ஆட்காட்டி, நாட்காட்டி, அதுபற்றி

ஆட்காட்டி, நாட்காட்டி, அதுபற்றி

,வெளியிடப்பட்டது

பார்வையற்றவர்களின் மொழிமனத்தில் பெருமாள், அடியார், தேவலோகம், ஆசி போன்ற சொற்களைவிட கர்த்தர், சீடர், பரமண்டலம், இரட்சிப்பு ஆகிய சொற்கள் இன்னும் அழுத்தமான மேடுறுத்தப்பட்ட அரூப உருவங்களாக படிந்திருக்கின்றன.

கூகுல் செய்திகளில் எம்மைப் பின்தொடர

இராகு, குளிகை, முகூர்த்தம், சதுர்த்தி, அஷ்டமி, நவமி, என்னைப் போன்ற பல பார்வையற்ற நண்பர்களுக்கு இந்தச் சொற்களின்மீது பெரும் ஒவ்வாமையே இருக்கக்கூடும். பகுத்தறிவு, முற்போக்கு என்பவைகூட காரணங்களாக இருக்கலாம். ஆனால், உண்மையில் அவை காரணங்களா அல்லது நமக்குக் கிட்டாத அறிதலை வெறுத்து நாம் நமக்குச் சூட்டிக்கொண்ட கவசங்கள் கேடயங்களா? அதாவது, எட்டாத திராட்சைக்குலையை புளித்தது என்று சொல்கிற நரிபோல.

ஏன் இப்படியெல்லாம் யோசிக்கிறேன்? காரணம் இருக்கிறது. சிறுவயதிலிருந்தே பார்வையற்றவர்களாகிய நாம் மதம் சார்ந்த சடங்குகளில் சம்பிரதாய நடவடிக்கைகளில் ஒருவித விலக்கத்தையே பெரும்பாலும் எதிர்கொண்டிருப்போம். அதிலும் குறிப்பாக இந்துமதச் சடங்கு சந்தர்ப்பங்கள், நமது பெயராலேயே நமக்காகவே நம் குடும்பத்தாரால் கடவுளுக்குக் கொடுக்கப்படும் நேர்த்திக்கடன்களில்கூட நமது இருத்தல் என்பது ஒரு ஓரத்தில் அமர்ந்திருத்தல் மட்டுமே. கதாநாயகன்தான் ஆனால், பாட்டு இல்லை, வசனமில்லை, அட நடக்கும் ஃபைட்டில்கூடப் பங்கில்லை. மாறாக, ஒன்றுபட்ட அந்த நிகழ்வுகளில் கொண்டாட்டம், குதூகலம், அவ்வப்போதைய குடுமிபிடி என இவை அத்தனையிலும் நம்மைச் சுற்றியிருக்கிற நம் உறவுகள் மிகத் தீவிரமாக ஈடுபடுவதையும் பார்த்துக்கொண்டு அமர்ந்திருப்போம். அதனால்தான், குடும்பம் மற்றும் உறவுகள் பெயரால் அவ்வப்போது நாம் நல்ல நேரம், முகூர்த்தம் போன்ற நம்பிக்கைகளைக் கைக்கொண்டாலும், அதில் நமக்குப் பெரிய ஈடுபாடு இருப்பதில்லை.

தொடர்ச்சியாக எதிர்கொள்ளும் இத்தகைய வாய்ப்புகள், அவற்றின் மீதான நம் எரிச்சலை அதிகரிக்கின்றன. அதனால் ஏற்படும் ஒருவிதத் தன்னிரக்கச் சிந்தையைத் தாண்டவும், ஈடுசெய்யவும் நமக்குப் பகுத்தறிவு, முற்போக்கு போன்ற சொற்கள் பெரிதும் பயன்படுகின்றன. இந்தச் சொற்கள் நம் இயல்பான பலவீனத்தை மறைத்து, நமக்குப் புதுத்தெம்பையும் புத்துணர்வையும், நமக்கென்று ஒரு மாற்று சிந்தனையாளர்க் குழாமையும் கையளிக்கின்றன. அதுவும் நாம் அதீத செயலூக்கமும், சாதனை படைக்கிற உத்வேகமும் கொண்டிருக்கிற நம் இளமைப்பருவத்தில் இந்தச் சொற்கள் மிகச் சரியாக நம்மைச் சந்தித்து நம்மில் குடியேறிவிடுகின்றன. உண்மையில் நாம் நம் அகத்தை நேர்நின்று பார்த்தால், நம் அகம் அறிய விரும்புவனவும், நாம் அறிந்துவைத்திருப்பனவும் வேறுவேறானவை என்பது புரியும்.

சடங்குகள் சம்பிரதாயங்களில் பார்வையற்றவர்கள் விலக்கம் கொள்வது மட்டும்தான் காரணங்களா என்றால் அதுதான் இல்லை. பொதுவாகவே இந்தச் சூழலை வரலாற்றுப் பார்வையோடும் அணுக வேண்டியிருக்கிறது. இரண்டாயிரம் மூவாயிரம் ஆண்டுகளாக மக்களை இருத்திவைத்திருக்கிற இந்து மதத்தில் விளிம்புநிலை மனிதர்களுக்கான இடம் தொடர்ச்சியாக மறுக்கப்பட்டே வந்திருக்கிறது. உடல்க்குறையே இல்லாத மனிதர்கள்கூட சாதியின் பெயரால் விலக்கி வைக்கப்பட்டிருந்தபோது, அங்கக் குறைபாடுகளோடு பிறந்தவர்களின் அக்கால நிலையை எளிதிலேயே ஊகித்துவிட முடியும். மதப்பரப்பியம் என்றாலும்கூட காலங்காலமாய் நிகழ்ந்த அந்தப் பாகுபாடுகளை, அதனால் ஏற்பட்ட மேல் கீழ் அடுக்குகளின் அவலங்களைத் துடைக்க முயன்றவர்கள் கிறித்துவ மிஷனரிகள். அவர்கள்தான் ஊனமுற்றவர்களையும் சமூகத்தின் ஒரு அங்கமாகக் கருதினார்கள். அவர்களுக்காக நாடெங்கிலும் கல்விச்சாலைகளைத் திறந்தார்கள். இன்று நம்மில் பெரும்பான்மைப் பார்வையற்றவர்கள் படித்து, நல்ல பணிவாய்ப்போடு சமூக அங்கீகாரம் பெற்றிருப்பதும் அத்தகைய கிறித்துவ மிஷனரிப் பள்ளிகளால்தான்.

மிஷனரிகளைப் பின்பற்றி சுதந்திர இந்தியாவில் மைய மாநில அரசுகள்தான் சிறப்புக்கல்வி என்ற முன்னெடுப்பைத் தொடங்கின. அப்போதும்கூட அதுபோன்ற முயற்சிகளில் ஈடுபட்ட இந்து மதம் சார் நிறுவனங்களின் எண்ணிக்கை என்பது  கைவிரல்களுக்குள்ளேயே அடக்கம். எல்லோரும் எல்லாமும் பெறவேண்டும் என்கிற போற்றுதலுக்குரிய இந்த ஜனநாயக யுகத்திலும்கூட, ஒரு பார்வையற்றவருக்கு பைபிலின் அனைத்துப் பகுதிகளும் பிரெயிலில் அதுவும் அவரவர் தாய்மொழியிலேயே படிக்கக் கிடைத்துவிடுகின்றன. ஆனால், கீதை பிரெயிலில் கிடைக்கிறதா என்றால் இல்லை என்பதே பதிலாக இருக்கிறது.

கொஞ்சம் யோசித்தால் புரியும். பார்வையற்றவர்களின் மொழிமனத்தில் பெருமாள், அடியார், தேவலோகம், ஆசி போன்ற சொற்களைவிட கர்த்தர், சீடர், பரமண்டலம், இரட்சிப்பு ஆகிய சொற்கள் இன்னும் அழுத்தமான மேடுறுத்தப்பட்ட அரூப உருவங்களாக படிந்திருக்கின்றன. ஆகவே, இந்துமதத்தின் பல நம்பிக்கைசார் சொற்கள் ஒரு பார்வையற்றவருக்கு அந்நியமாகத் தோன்றுகின்றன. மிகச் சமீப ஆண்டுகளில்தான் நான் மேற்சொன்ன இராகு, குளிகை போன்ற சொற்களை விரலால் தடவிப் பார்க்கும் வாய்ப்பு பெற்றிருக்கிறேன். அதைச் சாத்தியமாக்கியவை இரண்டு பிரெயில் நாட்காட்டிகள். ஒன்று தமிழகப் பார்வையற்றோருக்கான பெரிய கல்வி நிறுவனங்களில் ஒன்றான இந்தியப் பார்வையற்றோர்சங்கத்தின் பிரெயில் அச்சகத்திலிருந்து வெளிவருகிறது. மற்றொன்று நியூ விஷன் ஃப்ரண்ட்ஸ் கிளப் என்ற பெயரில் சில தன்னார்வமிக்க பார்வையற்றவர்கள் இணைந்து செயல்படும் அமைப்பால் இலவசமாக வெளியிடப்படுவது.

ஒப்பீட்டளவில் என்னை நியூவிஷன் நாட்காட்டி பெரிதும் கவர்கிறது. முற்றிலும் இலவசம் என்பதெல்லாம் ஒரு காரணமே அல்ல. ஐஏபி நாட்காட்டியை ஒப்பிடுகையில், இதன் கையடக்கமும் பைண்ட் செய்யப்பட்ட விதமும்  சிறப்பாக இருக்கிறது.

30 செ.மீ. நீளம், 8 செ.மீக்கும் குறைவான அகளமுமாகக் கணக்கிடப்பட்டு வெட்டப்பட்ட எட்டு அழுத்தமான தாள்கள். அவை நீளவாக்கில் சமமாக மடிக்கப்பட்டு, அதன்மீது வழவழப்பான அதேசமயம் உட்தாள்களைவிட மிக அழுத்தமான அட்டையும் சேர்த்து கட்டமைக்கப்பட்டுள்ளது இந்த நாட்காட்டி.

மொத்தம் முப்பத்திரண்டே பக்கங்களில் ஒரு முழு ஆண்டின் முழுச் சித்திரத்தையும் உள்ளடக்கியதாக வடிவமைக்கப்பட்டிருக்கும் தமிழ் பிரெயில் நாட்காட்டி இது. முதல் இரண்டு பக்கங்களில் நாட்காட்டி தயாரிப்பு பணியில் ஈடுபட்ட அமைப்புகளின் பெயர்கள் மற்றும் தொடர்புத் தகவல்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

பக்கம் மூன்று தொடங்கி ஆறுவரை ஒருநாளில் இடம்பெறும் இராகு, குளிகை, எமகண்டம் ஆகியவற்றிற்கான நேரங்கள் கிழமை வாரியாகவும், இறுதியில் அந்த ஆண்டில் நிகழவிருக்கும் சூரிய கிரகணங்கள், சந்திரகிரகணங்களுக்கான தேதிகளும் குறிப்பிடப்பட்டிருக்கின்றன.

பக்கம் ஏழு மற்றும் எட்டில்அமாவாசை,பௌர்ணமி, சதுர்த்தி, பிரதோஷம் போன்ற விரத தினங்களுக்கான பிரெயில் குறியீடுகள் வழங்கப்பட்டுள்ளன. அத்தோடு நாட்காட்டி அச்சடிக்கப்பட்ட பிரெயில் அச்சகத்தின் தொடர்புத் தகவலும் உள்ளது. பிரெயில் குறியீடுகள் என்பவை ஒரு பெரிய, அடிக்கடி பயன்படுத்தவிருக்கிற சொல்லைப் பதிலீடு செய்யும் வகையில் சிறிய அளவில் பிரெயிலில் எழுதப்படுபவை. அதாவது, ஒவ்வொரு மாதத்தின்  தேதிகளை உள்ளடக்கிய பிரத்யேகப் பக்கங்களில் ஒரு குறிப்பிட்ட தேதியில் விரதநாள் வருகிறது என்றால், அந்தத் தேதிக்குப் பதிலாக அதன் குறியீடு பயன்படுத்தப்பட்டிருக்கும். உதாரணமாக, 2021 டிசம்பர் 30ஆம் நாள் ஏகாதேசி எனில், அந்தப் பக்கத்தில் 30 என்ற எண்ணுக்குப் பதிலாக ஏகாதேசியின் பிரெயில் குறியீடாக இரண்டு ஆறுபுள்ளிகள் இடைவெளியின்றி அச்சடிக்கப்பட்டிருக்கும்.

எஞ்சிய 24 பக்கங்களை, ஒரு மாதத்திற்கு இரண்டு பக்கங்கள் என வகுத்து, ஒரு பக்கத்தில் தேதிகள் கிழமை வாரியாகவும், மறுபக்கத்தில் அந்த மாதத்தில் இடம்பெறும் விழாக்கள், பண்டிகைகள், முக்கிய தினங்கள் என அனைத்தும் சமய சார்பின்றித் தொகுக்கப்பட்டிருக்கின்றன. ஆடிப்பெருக்கையும் ஹிஜிரி வருடப்பிறப்பையும் நான் அடுத்தடுத்த சொற்களாகத்  தடவிப் படிப்பதில் பூரிப்பும் பெருமிதமும் கொ்ள்கிறேன். ஸ்ரீ மாணிக்கவாசகர் குருபூஜை, சங்கரன்கோவில் தபசு போன்ற தினங்களுக்கெல்லாம் இதுவரை வெளியிடப்பட்ட வேறெந்த பிரெயில் நாட்காட்டியிலும் இடம் வழங்கப்பட்டதாக நான் படித்ததில்லை.

நானும்கூட இப்போதெல்லாம் என் குடும்பத்தினருக்காக நாட்காட்டியில் இராகு, குளிகையெல்லாம் பார்த்துச் சொல்கிறேன். பிறந்ததிலிருந்தே எனக்கு அந்நியமாகியிருந்த அந்தச் சொற்களோடு ஒரு புதிய உறவு பூத்திருக்கிறது. இன்று நான் என் குடும்பத்தோடும், சுற்றத்தோடும் அந்த நம்பிக்கைகளால் பெரிதும் ஈர்க்கப்பட்ட பெரும்பாலான நண்பர்களோடும் அந்தச் சொற்கள் சேர்த்து நெருக்கமாக உரையாட முடிவது மனதுக்கு மகிழ்வைத் தருகிறது. கவிதையாக இப்படிச் சொல்லலாம், ஒரு நாட்காட்டி ஆட்காட்டியிருக்கிறது.

ஆனால், இந்த முயற்சிக்கெல்லாம் தொடக்கப்புள்ளி எது? அதைச் சாத்தியமாக்கும் நியூ விஷன் ஃப்ரண்ட்ஸ் கிளப் உருவானது எப்போது? தொடர்ந்து பேசுவோம்.

***ப. சரவணமணிகண்டன்

***

2022 ஆம் ஆண்டிற்கான தமிழ் பிரெயில் நாட்காட்டியை பெற விரும்பும் நண்பர்களும், நியூவிஷன் ஃப்ரண்ட்ஸ் கிளப் முயற்சிகளுக்குப் பங்களிப்பு செய்ய விரும்பும் நல்லுள்ளங்களும் தொடர்புகொள்ள வேண்டிய எண்கள்:

9597505510

9952981678

மின்னஞ்சல்: nvfc.friends@gmail.com

பகிர

Be the first to leave a comment

உங்கள் கருத்தை உள்ளிடுங்கள்