சகித்துக்கொள்ளவும் முடியவில்லை, வெளியே சொல்லவும் தைரியம் இல்லை

சகித்துக்கொள்ளவும் முடியவில்லை, வெளியே சொல்லவும் தைரியம் இல்லை

,வெளியிடப்பட்டது

ஆயிரக்கணக்கான பள்ளிகளைக்கொண்ட தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறையில் அன்றாடம் ஏதோ ஒரு மாற்றம் நிகழ்ந்தபடியே இருக்கிறது. ஆனால், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை தனது கட்டுப்ப்ஆட்டில் இருக்கும் வெறும் 23 அரசு சிறப்புப்பள்ளிகளை மடங்களை நிர்வகிப்பதுபோல நடத்திக்கொண்டிருக்கிறது.

கூகுல் செய்திகளில் எம்மைப் பின்தொடர

மாற்றுத் திறனாளி மாணவ, மாணவியருக்கு அரசின் இலவச லேப்டாப்கள் வழங்க கோரிய வழக்கு தள்ளுபடி

மதிய உணவுக்கும் வழியில்லை மடிக்கணினிகளும் வழங்கப்படவில்லை. சீர்கேடுகள் நிறைந்த சிறப்புப் பள்ளிகளை செப்பனிட வேண்டும் மாண்புமிகு முதல்வர் அவர்கள்

பதிலி எழுத்தர் உதவியுடன் தேர்வெழுதும் பார்வையற்ற மாணவர்கள்

கடந்த மூன்று நான்கு ஆண்டுகளாகவே தமிழக அரசின் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் கட்டுப்பாட்டில் இயங்கும் அரசு மற்றும் அரசு உதவிபெறும் சிறப்புப் பள்ளிகளில் அரசின் விலையில்லா மடிக்கணினிகள் வழங்கப்படவில்லை என்பது ஊரறிந்த உண்மை. ஆனால், எவ்வித ஆதாரமும் இல்லை என அது தொடர்பான வழக்கு உயர்நீதிமன்ற நீதிபதிகளால் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது என்றால், அது வழக்கு தொடுத்தவரின் பிழையன்றி வேறென்ன?

உண்மையில் விடுபட்ட ஆண்டுகளில் பள்ளிக்கல்வித்துறையில் விலையில்லா மடிக்கணினிகள் வழங்கப்பட்டன. நம்முடைய சிறப்புப்பள்ளி மாணவர்களுக்கு நாம்தான் வழங்க வேண்டும் என மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சொல்லிவிட்டதால், பல சிறப்புப்பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கும் பள்ளிக்கல்வித்துறை வழியாக வழங்கப்பட்ட மடிக்கணினிகளை நிராகரிப்பதைத்தவிர வேறு வழியில்லாமல் போய்விட்டது.

பாதிக்கப்பட்ட மாணவர்களும் கோரிக்கை மனுவோடு ஓரிருமுறை மாற்றுத்திறனாளிகள் நல ஆணையரைச் சந்தித்து முறையிட்டும் எவ்விதப் பலனும் இல்லை. இப்போது அந்த மாணவர்கள் உயர்கல்வி படித்துக்கொண்டிருக்கிறார்கள். உற்ற காலத்தில் அவர்களுக்கு மடிக்கணினிகள் வழங்கப்படாததால், கரோனா பேரிடரின்போது கல்லூரிகளில் நடந்த இணைய வகுப்புகளில் பங்கேற்க இயலாமல் பல பார்வையற்ற மாணவர்கள் திணறிப்போனார்கள்.

மாற்றுத்திறனாளிகள் அடைய வேண்டிய மறுவாழ்வும், சமூக ஒருங்கிணைவும் அவர்கள் பெறும் தரமான கல்வியாலேயே சாத்தியம். இருந்தும் சிறப்புக்கல்வி குறித்த புரிதலோ, தனித்த பார்வையோ துறையிடம் இல்லை. ஆயிரக்கணக்கான பள்ளிகளைக்கொண்ட தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறையில் அன்றாடம் ஏதோ ஒரு மாற்றம் நிகழ்ந்தபடியே இருக்கிறது. ஆனால், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை தனது கட்டுப்ப்ஆட்டில் இருக்கும் வெறும் 23 அரசு சிறப்புப்பள்ளிகளை மடங்களை நிர்வகிப்பதுபோல நடத்திக்கொண்டிருக்கிறது.

பல அரசு சிறப்புப்பள்ளிகள் உரிய கண்காணிப்பும் ஆதரவுமின்றி, நன்கொடையாளர்களின் பாவ புண்ணியக் கணக்கு தீர்க்கும் அன்னச்சத்திரங்களாக மட்டுமே செயல்பட்டுவருகின்றன. திருச்சி மற்றும் தஞ்சைப் பார்வையற்றோருக்கான அரசுப்பள்ளிகளில் உயர்நிலை மற்றும் மேல்நிலை வகுப்புப் பாடங்களைக் கற்பிக்க உரிய பாட ஆசிரியர்கள் இன்றி, பொதுத்தேர்வை எதிர்நோக்கியிருக்கும் மாணவர்கள் திண்டாடிப்போயிருக்கிறார்கள்.

பூவிருந்தவல்லி அரசுப்பள்ளியில் பல வகுப்பறைக் கட்டடங்கள் பாழடைந்து எந்த நேரமும் இடிந்துவிழும் நிலையில்் இருக்கின்றன. பார்வையற்ற சிறுவர்களின் வகுப்பறைகளை அவ்வப்போது விஷப் பாம்புகளும், வெறி நாய்களும் வந்து விசிட் செய்துவிட்டுப் போகின்றன.

ஆசிரியர்ப் பயிற்சியும், கூடுதலாக மாற்றுத்திறனாளி மாணவர்களுக்குக் கற்பிப்பதில் ஒரு பட்டயமும் முடித்திருக்கிற சுமார் பத்துக்கும் மேற்பட்ட துணைவிடுதிக்காப்பாளர்களின் விஷயத்தில் எவ்வித முடிவும் எடுக்காமல், கடந்த பத்தாண்டுகளாக 24 மணிநேர விடுதிப்பணி என்ற பெயரில் அவர்களின் உழைப்ப்உ சக்கையாக உறிஞ்சப்படுகிறது. இதன் காரணமாக, அவர்கள் அடையும் மன அழுத்தங்கள், நேரடியாகவே விடுதியில் தங்கிப் பயிலும் குழந்தைகளின் மேல் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. மேலும், பல பள்ளிகளில் மிகவும் இன்றியமையாத ஆயா, சமையலர்ப் பணியிடங்கள் காலியாக உள்ளன. சில பள்ளிகளில் அவை தேவைக்கு அதிகமாக இருப்பதால், பணிநிரவல் செய்யுங்கள் என்கிற பல ஆண்டுக் கோரிக்கை பற்றி அதிகாரிகள் கண்டுகொள்வதே இல்லை.

மாற்றுத்திறனாளிகளுக்கான சேவை என்ற பெயரில் தொடங்கப்படும் தன்னார்வத் தொண்டுநிறுவனங்களுக்கு கண்மூடிக்கொண்டு அங்கீகாரமும் நிதிஒப்புகையிம்  வழங்கும் அதே அதிகாரிகள், ஈரோடு செவித்திறன் குறையுடைய உயர்நிலைப்பள்ளி மற்றும் தொடக்கநிலையிலேயே இருக்கும் சில பார்வையற்றோருக்கான அரசுப்பள்ளிகளைத் தரம் உயர்த்த வேண்டும் என்கிற ஒற்றைக் கோரிக்கையைக்கூட பல ஆண்டுகளாகக் கிடப்பில் போட்டுவைத்திருப்பதை எப்படிப் புரிந்துகொள்வது.

பெரும்பாலான சிறப்புப்பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர்ப் பணியிடங்கள் இருந்தும் அவை காலியாகவே இருக்கின்றன. பார்வையற்றோருக்கான அரசுப்பள்ளிகளில் அறிவியல் பயிற்றுவிக்கும் ஆசிரியர்களே பல ஆண்டுகளாக நியமிக்கப்படவில்லை என்பது உங்களுக்குத் தெரியுமா? எங்களுக்குத் தெரியும். ஆனால் யாரிடம் சொல்வது? எத்தனை முறை மனுக்கல் மேல் மனுக்கல் கொடுப்பது?

உண்மையில் கடந்த 7.5.2021 அன்று மாற்றுத்திறனாளிகள் துறையை முதல்வர் தன் பொறுப்பிலேயே வைத்துக்கொண்டார் என்ற செய்தி கேட்டு வேறு எவரையும்விட சிறப்புப்பள்ளி ஆசிரியர்களாகிய நாங்கள்தான் பெரிதும் அகம் மகிழ்ந்தோம். இனியேனும் சிறப்புப்பள்ளிகளுக்கு ஒரு விடியல் கிடைக்கும் என நம்பினோம். ஆனால், முன்பைவிட நிலைமை மேலும் மோசமடைந்தபடியே செல்கிறது. மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அதிகாரிகளின் மெத்தனம், எப்போதையும்விடப் பன்மடங்காகப் பெருகியிருக்கிறது.

தமிழக வரலாற்றிலேயே கடந்த ஓராண்டு மிகச் சிறந்த பொற்கால ஆட்சி என்பதை எங்களால் அன்றாடத்தில் உணரமுடிகிறது. ஆனால் அவையெல்லாம் நடப்பது பிற துறைகளில். சிறப்புப்பள்ளிகள் மேலும் மேலும் நசிவுப்பாதையில் போய்க்கொண்டிருக்கின்றன. இங்கு நெப்போட்டிசம், ஃபேவரைட்டிசம் தான் கோளோச்சுகிறது. போதாகுறைக்கு, அதிகார பீடங்களைக் கைப்பற்ற எப்போதும் அடிப்படை விதிகளைத் திரித்தல் நிகழ்ந்தபடியே இருக்கிறது. இப்போது அது இன்னும் உக்கிரமடைந்திருக்கிறது.

இந்த அக்கிரமங்களையெ்ல்லாம் ஒரு பார்வையற்றவனாய் சகித்துக்கொள்ளவும் முடியவில்லை, அரசு ஊழியர் என்பதால் வெளிச்சொல்லவும் துணிவு இல்லை. இனியும் பொறுப்பது அறமாகாது என்பதால் இதை எழுதுகிறேன். எப்படியேனும் முதல்வரின் பார்வைக்கு இது சென்று சேரவேண்டும்.

எங்களுக்கு நம்பிக்கையிருக்கிறது. எவருடைய தலையீடுகளோ, குறுக்கீடுகளோ இன்றி, ஒருமுறை, ஒரே ஒருமுறை இவை அனைத்தும் வெளிப்படைத் தன்மையோடு ஆட்சி நடத்தும் முதல்வர் அவர்களின் நேரடி கவனத்திற்குச் சென்றுவிட்டால், நிலைமை தலைகீழாய் மாறும். துறை அதிகாரிகளின் முறைகேடுகளும், மெத்தனமும் களையப்பட்டு, சீரழிவிலிருந்து சிறப்புப்பள்ளிகள் புதுப்பொழிவு பெறும்.

இது சிறப்புக்கல்வியின் முக்கியத்துவத்தை உணர்ந்த ஒரு பார்வ்ஐயற்றவனின் இறைஞ்சலும், இறுதி நம்பிக்கையும்.

*ப. சரவணமணிகண்டன்

பகிர

Be the first to leave a comment

உங்கள் கருத்தை உள்ளிடுங்கள்