வெளியானது மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் கோவிட் நிலையான வழிகாட்டு நெறிமுறைகள்

வெளியானது மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் கோவிட் நிலையான வழிகாட்டு நெறிமுறைகள்

,வெளியிடப்பட்டது

மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு எளிதில் நோய்த்தொற்று பாதிக்கக்கூடும் என்பதால் அவர்களை பள்ளிக்கு அனுமதிக்காமல் இணையவழி மாற்றுவழிக்கற்றல் முறையில் ஈடுபடுத்தலாம்.

கூகுல் செய்திகளில் எம்மைப் பின்தொடர

மாற்றுத்திறனாளிகள் நலத்துறை லோகோ
மாற்றுத்திறனாளிகள் நலத்துறை லோகோ

தமிழகத்தில் கரோனா பெருந்தொற்று நாளுக்குநாள் அதிகரித்துவரும் நிலையில், விடுதியுடன் இயங்கும் சிறப்புப்பள்ளிகள் மற்றும் மறுவாழ்வு இல்லங்களுக்கான கோவிட் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில ஆணையரகம் வெளியிட்டுள்ளது. ஆணையரகத்தால் வெளியிடப்பட்டுள்ள செயல்முறை நடவடிக்கைகளில் கூறப்பட்டுள்ளதாவது,

“தமிழ்நாட்டில் நிலவிவரும் கொரோனா பெருந்தொற்று மூன்றாவது அலை காரணமாக அனைத்து மாவட்டத்திலும் மாற்றுத்திறனாளிகள் தங்கியிருக்கும் சிறப்புப்பள்ளிகள் மற்றும் இல்லங்களில், மாணவர்கள் மற்றும் இல்லவாசிகளுக்கு கொரோனா பெருந்தொற்று பரவுவதைத் தவிர்க்கும் பொருட்டு நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் கீழ் கண்டவாறு தெரிவிக்கப்படுகிறது.

  1. சோடியம் ஹைப்போகுளோரைட் கரைசல் தெளித்து ஏற்கனவே அரசு வெளியிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி வளாகம் மற்றும் தளவாட பொருட்கள், கைப்பிடிகள், கதவுகள், ஜன்னல்கள் போன்றவற்றை சுத்தம் செய்து கிருமி நீக்கம் செய்ய வேண்டும்.

2 கைகளைச் சுத்தம் செய்வதற்கு சோப்பினைக்கொண்டு குழாய்களில் ஓடும் நீரில் நன்கு கழுவுதல் வேண்டும். கைகளைச் சுத்தம் செய்யும் கிருமி நாசினி (Hand Sanitizer) பயன்பாட்டிற்கு வைக்கப்பட்டிருக்க வேண்டும்.

3. சிறப்புப்பள்ளிகள் மற்றும் மறுவாழ்வு மையங்களின் வளாகத்திற்குள் அனைத்துப் பகுதிகளிலும் மக்கள் அனைவரும் முகக்கவசம் அணிவது கட்டாயமாகும். முகக்கவசங்களை அடிக்கடி தொடுவது தவிர்க்கப்படவேண்டும். முகக்கவசங்களை மற்றவர்களுடன் பரிமாரிக்கொள்ளக்கூடாது. சுவாச ஒழுங்குமுறை பற்றி மாற்றுத்திறனாளிகளுக்குக் கற்றுத்தரவேண்டும்.

4. சிறப்புப்பள்ளிகள் மற்றும் மறுவாழ்வு மையங்களின் நுழைவு வாயில், வெளியேறும் இடங்கள் மற்றும் தேவைப்படும் இடங்களில் ஆல்கஹால் கலந்த கிருமிநாசினி/சோப்புகள் வைக்கப்பட்டு கை கழுவும் வசதிகள் செய்யப்பட வேண்டும்.

5. உடல்வெப்பப் பரிசோதனைக் கருவிகள் (Thermal Scanner), கிருமிநாசினிகள், சோப்புகள், பல்ஸ் ஆக்ஸிமீட்டர்கள் (Pulse Oximeter) போன்ற பொருட்கள் சிறப்புப்பள்ளி மற்றும் மறுவாழ்வு இல்லங்களில் உறுதி செய்யப்பட வேண்டும்.

6. கழிப்பறைகள் முறையாகக் கிருமிநாசினியால், சுத்தம் செய்யப்பட்டு பராமரிக்கப்பட வேண்டும்.

7. பெருந்தொற்றின் காரணமாக ஆசிரியர்கள் பணியாளர்கள் தொட்டுணர் வருகைப்பதிவிற்கு (Biometric) பதிலாக, சிறப்புப்பள்ளி நிர்வாகத்தால் தற்காலிக மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும்.

8. மாநில அரசின் அவசர உதவி எண். மற்றும் உள்ளூர் சுகாதார அதிகாரிகள், நடமாடும் மருத்துவக் குழுக்களின் தொலைபேசி எண்கள் பார்வையில் படக்கூடிய இடங்களில் வைக்கப்பட வேண்டும்.

9. சிறப்புப்பள்ளி மாணவர்கள் , இல்லவாசிகள் வகுப்பறைக்கு மறுவாழ்வு மையத்திற்கு வெளியே சுற்றித்திரிதல் தவிர்க்கப்பட வேண்டும்.

10. சிறப்புப்பள்ளி மாணவர்கள், இல்லவாசிகள் சமூக இடைவெளிக்கான விதிமுறைகளைப் பின்பற்றி குறைந்தபட்சம் 6 அடி சமூக இடைவெளியைப் பின்பற்ற வேண்டும்.

11 கூட்ட நெறிசலுக்கு வழிவகுக்கும் இறைவணக்கக் கூட்டம், விளையாட்டு நிகழ்ச்சிகள் மற்றும் கலாச்சார நிகழ்வுகள் தவிர்க்கப்பட வேண்டும்.

12. வகுப்பறைகள், நூலகங்கள், கழிவறைகள், கை கழுவும் இடங்கள், குடிநீர்ப்பகுதிகள், சமையலறை, அரங்குகள், பேருந்துகள் வண்டிகள் நிறுத்துமிடம், நுழைவுவாயில் மற்றும் வெளியேறும் வழிகள் போன்ற இடங்களில் சமூக இடைவெளியைப் பின்பற்றுவதை நினைவுபடுத்தும் வகையில் சுவரொட்டிகள், குறியீடுகள் போன்றவை வைக்கப்பட வேண்டும்.

13. ஆசிரியர்கள், பெற்றோர்கள், பணியாளர்கள் மற்றும் சிறப்புப்பள்ளி மறுவாழ்வு மைய தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் குழு உறுப்பினர்கள் இணைய வழி, நேரடிமுறைகள், துண்டுப்பிரசுரங்கள், கடிதங்கள், கிராமங்கள் மற்றும் நகர்புறத்தில் வார்டு அலுவலகத்தில் உள்ள ஒலிப்பெருக்கிகள் மூலம் கோவிட்-19 நோய் தன்மையை உணர்ந்து செய்யக்கூடிய மற்றும் செய்யக்கூடாதவைகளை விளக்கிக்கூற வேண்டும்.

14. தனிமனித சுகாதாரம் தனிமனித ஆரோக்கியம் மற்றும் தூய்மையான சீருடையின் அவசியம் குறித்து மாற்றுத்திறனாளிகளுக்கு அவர்தம் பெற்றோகள், உயர் அதிகாரிகள் விளக்கிக்கூற வேண்டும்.

15. மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு எளிதில் நோய்த்தொற்று பாதிக்கக்கூடும் என்பதால் அவர்களை பள்ளிக்கு அனுமதிக்காமல் இணையவழி மாற்றுவழிக்கற்றல் முறையில் ஈடுபடுத்தலாம்.

16. சிறப்புப்பள்ளி மாணவர்கள் இல்லவாசிகள் பணியாளர்களுக்கு உடல்வெப்பப் பரிசோதனை செய்யும்போது இருமல் சளி மற்றும் மூச்சுத்திணறல் போன்ற பிற அறிகுறிகளும் உள்ளனவா என்பதை ஆய்வு செய்தல் வேண்டும். இவ்வறிகுறிகள் ஒரு நபருக்கு இருக்குமேயானால் அவரை தனிமைப்படுத்த வேண்டும். அருகில் உள்ள சுகாதாரப்பணியாளருக்குத் தெரிவிக்கப்பட வேண்டும். சிறப்புப்பள்ளி, மறுவாழ்வு மையம் முழுவதும் கிருமிநாசினியால் சுத்தம் செய்யப்பட வேண்டும்.

17. பாடப்புத்தகங்கள், குறிப்பேடுகள், பென்சில், பேனா, உணவு, தண்ணீர் பாட்டில் போன்றவைகளை இல்லவாசிகள் பகிர்தல் கூடாது.

18. சிறப்புப்பள்ளிகள் மற்றும் மறுவாழ்வு மையங்களில் சுகாதாரமான முறையில் சமைத்த சுத்தமான, சத்தான நோய் எதிர்ப்புத்திறன் கொண்ட உணவுகள் வழங்கப்பட வேண்டும். உணவு வழங்கும் இடங்களிலும், உண்ணும் இடங்களிலும் கூட்ட நெரிசல்களைத் தவிர்க்க வேண்டும்.

19. சிறப்புப்பள்ளி மற்றும் மறுவாழ்வு மையங்களில் தேவையற்ற பார்வையாளர்களின் நுழைவு தவிர்க்கப்பட வேண்டும்.

20. 15 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் (மாற்றுத்திறனாளிகள் மற்றும் பணியாளர்கள்) கொரோனா தடுப்பூசி (100%) செலுத்திக்கொள்வதை உறுதி செய்துகொள்ள வேண்டும்.

21 மாற்றுத்திறனாளிகளின் உணர்வு சார்ந்த பிரச்சனைகளைக் கவனித்துக்கொள்வதற்கு மனநல மருத்துவர் உளவியல் நிபுணர் ஆலோசகர் முறையாக வருவதை உறுதி செய்ய வேண்டும்.”. என மாற்றுத்திறனாளிகள் நலத்துறையால் வெளியிடப்பட்டுள்ள நிலையான வழிகாட்டு நெறிமுறைகளில் (SOP) தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம், மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு எளிதில் நோய்த்தொற்று பாதிக்கக்கூடும் என்பதால் அவர்களை பள்ளிக்கு அனுமதிக்காமல் இணையவழி மாற்றுவழிக்கற்றல் முறையில் ஈடுபடுத்தலாம் என்கிற கருத்து பள்ளித் தலைமை ஆசிரியர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. எதிர்வரும் 19ஆம் தேதி 10 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கு திருப்புதல் தேர்வு தொடங்க உள்ளதால், பொங்கல் விடுமுறைக்கு தங்களின் சொந்த ஊர்களுக்குச் சென்றுள்ள மாணவர்களைத் திரும்ப அழைத்துக்கொள்வதா அல்லது வீட்டிலிருந்தபடியே அவர்களை இணையவழிக் கற்றலில் ஈடுபடுத்துவதா என்ற கேள்வி சிறப்புப்பள்ளித் தலைமை ஆசிரியர்களிடையே எழுந்துள்ளது.

நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைப் பதிவிறக்க:

பகிர

Be the first to leave a comment

உங்கள் கருத்தை உள்ளிடுங்கள்