக்கும் இடையே பெருத்த இடைவெளி இருக்கின்றது என்பதை உணந்து அதற்கேற்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

5. மாவட்டந்தோறும் அல்லது மண்டல அளவிலேனும் பார்வையற்ற முதியோருக்கான இல்லங்கள் உடனடியாகத் தொடங்கப்பட வேண்டும். மேலும், பூவிருந்தவல்லி பள்ளி வளாகத்தில் செயல்படும் சாந்தோம் முதியோர் இல்லம் முறையாக இயங்கிட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

Be the first to leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *