மறக்க ஒண்ணா மனிதநேயம்: நினைவலைகள் 2021

மறக்க ஒண்ணா மனிதநேயம்: நினைவலைகள் 2021

,வெளியிடப்பட்டது

இந்தச் சம்பவத்தை எப்போது நினைத்தாலும் மெய் சிலிர்க்கிறது. புரிந்துகொள்ளவே இயலாத மனித மனத்தின் ஆழத்திலிருந்து பீறிடும் அன்புதான் எத்தனை மகத்தானது?

ஜனா்்்்்தனன்
ஜனார்தனன்

அது கரோனா கேரளாவில் தாண்டவம் ஆடிக்கொண்டிருந்த 2021 ஏப்ரல் மாதத்தின் ஒரு பகற்பொழுது. கன்னூர் வங்கியில் ஒருவர் தன் கணக்கிலிருக்கிற 200850 தொகையிலிருந்து ரூ. 200000ஐ கேரள முதல்வரின் கரோனா நிதிக்கு மாற்றிவிடும்படி அந்த வங்கி ஊழியரிடம் முறையிடுகிறார். அவரைத் தனிப்பட்ட முறையில் அறிந்திருந்த வங்கி ஊழியர், இது அந்த நபர் பீடி சுற்றி சம்பாதித்த அவரின் வாழ்நாள் சேமிப்பு என்பதால், அவர் சொன்னதை ஏற்காமல் தயங்குகிறார்.

இதைச் செய்யாவிட்டால், இன்று இரவு தான் நிம்மதியாகத் தூங்க இயலாது என்றும், உடலில் வலுவிருப்பதால், எஞ்சியிருக்கும் வாழ்நாளுக்கும் உழைத்துச் சம்பாதித்துக்கொள்ளலாம் என்று பதில் சொன்னார் அந்த அறுபது வயது முதியவர். தான் செய்த இந்த அருஞ்செயலை வெளியே சொல்ல விரும்பாதஅந்த மனிதரின் பெயர் ஜனார்தனன்.  செவித்திறன் குறைபாடு உடைய அவர், பீடி சுற்றியும், மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு வழங்கும் ஓய்வூதியத்தையும் மட்டுமே தனது வருமானமாகக்கொண்டு வாழ்ந்து வருகிறார்.

மயூர் ஷெல்கே
மயூர் ஷெல்கே

மயூர் ஷெல்கே, அவ்வளவு எளிதில் நினைவில் வைத்துக்கொள்ள இயலாத வட இந்தியப் பெயர்தான் இது. ஆனால், இவர் செய்த செயலை எப்போது நினைத்தாலும் மயிர் கூச்சரிகிறது நமக்கு.

ஒரு மாலை வேளை, மும்பையின் வங்கானி ரயில் நிலையத்தில் நடைமேடையின் ஓரத்தில் தன் ஆறு வயது மகனோடு நடந்துகொண்டிருந்தாள்  அந்தப் பார்வையற்ற தாய். அம்மாவின் கைப்பிடியிலிருந்து நழுவி, ரயில்வே தண்டவாளத்தில் விழுந்துவிடுகிறான் சிறுவன். எதிரே ரயில் வந்துகொண்டிருக்கிறது.

நடப்பதை நேரில் பார்த்துக்கொண்டிருந்த ஷெல்கேவுக்கு இருப்புகொள்ளவில்லை. முதலில் யோசித்தவர் திடீரென குதித்து, சிறுவனைத் தூக்கிக்கொண்டு நடைமேடைக்கு மீள்கிறார், ரயில் அவர்களைக் கடந்துசெல்கிறது. எல்லாம் முப்பதே வினாடிக்குள் நடந்தேறுகிறது.

ரயில் நிலையத்தின் கண்காணிப்பு கேமராவில் பதிவான இந்த நிகழ்வு உலகெங்கும் வைரலானது. மத்திய ரயில்வே நிர்வாகம் அவரின் செயலைப் பாராட்டி, ரூ. 50000வழங்கியது. அந்த விருதுப் பணத்தில் பாதியை தான் காப்பாற்றியஅந்தச் சிறுவனின் கல்விச் செலவுகளுக்கே கொடுத்துவிட்டார் மயூர் ஷெல்கே.

இந்தச் சம்பவத்தை எப்போது நினைத்தாலும் மெய் சிலிர்க்கிறது. புரிந்துகொள்ளவே இயலாத மனித மனத்தின் ஆழத்திலிருந்து பீறிடும் அன்புதான் எத்தனை மகத்தானது? நடந்த சம்பவத்தைப் பற்றிப் பலரும் பலவகையில் வியந்தோதிக்கொண்டிருக்க, ஒரு தமிழ்வலைப்பதிவர் இப்படி எழுதினார்,

“குழந்தையை மட்டுமல்ல, அந்த மனிதர் மீட்டிருப்பது இரண்டு கண்களும் தெரியாத ஒரு தாயை அவளின் ஆயுளுக்குமான குற்ற உணர்ச்சியிலிருந்தும்தான்.”. எத்தனை ஆழமான அவதானிப்பு கொண்ட வாசகம் இது.

மனிதம் தழைக்கும் வரை, உலகம் நிலைத்திருக்கும்.

***ப. சரவணமணிகண்டன்

அன்பு வாசகர்களே!

உங்கள் நினைவடுக்கிலும் 2021 ஆம் ஆண்டின் மாற்றுத்திறனாளிகள் தொடர்பான முக்கிய நிகழ்வுகள் தங்கியிருக்கிறதா? அதை எங்களோடு பகிருங்கள்.

வாட்ஸ் ஆப்பில் குரல் செய்தியாகப் பகிர: 9789533964 என்ற எண்ணைத் தொடர்புகொள்ளுங்கள்.

mail@savaalmurasu.com என்ற மின்னஞ்சல் வாயிலாகவும் உங்கள் கருத்துகளைப் பகிரலாம்.

பகிர

Be the first to leave a comment

உங்கள் கருத்தை உள்ளிடுங்கள்