இருட்டை விரட்டும் அரட்டை (1) மகளிர்தின சிறப்புத்தொடர்

இருட்டை விரட்டும் அரட்டை (1) மகளிர்தின சிறப்புத்தொடர்

,வெளியிடப்பட்டது

தொடர்ந்து சாதாரணப் பள்ளியில் ஒரு பார்வையற்ற குழந்தை படித்தாலும், எட்டாம் வகுப்புச் சான்றிதழ் பெற்றிருக்கும் அந்தக் குழந்தைக்கு அதற்கேற்ற கல்வியடைவுகள் இருக்கிறதா என்றால் இல்லை என்பதே உண்மை.

கூகுல் செய்திகளில் எம்மைப் பின்தொடர

இருட்டை விரட்டும் அரட்டை (1) மகளிர்தின சிறப்புத்தொடர்
eஉரையாடலில் பங்கேற்ற ஐந்து பெண்களின் புகைப்படம்

சித்ரா: “மங்கையராய் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திட வேண்டும் அம்மா, பெண்கள் நம் வீட்டின் கண்கள்,பூமித்தாய், அஷ்டாவதாரம்” இப்படியெல்லாம் பெண்களை உயர்த்திச் சொல்வதற்காகவோ அல்லது அடக்கிவைப்பதற்காகச் சொன்னார்களோ அது எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். நாம் அதற்குள் போக வேண்டாம். ஆனால், இப்படி உயர்த்திச் சொல்லப்படும் பெண்களில் பார்வையுள்ள பெண்களே நிறைய பிரச்சனைகளை எதிர்கொள்ள gவேண்டியிருக்கிறது. எவ்வளவுதான் முற்போக்காக இருந்தாலும், எத்தனை புரட்சிக் கருத்துகள் பேசப்பட்டாலும், நிறைய பிரச்சனைகளை அவர்கள் எதிர்கொள்்ள வேண்டியிருக்கிற இந்த காலகட்டத்தில், நமது பார்வையற்ற பெண்கள் பல்வேறு களங்களில் எப்படியான பிரச்சனைகளை எதிர்கொண்டு வருகிறார்கள், அதை எப்படியெல்லாம் எதிர்கொண்டு வென்றெடுக்கிறார்கள், அந்தப் பிரச்சனைகளுக்கான தீர்வுகள்தான் என்ன என்பது பற்றி நாம் இந்த அரங்்கில் ஒரு கலகலப்பான உரையாடல் வழியே விவாதிக்கவிருக்கிறோம்.

முதலில் கல்வி. பொதுவாகப் பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கே கல்விதான் முக்கியமானது என்கிறபோது, பார்வை மாற்றுத்திறனாளி பெண்களுக்கு ஒருபடி மேலாகவே கல்வி அவசியமாகிறது. சூழல்கள் நிறையவே மாறியிருக்கிற விழிப்புணர்வு அதிகம் வந்திருக்கிற இந்த காலத்திலும் நிறைய பார்வையற்ற பெண்கள் கல்வி வாய்ப்பின்றி இருக்கிறார்கள். இதுபற்றி உங்கள் ஒவ்வொருவரின் கருத்தையும் அறிய விரும்புகிறேன்.

செந்தமிழ்ச்செல்வி: இன்றும்கூட நிறையப் பெண்கள் படிப்பறிவின்றி இருக்கக் காரணம் போதிய விழிப்புணர்வின்மை என்பதே எனது கருத்து. ஏழ்மை நிலையில் உள்ளவர்கள்கூட தங்கள் பார்வையற்ற குழந்தைகளை சிறப்புப் பள்ளிகளில் சேர்த்துவிடுகிறார்கள். அதாவது, “அங்கேயாதவு போய் அது நல்ல சாப்பாடு சாப்பிடட்டும்” என்ற ரீதியில்கூட இருக்கலாம். ஆனால், சமூகத்தின் உயர்ந்த நிலையில் இருக்கிற அரசு அதிகாரிகள், செல்வந்தர்கள் தங்கள் பார்வை மாற்றுத்திறனாளி குழந்தைகளைப் பள்ளியில் சேர்க்க நிறையவே தயங்குகிறார்கள்.

முத்துச்செல்வி: செந்தமிழக்கா சொன்னது உண்மைதான். நிறையவே பிற்போக்கான எண்ணங்கள் நிறைந்திருக்கிற இந்தச் சமூகத்தில், பார்வையுள்ள பெண்களுக்கே இதுதான் நிலை என்கிறபோது, பார்வையற்ற பெண்களின் நிலை இன்னும் மோசமானதுதான். விழிப்புணர்வு இல்லை என்பது ஒருபக்கம், இன்னொன்று போதிய நம்பிக்கையும் ஏற்படவில்லை.

நான் எனது சொந்த அனுபவத்திலிருந்து இந்தக் கருத்தை விளக்க முயல்கிறேன். சிறுமலர்ப் பள்ளியி்ல் என்னோடு படித்த ஒரு தோழியின் கதை இது.

பெற்றோர் இருவருமே நன்கு படித்து நல்ல வேலையில் இருப்பவர்கள். அம்மா பள்ளி ஆசிரியர், அப்பா ஏதோ ஒரு அரசு வேலையில் இருக்கிறார். ஆனாலும் அவர்களின் புலம்பல் பெரும்பாலும் இப்படித்தான் இருக்கும். “படிக்க வச்சு என்ன பண்ணுறது? அதெல்லாம் வேஸ்ட்.” இப்படிப் புலம்பிப் புலம்பியே சரியாக தோழி 12ஆம் வகுப்பு முடித்ததும் அவளை உயர்கல்வியில் சேர்க்கவும் இல்லை. திருமணம் செய்து வைத்து அந்தப் பார்ஐயற்ற பெண்ணின் மொத்த வாழ்க்கையையும் நாசம் செய்துவிட்டார்கள். இத்தனைக்கும் தோழி மிக நன்றாகப் படிக்கக்கூடியவள்.

எதற்குச் சொல்கிறேன் என்றால், விழிப்புணர்வு மட்டுமல்ல, கல்விதான் பார்வையற்ற பெண்களின் வாழ்வை உயர்த்தும், அவர்களுக்கு ஒரு அங்கீகாரத்தைப் பெற்றுத்தரும் என்கிற நம்பிக்கைகூட படித்த பெற்றோர்களிடமே இல்லை என்பதுதான் வேதனையான விஷயம்.

சித்ரா: இதைக் கேட்கையில் எனக்கு ஒரு நினைவு வருகிறது. முதல் கோவிட் ஊரடங்கின்போது அமைப்பு ரீதியாக உதவிகளைக் கொண்டுசேர்க்கும் பொருட்டு, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த வயதுவந்த நிறைய பார்வையற்ற பெண்களிடம் நான் பேச நேர்ந்தது. அப்போது நான் கண்டறிந்த ஒரு உண்மை, கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த பார்வையற்ற பெண்கள் குறைந்தபட்சம் எட்டாம் வகுப்பாவது படித்திருக்கிறார்கள். அதேசமயம், விழுப்புரம் மாவட்டத்தில் நான் பேசிய அனைத்துப் பெண்களுமே ஒரு வகுப்புகூடப் படிக்காதவர்களாக வீட்டிலேயே வைக்கப்பட்டு, சிலர் திருமணம் முடித்துவைக்கப்பட்டிருக்கிறார்கள். இத்தனைக்கும் விழுப்புரத்திற்கு அருகிலேயே பார்வையற்றோருக்கான அரசு சிறப்புப் பள்ளி கடலூரில் இயங்கிவருகிறது.

இதை யோசிக்கையில்தான், சிறப்புப் பள்ளிகளும், மாவட்ட மாற்றுத்திறனாளி அலுவலர்களும் சிறப்புப் பள்ளிகளில் மேற்கொள்ளப்படும் வீடுவீடாகச் சென்று பார்வையற்ற குழந்தைகளை அடையாளம் கண்டு அவர்களைப் பள்ளியில் சேர்க்கும் ஹோம்விசிட்டிங் களப்பணியை இன்னும் தீவிரமாகவே மேற்கொள்ள வேண்டும் என்று தோன்றுகிறது.

செலின்மேரி: விழிப்புணர்வு இல்லை என்பது உண்மை. அதேநேரம், இன்று உள்ளடங்கிய கல்விமுறை வந்துவிட்டது. பெற்றோரும் தங்களின் பார்வையற்ற குழந்தை தங்கள் அருகிலேயே இருக்க வேண்டும் என உணர்ச்சிகரமாக யோசிக்கிறார்கள். அதனால்தான் தங்களின் வீட்டிற்கு அருகிலிருக்கும் சாதாரணப் பள்ளியில் சேர்த்துவிடுகிறார்கள். சாதாரணக் குழந்தைகளோடு ஒரு பார்வையற்ற குழந்தையாய், அது பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொள்கிறது. அப்படி ஏதோ பிரச்சனையால் அந்தக் குழந்தையின் கல்வியே பாதியில் நின்றுவிடுகிறது.

தொடர்ந்து சாதாரணப் பள்ளியில் ஒரு பார்வையற்ற குழந்தை படித்தாலும், எட்டாம் வகுப்புச் சான்றிதழ் பெற்றிருக்கும் அந்தக் குழந்தைக்கு அதற்கேற்ற கல்வியடைவுகள் இருக்கிறதா என்றால் இல்லை என்பதே உண்மை. அதனால் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை பார்வையற்றோருக்கான சிறப்புப் பள்ளிகளில் சேர்க்க முன்வர வேண்டும் என்பதே என்னுடைய கருத்து.

செந்தமிழ்ச்செல்வி: செலின் சொல்வதைக் கேட்கும்போது, எனக்கு ஒன்று ஞாபகம் வருகிறது. என்னிடம் ஒன்பதாம் வகுப்பு படித்த மாணவி அவள். பார்வைக்குறைபாடு இருந்து்ம் அவளை அவள் பெற்றோர்கள் சிறப்புப் பள்ளியில் சேர்க்கவில்லை. இத்தனைக்கும் அவளின் அப்பா சுகாதாரத்துறையில் நல்ல பணியில் இருக்கிறார். அம்மாவும் படித்தவதான் ஆனால் இல்லத்தரசி. எப்படியோ முட்டிமோதி அந்த மாணவி இளங்கலைக் கல்வியியல் (B.Ed) வரை வந்துவிட்டாள்.

சிறப்புப் பள்ளியில் படிக்காததால் பிரெயில் தெரியவில்லை. பார்வைக்குறைபாடு காரணமாக சாதாரண எழுத்துகளை அவளால் கையாள முடியவில்லை. பயிற்சியின்போது ரொம்பவே திணறிப்போனாள். “ஏதாவது மனப்பாடம் செய்தாவது ஒப்பித்துக் காட்டு” என்று நான் அடிக்கடி அறிவுறுத்துவது உண்டு. இப்போது அவளுக்குத் திருமணமும் ஆகிவிட்டது. கல்வி கொடுக்கப்பட வேண்டும் என்பது ஒருபுறம் இருந்தாலும், முறையான கல்வியறிவே இல்லாமல் திண்டாடும் அவளைப் போன்ற பார்வையற்ற பெண்கள் வாழ்க்கை எப்படி இருக்கும் என்பதையே சிந்திக்க முடியவில்லை.

சியாமலா: விழிப்புணர்வு இல்லை என்பது ஒருபுறம், அதேநேரம் பெற்றோர் தங்கள் பார்வையற்ற குழந்தை மேல் அதீத பாதுகாப்பு உணர்வுடன் இருக்கிறார்கள் (over protection) என்று தோன்றுகிறது. சமீபத்தில்கூட ஒரு பார்வையற்ற அக்காவே தன் குழந்தையை சிறுமலர்ப் பள்ளியில் சேர்க்க விரும்பினார். ஆனால், அந்தப் பள்ளியின் விடுதியில் சேர்க்க அவருக்கு ஏனோ தயக்கம். உறவினர் வீடுகளில் விடலாம் என்றால், “ஏன் இதையெல்லாம் படிக்க வைக்கணும், ஊருக்கே கூட்டிப்போய்விடு” என அறிவுறுத்துவார்களே என்ற அச்சமும் இருக்கிறது.

பார்வையற்ற பெண் குழந்தைகளைப் பொருத்தவரை, கல்வி என்பது வெறும் கல்வி மட்டுமல்ல. ஒரு குறிப்பிட்ட வயதுவரை உண்டு உறைவிடப் பள்ளியில் அவர்கள் தங்கி, சக பார்வையற்ற தோழிகளுடன் இணைந்து பயிலும்போதுதான், தாங்களே சுயமாக வாழ்வதற்கான (independent living) பயிற்சியையும் தன்னம்பிக்கையையும் பெறுகிறார்கள். அந்தப் பயிற்சிதான், உயர்கல்வி வகுப்புகளில் தாங்கள் சுயமாக செயல்பட  அடிப்படையாக அமையும்.

இருவேறு துருவங்களில் பார்வையற்ற குழந்தைகளின் பெற்றோர் சிந்திக்கிறார்கள். சிலர் எப்படியோ தள்ளிவிட்டுவிட்டோம் என அக்கறையின்றி இருப்பது, சிலர் அதீத பாதுகாப்பை குழந்தைகளுக்கு வழங்குவது. இந்த இரண்டு பார்வைகளுமே சரிசெய்யப்பட வேண்டியவைதான்.

செலின்மேரி: என்னைப் பொருத்தவரை, எப்படியாவது நம் குழந்தை படித்து முன்னேறட்டும், எனப் பெற்றோர் நினைத்தாலே போதும். அதுதான் எளிய தீர்வு.

முத்துச்செல்வி: அதாவது, பெரும்பாலான பெற்றோர் தனக்கு ஒரு பார்வையற்ற குழந்தை இருக்கிறது என்பதையே ஒப்புக்கொள்ள மறுக்கிறார்கள். அந்த உண்மையை அவர்கள் மறைக்க முயல்கிறார்கள். அதனால்தான் “பள்ளிக்கு தினமும் யார் கூட்டிப்போவது?” போன்ற தயக்கங்களை முன்வைக்கிறார்கள்.

சித்ரா: பொறுப்பைத் தட்டிக் கழிக்கிறார்கள்.

முத்துச்செல்வி: ஆமாம். இரண்டு மூன்று நாட்களுக்கு முன்பு, சித்ராக்கா உட்பட எங்களில் சிலருக்கு ஒரு 20 வயது மதிக்கத் தக்க பார்வையற்ற பெண்ணின் அம்மா போன் செய்து, அவளுக்கு மாப்பிள்ளை பார்க்கச் சொன்னார். படிப்பைப் பற்றிப் பேசினால், “அதெல்லாம் படிச்சு ஒன்னும் ஆகப் போறதில்லை” என்று சொன்னார். அக்கா சொல்வதுபோல, பொறுப்பைத் தட்டிக் கழிப்பதும், நமக்கு ஒரு பார்வையற்ற குழந்தை இருக்கிறது, அக்குழந்தையோடு நாம் எப்படி சர்வைவ் பண்ணப் போகிறோம் என்ற விழிப்புணர்வும், நம்பிக்கையும் அற்று இருப்பதே பெற்றோரின் பிரச்சனை.

செந்தமிழ்ச்செல்வி: மிகச்சரி. முத்துச்செல்வி சொல்வதுபோல், சர்வைவ் பண்ண வைக்கணும் என்ற எண்ணமே பெற்றோருக்கு இருப்பதில்லை.

என்னுடைய நெருங்கிய உறவினரின் குழந்தைதான். சிறுவயதிலிருந்தே நாங்கள் எவ்வளவோ வழிகாட்டினோம். சேலம் அரசுப் பார்வையற்றோர் பள்ளியில் கொண்டுபோய் சேர்த்தோம். சிலநாட்களிலேயே உடம்பு சரியில்லாமல் போகுது என வீட்டுக்குக் கூட்டி வந்துவிட்டார்கள். பிறகு இன்னோரு பார்வையற்ற பள்ளியில் சேர்த்தோம். அங்கும் அப்படித்தான். எங்களால் குழந்தையைப் பார்க்காமல் இருக்க முடியவில்லை என அழைத்துவந்துவிட்டார்கள்.

எந்தப் பள்ளியிலுமே அவள் ஓராண்டுகூட முழுமையாகப் படிக்கவில்லை. இப்போது அவள் வளர்ந்துவிட்டாள்.

எப்படியாவது அவளை கல்லூரியில் படிக்கவைக்க வேண்டும் என அவளின் பெற்றோர் முயற்சி செய்கிறார்கள். ஆனால், எந்த ஒரு பயிற்சியும் இல்லாததால், அவளால் தனியாக நடமாடவோ, தன் வேலைகளைத் தானே செய்துகொள்ளவோ முடியாமல் கல்லூரி விடுதியில் ரொம்பவே கஷ்டப்படுகிறாள்.

முத்துச்செல்வி: கல்வி விஷயத்தில் இன்னொன்றும் சொல்லியாக வேண்டும். பார்வையற்ற குழந்தைகளின் பெற்றோர், அந்தக் குழந்தைகளுக்குச் செலவு செய்ய ஏனோ தயங்குகிறார்கள். பள்ளிக்கல்வி இலவசமாகக் கிடைத்துவிடுகிறது. ஆனால், உயர்கல்வியிலும் அவர்கள் இலவசத்தையே எதிர்பார்க்கிறார்கள்.

சிலர் வறுமையில் இருக்கலாம். ஆனால், நல்ல நிலையிலுள்ள பெற்றோரும்கூட கடைசிவரை தங்கள் குழந்தைகளுக்கு எல்லாமே இலவசமாகக் கிடைத்துவிட வேண்டும் என நினைக்கிறார்கள். அதேசமயம், தங்களின் பார்வையுள்ள குழந்தைகளின் கல்வி விஷயத்தில் அவர்கள் தாராள மனதோடு நடந்துகொள்வதையும் பார்க்க முடிகிறது.

சித்ரா: கண்டிப்பாக. நானே இதுபோல நிறைய பார்த்திருக்கிறேன்.

முத்துச்செல்வி: எங்கள் வீட்டில் நாங்கள் மூவருமே பார்வையற்றவர்கள் என்பதால், இதுபோன்ற பாகுபாட்டை நான் எதிர்கொண்டது கிடையாது. ஆனால், நாம் கேள்விப்படும் பெரும்பாலான விஷயங்கள் இதை நமக்குச் சொல்கின்றன.

சித்ரா: எல்லா பார்வையற்ற பெண்களின் அம்மாக்களுக்கும் ஒன்று சொல்லத் தோன்றுகிறது. என்னதான் நீங்கள் அன்புகாட்டி, அரவணைத்துப் பொத்திப் பாதுகாத்தாலும், உங்களுக்குப் பிறகு பார்வையற்ற உங்கள் மகள் எப்படித் தன்னை தகுதிபடுத்திக்கொண்டு வாழ வேண்டும் என்பதைச் சிந்தித்து, அதற்கான திறன்களை அவளுக்குப் பயிற்றுவிக்க வேண்டும். அதுதான் ஒரு பார்வையற்ற பெண்ணின் அம்மாவாக நீங்கள் அவள்மேல் காட்டும் உண்மையான அக்கறையாக இருக்க முடியும்.

செந்தமிழ்ச்செல்வி: நிச்சயமாக. அந்தவகையில் என் அம்மா சிறப்பானவர். எங்கள் குடும்பத்தில் நானும் என் சகோதரர் இருவருமே பார்வையற்றவர்கள். இன்றைக்கும் என்னால் விறகடுப்பிலும்் சமைக்க முடியும். நவீன மின்னணு அடுப்பையும் கையாள முடியும். கிரைண்டரோ, ஆட்டுக்கல்லோ எல்லாமே எனக்கு ஒன்றுபோலத்தான்.

இன்று நானும் என் கணவரும் முழுப் பார்வையற்றவர்களாக இருந்தாலும்கூட, எங்களின் இரண்டு குழந்தைகளோடு சுயமாக எங்கள் குடும்பத்தைச் செலுத்த முடிகிறதென்றால், அதற்கு சிறு வயதிலிருந்தே என் அம்மா கொடுத்த ஊக்கமும் பயிற்சியுமே அடிப்படை. இவ்வளவுக்கும் என் அம்மா ஒன்றாம் வகுப்புகூட படிக்கவில்லை.

சித்ரா: கண்டிப்பாக. ஒவ்வொரு அம்மாவும் தன் குழந்தை தனித்து இயங்கப் பழக்க வேண்டும். எல்லாவற்றையும் தானே செய்துகொடுத்து, தானே கூட்டிப்போய், இதனால்தான் உடலால் வளர்ந்துவிட்டாலும்கூட பல பார்வையற்ற பெண்கள் தனித்து இயங்குவதில் மிகுந்த சிரமத்தை எதிர்கொள்கிறார்கள்.

முத்துச்செல்வி: பணிக்குப் போகிற பல பார்வையற்ற பெண்களோடு அவர்களின் அம்மாக்களும் உடன் செல்வது, அங்கேயே அமர்ந்திருந்து, மாலையில் வருவதெல்லாம் பார்க்கத்தானே செய்கிறோம். இதில் இன்னொரு விஷயத்தையும் சொல்ல வேண்டும்.

பார்வையற்ற பெண்களின் அம்மாக்கள், குறிப்பாக உள்ளடங்கிய கல்வி வழியாகப் படிக்கும் குழந்தைகளின் அம்மாக்கள் முழுக்க முழுக்க இந்தக் குழந்தைக்காக மட்டுமே தான் படைக்கப்பட்டிருப்பதாக எண்ணிக்கொள்கிறார்கள். தங்களுக்கென்று ஒரு வாழ்க்கை இல்லை என்பதாகவும், இந்தக் குழந்தைக்கு எல்லாமே அவர்கள்தான் செய்தாக வேண்டும் என்கிற பாவனையோடே வாழ்கிறார்கள்.

நாம் எவ்வளவுதான் பேசிப் பார்த்தாலும், நம்மைப் போன்ற சில பார்வையற்ற பெண்களைக் கண்முன் உதாரணமாகக் காட்டினாலும், அவர்களுக்கு அந்த ஏற்பு வருவதே இல்லை. அவர்கள் அந்தக் குழந்தையை இந்தப் பிறவியில் தான் சுமக்க வேண்டிய பாரமாகக் கருதிக்கொள்கிறார்கள். பார்வையற்ற பெண் நூறு விழுக்காடு சுயமாக இயங்க முடியும் என்பதை ஒப்புக்கொள்ளவோ, நம்பிக்கைகொள்ளவோ அவர்கள் தயாராக இல்லை.

சித்ரா: பார்வையற்ற பெண்களின் கல்விகுறித்து பேசிவிட்டோம். அடுத்ததாக கல்வியின் தொடர்ச்சியாக வேலைவாய்ப்பு. வேலைவாய்ப்பைப் பொருத்தவரை, பார்வையற்ற ஆண் பெண் பாகுபாடெல்லாம் இல்லை. ஒரே மாதிரியான பிரச்சனையைத்தான் இருபாலருமே எதிர்கொள்கிறார்கள். என்றாலும், ஊனமுற்றோர் உரிமைகள் சட்டம் 2016ல் பார்வையற்ற பெண்களுக்கான வேலைவாய்ப்பு குறித்து ஏதேனும் சொல்லப்பட்டிருக்கிறதா என்பதை முத்துச்செல்வி கொஞ்சம் விளக்குங்களேன்.

முத்துச்செல்வி: அரசுப்பணியில் நான்கு விழுக்காடு இட ஒதுக்கீடு என்ற அம்சம் இருபாலருக்குமே பொதுவானதுதான். ஆனால், நூறுநாள் வேலைத்திட்டம், சுயதொழில் போன்ற வறுமை ஒழிப்புத் திட்டங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு ஐந்து விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்பது சட்டம். அதிலும் இத்திட்டங்களில் மாற்றுத்திறனாளிப் பெண்களுக்கு முன்னுரிமையளிக்கப்பட வேண்டும் எனக் கூடுதலாகச் சொல்லப்பட்டிருக்கிறது.

இங்கு நான் முக்கியமான ஒன்றை பதிவு செய்ய விரும்புகிறேன். அதாவது, ஐக்கிய நாடுகள் அவையின் மாற்றுத்திறனாளிகள் தொடர்பான உடன்படிக்கையை (UNCRPD) முழுமையாக அமல்ப்படுத்துவோம் என்று சொல்லித்தான் ஊனமுற்றோருக்கான உரிமைகள் சட்டம் 2016 இயற்றப்பட்டது.  ஐநா உடன்படிக்கையில் மாற்றுத்திறனாளிப் பெண்களுக்கென்றே (women with disability)  ஒரு தனிச் சட்டப்பிரிவே ஏற்படுத்தப்பட்டிருக்கிறது.

அதுபோலவே, ஊனமுற்றோர் உரிமைகள் சட்டம் 2016 வரைவில் மாற்றுத்திறனாளி பெண்களுக்கென்று ஒரு தனி அத்தியாயம் வழங்கப்பட வேண்டும் எனக் கோரியிருந்தோம். ஆனால், ஒரே ஒரு சட்டப்பிரிவில், அதுவும் மாற்றுத்திறனாளி பெண்கள் மற்றும் குழந்தைகள் எனச் சுருக்கமாக  முடித்துக்கொண்டது அரசு. அதனால் அங்கும் நாம் மாற்றுத்திறனாளிப் பெண்கள் புறக்கணிக்கப்பட்டுவிட்டோம்.

தொடரும்.

***

மார்ச் 8 மகளிர்தினத்தை முன்னிட்டு, ‘இருட்டை விரட்டும் அரட்டை’ என்ற தலைப்பில் சவால்முரசு வலையொளித்தளத்தில் பதிவு செய்யப்பட்ட இந்த உரையாடலை நெறிப்படுத்தியவர் செல்வி. U. சித்ரா.

பூவிருந்தவல்லி பார்வைத்திறன் குறையுடையோருக்கான அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஆங்கிலப் பட்டதாரி ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார்.

தொடர்புக்கு: anbirkiniyaval@gmail.com

உரையாடலில் பங்கேற்றோர்:

திருமதி. செந்தமிழ்ச்செல்வி

கடலூர் மாவட்டத்தின் அரசுப்பள்ளியொன்றில் பட்டதாரி  ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார்.

தொடர்புக்கு: selvithiyagu105@gmail.com

திருமதி. முத்துச்செல்வி

இந்தியன் வங்கியில் மேளாலராகப் பணியாற்றுகிறார். இவர் அகில இந்திய பார்வையற்றோர் கூட்டமைப்பின் (All India confederation of the blind-AICB) துணைத்தலைவர்).

தொடர்புக்கு: muthump2007@gmail.com

திருமதி. செலின்மேரி

புதுக்கோட்டை மாவட்டத்தின் அரசுப் பள்ளியொன்றில் ஆங்கில ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார்.

தொடர்புக்கு: celinmaryx@gmail.com  

திருமதி. சியாமலா

தமிழக அரசின் வேலைவாய்ப்புத்துறையில் உதவியாளராகப் பணியாற்றி வருகிறார்.

தொடர்புக்கு: shyamalak1991@gmail.com

உரையாடலில் பங்கேற்ற ஐந்து பெண்களும் பார்வையற்றவர்கள்.

***எழுத்தாக்கம்: ப. சரவணமணிகண்டன்

பகிர

2 thoughts on “இருட்டை விரட்டும் அரட்டை (1) மகளிர்தின சிறப்புத்தொடர்

  1. மகளிர் தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டஇந்த நிகழ்ச்சி மிகவும் அருமை. அனைவருக்கும் மகளிர் தின நல்வாழ்த்துகள் .

  2. இருட்டை விளக்கம் அரட்டை தொடர் மிகவும் அருமையாக இருந்தது இதன் மூலம் நான் பல தகவல்களை தெரிந்து கொண்டேன் சமூகத்தில் நடக்கும் பல பார்வையற்ற பெண்களின் நிலையை இந்த வலையொளி காணொளி மூலமாகவும் சவால் முரசின் கட்டுரை மூலமாகவும் தெரிந்து கொண்டேன்

உங்கள் கருத்தை உள்ளிடுங்கள்