இருட்டை விரட்டும் அரட்டை (4) மகளிர்தின சிறப்புத்தொடர்

இருட்டை விரட்டும் அரட்டை (4) மகளிர்தின சிறப்புத்தொடர்

,வெளியிடப்பட்டது

எத்தனைபேர் உங்களுக்காக வாதாடத் தயாராக இருந்தாலும், நீங்கள் உங்களுக்காகப் பேச முனைப்புகொண்டிருக்கிறீர்களா (self-advocacy) என்பது முக்கியம்

கூகுல் செய்திகளில் எம்மைப் பின்தொடர

முந்தைய பகுதிகளைப் படிக்க

உரையாடலில் பங்கேற்ற ஐந்து பெண்களின் புகைப்படங்கள்

சித்ரா: அடுத்ததாக பார்வையற்ற பெண்களின் பொருளாதாரச் சுதந்திரம் (economic independence) பற்றிப் பேசலாம் என நினைக்கிறேன்.

முத்துச்செல்வி: எங்கள் குடும்பத்தைப் பொருத்தவரை, நாங்கள் மூன்று பேருமே பார்வையற்றவர்கள் என்பதால், எங்களுக்கு அந்தச் சிக்கல் எழவில்லை. பெற்றோர் அதிகமாகப் படிக்கவில்லை என்றாலும் மிகக் கடினமான சூழலிலும்கூட நாங்கள் என்ன விரும்பினோமோ அதைப் படிக்கவைத்தார்கள். ஆனால், பொதுவாகப் பார்வையற்ற பெண்களின் பொருளாதாரச் சுதந்திரம் என்பது மிக மோசமான நிலையில்தான் இருக்கிறது. அதனால்தான் பல பார்வையற்ற பெண்கள் ஏடிஎம் மெஷின்களாக இருக்கிறார்கள் எனக் கிண்டலாகச் சொல்வதுண்டு.

நிறைய படித்து நல்ல பணியில் இருக்கிற பார்வையற்ற பெண்களின் நிலையும் அப்படித்தான் இருக்கிறது. அதற்குக் காரணம், தொடக்கத்திலேயே அவர்கள் தங்கள் பிடியை விட்டுவிடுகிறார்கள். முதலில் அவர்கள் ஏடிஎம் பயன்பாட்டைக் கைவிட வேண்டும். அதற்குத்தான் நமக்குப் பிறரின் உதவி தேவைப்படுகிறது. ஏடிஎம் கொடுத்துப் பழகுவதால், அதன்மூலம் நம்மை அவர்கள் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்கிறார்கள். பார்வையற்ற பெண்கள் கூகுல் பே, நெட் பேங்கிங் போன்ற டிஜிட்டல் பரிவர்த்தனைகளைப் பழகிக்கொள்ள வேண்டும்.

இந்த இடத்தில் ஒரு சம்பவம் எனக்கு நினைவுக்கு வருகிறது. படித்து நல்ல பணியில் இருக்கிற ஒரு பார்வையற்ற பெண். அவருக்குத் திருமணம் செய்து வைக்காமல், வீட்டுக்காவலில் வைத்ததுபோல பெற்றோர் அவரை நடத்தியிருக்கிறார்கள். பெற்றோரின் அரவணைப்பிலேயே இருந்தவர், திடீரென ஒரு பார்வையற்றவரைத் திருமணம் செய்துவிட்டார். ஒருநாள் விடியற்காலம் ஐந்து மணிக்கு என் எண்ணுக்கு அந்தப் பெண்ணின் அம்மா போன் செய்தார்.

 “என் பொண்ணு கல்யாணம் பண்ணிட்டுப் போய்ட்டாமா?” என அழுதார்.

நான் “சந்தோஷமான விஷயம்தானே, இதுக்கு ஏன் வருத்தப்படுறீங்க?” எனக் கேட்டேன். அதற்கு அந்த அம்மா “அப்போ நாங்க சாப்பாட்டுக்கு என்ன பண்ணுறது?” என்றார்.

நான் “உங்களுக்கு எத்தனை பொண்ணுங்க?” என்றேன்.

“மூனு பொண்ணுங்க” என்றார் அவர். “மற்ற ரெண்டு பொண்ணுங்க கிட்டேயும் இப்படிக் கேட்பீங்களா?”என்றதும், அவர் என்னிடம் சத்தம் போட்டுவிட்டு அழைப்பைத் துண்டித்துவிட்டார்.

பார்வயற்ற பெண்கள் என்றாலே, அவர்களுக்குத் திருமணம் ஆகக்கூடாது, குடும்பத்தை அவர்கள்தான் காப்பாற்ற வேண்டும் என பெரும்பாலான பெற்றோர் நினைக்கிறார்கள். நிறைய பார்வையற்ற பெண்கள் தங்கள் குடும்பத்திற்கான வருவாய் ஈட்டிகளாகவே தாங்கள் கருதப்படுவதாகத்தான் சொல்கிறார்கள். தொடக்கத்திலிருந்தே தங்கள் ஊதியத்தைப் பெற்றோரிடம் கொடுத்துவிட்டு, ஆடை வாங்குவதற்கும், மொபைல் வாங்குவதற்கும் ஏதோ பெற்றோர்தான் சம்பாதிப்பதுபோல அவர்களைக் கெஞ்சிக்கொண்டிருக்கிறார்கள்.

அதனால்தான் சொல்கிறேன், பார்வையற்ற பெண்கள் டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்கு பழக வேண்டும்.

சித்ரா: அதாவது பெற்றோருக்காகட்டும், திருமணத்திற்குப் பிறகு கணவனுக்காகட்டும் பெண்கள் ஒரு உயிருள்ள ஜடப்பொருளாகத்தான் இருக்கிறோம் என நினைக்கிறேன்.

முத்துச்செல்வி: நிறைய பேர் சொல்லக் கேட்டிருக்கிறேன். காப்பகங்களில் தங்கியிருக்கும் வயது வந்த பார்வையற்ற பெண்கள் தையல் போன்ற சில வேலைகளைச் செய்து  ஒரு சிறிய தொகையை மாதாந்திர உதவித்தொகையாகப் பெறுவார்கள். சரியாக மாதத் தொடக்கத்தில் அவர்களின் பெற்றோரோ உறவினரோ வந்து அந்தப் பணத்தை வாங்கிக்கொண்டு சென்றுவிடுவார்களாம். பணத்தை மட்டுமல்ல, விடுதியில் அவர்களுக்கு இலவசமாகக் கிடைக்கும் பொருட்களையும் வாங்கிக்கொண்டு போவார்களாம். அதாவது, பார்வையற்ற பெண்கள் என்றாலே, அவர்களுக்கு என்ன செலவிருக்கப் போகிறது, பணமெல்லாம் அவர்களுக்குத் தேவையில்லை என்ற மனப்பான்மையை நிறையப் பார்க்க முடிகிறது.  அவர்களுக்கு எல்லாமே இலவசமாகக் கிடைத்துவிட வேண்டும். தாங்களும் செலவழிக்கக்கூடாது, அவர்களும் தங்கள் சொந்தப் பணத்தைச் செலவழிக்காதபடி அதையும் வாங்கிக்கொள்ள வேண்டும் என்றுதான் பெரும்பாலான பெற்றோர்கள் நினைக்கிறார்கள்.

செலின்மேரி: எங்கெல்லாம் கல்வி உதவித்தொகைகள் கிடைக்கின்றன என்ற விவரங்களையெல்லாம் நன்றாக அறிந்துவைத்திருக்கிற படித்த பெண் பிள்ளைகள்கூட, அதைத் தங்கள் தேவைகளுக்காக வைத்துக்கொள்ளாமல், மொத்தமாகத் தூக்கிக் குடும்பத்தினரிடம் கொடுத்துவிடுவதைப் பார்க்கிறேன். கிடைத்த மறுகணமே, அப்படியே பெற்றோர் கணக்குக்கு மாற்றிவிடுவார்கள்.

திருமணமான பார்வையற்ற பெண்கள் எல்லாவற்றையும் கணவனிடம் ஒப்படைத்துவிடுகிறார்கள். நமக்கென்று செலவிருக்கும் என்றோ, பணி ஓய்வுக்குப்பின் மாதாந்திர ஓய்வூதியம் இல்லாதபோது நாம் என்ன செய்வது என்பது பற்றியெல்லாம் அவர்கள் சிந்திப்பதே இல்லை.

“நீயே வச்சுக்கோ, எதையும் என்கிட்ட கொடுக்காதே, நீயே மொத்த நிர்வாகத்தையும் பார்த்துக்கோனு சொல்லிட்டேன் மேடம், ஆனா அவ கேட்க மாட்டேங்கிறா” என ஒரு நண்பர் என்னிடம் சொன்னார். இப்படியும் சிலர் இருக்கிறார்கள். கணவர் நமக்காக எதையும் செய்வார், என்ற மனநிலையில் அப்படியே கணவனிடம் தங்கள் நிதி நிர்வாகத்தை ஒப்படைத்துவிடும் பல பார்வையற்ற பெண்களை நான் அறிவேன்.

சுதந்திரம் இருந்தால் மட்டும் போதாது. அதை எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்பது தெரிய வேண்டாமா? சம்பாதிக்கும் பல பார்வையற்ற பெண்களுக்கு தாங்கள் எவ்வளவு சம்பளம் வாங்குகிறோம், எதற்கெல்லாம் படிகள் (allowances) கொடுக்கப்படுகின்றன, அவை எவ்வளவு என்ற விவரமெல்லாம் தெரியாது என்பதுதான் உண்மை.

முத்துச்செல்வி: செலின் சொல்வதைப்போல சம்பாதிக்கும் பார்வையற்ற பெண்களுக்கு நிதி தொடர்பான இரகசியம் பேணு்ம் உரிமை (financial privacy) நிச்சயம் தேவை. நான் எவ்வளவு சம்பளம் வாங்குகிறேன் என்பது என் பெற்றோருக்குக்கூட தெரிய வேண்டியதில்லை.

சியாமலா: பொருளாதாரச் சுதந்திரம் என்று பார்த்தால், பார்வையற்ற பெண்கள் படிக்கும் வரை வீட்டிற்கு வருவதைப் பெரிதும் எதிர்பார்க்காத பெற்றோர், வேலை கிடைத்துவிட்டால், அந்தப் பெண் வீட்டிலிருந்துதான் போக வேண்டும், அல்லது அவளின் பணியிடத்திற்கு அருகிலேயே வாடகைக்கு வீடு பிடித்து உடன்போய் இருக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள்.

வாங்கிய சம்பளத்தை மொத்தமாகக் கொடுத்துவிடும் பெண்களும் இருக்கிறார்கள். எனக்கெல்லாம் சிவராமன், விஜேக்குமார் போன்ற மூத்தவர்களின் வழிகாட்டல் இருந்தது. அவர்கள்தான் “முழுச் சம்பளத்தையும் கொடுத்துவிடாதீர்கள்” என்று நிறைய ஆலோசனைகள் சொன்னார்கள். அப்படி நாம் பகுதியளவில் கொடுக்கத் தொடங்கிவிட்டால், அதற்கான பெற்றோரின் எதிர்வினை என்பது வேறு மாதிரி இருக்கும். அதைவைத்தே கடைசிவரை பிரச்சனை செய்துகொண்டே இருப்பார்கள்.

முத்துச்செல்வி அக்கா சொன்னதுபோல, தொழில்நுட்ப அறிவு நமக்கு அவசியம். மேலும், நாமும் சில பொறுப்புகளைக் கையாள வேண்டும். “மின் கட்டணமா, நான் பார்த்துக்கொள்கிறேன், இதை இதை நான் பார்த்துக்கொள்கிறேன், அதையெல்லாம் நீங்கள் பார்த்துக்கொள்ளுங்கள்” என நாம் கொடுக்கும் பணம் எதற்கு செலவிடப்படுகிறது என்பதை அறிந்துகொள்ளவும் நாம் சில பொறுப்புகளைக் கையிலெடுப்பது அவசியம்.

சித்ரா: வீட்டுவேலை, வெளியே போதல் போன்ற அன்றாட வாழ்க்கைத்திறன்களாகட்டும், தொழில்நுட்பமாகட்டும் எல்லாவற்றையும் திறம்படக் கையாளத் தெரிந்த சியாமலா போன்ற பெண்களுக்கே இதுதான் நிலையென்றால்…

சியாமலா: அக்கா! அவர்கள் என்ன சொன்னார்கள் தெரியுமா? “ஆரம்பத்திலிருந்தே நீ முழுச் சம்பளத்தையும் எங்ககிட்ட கொடுத்திருந்தா இப்போ உன் கல்யாணத்துக்கு ஆகுற எல்லாச் செலவையும் நாங்களே பார்த்திருந்திருப்போம். நீ கொடுக்கல, எங்ககிட்டேயும் இப்போ ஒன்னும் இல்ல, அதனால நீதான் சமாலிச்சுக்கணும்”.

சித்ரா: அதைத்தான் சொல்கிறேன். இவ்வளவு திறமையான உங்களுக்கே இதுதான் நிலையென்றால், வீட்டு வேலை தெரியாத, போவது வருவது என அனைத்திற்கும் பிறரையே சார்ந்திருக்கிற பார்வையற்ற பெண்கள் நிலைமை எல்லாம் மிகக் கடினமானதுதான். பொருளாதார சுதந்திரம் பற்றியெல்லாம் அவர்கள் சிந்திக்கக்கூட வாய்ப்பே இல்லை.

சியாமலா: இன்னும்கூட உடைத்துச் சொல்வதென்றால், எங்கள் வீட்டில் அவர்களின் எதிர்பார்ப்புக்கு மாறாக, அடுத்தடுத்து நாங்கள் மூன்று பெண் குழந்தைகள் பிறந்தோம். கடைசியாகத் தம்பி பிறந்தான்.

மூன்று பெண்களில் நான்தான் விவரம் தெரிகிற பருவத்தில் அதிகமாக வீட்டிலேயே இருந்தேன். அப்போது பாலின பாகுபாட்டை நிறைய எதிர்கொண்டிருக்கிறேன்.

உதாரணமாக, பாத்திரத்தில் வெந்த இட்லிகளை எடுக்கையில், “அடித்தட்டில இருக்கிறதை உனக்கு வச்சுக்கோ, அவனுக்கு மேல்தட்டு இட்லியை வை” என அம்மா சொல்வார். சரி அவன்தான் அப்படிக் கேட்கிறான் என நானும் பல நாட்கள்  நினைத்திருந்தேன். பிறகுதான் தெரிந்தது இது அம்மாவின் எண்ணம் என்று.

அப்படித்தான், தண்ணீர் பற்றாக்குறை இருந்த நாட்களில் குழாயில் தண்ணீர் பிடிக்க அதிகாலை நான்கு மணிக்கு அம்மா என்னைத்தான் எழுப்புவார். “அவன் வண்டி ஓட்டிட்டு வேலைக்குப் போறான், நீ உட்கார்ந்துதானே வேலை செஞ்சுட்டு வாற” என  அதற்கு விளக்கமும் சொல்வார். எங்கள் வீட்டில், நான் ஒரு பார்வையற்ற பெண்என்பதைவிட, பெண் பிள்ளை என்பதால்தான் அதிகம் பாகுபாட்டை எதிர்கொண்டிருக்கிறேன்.

முத்துச்செல்வி: சியாமலா சொன்னதிலிருந்து ஒரு விஷயத்தை நான் சொல்ல விரும்புகிறேன். தனக்கு சில பார்வையற்ற மூத்தவர்களின் வழிகாட்டல்கள் இருந்தன என சியாமலா சொன்னார். எனக்கும்கூட சில மூத்தவர்கள், நண்பர்கள் சில விஷயங்களில் வழிகாட்டியிருக்கிறார்கள், எடுத்துச் சொல்லியிருக்கிறார்கள். என்னதான் பிறர் வழிகாட்டினாலும், பார்வையற்ற பெண்களாகிய நாமும் கொஞ்சம் சிந்திக்க வேண்டும்.

இத்தனைக்குப் பிறகும் சியாமலா எல்லாவற்றையும் கடந்து, தன்னுடைய தெரிவின்படியே வாழ்க்கையை அமைத்திருக்கிறார் என்றால், அவரின் முயற்சிதான் இதைச் சாத்தியமாக்கியிருக்கிறது.

ஒன்றை மட்டும் பார்வையற்ற பெண்கள் புரிந்துகொள்ள வேண்டும். எல்லா நேரத்திலும் எல்லோரையும் நம்மால் திருப்திபடுத்திவிட முடியாது. என்னுடைய விஷயத்தையே எடுத்துக்கொண்டாலும், என் பெற்றோர் ஒரு பார்வையுள்ள நபரைக் கிட்டத்தட்ட எனக்காக முடிவு செய்துவிட்டார்கள். ஆனால், நான் என்னுடைய தெரிவில் உறுதியாக இருந்தேன்.

இதனால், எனக்கும் என் பெற்றோருக்கும் இடையே நிறைய மன வருத்தங்கள். நானும் சரி, என் பெற்றோரும் சரி இருவருமே இந்த விஷயத்தில் நிறைய மன அழுத்தங்களை எதிர்கொண்டோம். இத்தனைக்கும் எங்கள் மூன்று பேரையும் ரொம்பவே கஷ்டப்பட்டுத்தான் படிக்கவைத்தார்கள். ஆனால், அதையெல்லாம் சில நேரங்களில் யோசிக்க முடியாது. அவர்களுக்கு பிறகு புரியவைத்துக்கொள்ளலாம் என்றபடி நான் என் கல்யாண விஷயத்தில் உறுதியாக இருந்துவிட்டேன்.

ஏன் சொல்கிறேன் என்றால், ஒரு மூத்த அக்கா எனக்கு போன் செய்து, தன்னைத் தன் அப்பாவும், அண்ணனும் கொடுமை செய்வதாகவும், அந்த இக்கட்டிலிருந்து தன்னை மீட்க வேண்டும் என்று கேட்டார். என்னுடைய ஆதரவைக் கோருகிறாரே தவிர, அவர் தரப்பில் அதற்கான எந்த முயற்சியும் இல்லை. தனக்குப் பிடித்தபடி, தான் தெரிந்துகொண்டவாறே கல்யாணம் நடந்துவிட வேண்டும், ஆனால், அப்பா, அம்மா மனதையும் கஷ்டப்படுத்திவிடக் கூடாது என்றால் எப்படி சாத்தியம்?

எத்தனைபேர் உங்களுக்காக வாதாடத் தயாராக இருந்தாலும், நீங்கள் உங்களுக்காகப் பேச முனைப்புகொண்டிருக்கிறீர்களா (self-advocacy) என்பது முக்கியம் என நினைக்கிறேன்.

சித்ரா: இந்த இடத்தில் நான் கூடுதலாக ஒன்றையும் எனது சொந்த அனுபவத்திலிருந்தே சொல்லலாம் என நினைக்கிறேன்.

நான் என்னை ஒரு பார்வையற்றவள் என கண்டுகொண்டதே என்னுடைய 29ஆவது வயதில்தான். அடுத்த மூன்றே ஆண்டுகளில் காதலில் விழுந்து, ஒரு தவறான நபரைத் தெரிவுசெய்து, அதற்காக நிறைய என் வீட்டில் சண்டையெல்லாம் போட்டிருக்கிறேன். கேட்காத கேள்வியெல்லாம் என் பெற்றோரைக் கேட்டிருக்கிறேன்.

பிறகு என் திருமண வாழ்க்கையே பொய் என்று ஆகி, மனதளவில் உடைந்து, நான் வந்து நின்றதும் அதே பெற்றோரிடம்தான். எதற்குச் சொல்கிறேன் என்றால், தனக்காக வாதாடுதல் (self-advocacy) என்பது நிச்சயம் தேவைதான். ஆனால், அதற்கான மிகப்பெரிய தெளிவும் நம்மிடம் இருக்க வேண்டும்.

முத்துச்செல்வி: ஒரு பார்வையுள்ள பெண்ணுக்கு இப்படி நேர்ந்தால்கூட அவரும் பெற்றோரிடம்தானே வந்து நிற்கப்போகிறாள்?

செலின்மேரி: இப்படியாகும் என்பதெல்லாம் உங்களுக்கே தெரியாதுதானே அக்கா. இதில் உங்களுடைய தவறென்று என்ன இருக்கிறது?

சித்ரா: கண்டிப்பாகத் தெரியாதுதான். ஆனாலும், கொஞ்சம் கூடுதல் தெளிவோடு இருந்திருக்கலாம் என்று தோன்றுகிறது.

முத்துச்செல்வி: நிச்சயமாக. எனக்கு 2012லேயே ஒரு பார்வையுள்ள நபரைத் தெரிவு செய்தார்கள். அவர் பட்டதாரியாக இருந்தும் நான் ஏற்கவில்லை. ஏனென்றால், எனக்கு நன்றாகவே தெரியும். அந்தக் குடும்பத்தில் நுழைந்துவிட்டால், என்னால் நம்முடைய சமூகத்துடன் ஒன்றியிருக்க முடியாது. மேலும், என் பெற்றோரைப் பொருத்தவரை, எங்கள் குடும்பத்தில் நாங்கள் மூன்று நபர்கள் பார்வையற்றவர்கள் என்கிறபோது, நான்காவதாக ஒரு பார்வையற்றவர் வேண்டாமே என்பதுதான் அவர்களின் அங்கலாய்ப்பு.

இதுபோல, அவர்கள் நம்முடைய நன்மைக்காகத்தான் யோசிக்கிறார்கள். ஆனால், அது நமக்கு நன்மையானதா என்பதை நாம்தான் சிந்திக்க வேண்டும்.

செலின்மேரி: என்னுடைய திருமண விஷயத்தில்கூட எனக்கு வேலை கிடைத்ததும் எங்கிருந்துதான் சொந்தக்காரர்கள் முளைத்தார்களோ தெரியவில்லை. ஒவ்வொருவராக முட்டி மோதினார்கள். சொந்தக்காரர்களெல்லாம் வேண்டவே வேண்டாம் என்று நான் உறுதியாகச்சொல்லிவிட்டேன். நிறையசண்டைகள் போட்டுத்தான்என்னுடைய விருப்பத்தை நிறைவேற்றிக்கொண்டேன். இன்றளவும்கூட சொந்தக்காரர்கள் எனப் பெரிதாக யாரும் என் வீட்டுக்கு வருவதில்லை.

சித்ரா: இன்று நாம் அவரவர் தேவையை, விருப்பத்தை எடுத்துச் சொல்லி, நமக்கான வாழ்க்கையை வாழ்கிறோம் என்றாலும்கூட, அது ஒரு சங்கடமான விஷயம்தானே? ஒரு பெண்ணே தன் பெற்றோரிடம் போய் “எனக்குக் கல்யாணம் பண்ணிவைங்க” என்று எப்படிக் கேட்க முடியும்? அப்படியெல்லாம் நம் சமூகம் வளர்ந்துவிடவில்லையே. பெற்றோர்தானே அதுபற்றிச் சிந்திக்க வேண்டும்?

செலின்மேரி: அவர்களுக்குப் பின் நமக்கொரு துணை வேண்டும் என அவர்கள்தானே சிந்திக்க வேண்டும்.

முத்துச்செல்வி: இது ஒரு ஆணாதிக்கச் சமூகம். பெண்கள் தனக்குக் கல்யாணம் செய்து்வைக்கச் சொல்லிக் கேட்டால், அது குற்றம். பெண்கள் பாலியல் தொடர்பாகப் பேசினால் அதுவும் குற்றம். அதுவும் பார்வையற்ற பெண்கள் பாலியல் குறித்துப் பேசினால் அது அதைவிடக் குற்றம்.

சித்ரா: சியாமலா சொன்ன பாகுபாடுகளுக்குக் காரணமே இந்தச் சமூகம்தானே. உதாரணமாக, பெண் குழந்தைக்கு பார்பி பொம்மையும், ஆண் குழந்தைக்கு கார் பொம்மையும் வாங்கித் தருவது. பையனென்றால் கடைக்கு அனுப்புவதும், பெண் என்றால், வீடு கூட்டச் சொல்வதுமாகத்தானே சமூகத்தின் போக்கு இருக்கிறது. ஆனால், இப்போது நிலைமைகள் கொஞ்சம் மாறத் தொடங்கியிருக்கின்றன.

செலின்மேரி: இதை வேறு ஒரு கோணத்திலும் பார்க்க வேண்டியிருக்கிறது. பார்வையற்ற பிள்ளை என்றால், அந்தப் பிள்ளையை வீட்டுவேலை செய்ய அனுமதிப்பதே இல்லை. எல்லா வேலைகளையும் மற்ற பிள்ளைகளைக்கொண்டு செய்யச் சொல்வது. இப்படியே வைத்துவைத்து கடைசியில் வீட்டுவேலை எதுவுமே செய்யத் தெரியாத பெண்களாக வளர்ந்துவிடுகிறார்கள்.

சித்ரா: இதைத்தான் அதீத பாதுகாப்பளித்தல் (over protection) என்கிறோம். தனக்குப் பின்னும் தன்னுடைய குழந்தை இந்த உலகத்தில் சுயமாக வாழக் கற்பிப்பவளே உண்மையான அம்மாவாக இருக்க முடியும் என்பதைத்தான் நான் மீண்டும் வலியுறுத்த விரும்புகிறேன்.

***தொடரும்.

எழுத்தாக்கம்: ப. சரவணமணிகண்டன்

பகிர

Be the first to leave a comment

உங்கள் கருத்தை உள்ளிடுங்கள்