என்று தணியும் என் ஏக்கம்

என்று தணியும் என் ஏக்கம்?

,வெளியிடப்பட்டது

பயிற்சி கொடுத்தோம், அனுப்பினோம் என்றில்லாமல், அந்த இல்லப் பொறுப்பாளர்களே பல பெண்களுக்கு வரன்தேடித் திருமணமும் செய்துவைத்திருக்கிறார்கள்.

கூகுல் செய்திகளில் எம்மைப் பின்தொடர

blind cafe
blind cafe

கடந்த நவம்பர் மாதம், டெல்லியிலுள்ள பார்வையற்ற மகளிருக்கான அதிகாரமளித்தல் மையத்தின் சார்பில் பார்வையற்ற மகளிரால் நிர்வகிக்கப்படும் ப்லைண்ட் கபே திறக்கப்பட்டுள்ளது. இந்த மையம் தேசிய பார்வையற்றோர் சங்கத்தால் நடத்தப்படுகிறது. இங்கு சமோசாக்கள், சேண்ட்வெஜ்கள், காஃபி என பலவிதமான சிற்றுண்டிகள் சுவையாகவும் தரமாகவும் செய்யப்பட்டு, அவை சுடச்சுட பரிமாறப்படுகின்றன. சமைப்பது, பரிமாறுவது, கணக்கு வழக்கு என அத்தனை செயல்களையும் செய்பவர்கள் பார்வையற்ற பெண்கள் என்பதுதான் மகிழ்ச்சிக்கும் பெருமிதத்திற்கும் உரிய செய்தி.

மையத்தின் சார்பில் நடத்தப்படும் விடுதியுடன் கூடிய பயிற்சியில் இணைந்து சுமார் 35 பார்வையற்ற பெண்கள் பயிற்சி பெற்றுவருகிறார்கள். அவர்களில் சிலரைத் தேர்ந்தெடுத்து இந்த கபே நடத்தப்படுவதாகச் சொல்கிறார் மையத்தின் பொறுப்பாளர் ஷாலினி கண்ணா. பயிற்சிக்குப் பிறகு பல பார்வையற்ற பெண்கள் தங்கள் ஊர்களில் சொந்தமாகவே டீக்கடை நடத்தவும் முன்வருவதுதான் இந்தப் பயிற்சியின் வெற்றி என்கிறார் அவர்.

தற்போது சிறிய அளவில் முப்பது இறுக்கைகளுடன் செயல்படும் இந்தச் சிற்றுண்டிச்சாலையிலிருந்து நகரின் பல பகுதிகளுக்கும் பண்டங்கள் டெலிவரி செய்யப்படுகின்றன. இந்தக் கபேயின் எல்லா மேசைகளையும் பிரெயில் மெனுக்கல் அலங்கரிக்கின்றன. சீணா ஸாஹனி என்னும் பார்வையு்ள தொழில்முறை பேக்கர் இந்தப் பெண்களை மேற்பார்வை செய்தபடி, தேவையான சமயங்களில் உரிய வழிகாட்டல்களையும் வழங்குகிறார்.

சமையலுக்கான பொருட்களை அடிக்கடி இடம் மாற்றாமல் ஒரே இடத்தில் பராமரிப்பது, சேர்மானங்களின் சரியான விகிதங்கள் பற்றி அவதானிப்பது , போன்ற சின்னச்சின்ன நுட்பங்களை மட்டும் கற்றுக்கொண்டாலே சாதாரண நபரைவிடவும் நன்றாகவே தங்களால் சமைக்க முடியும் என்கிறார்கள் அங்கு பணியாற்றும் பெண்கள். இங்கு பயிற்சிக்கு வரும் பெண்களுக்கு விரைவிலேயே திருமணம் நடந்துவிடுவதாக சிரித்துக்கொண்டே சொல்லும் கண்ணா, பார்வையற்ற பெண்கள்தான் என்றில்லை, பல பார்வையற்ற ஆண்களும் சமையல் கற்பதில் தற்போது ஆர்வம் காட்டி வருவதால், அவர்களுக்காக இணையவழியிலும் பயிற்சிகள் நடத்தப்படுவதாகச் சொல்கிறார்.

ப்லைண்ட் கபே பற்றி டைம்ஸ் ஆஃப் இந்தியாவில் வந்துள்ள செய்தியைப் படிக்க:

ஏன் இதுபோன்ற முன்னெடுப்புகளை நம் மாநிலத்தில் எவரும் முயன்று பார்ப்பதில்லை? பார்வையற்ற பெண்கள் என்பதாலேயே பள்ளிக்கல்வி மறுக்கப்பட்ட, திருமணம் ஆகாத நிறையப் பெண்கள் வீட்டின் ஒரு மூளையில் முடங்கிக் கிடக்கிறார்கள். இங்கே பெண்களுக்கான பயிற்சி மையங்களே ஒன்றோ இரண்டோதான் இருக்கின்றன. அவைகளும் காலப்போக்கில் வயதான பெண்களுக்கான காப்பகங்களாக மெல்ல செயலிழக்கின்றன.

பார்வையற்ற பெண்களுக்காக திருச்சியில் இயங்கும் ஒரு தனியார் இல்லம் முன்பு வெற்றிகரமாகச் செயல்பட்டுக்கொண்டிருந்தது. அங்கே சமையல், சோப்பு தயாரிப்பு, எனப் பல்வேறு பயிற்சிகளைக் கற்றுக்கொள்ளும் பார்வையற்ற பெண்கள் கூடவே தங்களின் படிப்பையும் விடாமல் தொடர வாய்ப்பளிக்கப்பட்டது. அங்கு பயிற்சி பெற்ற பல பார்வையற்ற பெண்கள், இன்று சமூகத்தின் உச்ச மதிப்பைப் பெற்றிருக்கிறார்கள்.

பயிற்சி கொடுத்தோம், அனுப்பினோம் என்றில்லாமல், அந்த இல்லப் பொறுப்பாளர்களே பல பெண்களுக்கு வரன்தேடித் திருமணமும் செய்துவைத்திருக்கிறார்கள். மண்ணும், பொன்னும், பொருளும் குறைவின்றிக் கையகளப் பெற்றுக்கொள்ளும் அடுத்த தலைமுறை ஏனோ அர்ப்பணிப்பு உணர்வை மட்டும் அனாதையென விட்டுவிடுகிறது.

இது தொடர்பில் அரசுக்கும் புதிய சிந்தனைகள் இருப்பதாகத் தெரியவில்லை. பார்வையற்ற மகளிருக்காக கிண்டியில் இயங்கிவந்த சாந்தம் தொழிற்பயிற்சி மையம், பூவிருந்தவல்லி பார்வையற்றோர் பள்ளி வளாகத்துக்கு மாற்றப்பட்டு, படிப்படியாக அதன் நோக்கம் வலுவிழந்து, தற்போது செயல்திறன் குன்றிய நிலையில் இருக்கிறது. இப்படியான விரக்தி மனநிலையில் இருக்கும் எனக்கு மேற்கண்ட செய்தி வியப்பைத் தரவில்லை. மனதுக்குள் ஒருவித ஏக்கத்தை விதைத்துவிட்டது.

என்று தணியும் என் ஏக்கம்?

***ப. சரவணமணிகண்டன்

பகிர

Be the first to leave a comment

உங்கள் கருத்தை உள்ளிடுங்கள்