நூல்வெளி: காலத்தினாற் செய்த முயற்சி

நூல்வெளி: காலத்தினாற் செய்த முயற்சி

,வெளியிடப்பட்டது

1. பபாசி புத்தகக் கண்காட்சியில் மாற்றுத்திறனாளிகள் நூல்களை வைக்க தனி அரங்கு அல்லது தனிக்கவனம் பெறும் வண்ணம் ஒரு விண்டோவை எற்பாடு செய்ய வேண்டும்.
2. தமிழக அரசின் நூலக ஆணைக்குழு மாற்றுத் திறனாளிகளின் நூலுக்கு சிறப்புரிமை அடிப்படையில் நூலகங்களுக்கு நூல்கள் வாங்கி தமிழக நூலகங்களில் வைக்க வேண்டும்.
3. தமிழக அரசு வருடந்தோறும் சிறப்புரிமை அடிப்படையில் மாற்றுத்திறனாளி எழுத்தாளருக்கு சிறப்பு விருது ஒன்றை அறிவிக்க வேண்டும்.
4. தமிழ்நாடு பல்கலைக்கழகப் பாடத்திட்ட குழுக்கள், சாதரண மாணவர்களுக்கு ஒரு நம்பிக்கையை உருவாக்கும் வகையில் மாற்றுத் திறனாளி எழுத்தாளர்களின் நூல்களை பாடத்திட்டங்களில் வைக்க வேண்டும்.
5. ஒவ்வொரு பதிப்பாளரும் வருடத்திற்கு குறைந்தபட்சம் ஒரு மாற்றுத்திறனாளி எழுத்தாளரின் நூலைப் பதிப்பித்து வெளியிட வேண்டும்.

கூகுல் செய்திகளில் எம்மைப் பின்தொடர

கடந்த காலங்களில் நடைபெற்ற புத்தகக் கண்காட்சி போலல்லாமல், 2022 ஆம் ஆண்டு நடைபெற்ற 45ஆவது சென்னைப் புத்தகக் கண்காட்சியில் பார்வையற்ற அமைப்புகள் எதுவும் அரங்கு அமைக்கவில்லை. எனவே, பிரெயில் புத்தகங்கள் எதுவும் இந்த ஆண்டு புத்தகத் திருவிழாவில் இடம்பெறவில்லை. அந்த மனக்குறைக்கு சிறிதேனும் ஒத்தடம் தடவும் வகையிலும், எதிர்காலத்தில் பதிப்பாளர்கள், எழுத்தாளர்கள் மற்றும் பார்வையற்ற எழுத்தாளர்களிடையே நல்லுறவையும், புரிந்துணர்வையும் ஏற்படுத்தும் முயற்சியாக அமைந்தது கர்ணவித்யா ஏற்பாடு செய்திருந்த மார்ச் 2 நூல்வெளி அரங்கு.

காலச்சுவடு கண்ணன் தவிர, அழைக்கப்பட்டிருந்தவர்களில் பிற சிறப்பழைப்பாளர்கள் அனைவருமே பங்கேற்று நிகழ்வைச்சிறப்பித்தனர். அவர்களுக்கும் பொதுமக்களுக்கும் பார்வையற்றோரின் படைப்புலகம் குறித்த புரிதலை ஏற்படுத்தும் பொருட்டு, பார்வையற்றோரின் படைப்புகள் அரங்கில் காட்சிப்படுத்தப்பட்டிருந்தமை நிகழ்விற்குக் கூடுதல் சிறப்பு சேர்த்த அம்சம்.

பேராசிரியரும், கர்ணவித்யா அறக்கட்டளையின் மதிப்புறு செயலருமான திரு. ரகுராமன் அவர்கள் நிகழ்ச்சி குறித்த அறிமுக உரையாற்ற, அனைவரையும் வரவேற்றுப் பேசினார் பொறுப்பாளர் திரு. சின்னக்கருப்பசாமி அவர்கள். வந்திருந்த சிறப்பழைப்பாளர்களை உரையாற்றும்படி அழைத்ததோடு, பார்வையாளர்கள் அறிந்துகொள்ளும் வகையில் அவர்கள் குறித்த சுருக்கமான அறிமுக உரையை அவ்வப்போது நிகழ்த்திக்கொண்டிருந்தார் பேராசிரியர் ரமேஷ்.

ஐந்து அதிமுக்கிய கோரிக்கைகள்:

முதலில் சிறப்புரை ஆற்றிய எழுத்தாளரும் கோட்பாட்டு ஆய்வாளருமான திரு. ஜமாலன் அவர்களின் உரை, நிகழ்ச்சியின் நோக்கத்திற்குக் கிடைத்த பாதி வெற்றி என்றே சொல்ல வேண்டும். ஐந்து புலன்கள் மட்டுமல்ல, மொழி ஆறாவது புலம் என்பதால் பார்வையற்றவர்கள் சிறந்த படைப்பாளர்களாகத் திகழ்கிறார்கள் எனப் பாராட்டிய ஜமாலன் அவர்கள், பப்பாசிக்கும் அரசுக்கும் தனது ஐந்தம்சக் கோரிக்கைகளை முன்வைத்தார்்.

1. பபாசி புத்தகக் கண்காட்சியில் மாற்றுத்திறனாளிகள் நூல்களை வைக்க தனி அரங்கு அல்லது தனிக்கவனம் பெறும் வண்ணம் ஒரு விண்டோவை எற்பாடு செய்ய வேண்டும்.

2.  தமிழக அரசின் நூலக ஆணைக்குழு மாற்றுத் திறனாளிகளின் நூலுக்கு சிறப்புரிமை அடிப்படையில் நூலகங்களுக்கு நூல்கள் வாங்கி தமிழக நூலகங்களில் வைக்க வேண்டும்.

3.  தமிழக அரசு வருடந்தோறும் சிறப்புரிமை அடிப்படையில் மாற்றுத்திறனாளி எழுத்தாளருக்கு சிறப்பு விருது ஒன்றை அறிவிக்க வேண்டும்.

4.  தமிழ்நாடு பல்கலைக்கழகப் பாடத்திட்ட குழுக்கள், சாதரண மாணவர்களுக்கு ஒரு நம்பிக்கையை உருவாக்கும் வகையில் மாற்றுத் திறனாளி எழுத்தாளர்களின் நூல்களை பாடத்திட்டங்களில் வைக்க வேண்டும்.

5.  ஒவ்வொரு பதிப்பாளரும் வருடத்திற்கு குறைந்தபட்சம் ஒரு மாற்றுத்திறனாளி எழுத்தாளரின் நூலைப் பதிப்பித்து வெளியிட வேண்டும்.

இத்துடன் அவர்களுக்கு சிறப்பு ஆய்வுத்திட்ட நல்கைகள் மற்றும் அவர்கள் வாசிப்பதற்கான மின்னூலாக்கங்கள் ஆகியவை செய்யப்பட வேண்டும்.  ஏற்கனவே இத்திட்டங்கள் நடைமுறையில் இருந்தால் நலம்.  இல்லாவிட்டால் இவற்றை இன்றைய அரசும் உரியவர்களும் நடைமுறைப்படுத்த வேண்டும்.  அத்துடன் ஒவ்வொரு அரசு நூலகத்திலும்,  பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான ஒலிப்பேழையில் நூல்களை கேட்பதற்கான டிஜிட்டல் தொழில் நுட்பத்தில் தனி மேசைகள் அல்லது அறைகள் உருவாக்கப்பட வேண்டும்.   மாற்றுத் திறனாளிகள் என்பவர்கள், ஐம்புலன்களில் இழந்த புலனின் ஆற்றலை மற்றப் புலன்கள் வழிப் பெறும் நுண்ணாற்றல்  கொண்டவர்கள்.  அந்த ஆற்றலை வளர்த்து, மேம்படுத்தி பொதுச்சமூகம் பயன்படுத்திக் கொள்வது அவசியம். 

அவர் மேடையில் முன்மொழிந்த ஐந்து கோரிக்கைகளையும் ஆவணமாக்கி, அரசை நிர்பந்திக்கும் கடமை பார்வையற்றோரின் உரிமைகளுக்காய் போராடும் சங்கங்கள் மற்றும் அமைப்புகளின் கையிலேயே இருக்கிறது.

திரு. ஜமாலன் அவர்களைத் தொடர்ந்து மேடையேறிய நந்தனம் அரசுக் கலைக்கல்லூரியின் முதல்வர் திரு. ஜெயச்சந்திரன், தமிழில் முனைவர் பட்டம் பெற்ற முதல் பார்வையற்றவர் என்ற பெருமைக்குச் சொந்தக்காரர். உரத்த குரலில் 30 நிமிடங்களையும் கடந்து அவர் ஆற்றிய உரையின் பெரும்பகுதி தன்னைப் பற்றிய, தான் கடந்து வந்த பாதை பற்றிய நினைவுக் குறிப்புகளாக அமைந்ததில் அன்னார் மகிழ்ந்தார், அரங்கத்தார் நெலிந்தனர் என்பதே உண்மை.

கணினிக்கண், ஒலிபெறும் விழிகள், வள்ளலார் ஒருவரே வள்ளல், சிந்தனை விழுதுகள்  என பத்து புத்தகங்களை எழுதியிருக்கும் மரியாதைக்குரிய திரு. ஜெயச்சந்திரன் அவர்கள் பிறரின் நேரத்தையும் தான் எடுத்துக்கொள்வது குறித்து கொஞ்சம் சிந்தித்திருக்கலாம். தவிர நிகழ்வின் பொருண்மைக்குச் சற்றும் பொருத்தமில்லாதவகையில், தான் பணியாற்றும் கல்லூரியின் வளர்ச்சிப் பணிகள் குறித்து விளக்கியதெல்லாம் “ஷப்ப்ப்ப்பா முடியல” ரகம். “என்னய்யா ஆண்டறிக்கை வாசிக்கிறார்” என்ற கமெண்ட்களையும் பார்வையாளர்ப் பக்கங்களில் கேட்க முடிந்தது.

தன்னுடைய உரைகள், சிந்தனைகளைத் தொகுக்க cetdrj.com என்ற இணையதளத்தை உருவாக்கிச் செயல்படுத்தி வருவதாகவும் சொன்னார் திரு. ஜெயச்சந்திரன்.

சேர்ந்து பணியாற்ற வாய்ப்பு தாருங்கள்:

“அடுத்த ஆண்டுமுதல் என்னுடைய உயிரெழுத்து பதிப்பகத்தின் மூலம் மாற்றுத்திறனாளிகளின் படைப்புகளையும் வெளிக்கொண்டுவர விரும்புகிறேன். உங்களோடுசேர்ந்து பணியாற்ற எனக்கொரு வாய்ப்பு தாருங்கள்.” என உயிரெழுத்து பதிப்பகத்தின் உரிமையாளரும் எழுத்தாளருமான நிகழ் ஐக்கன் கேட்டதில் நெகிழ்ந்தது அரங்கு.

அடுத்த புத்தக விழாவிலிருந்து உயிரெழுத்து அரங்கில் மாற்றுத்திறனுடையோர் படைப்புகளுக்காக ஒரு ஷெல்ஃப் ஒதுக்கப்படும் என்று உறுதியளித்த அவர், தன் பதிப்பகப் புத்தகங்களை மாற்றுத்திறனாளிகள் பத்து விழுக்காடு சலுகைக் கட்டண விலையில் வாங்கிக்கொள்ளலாம் எனச் சொன்னதோடு, ஜமாலன் கூறிய ஐந்தம்சக் கோரிக்கைகளோடு தான் முழுவதும் உடன்படுவதாகப் பேசி முடித்தார்.

சைதையிலிருந்து சைக்கில் பயணம்:

பாடப்புத்தகங்களையே வாசித்துக் காட்ட வாசிப்பாளர்கள் கிடைக்காத அந்த காலத்தில், நம்மவர்கள் முனைவர் பட்டம் வரை முன்னேறியிருக்கிறார்கள். அத்தகைய சாதனைகளின் தொடக்கப்புள்ளியாக அமைந்த Readers Association for the Blind அமைப்பு உருவானது பற்றிப் பேசினார் ஓய்வுபெற்ற பேராசிரியர் திரு. உத்திராபதி அவர்கள். பத்மா ராமசாமி, ஐயா SS. கண்ணன் மற்றும் அவரின் துணைவியார் மைதில்இ கண்ணன் ஆகிய மூவரும்தான் பார்வையற்றோரின் கல்வி தெய்வங்கள் என்று நெகிழ்ந்தார்.

தன்னுடைய ஆய்வு நிறைஞர் படிப்பின்போது, நந்தன் குறித்த ஆய்வுக்காகத் தன்னை சைதாப்பேட்டையிலிருந்து சைக்கிலில் வைத்துக்கொண்டு எழும்பூர் கன்னிமரா நூலகத்துக்கு ஐயா SS. கண்ணன் தினமும் அழைத்த்உவந்தது குறித்து அவர் சொன்னபோது, அத்தகைய மூத்த தெய்வங்களின் காலத்தில் நாமும் வாழவில்லையே என்ற ஏக்கம் மனதை நிறைத்தது.

கவிஞர் மனுஷ்ய புத்திரன் மற்றும் எழுத்தாளர் அபிலாஷ் படைப்புகள் குறித்துப் பேராசிரியர் திரு. குமார் அவர்கள் பேசத் தொடங்கியபோது மேடையில் சிறு சலசலப்பு. தன் பெயரைக் கடந்து இன்னொருவர் அழைக்கப்பட்டார் என்ற ஓய்வுபெற்ற முதுநிலை ஆசிரியர் ்ஐயா அற்புதம் அவர்களின் அங்கலாய்ப்பு ஏற்கப்பட்டது. ஓரிரு நிமிடங்களில் தன் உரையை முடித்துக்கொண்ட மூத்தவரின் குரலில் குறையாமலே இருந்தது கடுமை.

இந்த நிகழ்ச்சிக்காகவே பெரம்பலூரின் ஒரு கிராமத்திலிருந்து வந்திருந்த மூத்த ஆசிரியர் அற்புதம் அவர்கள், ‘தனித்துவம் பேணிடாத் தமிழர், காதல் மெய்ப்பட, நெஞ்சில் நிறைந்தவை’ ஆகிய மூன்று புத்தகங்களை எழுதியிருக்கிறார்.

கைபேசியல்ல கண் பேசி:

எந்த ஒரு விலகளுக்கும் (diversion) ஆளாகாமல் படைப்புத் துறையில் பார்வையற்றோரால்தான் முழுமையாக ஈடுபட முடியும் என உலக எழுத்தாளர் போர்கேவின் வார்த்தைகளை எடுத்துக்கூறி நம்பிக்கை ஊட்டினார் நாடகவியலாளர் வெளி ரங்கராஜன் அவர்கள். அத்தோடு, தான் ஒரு பார்வையற்றவர் என்பதை வெளிப்படுத்தாத வகையில், தன்னுடைய நாடகம் ஒன்றில் பாத்திரமேற்று நடித்த பேராசிரியர் ரமேஷை அவர் வெகுவாகப் பாராட்டினார்.

தான் எழுதிய புத்தகம் ஒன்றின் அச்சுப் பிரதியைப் பார்வையற்றவர்களுக்காக பிரெயிலில் பதிப்பிக்க தான் ஆர்வம் கொண்டிருந்தபோது, அதை மின்புத்தகமாகவே வழங்கலாம் என்று பார்வையற்ற ஒருவர் தந்த ஆலோசனையை மேடையில் நினைவுகூர்ந்த எழுத்தாளர் மற்றும் கலை விமர்சகர் திரு. இந்திரன் அவர்கள், பார்வையற்றோருக்குக் கைபேசி என்பது வெறும் கைபேசி மட்டுமல்ல, அது கண் பேசி” என வியந்தார்.

வந்திருந்த பார்வையாளர்களின் பெயரை ஒவ்வொருவரிடமும் சென்று கேட்டுப் பதிவு செய்வது, காரம், காப்பி என உரிய புரிதலுடன் பார்வையற்ற பார்வையாளர்களிடம் கொண்டு சேர்த்தது என எத்திராஜ் கல்லூரி மாணவிகளின் தன்னார்வ உழைப்பு பாராட்டுக்குரியது. நிகழ்ச்சி தொடங்குவதில் ஏற்பட்ட கால தாமதம், அதன் நோக்கத்தைச் செயல்படுத்துவதில் பெரும் இடையூறாக அமைந்ததை உணர முடிந்தது. தவிர, நிகழ்வில் திடீரெனப் பங்கேற்ற நந்தனம் அரசு கலைக்கல்லூரியின் முதல்வர் திரு. ஜெயச்சந்திரன் அவர்களின் பேருரை, ஏனைய பேச்சாளர்களின் நேரத்தையும் சேர்த்து விழுங்கிவிட்டது. இதனால், சிறப்பழைப்பாளர்களிடம் பார்வையற்றோரின் படைப்புலகம் குறித்த புரிதலை ஏற்படுத்தும் நோக்கத்தில் திட்டமிடப்பட்டிருந்த பேராசிரியர் திரு. சிவராமன் மற்றும் முனைவர். மகேந்திரன் அவர்களின் உரைகள் இடம்பெறாமல் போனது பார்வையாளர்களிடம் மிகப்பெரிய ஏமாற்றத்தைத் தந்தது.

மேலும், “பார்வையற்றோரால் தொடங்கப்பட்ட அந்தகக்கவிப் பேரவை, விரல்மொழியர் மின்னிதழ், சவால்முரசு மின்னிதழ் ஆகிய முயற்சிகளைச் சிறப்பிக்கும் வகையில் அவர்களுக்கு அணிசெய்யப்படும்” என அழைப்பிதழில் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் நேரமின்மை என்ற காரணத்தால், அவசர அவசரமாக ஒவ்வொன்றுக்கும் தலா ஒருவரி அறிமுகம் தந்து, மேடைக்கு அழைத்து பென்ட்ரைவ் வழங்கப்பட்டது.

வந்திருந்த சிறப்பழைப்பாளர்களிடம் உரையாடவும் வாய்ப்பில்லாமல், வரிசையில் நின்று பென்ட்ரைவ் வாங்கிய அந்த நொடி, ஏதோ ஒரு நன்கொடையாளர் கூட்டத்தில் நலத்திட்ட உதவிகள் பெறுவதுபோன்ற  தாழ்வுணர்ச்சியை உள்ளத்தில் ஏற்படுத்தியது  என்பதை மறைப்பதற்கில்லை.

எதிர்பாராத தடைகள், நடுநடுவே ஏற்பட்ட சில நெருக்கடிகள் எனக் குறைகளுக்குப் பல காரணங்கள் இருந்தாலும், காலத்தால் செய்யப்பட வேண்டிய முக்கிய முயற்சி என்ற வகையில், கர்ணவித்யா அமைப்பிற்கு சவால்முரசு தனது நன்றிகளையும் பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறது. மேலும், எதிர்வரும் ஆண்டுகளில், பார்வையற்றோரின் படைப்புகளை ஓர் அரங்கில் தொகுத்து விற்பனை செய்ய, பார்வயற்ற படைப்பாளர்கள் ஒரு குடையின் கீழ் திரள்வது அவசியம் என்பதையும் சவால்முரசு வலியுறுத்த விரும்புகிறது.

***தொகுப்பு: ப. சரவணமணிகண்டன்

பின் இணைப்பு:

திரு. ஜமாலன் அவர்களின் முகநூல் பதிவு

பகிர

Be the first to leave a comment

உங்கள் கருத்தை உள்ளிடுங்கள்