இருட்டை விரட்டும் அரட்டை (3) மகளிர்தின சிறப்புத்தொடர்

இருட்டை விரட்டும் அரட்டை (3) மகளிர்தின சிறப்புத்தொடர்

,வெளியிடப்பட்டது

ஒரு பார்வையற்ற பெண்ணுக்கு அநீதி நடக்கிறதென்றால் அவளையே கேள்வி கேட்கும் ஆதரவுச் சமூகமாகத்தான் இது இருக்கிறது. இன்னும் சொல்லப்போனால், பெண்களே அப்படித்தான் கேட்கிறார்கள்

கூகுல் செய்திகளில் எம்மைப் பின்தொடர

முந்தைய பகுதிகளைப் படிக்க

இருட்டை விரட்டும் அரட்டை (3) மகளிர்தின சிறப்புத்தொடர்
உரையாடலில் பங்கேற்ற ஐந்து பெண்களின் புகைப்படங்கள்

சித்ரா: சமூகமும் அப்படித்தானே இருக்கிறது என்கிற செலின்மேரியின் கருத்திலிருந்து, பார்வையற்ற பெண்கள் சமூகத்தில் எதிர்கொள்ளும் பாலியல் சீண்டல்கள் குறித்த திசைநோக்கி நான் உரையாடலை நகர்த்த விரும்புகிறேன்.

செந்தமிழ்ச்செல்வி: இது தொடர்பாக எனக்கு இரண்டு நிகழ்வுகள் நினைவுக்கு வருகின்றன. நான் மதுரையில் கல்லூரி படித்தேன். மதுரையிலிருந்து சேலம் சென்று அங்கிருந்து எங்கள் கிராமத்துக்குச் செல்ல வேண்டும். மதுரையிலிருந்து எங்கள் ஊருக்குச் செல்ல பெரும்பாலும் நான் இரவுநேரப் பயணத்தைத்தான் தெரிவுசெய்வேன்.  அப்போதுதான் விடிகிற நேரத்தில் போய் எங்கள் ஊரில் இறங்க முடியும்.

நானும்என் சகோதரரும்  அவரும் பார்வையற்றவர்தான் ஊருக்கு ஒன்றாகப் பயணித்தோம். பேருந்தில் ஏறியதும் அவர் நன்றாகத் தூங்கிவிட்டார். எனக்கு இப்போதும்கூட இரவுநேரப் பயணங்களில் தூங்கப் பிடிக்காது. ஆகவே, நான் ஜன்னல் ஓரத்தில் அமர்ந்துகொண்டு வாக்மேனில் பாடல்கள் கேட்டுக்கொண்டு வந்தேன்.

அப்போது திடீரென்று எங்கிருந்தோ ஒரு கை என்மேல் விழுந்தது. எனக்கு ஒன்றும் புரியவில்லை. நான் என் சகோதரரைத் தொட்டுப் பார்த்தேன். அவர் தன் மடிமேல் கைகளை வைத்துக்கொண்டு நன்றாகத் தூங்கிக்கொண்டிருந்தார். சிறிது நேரத்தில் என்மீது கால்பட்டது. ஏன் தூக்கத்தில் இவன் இப்படிச் செய்கிறான் என நினைத்துக்கொண்டு மீண்டும் சகோதரரைத் தொட்டுப் பார்த்தேன். அவர் கால்களைக் கம்பிமேல் வைத்தபடி வசதியாகத் தூங்கிக்கொண்டிருந்தார். அப்போதுதான், நம்மைச் சுற்றி ஏதோ நடக்கிறது என நான் சுதாரித்தேன்.

மீண்டும் அந்தக் கை என்மேல் விழுந்தபோது நான் இறுக்கமாக அதைப் பிடித்துக்கொண்டு, கடுமையாகத் திட்டினேன். அதற்கு அந்த நபர், “சாரி மேடம், நீங்க பிலைண்டுனு தெரியாது” என்றார். “அப்போ பிலைண்ட் இல்லைனா அப்படித்தான் செய்வியா?” என வாய்க்கு வந்தபடி கத்தினேன். பிறகு நடத்துனர் அந்த நபரைப் பேருந்திலிருந்து இறக்கிவிட்டார்.

இதேபோல ஒரு சம்பவம் கோவையிலிருந்து சேலம் செல்லும்போதும் நிகழ்ந்தது. வழக்கமாக நான் ஜன்னலோரம் அமர்ந்திருக்க, என் பக்கத்தில் ஒரு பெண் அமர்ந்து தூங்கியபடி வந்தாள். அப்போது பின்புறத்திலிருந்து என்மேல் ஒரு கை பட்டது. முதலில் விட்டுவிட்டேன். ஆனால், அடுத்தமுறை வந்தால் விடக்கூடாது என்று முடிவு செய்தேன்.

நான் என் கழுத்துச் சங்கிலியில் ஒரு பெரிய ஊக்கை எப்போதும் மாட்டிவைத்திருப்பேன். இது நான் படித்த பள்ளியில் எங்களுக்குச் சொல்லிக்கொடுத்த ஒரு பாதுகாப்பு உத்தி. நான் எதிர்பார்த்ததுபோலவே அடுத்தமுறையும் கைவந்தது. அதை இறுக்கமாகப் பிடித்தபடி, அந்த ஊக்கின் முனை ஒடியுமளவுக்கு அவன் கைமேல் நன்றாகக் குத்தினேன். அவன் அளறத் தொடங்கிவிட்டான்.

எதற்கு இதைச் சொல்கிறேன் என்றால், பார்வையற்ற பெண்கள் தைரியமாக இருக்க வேண்டும். மேலும் இதுபோன்ற தற்பாதுகாப்பு நடவடிக்கைகள் பற்றி ஆசிரியர்கள், பெற்றோர் மற்றும் சுற்றியிருப்பவர்கள் பெண்களுக்குச் சொல்லித்தர வேண்டும். மேலும், இந்த உரையாடல் சமூக ஊடகப் பரப்பில் வெளியாகும் என்பதால், தற்பாதுகாப்பு தொடர்பாக ஒரு டிப்ஸாக இதை எடுத்துக்கொள்ளலாம்.

சித்ரா: பார்வையுள்ள பெண்களுக்கும் இது நடக்கிறதுதான் என்றாலும், ஒப்பீட்டளவில் பார்வையற்ற பெண்களுக்கு இது கூடுதல் சிக்கல்தான்.

செந்தமிழ்ச்செல்வி: ஆமாம். கை எங்கிருந்து வருகிறது என்றுகூட என்னால் தெரிந்துகொள்ள முடியவில்லையே!

சித்ரா: அதேதான். ஒவ்வொரு முறையும் நாம் பேருந்தில் ஏறும்போது, முன்னால் யார் அமர்ந்திருக்கிறார்கள்ள், பின்னால் யார்இருக்கிறார்கள்  என்றெல்லாம் விசாரித்துக்கொண்டு ஏறப்போவதில்லை. அதற்காக இதையெல்லாம் யோசித்துக்கொண்டிருந்தால் நம்மால் எந்த ஒரு செயலையும் முன்னெடுக்க முடியாது.

நாம் கூடுதல் தைரியத்துடன் இருக்கப் பழக வேண்டும். அத்தோடு நாம்  நம்மைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதை கூடுதல் கவனத்துடன் அவதானிப்பதும் அவசியம்.

செலின்மேரி: நிச்சயமாக. அதிக தைரியம் வேண்டும். அதேநேரத்தில் எந்த நிலையிலும் பயந்துவிடக் கூடாது.

முத்துச்செல்வி: நாம் சாலையைக் கடக்க உதவி கேட்கையில், ஊன்றுகோலோடு சேர்த்துக் கையையும் பிடிப்பார்கள். நான் எல்லோரையும் அப்படிக் குற்றம் சொல்லவில்லை. சென்னையில் 99 விழுக்காடு அப்படிஇல்லை. ஆனால், இப்படியும் நடக்கத்தான் செய்கிறது. நம்மை எங்கேசீண்டலாம் என்பது அவர்களுக்குத் தெரிகிறது. இதை நான் அடிக்கடி எதிர்கொண்டிருப்பதால் இப்போதெல்லாம் “ஸ்டிக்கைப் பிடிங்க” என உறுதியாகவே சொல்லிவிடுகிறேன்.

சியாமலா: நாங்கள் கல்லூரி படித்தபோது பாரிமுனை பேருந்து நிலையத்தில் பேருந்து ஏறுவது வழக்கம். அப்போது பேருந்தில் ஏற்றிவிட உதவும் சிலர், சரியாக ஏற்றிவிடும் நேரத்தில் எங்கள் கையைப் பிடித்து தங்கள் ஆண் உறுப்புப் பகுதியில் வைப்பார்கள். இந்தச் சீண்டலை நாங்கள் பலமுறை அனுபவித்திருக்கிறோம்.

முத்துச்செல்வி: அதேதான். இது சரியாக நம்மை அவர்கள் சாலையைக் கடத்திவிடும்போதும் நடக்கும்.

சியாமலா: பாரிமுனை பேருந்து நிலையத்தில் சில இடங்களில் ஆள் அரவம் இருக்காது. அதுபோன்ற இடங்களில் இந்தத் தொல்லைகள் இருக்கும். அதேபோல பேருந்து ஏற்றிவிட்டு, அவர்களும் எங்களின் பின் இருக்கையில் வந்து அமர்ந்துகொள்வார்கள். இதையெல்லாம் சகித்துக்கொள்ள முடியாமல் பிறகு நாங்கள் பாரிமுனை பேருந்து நிலையத்துக்குப் பதிலாக செண்ட்ரலிலிருந்து பஸ் பிடிக்கத் தொடங்கினோம்.

முத்துச்செல்வி: இதை வெளிச்சொல்வதிலும் சிக்கல் இருக்கிறது. இப்படியெல்லாம் நடப்பதை வெளியே சொன்னால் பிறகு “நீ தனியாப் போகாத” என பெற்றோர் நம் நடமாட்டத்திற்கே முட்டுக்கட்டை போட்டுவிடுவார்கள். பொதுவாகவே எல்லாப் பெண்களுக்கும் இது ஒரு மிகப்பெரிய சிக்கல். நாம் பாதிப்புக்குள்ளானதை வெளியே சொன்னால், “நீ ஏன் தனியாப் போன” என நம்மைத்தான் கேள்வி கேட்பார்கள்.

எனக்கும்கூட கல்லூரி நாட்களில் இரண்டு அனுபவங்கள் உண்டு. எங்கள் கல்லூரி சேப்பாக்கத்தில் இருக்கிறது. ஒருவர் என்னை சாலை கடத்திவிட்டு, “வாங்க பீச்சுக்குப் போய் ஜாலியா இருக்கலாம்” எனக் கேட்டார். அதேபோல வெறுமனே சாலை கடத்திவிட்ட ஒருவர், “என்னைக் கல்யாணம் பண்ணிக்கிறீங்களா?”னு கேட்டார். ஆனால், இதையெல்லாம் வெளியே சொல்ல முடியாது. சொன்னால் நம்மையேதான் குற்றவாளியாக்குகிறது இந்தச் சமூகம்.  இந்த நாட்டில் மிகப்பெரிய பாலியல் வன்கொடுமைகள் நடக்கும்போதெல்லாம், சமூகத்தின் கேள்வி இவைதான், “அவுங்க ஏன் ராத்திரி தனியாப் போனாங்க? அவுங்க ஏன் இப்படி டிரெஸ் போடறாங்க?”

மூன்று நான்கு ஆண்டுகள் முன்பு என நினைக்கிறேன். நான் பேருந்தில் போகும்போது எனக்குப் பின்னேயிருந்து கை வந்துகொண்டே இருந்தது. ஒரு கட்டத்துக்கு மேல் நான் கூச்சல் போட்டதும் அந்த ஆள் இறங்கிப் போய்விட்டான். உடனே சக பயணிகள் “ஆமா அவன் ரொம்ப நேரமா உன்னைத்தான் பார்த்திட்டிருந்தான்” என்றார்கள். அத்தோடு, பேருந்தில் இருந்த அத்தனை பேருமே கேட்ட ஒரே கேள்வி, “நீ ஏன் மா தனியா வாற?”.

ஒரு பார்வையற்ற பெண்ணுக்கு அநீதி நடக்கிறதென்றால் அவளையே கேள்வி கேட்கும் ஆதரவுச் சமூகமாகத்தான் இது இருக்கிறது. இன்னும் சொல்லப்போனால், பெண்களே அப்படித்தான் கேட்கிறார்கள். அதாவது, ஆணாதிக்கம் நிறைந்த இந்தச் சமூகத்தில், நாம் தனியாகப் போனாலோ, நவீனமாக உடையணிந்திருந்தாலோ ஆண்கள் நம்மைச் சீண்டுவதற்கு அவர்களுக்கு எல்லா உரிமை (lisence) இருக்கிறது என்பதாகவே இந்தச் சமூகம் சிந்திக்கிறது.

சித்ரா: என்னதான் நாம் பல துறைகளில் சாதித்து முன்னேறி வந்தாலும், நம்மைத்தான் குற்றவாளியாக்கிப் பார்க்கிறது இந்தச் சமூகம். இது பார்வையற்ற பெண்களுக்குக் கூடுதல் பாதிப்புதான்.

முத்துச்செல்வி: இரண்டாண்டுகளுக்கு முன்பு நான் ஊபர் காரில் பயணித்தபோது, ஒரு சம்பவம் நடந்தது. அன்று நான் சேலை கட்டியிருந்தேன். என்னைப் பார்த்த அந்த ஓட்டுநர், “நீங்க எ்வ்ளோ அழகா இருக்கீங்க” என்றார். இத்தனைக்கும் நான் நெற்றியில் குங்குமம் வைத்திருக்கிறேன். அப்படியிருந்தும் அவ்வளவு தைரியமாக “நீங்க என்னைக் கல்யாணம் பண்ணிக்கிறீங்களா?” எனக் கேட்டார். நான் உடனே கோபப்பட ஆரம்பித்தேன். உடனே அவர் சுதாரித்துக்க்ஒண்டு, “சாரி மேடம், கஸ்டமர் கேர்லைலாம் கம்ப்லைண்ட் பண்ணிடாதீங்க” என மன்றாடினார்.

உண்மையில் செந்தமிழக்கா சொன்னதுபோல, பார்வையற்ற பெண்கள் வெளியே செல்லும்போது, பெப்பர் ஸ்ப்ரே, பின்ஸ் எல்லாம் அவசியம் வைத்துக்கொள்ள வேண்டும். அத்தோடு தைரியமாக இருக்க வேண்டும்.

சித்ரா: இந்தத் தற்காப்பு கருவிகளை நாம் வைத்திருந்தாலும்கூட, நமக்கு அப்படி நிகழ்கையில் நாம் உடனடியாகக் கூச்சலிட்டு, அதை வெளிப்படுத்திவிட வேண்டும். பல பெண்கள் அதற்கே நிறைய தயக்கம் காட்டுகிறார்கள். அது கூடாது. முதலில் நாம் கூச்சலிட்டு நடந்ததை அல்லது நடப்பதை வெளிப்படுத்திவிட வேண்டும். மற்றவர்கள் என்ன சொல்வார்கள் என்றெல்லாம் யோசிக்கக் கூடாது.

***தொடரும்.

எழுத்தாக்கம்: ப. சரவணமணிகண்டன்

பகிர

Be the first to leave a comment

உங்கள் கருத்தை உள்ளிடுங்கள்