வரலாற்றை மீட்டெடுக்கிற தோழர்களின் முயற்சி: நன்றிகளும் வாழ்த்துகளும் பாராட்டுகளும்

வரலாற்றை மீட்டெடுக்கிற தோழர்களின் முயற்சி: நன்றிகளும் வாழ்த்துகளும் பாராட்டுகளும்

,வெளியிடப்பட்டது

தமிழக வரலாற்றில் ஒரு பார்வை மாற்றுத்திறனாளி ஒரு கட்சியின் மாவட்ட செயலாளராக நியமனம் பெறுவது இதுதான் முதல்முறை. முழுக்க முழுக்க இந்தப் பெருமை தமிழக மாக்சிஸ்ட் கம்னியூஸ்ட் கட்சியையே சாரும்.

கூகுல் செய்திகளில் எம்மைப் பின்தொடர

பாரதி அண்ணா
பாரதி அண்ணா

பார்வை மாற்றுத்திறனாளி ஒருவரை மாவட்ட செயலாளராக நியமித்து தமிழக சிபிஐஎம் கட்சி வரலாற்றைப் படைத்திருக்கிறது. செங்கற்பட்டு மாவட்ட செயலாளராக கட்சியால் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் பாரதி அண்ணா ஒரு பார்வை மாற்றுத்திறனாளி.

அனைத்துவகை மாற்றுத்திறனாளிகளுக்கான பாதுகாப்போர் உரிமைகள் சங்கத்தில் (டாராடாக்) தன்னை இணைத்துக்கொண்டு சமூகப்பணிகள் செய்துவரும் இவர் ஒரு வழக்கறிஞர் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழக வரலாற்றில் ஒரு பார்வை மாற்றுத்திறனாளி ஒரு கட்சியின் மாவட்ட செயலாளராக நியமனம் பெறுவது இதுதான் முதல்முறை. முழுக்க முழுக்க இந்தப் பெருமை தமிழக மாக்சிஸ்ட் கம்னியூஸ்ட் கட்சியையே சாரும். ஆனால், தோழர்களுக்கு இது ஒன்றும் புதிதில்லை. எழுபது ஆண்டுகளுக்கு முன்பாகவே கம்னியூஸ்ட் கட்சியைச் சேர்ந்த ஒரு பார்வை மாற்றுத்திறனாளி மக்களவை உறுப்பினராகப் பணியாற்றியிருக்கிறார்.

சதன் சந்திரகுப்தா: யார் இவர்?

சதன் சந்திரகுப்தா
சதன் சந்திரகுப்தா

7.நவம்பர்.1917 டாக்காவில் வழக்கறிஞர் யோகேஷ் சந்திரகுப்தாவின் மகனாகப் பிறந்தார் சதன் சந்திரகுப்தா.

குழந்தைப் பருவத்தில் ஏற்பட்ட சின்னம்மை நோய் காரணமாக தனது முழுப்பார்வையையும் இழந்தார் சதன். கொல்கத்தா பார்வையற்றோர் பள்ளியில் படித்து, கொல்கத்தா பிரசிடென்சி கல்லூரியில் பொருளியல் இளங்கலையும், முதுகலை சட்டமும் பயின்ற சதன், 1939ல் இந்திய கம்னியூஸ்ட் பார்டி சிபிஐஇல் இணைந்தார். இத்தனைக்கும் இவர் தந்தை இந்திய தேசிய காங்கிரஸைச் சேர்ந்தவர்.

1952 பொதுத்தேர்தலில் தென்கிழக்கு கொல்கத்தா தொகுதியில் பாரதிய ஜனசங்கத்தின் நிறுவனரும் இந்தியாவின் வணிகம் மற்றும் தொழில்த்துறை அமைச்சராகப் பணியாற்றிய மறைந்த ஷியாமா பிரசாத் முகர்ஜியை எதிர்த்துப் போட்டியிட்டு வெற்றிவாய்ப்பை இழந்தார்.

ஆனால், தோழர்கள் அவரைக் கைவிடவில்லை. மாநிலங்களவையின் உறுப்பினராக ஆக்கி அழகு பார்த்தனர். முகர்ஜியின் மறைவுக்குப் பிறகு, 1953ல் நடந்த இடைத்தேர்தலில் வென்று சதன் சந்திரகுப்தா நாடாளுமன்ற உறுப்பினரானார். இதன்மூலம், சுதந்திர இந்தியாவில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட  பார்வையற்ற முதல் நாடாளுமன்ற உற்உப்பினர் என்ற பெருமையைப் பெற்றார்்.

கம்னியூஸ்ட் கட்சிகளின் பிரிவுக்குப் பிறகு, மாக்சிஸ்ட் கம்னியூஸ்ட் சிபிஐஎம்மில் தன்னை இணைத்துக்கொண்டார் சதன். 1969ல் காலிகட் சட்டமன்றத் தொகுதியில் வெற்றிபெற்று மேற்குவங்க சட்டமன்றத்திலும் உறுப்பினர் ஆனார்.

1977ல் மேற்குவங்காளத்தில் முதன்முறையாக ஆட்சியைப் பிடித்தது மாக்சிஸ்ட் கம்னியூஸ்ட் கட்சி. அந்த ஆட்சியில் மாநிலத்தின் துணை அட்வகேட் ஜெனரலாக நியமிக்கப்பட்டார் சதன்.

1986ல் மாநிலத்தின் அன்றைய அட்வகேட் ஜெனரல் சுகான்சு கண்ட் ஆச்சாரியாவின் மறைவுக்குப் பின் சதன் அட்வகேட் ஜெனரலாக நியமிக்கப்பட்டார். இந்திய வரலாற்றில் அட்வகேட் ஜெனரலாகப் பதவிவகித்த முதல் பார்வையற்றவர் என்ற பெருமையையும் பெற்றார் சதன் சந்திரகுப்தா.

அரசியலில் மட்டுமின்றி பார்வையற்றோருக்கான சமூகப்பணிகளிலும் தன்னை ஈடுபடுத்திக்கொண்டு, தேசிய பார்வையற்றோர் சம்மேளனத்தின் (NFB) தலைவராகவும் பணியாற்றிய இவர், கடந்த 19.செப்டம்பர் 2015 அன்று இயற்கை எய்தினார்.

தமிழகத்தில் தோழர்களின் செயலை முன்னுதாரணமாகக்கொண்டு பிற தமிழகக் கட்சிகள் தகுதியும் திறமையும் வாய்ந்த மாற்றுத்திறனாளிகளுக்குத் தங்கள் கட்சிகளில் முக்கியப் பொறுப்புகளை வழங்கிட வேண்டும். சமூகநீதியைத் தன் அடிப்படைக் கொள்கையாகக்கொண்டிருக்கும் திராவிடக்கட்சிகள் இதுதொடர்பாக சிந்திப்பதும், செயலாற்றுவதும் காலத்தின் கட்டாயம்.

தனது அயராத சமூகப்பணிகளால் இன்னோரு சதன் சந்திரகுப்தாவாக உயரவிருக்கும் திரு. பாரதி அண்ணாவுக்கு வாழ்த்துகள்.

தமிழக மாக்சிஸ்ட் கம்னியூஸ்ட் கட்சிக்கு பார்வை மாற்றுத்திறனாளிகள் சார்பில் நன்றிகளும் பாராட்டுகளும்.

பகிர

1 thought on “வரலாற்றை மீட்டெடுக்கிற தோழர்களின் முயற்சி: நன்றிகளும் வாழ்த்துகளும் பாராட்டுகளும்

  1. இந்தியாவில் ஒரு பார்வையற்ற மாற்றுத் திறனாளி மக்களவை உறுப்பினராகவும் மாநிலங்களவை உறுப்பினராகவும். தேர்வான செய்தியை நான் இத்தளத்தில் படித்து தெரிந்து கொண்டேன்
    செங்கல்பட்டு மாவட்டத்தில் மாவட்ட செயலாளராக தேர்வாக இருக்கும் அண்ணன் அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்

உங்கள் கருத்தை உள்ளிடுங்கள்