கருத்துரு: சிறுகதை

கருத்துரு: சிறுகதை

,வெளியிடப்பட்டது

ப. சரவணமணிகண்டன்

அந்தக் குளிரூட்டப்பட்ட அறையிலிருந்து ஒவ்வொருவராக வெளியேறினார்கள். இறுதியாக வெளியேறிய ராஜா தன் அறைக்குச் செல்லத் திரும்பியபோது, அவனுக்கு மேலதிகாரியிடமிருந்து அழைப்பு வந்தது. உடனே முதல் மாடியிலிருந்து கீழே இறங்கினான்.

கண்ணாடிக் கதவின் வழவழப்பான கைப்பிடியை இழுத்து உள்ளே சென்ற அவனை அவர் உட்காரும்படி சைகை செய்தார். மேல் அதிகாரி அவனைவிடவும் ஐந்து  வயது மூத்தவர். தன்னுடைய சக ஊழியர்களிடம் அன்பும் கனிவும் நம்பிக்கையும் கொண்டவர். அதனாலேயே அலுவலகப் பணிப்பளு நெருங்கிவிடாமல் அனைத்து மட்ட ஊழியர்களும் அவரைக் கவனமாகப் பார்த்துக்கொண்டார்கள்.

“சொல்லுங்க ராஜா மீட்டிங் எப்படி இருந்துச்சு?” கையிலிருந்த செல்பேசியை மேசையில் வைத்துவிட்டு ராஜாவின் முகத்தை நேருக்குநேராகப் பார்த்துக் கேட்டார் அவர். “எல்லாம் பக்காவா முடிஞ்சிருச்சு சார். நாம சொன்னதில யாருக்கும் எந்த அப்ஜெக்‌ஷனும் இல்ல. அத்தோட வளாகம் கட்டுறதில அவுங்களும் உதவுறதாச் சொல்லியிருக்காங்க” ராஜா புன்னகை செய்தான்.

“எல்லாம் சரி, ஆனா இதுல ஒரே ஒரு விஷயம்…” அதிகாரி இழுத்தார். சொல்லுங்க என்பதுபோல அவரைப் பார்த்தான் ராஜா.

நேற்று உங்க மீட்டீங்கோட அஜெண்டா, அதுல யார்யார் பார்டிசிபேண்ட்ஸ்னுலாம் பார்த்திட்டிருந்தேன். இதுல ஒரு சின்ன விஷயம் மட்டும் எனக்குக் கொஞ்சம் உறுத்தலா இருந்துச்சு.” என்று அவர் முடிப்பதற்குள், “சொல்லுங்க சார்” என்றான் அவன்.

“ மீட்டிங்ல கலந்துக்கிட்ட எல்லாருமே என்ஜிவோவா இருக்காங்களே! நாளைக்கு அஷோசியேஷன் ஆட்கள் பிரச்சனை பண்ண மாட்டாங்களா?” அவர் தயக்கத்துடன் கேட்டார். “அப்படிலாம் ஒண்ணும் ஆகாது சார். ஏதாவது பாலிசி மேக்கிங் அப்படி இப்படினாத்தான் அவுங்க கேள்வி கேட்பாங்க. நாம ஸ்கூல்தான் கட்டப்போறோம். அதுவும் ஆல் டைப்ஸ் ஆஃப் டிஃபரண்ட்லி ஏபில்ட் குழந்தைங்க ஒரே இடத்துல தங்கிப் படிக்கிற ஒரு இன்க்லுசிவ் ஸ்கூல்.

நான் கேள்விப்பட்டவரை இந்தியாவிலேயே இப்படி ஒரு ஸ்கூல் எங்கேயும் கிடையாது சார். நாமதான் ஃபஸ்ட். போனவாரம்கூட ஐயாவைச் சந்தித்து உங்க இந்த இன்க்லுசிவ் ஐடியாப் பற்றிச் சொன்னப்போ, அவர் ரொம்பவே வித்யாசமான யோசனைனு சந்தோஷப்பட்டாரு. நிதிதான் ஒரே ஒரு சிக்கல்னு தயங்கிச் சொன்னாரு.”

“பட் தேட்ஸ் ஒன்லி ஏ பிக் காம்ப்லிகேஷன். இல்லையா?” ராஜாவை நோக்கிப் புன்னகைத்தார் அதிகாரி.

“ஆமாம் சார். அதுக்குத்தான் என்ஜிவோ தயவு நமக்கு வேணும். அவுங்க கொஞ்சம் உதவி பண்ணுவாங்க. ஒரு மூனு வருஷம் நாம ஸ்கூல சக்சசா நடத்திட்டா, அப்புறம் கஷ்டமில்ல சார். தவிர அஷோசியேஷன் ஆட்களை வச்சுக்கிட்டு நாம எந்த முடிவுக்கும் வர முடியாது. அவுங்க எப்பவும் ரைட்ஸ் ரைட்ஸ்னு பேசுற ஆட்கள். இதில இருக்கிற ரியல் டிஃபிக்கல்டீஸ் அவுங்களுக்குப் புரியாது. நாம எது சொன்னாலும் அப்ஜெக்‌ஷன் சொல்லுவாங்க. இப்போதைக்கு கொஞ்சமா செலவு பண்ணித் தொடங்கிடலாம்னா அவுங்க அதை ஒத்துப்பாங்கலானு தெரியாது. ஃபஸ்ட் ஆஃப் ஆல், எல்லா டிசேபில்ட் குழந்தைங்களும் ஒரே இடத்துல படிக்கிற இந்த கான்செப்டே அவுங்களுக்குப் புதுசா இருக்கும். அதனால அவுங்க தயங்குவாங்க. அதையும் இதையும் சொல்லி அதை நிறுத்தத்தான் பார்ப்பாங்க.” மூச்சுவிடாமல் சொல்லி முடித்தான் ராஜா.

“இல்ல இல்ல நிறுத்தவெல்லாம் கூடாது. பட் அவுங்களுக்குன்னு ஒரு ஸ்கூல் கட்டுறோம். கொஞ்சம் அவுங்களோட ஐடியாஸும் இருந்தா அது லைவ் அண்ட் ரியலா இருக்கும் இல்லையா?” அதிகாரி மெல்லிய குரலில் கேட்டார். ராஜா எச்சிலை விழுங்கியபடி, “யெஸ் சார் யூ ஆர் கரெக்ட். அதனாலதான் நான் இன்ஸ்டிட்டியூஷன்ஸ் நடத்துற என்ஜிவோஸ்ல இருந்து ரெண்டு பேரைக் கூப்பிட்டிருந்தேன்.”

“அவுங்க டிசேபில்ட் பெர்சனா?” “நோ நோ. பட் தே ஆர் வெல் எக்ஸ்பீரியன்ஸ்ட், அண்ட் ஆல்சோ ஹேவ் பீன் வொர்க்கிங் ஃபார் லாங் டைம் இன் தி டிசேபில்ட் ஃபீல்ட்” மிகச் சாவகாசமாகச் சொல்லிவிட்டு அதிகாரியின் முகத்தைப் பார்த்தான் ராஜா.

அவர் முகத்தில் எவ்வித சலனமும் இல்லாததைக் கண்டு திடுக்கிட்டான். “ஓகே சார், நீங்க சொல்ற மாதிரி அஷோசியேஷன் ஆட்களையும் கூப்பிட்டுப் பேசிடுறேன். ஆனா பிரப்போசல்ஸ் இன்னக்கே அனுப்பிடலாம் சார்.” என்று குரல் தாழ்த்திச் சொன்னான்.

“இல்ல நீங்க அவுங்ககூட மீட்டிங் முடிச்சிட்டுச் சொல்லுங்க. ஏதாச்சும் வேலியேபில் பாயின்ண்ஸ் கிடைச்சா அதையும் பிரப்போசல்ஸ்ல சேர்த்துக்கலாம் இல்லையா, அதனால சொல்றேன்.” சரி என்று தலையாட்டுவதைத்தவிர ராஜாவுக்கு வேறு வழியில்லாமல் போனது.

அதிகாரியிடமிருந்து விடைபெற்று வெளியேறிய அவன், அசோஷியேஷன் ஆட்களாக யாரைக் கூப்பிடலாம் என்று யோசித்தான். அப்போது இரண்டு பேர் அவன் ஞாபகத்தில் வந்தார்கள். ஒருவர் பார்வையற்றவர், மற்றோருவர் உடல் ஊனமுற்றவர். இருவருமே சங்கம் என்ற பெயரில் லெட்டபேட் வைத்திருப்பவர்கள். அவ்வப்போது அவனுக்கு ஏதேனும் புதிய திட்டம் மூளைக்குள் உதித்தால், அதனைக் கருத்துருவாகத் தயார் செய்வான். அது கோரிக்கையாக சங்கங்களால் முன்வைக்கப்பட்டது என்பதையும் அந்தக் கருத்துருவில் குறிப்பிடுவான். அதற்கு வலுச் சேர்க்கும் வகையில், இந்த இருவரிடமும் அது தொடர்பான கோரிக்கை மனுவையும் பெற்று, அந்தக் கருத்துருவோடு இணைப்பது ராஜாவின் அலுவல்சார் உத்தி.

அவர்களுக்கும் அவனிடம் சில கோரிக்கைகள் இருந்தன. தங்களுக்கு வேண்டிய சிலரை சில பணியிடங்களில் அமர்த்துவது குறித்து அவர்கள் இருவரும் தனித்தனியே அவனிடம் அவ்வப்போது பேசிக்கொண்டுதான் இருக்கிறார்கள். பெரிதாக அவன் உறுதி எதுவும் கொடுக்கவில்லை என்றாலும், நல்ல வேளையாக முடியாது என்று அவர்களை அவன் கைகழுவிவிடவும் இல்லை என்பது அவனுக்கு இப்போது ஆசுவாசமாக இருந்தது.

எவ்வித மறுப்பும் சொல்லாமல் தான் சொல்வதை அப்படியே கேட்டுச் செயல்படும் இருவர் கிடைத்துவிட்டதில் அவனுக்கு மகிழ்ச்சி. அவர்களிடம் உடனே பேச நினைத்தான். விஷயத்தைச் சொல்லி, ஸ்கூல் பிரப்போசலுக்கு ஆதரவாக ஒரு கடிதம் வாங்்குவது என முடிவு செய்தான். தான் நினைத்தது நினைத்தபடி எளிமையாகவும் விரைவாகவும் முடிந்துவிடுவது பற்றி உள்ளூர சந்தோஷப்பட்டுக்கொண்டான்.

தன் அறையை அடைந்து மேசையில் இருந்த போனின் ரிசீவரை எடுத்தான். அப்போது தன் கையிலிருந்த செல்பேசி ஒலித்ததால் ரிசிவரை போனிலேயே வைத்துவிட்டான். அவன் மனைவியிடமிருந்துதான் அழைப்பு. ஏற்கனவே மீட்டிங்கில் இருந்தபோது இரண்டுமுறை அழைத்திருந்தாள். வெளியே வந்து பேசிக்கொள்ளலாம் என நினைத்ததால் அழைப்பை அவன் ஏற்கவில்லை. அதிகாரியோடு பேசிக்கொண்டிருந்ததில் மனைவியின் போன் கால் அவனுக்கு மறந்தே போனது.

“ரொம்ப பிஸியா?”

“ஊம் சொல்லு”

“என்னங்க! கிஷோரு…”

“கிஷோரு? என்ன ஆச்சு ?” அவள் சொல்வதற்குள்ள் அவன் லேசாகப் பதறினான். மகனுக்கு ஏதும் ஆகிவிட்டதோ என்கிற ஒரு தந்தையின் இயல்பான நொடிப் பதட்டம்.

“அவனுக்கு இந்த டிரஸ் பிடிக்கலையாம். ஒரே அழுகை. சாப்பிட மாட்றான். ரொம்ப அடம் பண்ணுறான். இந்த டிரஸ் போட்டா அவன் ஸ்கூல் ஆனுவல் ஃபங்ஷன்ல கலந்துக்கமாட்டானாம். கொஞ்சம் அதட்டு போடுங்களேன்!” அவள் சொல்லி முடிப்பதற்குள், அவனுக்கு கோபம் தலைக்கேறியது.

“நான்தான் அப்பவே சொன்னேன்ல. கடைக்கு அவனையும் கூட்டிட்டு போ. ட்ரெசெல்லாம் அவன் சாய்ஸுக்கு விட்டுடுனு. நீதான் பெரிய இது மாதிரி என் குழந்தைய பத்தி எனக்குத்தெரியாதானு ரொம்ப சீன்லாம் போட்ட. அவன்கிட்ட போன் கொடு.”எனக் கத்தினான்.

அவள் கொடுத்தாள். அவன் கெஞ்சிப் பார்த்தான். குழந்தை மசியவில்லை. அதட்டினான். அது இன்னும் வீறிட்டு அழத் தொடங்கியது. எ்வ்வளவோ சமாதானம் செய்தும் ஒன்றும் எடுபடவில்லை. அழைப்பைத் துண்டித்துவிட்டு, அரைநாள் விடுப்பு விண்ணப்பம் எழுதத் தொடங்கினான்.

பகிர

Be the first to leave a comment

உங்கள் கருத்தை உள்ளிடுங்கள்