அரசாணைகள் அறிவோம்: (1) ஊர்திப்படி அரசாணை

அரசாணைகள் அறிவோம்: (1) ஊர்திப்படி அரசாணை

,வெளியிடப்பட்டது

தொடருக்கு வாசகர்களாகிய நீங்களும் பங்களிப்பு செய்யக் கோருகிறோம்.

கூகுல் செய்திகளில் எம்மைப் பின்தொடர

எந்தவகை மாற்றுத்திறனாளியானாலும் அவரின் இடப்பெயர்வு என்பது, மிகுந்த சிரமங்களும் செலவும் கொண்டதாகவே இருக்கிறது. உதாரணத்திற்கு ஒரு பார்வையற்ற ஆசிரியருக்குப் பள்ளிக்கு வந்து செல்ல இரண்டு வழிகள் இருக்கின்றன. அவர் பொதுப்பேருந்தை பயன்படுத்தலாம் அல்லது வாடகைக்கு மாதாந்திரக் கணக்கில் பேசி ஒரு ஆட்டோவை வைத்துக்கொள்ளலாம். அதாவது, வாடகை என்பதன் கணக்கு ஒரு மாதம்தான். அது நீங்கள் ஒரு நாள் சென்றாலும், 30 நாட்கள் பயன்படுத்திக்கொண்டாலும் தொகை மாறுபடாது.

இந்நிலையில், மாற்றுத்திறனாளிகள் தங்கள் ஊதியத்தின் கணிசமான பகுதியைத் தங்களின் போக்குவரத்துக்காக மட்டுமே செலவிட வேண்டியுள்ளது. அப்படிச் செலவு செய்தபோதும், தங்களுக்கு வசதியான தெரிவு முறையில், எவ்வித இடர்களுமின்றி பயணம் மேற்கொண்டு அவர்கள் தங்கள் பணியிடத்திற்குச் சென்றுவருகிறார்கள் என்றும் உறுதியாகச் சொல்ல முடியாது.

எனவேதான், பணிக்கு வந்து செல்வதில் ஒரு சாதாரண அரசு ஊழியருக்கு இருக்கிற பல்வேறு தெரிவுகள் ஒரு மாற்றுத்திறனாளி அரசு ஊழியருக்கும் இருக்க வேண்டும் என்கிற சமத்துவப் பார்வைக்கான அரசின் குறைந்தபட்ச ஆதரவுகள்தான் பஸ் பாஸ், ஊர்திப்படிகள் எல்லாம்.

1989ல் 50 என வழங்கப்பட்ட மாதாந்திர ஊர்திப்படி, தற்போது 2500 என படிப்படியான உயர்வு கண்டுள்ளது. இதற்காக அரசின் சார்பில் அவ்வப்போது பல அரசாணைகளும், கடிதங்களும் வெளியிடப்பட்டுள்ளன. அவைகுறித்து ஒவ்வொன்றாக இந்தப் பதிவில் அறிந்துகொள்வோம்.

ஐந்தாவது நிதிக்குழுவின் பரிந்துரையை ஏற்று, (அரசாணை நிலை எண் 667 நிதித்துறை) நாள் 27-ஜூன்-1989 அன்று தமிழக அரசு உடல் ஊனமுற்றவர்கள் மற்றும் பார்வையற்ற அரசு ஊழியர்களுக்கான ஊர்திப்படி வழங்கும் அரசாணையினை வெளியிட்டது. இதன்மூலம் தகுதியுடைய ஊனமுற்ற மற்றும் பார்வையற்ற அரசு ஊழியர்கள் ரூ. 50ஐ மாதாந்திர ஊர்திப்படியாகப் பெற்றார்கள்.

தற்செயல் விடுப்பு நீங்களாக இதர விடுப்பு காலங்களில் இந்த ஊர்திப்படி வழங்கப்பட மாட்டாது எனவும் அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அத்தோடு, உரிய மருத்துவ அலுவலரின் பரிந்துரை நாளைத் தொடக்கநாளாகக்கொண்டு தொடர்புடைய அரசு ஊழியருக்கு ஊர்திப்படி அனுமதிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, நிலுவைத்தொகைகளாகப் பெற்றுக்கொள்வது இயலாது என்பதே அதன் பொருள்.

அரசாணையைப் பதிவிறக்க

தொடக்கத்தில் 50ஆக இருந்த ஊர்திப்படி, அரசாணை நிலை எண். 445, நிதி (ஊதியப் பிரிவுத்துறை, நாள் 31.8.1999 நாளிட்ட அரசாணையால் ரூ. 150எனவும், அரசாணை நிலை எண். 236, நிதி (ஊதியப்பிரிவு)த்துறை, நாள் 1.6.2009இன்படி  ரூ. 300 என இரண்டிரண்டு மடங்காக உயர்த்தப்பட்டு வந்தது.

இந்நிலையில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை ஆணையர், மாற்றுத்திறனாளி அரசு ஊழியர்களின் ஊர்திப்படி தொடர்பாக அரசுக்கு ஒரு கடிதத்தை எழுதினார். அந்தக் கடிதத்தில், “மாற்றுத்திறனாளிகள் பொதுப் போக்குவரத்தினை அவர்களது இயலாமை காரணமாக பயன்படுத்துவதில் சிரமம் உள்ளதாலும், தனியார்ப் போக்குவரத்தினை பயன்படுத்தும்போது அதிக செலவினம் மேற்கொள்ள வேண்டியிருப்பதாலும், தங்களது சொந்த வாகனங்களைப் பயன்படுத்தும்போது, எரிபொருள் செலவினம் அதிகமாவதாலும், தமிழக அரசில் பணிபுரியும் மாற்றுத்திறனாளிகளுக்கு ஊர்திப்படியை உயர்த்துவது அவசியம்” எனக் குறிப்பிட்டிருந்தார்.

மேலும், அரசு அலுவலர்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளில் பணிபுரியும் அலுவலர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாத அலுவலர்கள், அரசு நிதியுதவி பெறும் கல்வி நிறுவனங்களில் பணிபுரியும் அலுவலர்கள் என  மாற்றுத்திறனாளிகளுக்கு தற்போது திங்கள்தோறும் வழங்கப்படும் ஊர்திப்படியை (Conveyance Allowance) ரூ.300/-லிருந்து ரூ.1000/ -ஆக உயர்த்தி வழங்குமாறு அந்தக் கடிதத்தின் வாயிலாக அரசுக்குக் கோரிக்கையினை வைத்தார் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை ஆணையர்.

அவரின் பரிந்துரையினை ஏற்ற அரசு, மாற்றுத்திறனாளி அரசு ஊழியர்களுக்கான ஊர்திப்படியினை ரூ.300/-லிருந்து ரூ.1,000/-ஆக (ரூபாய் ஆயிரம் மட்டும்) 1 அக்டோபர் 2010 முதல் உயர்த்தி வழங்கிட ஏதுவாக, நிதி (படிகள்)த்துறை அரசு ஆணை எண்.391, நாள் 07.10.2010 என்ற தேதியிட்ட அரசாணையைப் பிறப்பித்தது.

அரசாணையைப் பதிவிறக்க

உடல் குறைபாடுடையோர்  மற்றும் பார்வை மாற்றுத்திறனாளி அரசு ஊழியர்களுக்கு கடந்த 1989 தொடங்கி, பல்வேறு காலகட்டங்களில் இரட்டித்தும் மும்மடங்காக்கியும் வழங்்கப்பட்டு வந்த மாதாந்திர ஊர்திப்படி, ஏனோ பல ஆண்டுகளாக செவித்திறன் குறைபாடு உடைய அரசு ஊழியர்களுக்கு மட்டும் வழங்கப்படவே இல்லை. இந்த அநீதியைப் போக்கும் பொருட்டு, நிதி (படிகள்)த்துறை அரசாணை நிலை எண் 204, நாள் 30, ஜூன் 2017 தேதியிட்ட அரசாணையின் மூலம், பிற மாற்றுத்திறனாளி அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் மாதாந்திர ஊர்திப்படி இனி செவித்திறன் குறையுடைய மாற்றுத்திறனாளி அரசு ஊழியர்களுக்கும் விரிவாக்கம் செய்யப்படுவதாக அரசு அறிவித்தது.

அரசாணையைப் பதிவிறக்க

தற்போது ஏழாவது நிதிக்குழுவின் பரிந்துரையின்படி, மாதாந்திர ஊர்திப்படி ரூ. 1000-லிருந்து ரூ. 2500-ஆக உயர்த்தி வழங்கப்படுகிறது. நிதி (படிகள்)த்துறை அரசாணை நிலை எண் 307 நாள் 13.10.2017 அன்றைய நாளிட்ட பயணப்படிகள் தொடர்பான அரசாணையின் ஏழாவது பக்கத்தில் இந்த விவரங்கள் இடம்பெற்றுள்ளன என்பதைப் பயனாளிகள் குறித்துக்கொள்ள வேண்டும்.

அரசாணையைப் பதிவிறக்க

ஒருபுறம் ஊர்திப்படியினை குறிப்பிட்ட கால இடைவெளிகளில் அரசு உயர்த்தி நிர்ணயித்துக்கொண்டிருக்க, தணிக்கை என்ற பெயரில் சில உயர் அலுவலர்கள் தங்களின் ஐயத்தை மட்டுமே முன்நிறுத்தி அதைக் குறிப்பிட்ட மாதங்களுக்கு முடக்கவும் செய்தார்கள். உதாரணமாக, மாற்றுத்திறனாளி ஆசிரியர்களுக்கான ஊர்திப்படியினை காலாண்டு, அரையாண்டு, மற்றும் முழு ஆண்டு தேர்வு விடுமுறை நாட்களில் வழங்கக்கூடாது எனவும், அவ்வாறு வழங்கப்பட்டிருப்பின் அவை மொத்தமாகக் கணக்கிடப்பட்டு அரசுக்குத் திருப்பியளிக்கப்பட வேண்டும் எனவும், பள்ளிகளில் மேற்கொள்ளப்படும் தணிக்கை நடவடிக்கைகளின்போது அதிகாரிகளால் கராரான உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன. இதனைப் பின்பற்றி, பல பள்ளி நிர்வாகங்கள் கரோனா பொதுமுடக்கத்தின்போது அரசால் பணிக்கு வருவதிலிருந்து மாற்றுத்திறனாளி அரசு ஊழியர்கள் விலக்கு பெற்றிருந்த காலத்தையும் விடுப்பு காலங்களாகக் கருதி, சில மாதங்களுக்கான ஊர்திப்படியினையும் பிடித்தம் செய்துவிட்டனர்.

மாற்றுத்திறனாளிகளுக்காக இயங்கும் பல்வேறு அமைப்புகள் இந்த விவகாரத்தைக் கையில் எடுத்ததோடு, இது தொடர்பாக நிலவும் குழப்பத்தைப் போக்கிட வேண்டும் என அரசுக்குக் கோரிக்கையும் வைத்தனர். அதன் ஒரு பகுதியாக, மனப்பாறையைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி ஆசிரியர் கார்த்திகேயன், கரோனா பொது முடக்க காலத்தில், மாற்றுத்திறனாளியான தான் பணிக்கு வருவதிலிருந்து அரசால் விலக்கு பெற்றுள்ளதாகவும், எனவே அந்த காலங்களை பணிக்கு வராத விடுப்பு காலங்களாகப் பள்ளி நிர்வாகம் கருதிய நிலையில், தனக்கு வழங்கப்படும் ஊர்திப்படியினைப் பிடித்தம் செய்துவிட்டதாகவும் தலைமைக் கருவூல ஆணையருக்கு ஒரு கடிதம் எழுதினார்.

அவரின் கடிதத்திற்கு கருவூலத் தலைமை ஆணையர் அவர்கள் சார்பில் வழங்கப்பட்ட பதிலில், “கரோனா பொதுமுடக்க காலத்தில் பணிவிலக்கு அளிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி அரசுப் பணியாளர்கள் அனைவரும் பணிக்கு வந்தவராகவே கருதப்படுவர். ஆகவே பணிவிலக்கு பெற்ற மேற்படி மாற்றுத்திறனாளி அரசுப் பணியாளர்கள் அனைவருக்கும் போக்குவரத்துப்படி வழங்கலாம்” எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த பதில்க்கடிதம் பல மாற்றுத்திறனாளி அரசு ஊழியர்களை நிம்மதிப் பெருமூச்சுவிடச் செய்தது. பலர் சில மாதங்களாக வழங்கப்படாத தங்கள் ஊர்திப்படியினை நிலுவையாகவும் பெற்றனர்.

தலைமை கருவூல ஆணையரின் கடிதத்தைப் பதிவிறக்க

இத்தனைக்குப் பிறகும், பள்ளி விடுமுறை நாட்களான ஏப்ரல் மே மாதங்களில் ஊர்திப்படியினை பிடித்தம் செய்வது தொடர்கதையாகவே நீடித்து வந்தது. இதற்கு முற்றுப்புள்ளி வைப்பதாக அமைந்தது, அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் (நிதித்துறை) அவர்களின் கடிதம்.

அந்தக் கடிதத்தில், “அரசாணை (நிலை) எண்.667, நிதி (ஊதியப் பிரிவுத்துறை நாள், 27.06.1989 – இன்படி பார்வைத்திறன் குறைபாடு, கை, இயக்க குறைபாடு மற்றும் செவித்திறன் குறைபாடுடைய மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் ஊர்திப்படியில் தற்செயல் விடுப்பு தவிர தன்னிச்சையாக எடுக்கப்படுகின்ற விடுப்புகள் மற்றும் ஏனைய நீண்ட நாள் விடுப்புகளுக்கு (Joining time, Suspension) மட்டுமே பிடித்தம் செய்யப்பட வேண்டும் என ஆணை வெளியிடப்பட்டுள்ளது.

பள்ளிகளில் காலாண்டுத் தேர்வு, அரையாண்டுத் தேர்வு, முழு ஆண்டுத் தேர்வு மற்றும் ஏனைய அரசு விடுமுறை நாட்களுக்கு ஊர்திப்படியில் பிடித்தம் செய்யப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்படாத நிலையில், சில பள்ளிகளில் பார்வைத்திறன் குறைபாடு, கை, கால் இயக்க குறைபாடு மற்றும் செவித்திறன் குறைபாடுடைய மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் ஊர்திப்படியில் காலாண்டுத் தேர்வு, அரையாண்டுத் தேர்வு, முழு ஆண்டுத் தேர்வு மற்றும் ஏனை அரசு விடுமுறை நாட்களுக்கு ஊர்திப்படி பிடித்தம் செய்யப்படுகிறது என்று, பார்வைத்திறன் குறைபாடுடைய மாற்றுத்திறனாளிகள் ஆசிரியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

அரசாணை (நிலை) எண்.667, நிதி(ஊதியப்பிரிவு ) த் துறை , நாள்

27.06.1989 – இன் ஊர்திப்படி பெறுவதற்காகப் பத்தி எண். 2 வ.எண்.6 – ல் The allowance is not payable during leave (except casual leave), joining time or suspension எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, தற்செயல்விடுப்பைத் தவிர பிற விடுமுறை நாட்களில் பள்ளிக்கல்வித் துறையில் ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் காலாண்டு, அரையாண்டு, முழு ஆண்டு விடுமுறை நாட்கள் பணிக்காலமாகக் கருதப்படுவதால் பார்வைத்திறன் குறைபாடு, கை, கால் இயக்கக் குறைபாடு மற்றும் செவித்திறன் குறைபாடுடைய மாற்றுத்திறனாளி ஆசிரியர்களுக்கு ஊர்திப்படி வழங்கலாம் என தெரிவித்துக்கொள்கிறேன்.” என்ற மிக விளக்கமான தெளிவுரையை வழங்கியிருந்தார்.

இதன்மூலம், ஊர்திப்படி தொடர்பாக காலங்காலமாக நிலவிவந்த பல்வேறு குழப்பங்களுக்கு விடை கிடைத்தது. கூடுதல் தலைமைச் செயலரின் கடிதத்தில் பார்வையற்ற ஆசிரியர் சங்கத்தின் கடிதம் மேற்கோள் காட்டப்பட்டிருந்தமை இந்த விவகாரத்தில் அந்த அமைப்பு மேற்கொண்ட தீவிர முயற்சிகளுக்கான அங்கீகாரம் என்றே கருத வேண்டும்.

கூடுதல் தலைமைச் செயலரின் கடிதத்தைப் பதிவிறக்க

சில நாட்களாகவே, மாற்றுத்திறனாளிகள் அதிகம் புழங்கும் வாட்ஸ் ஆப் குழுக்களில் ஊர்திப்படி தொடர்பான அரசாணைகளைப் பகிருமாறு அவ்வப்போது எவராவது கேட்பதும், உடனே இன்னொருவர் அதைப் பகிர்வதும், மீண்டும் சிலகாலம் கழிந்தபின் அதை வேறோருவர் கேட்பதும் இப்படியே ஒரு குறிப்பிட்ட செயல் மீண்டும் மீண்டும் செய்யப்பட்டுக்கொண்டே இருக்கிறது.

எனவேதான் ஊர்திப்படி தொடர்பாக அரசால் இதுவரை வெளியிடப்பட்டுள்ள அரசாணைகளை மொத்தமாக ஒரே இடுகையில் தொகுத்திருக்கிறோம்.

ஊர்திப்படிதான் என்றில்லை. பல சமயங்களில் மிகமிகச் சாதாரணமான அன்றாடப் புழக்கத்தைக் கோருகிற அரசாணைகள், அரசுக்கடிதங்கள், மற்றும் படிவங்கள், அவை பிறப்பிக்கப்பட்டதன் பின்னே இருக்கிற உரிமைசார் காரணங்கள், அவற்றைச் செயல்வடிவம் பெறச் செய்வதற்கு பல்வேறு அமைப்புகள் மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து அதன் பயனாளிகளாகிய நாம் அறிந்துகொள்வது அவசியம். எனவே, சவால்முரசின் புதிய முயற்சியாக அரசாணைகள் அறிவோம் என்ற தொடரினைத் தொடங்குகிறோம்.

தொடருக்கு வாசகர்களாகிய நீங்களும் பங்களிப்பு செய்யக் கோருகிறோம். நீங்கள் அறிந்த அரசாணைகள் குறித்தும், அதன் வரலாற்றுப் பின்னணி குறித்தும் எங்களுக்கு எழுத்து வடிவிலோ அல்லது குரல்ப்பதிவாகவோ உங்கள் பகிர்வை அனுப்புங்கள். நீங்கள் விளக்க விரும்பும் அரசாணையின் பிடிஎஃப் வடிவத்தையும் இணைத்திடுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

உங்கள் பகிர்வினை savaalmurasu@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் செய்யுங்கள்.

அல்லது 9789533964 என்ற வாட்ஸ் ஆப் எண்ணுக்குக் குரல்ப்பதிவும் இடலாம்.

‘அறிவோம், தெளிவோம், அறிவிப்போம்.’

பகிர

2 thoughts on “அரசாணைகள் அறிவோம்: (1) ஊர்திப்படி அரசாணை

  1. மாற்றுதிறனாளிகளுக்கு கல்லூரி விடுமுறை நாட்கள் மற்றும் மருத்துவ விடுப்பு எடுத்தால் ஊர்திப்படி பிடித்தம் செய்யப்படுகிறது . விடுமுறை காலங்களில் ஊர்திப்படி பிடித்தம் செய்யகூடாது என்று தமிழக அரசு ஆனையிட்டுள்ளது அதன் அரசானையை பதிவிடுமாறு பணி வுடன் கேட்டுக் கெ nள்கிறேன்

  2. அரசு கல்லூரியில் பணி புரியும் மாற்றுத்திறனாளிகளுக்கு விடுமுறை காலங்களில் ஊர்திப்படி வழங்கலாம் என்பதன் அரசானையை பதிவிடுமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்

உங்கள் கருத்தை உள்ளிடுங்கள்