காணொளிகள் அல்ல வழிகாட்டி ஆவணங்கள்

காணொளிகள் அல்ல வழிகாட்டி ஆவணங்கள்

,வெளியிடப்பட்டது

புகழ்பெற்ற பன்னாட்டு நிறுவனங்களில் மனிதவள மேலாளராக வினோதும், நிரலாளராக மணிகண்டனும் சேர்ந்ததோடு அவர்களின் போராட்டம் ஒரு முடிவுக்கு வந்துவிட்டதா என்றால் அதுதான் இல்லை.

கூகுல் செய்திகளில் எம்மைப் பின்தொடர

பணிவாய்ப்பு என்றவுடனேயே தனியார்த்துறையை நாடாமல்  அரசுப்பணியையே அனைவரும் நாடுகிற மனநிலை எக்காலத்திற்கும் உரியது. காரணம், அரசுத்துறைகளில் பணிக்குத் தன்னைத் தகுதிப்படுத்திக்கொண்டதாக ஆவணங்களைக் காட்டினால் போதும். அதுவும் பணியில் சேர்கிற அந்த ஒருமுறை மட்டும். ஆனால், தனியார்த்துறையில் அப்படியல்ல, அங்கே உங்கள் ஆவணங்கள் செல்லாது, ஆளுமையே மதிப்பிடப்படும். அதுவும் ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு நிகழ்விலும்.

அந்த வகையில், முன்னணி பன்னாட்டு தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் வெற்றிகரமாகப் பணியாற்றிக்கொண்டிருக்கும் பார்வையற்றவர்களான திரு. வினோத் பெஞ்சமின் மற்றும் திரு. மணிகண்டன் இருவரையும் பேராசிரியர் ரகுராமன் கர்ணவித்யா ஃபவுண்டேஷனுக்காக செய்த நேர்காணல் சிறப்பானது. இந்த எட்டு காணொளிகளும் தகவல் தொழில்நுட்பத்துறையில் சாதிக்க விரும்பும் பார்வையற்றவர்களுக்கான வழிகாட்டி ஆவணமாக காலத்திற்கும் இருக்கும். அதை பத்திரப்படுத்துவது நமது கடமை என்பதால் இதனை எழுதுகிறேன்.

என்விடிஏ, ஈஸ்பீக் வருகைக்குப் பின்னான கடந்த 10, 12 ஆண்டுகளில் பார்வையற்றோரிடையே தொழில்நுட்ப அறிவும் பயன்பாடும் அதிகரித்திருப்பதில் வியப்பில்லை. ஆனால், பொதுச்சமூகத்தில்கூட கணினிகளே சரிவர அறிமுகம் ஆகாத 2000களில் வினோத் அவர்கள் போட்டிருக்கிற எதிர்நீச்சல் வியப்புக்கும் போற்றுதலுக்கும் உரியது. அவருடைய வேலை தேடும் படலம் குறித்தெல்லாம் சில கூடுகைகளில் கேட்டிருக்கிறேன் என்றாலும், இந்த நேர்காணலில்தான் மிக விரிவாக அறிந்துகொள்ள முடிந்தது.

வினோதின் முயற்சிகள், பெற்ற வெற்றிகளும் சபாஷ் போடவைப்பது என்றால், மணிகண்டனின் கதை நம்மை இன்னும் உலுக்குவதாக இருக்கிறது. பதின்ம வயதுக்கே உரிய வண்ண வண்ணக் கனவுகளுடன் பைக்கில் கல்லூரி போய் வந்துகொண்டிருந்த ஒரு இளைஞனின் வாழ்வைத் திடீரென சூழும் இருள் மிகக் கொடுமையானது. பார்வையற்றவர்களாகிய நமக்குப் புரியும்படிச் சொன்னால், நமது கைகள், காதுகள் மற்றும்  வாயையும் இறுகக் கட்டிவிட்டு எங்கோ தொலைவில் கொண்டுபோய் விட்டுவந்தால் இருக்கிற மிரட்சியும் அதிர்ச்சியும் கலந்த மனநிலைதான் அவருக்கும் அவரின் பெற்றோர், உறவினர் என அனைவருக்குமே இருந்திருக்கும். இறுக்கமும், கையறுநிலையும் கொண்ட அந்த காலத்தைக் (transitional period ) கடந்து வருவது என்பதே மிகப்பெரிய சாதனைதான். அதோடு அவர் நின்றுவிடவில்லை என்பதுதான் அவரின் தனித்த அடையாளமாக இருக்கிறது.

பதின்ம வயதில் தன் பார்வையை இழந்த மணிகண்டன், ஒரு முழுப்பார்வையற்றவராக அன்றாட வாழ்க்கைத்திறன் பயிற்சி (Daily Living Skills) மற்றும் கணினிப் பயிற்சி பெற [சென்னையிலுள்ள தேசிய பார்வையற்றோர் நிறுவனத்தின் மையத்தில் (NIVH) 2011ல் சேர்ந்திருக்கிறார். என்ஐவிஎச்சில் மணிகண்டன் சேர்ந்தபோது அவருக்கு இருந்த மனநிலை என்பது, எனது ஆறு வயதில் முதன்முதலில் நான் சிறப்புப் பள்ளியில் சேர்ந்த அனுபவத்தை ஒத்திருக்கிறது. ஆனால், அப்போது நான் எதையும் பகுத்தறியும் முதிர்ச்சியில்லாச் சிறுவன். அவரோ, எல்லாம் அறிகிற மிகவும் உணர்ச்சி வசப்படுகிற வயதுக்காரர். தனக்கு முன்னால் இருப்பது, தான் இதுவரை அறியாத வேறு உலகம், வேறு மனிதர்கள், அவர்களின் பாஷைகூட அவருக்கு அந்நியமாகத் தெரிந்திருக்கிறது என்றால், அந்த மனநிலையைக் கடந்து வருவதற்கே மிகப்பெரிய மனோதிடம் வேண்டும்.

புகழ்பெற்ற பன்னாட்டு நிறுவனங்களில் மனிதவள மேலாளராக வினோதும், நிரலாளராக மணிகண்டனும் சேர்ந்ததோடு அவர்களின் போராட்டம் ஒரு முடிவுக்கு வந்துவிட்டதா என்றால் அதுதான் இல்லை. ஒரு முழுப் பார்வையற்றவராக இதுவரை தனக்கு அறிமுகமே இல்லாத கார்ப்பரேட் கலாச்சாரத்தை எதிர்கொண்டது பற்றி இருவருமே சுவைபடச் சொல்லிச் செல்கிறார்கள். பரந்து விரிந்த வளாகம், எங்கு திரும்பி கைநீட்டினாலும் எதிர்படும் கண்ணாடி அறைகள், டார்கெட்டை மட்டுமே பிடித்துக்கொண்டு ஓடும் தனிமனிதச் சூழல் என முதலில் தெரிந்த வெறுமையை வெல்ல மேற்கொண்ட உத்திகள் பற்றி ஒன்றொன்றாய் அவர்கள் சொல்லச்சொல்ல, தன்னம்பிக்கை சார்ந்த ஒரு புத்தகத்தைப் படிக்கிற சுவாரசிய உணர்வு ஏற்படுகிறது.

பார்வையற்றோராகிய நாம், திறந்த மனதுடன் நாமே நம்முடன் பணியாற்றுபவர்களை மீண்டும் மீண்டும் தொடர்புகொள்ளத் தயங்கக்கூடாது என்கிறார் வினோத். நம்மைப் பற்றி கொஞ்சம் கொஞ்சமாகத் தொடர்ச்சியாக அவர்களுக்குக் கற்பிக்க வேண்டும் என்கிறார் மணிகண்டன். இதற்காக அவர் எடுத்தாண்ட எஜுகேட் என்கிற ஆங்கில வார்த்தைதான் மிகப்பொருத்தமானது என நினைக்கிறேன். அதிலும், மானிட்டரைத் தலைகீழாக வைத்த அவரின் கற்பித்தல் உத்தி அட்டகாசமானது.

பணிச்சூழலுக்குத் தேவையானதை மட்டுமின்றி, புதிது புதிதாக நாம் எதையேனும் கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என்று சொல்லும் வினோத், ஒவ்வொரு நாளும் நமக்கு நாமே நிரூபித்துக்கொண்டிருப்பதுதான் நமக்கான வெற்றியைத் தரும் என்கிறார். நம்மைப் போன்ற பார்வையற்றவர்களுக்கு ரிஸ்க் என்பது திடீரென்று நாம் அறியாதபடி ஏற்படுவது, அதற்கு நாம் எப்போதுமே நம்மைத் தயார்நிலையில் வைத்திருக்க வேண்டும் என்பதைத் தன் நீச்சல்குள அனுபவத்தால் நம் மனதிற்குள் கடத்துகிறார் மணிகண்டன்.

தனக்கு இந்த வாசலைத் திறந்துவிட்ட எபிலிட்டி ஃபவுன்டேஷன், எனேபில் இந்தியா, மறக்க முடியாத சில மனிதர்கள் என தமிழும் ஆங்கிலமும் கலந்து ஒவ்வொன்றையும் ஆவணப்படுத்தும் வினோதின் குரலில் கம்பீரமும் இனிமையும் கலைகட்டுகிறது. நெறியாளரின் கேள்விகளுக்கு அவர் பதில் சொல்லாமல், பாபா பிலாக்‌ஷீப் எனப் பாடிக்கொண்டிருந்தாலும் நெறியாளர் உட்பட எவரும் கோபம்கொள்ளப்போவதில்லை. அத்தகைய சொக்கவைக்கும் குரலுக்குச் சொந்தக்காரர் அல்லது அப்படித் தன் பேச்சு நடையை வடிவமைத்துக்கொண்டவர் வினோத் என்று சொல்லலாம்.

தன்னைப் போன்ற பார்வையற்றவர்கள் அதிக அளவில் தகவல் தொழில்நுட்பத்துறையில் கால்பதிக்க வேண்டும் என்பதில் இருவரும் உறுதியாக இருக்கிறார்கள். அது தொடர்பாக அவர்கள் மேற்கொண்டிருக்கும் சமூகப்பணிகள் குறித்தும், வினோதின் மணவாழ்வு குறித்தும் சில கேள்விகளோடு நெறியாளர் இறுதிப்பகுதியை நிறைவு செய்திருக்கிறார். பேராசிரியரின் பேச்சுநடை பரிட்சயமானதுதான் என்றாலும், சலிப்பூட்டுவதாக இல்லை. மேலும், இது அவருக்கு நெருக்கமான துறை என்பதால் கேள்விகள் எழுப்புவதில் அவர் வழக்கமாகக் கையாளும் தயக்கச் சுற்றிவளைத்தல்கள் இல்லை என்பதும் சிறப்பு.

முறையாக நேரப்பகுப்பு செய்யப்படாத காணொளிகள்தான் என்றாலும், ஒருமுறையேனும் கேட்கத்தக்க பயனுடைய காணொளிகள் இவை.

***ப. சரவணமணிகண்டன்

பகிர

Be the first to leave a comment

உங்கள் கருத்தை உள்ளிடுங்கள்