மாட்டுத்தாவணியில் பார்வையற்றவரிடம் வழிப்பறி: என்ன ஆயின காவல்த்துறையின் கண்களான சிசிடீவி கேமராக்கள்?

,வெளியிடப்பட்டது

தாக்குதலுக்கு்ள்ளானவர் எளிதில் அடையாளம் காணக்கூடிய ஒரு பார்வையற்றவர்.

மாட்டுத்தாவணி பேருந்துநிலையம்
மாட்டுத்தாவணி பேருந்துநிலையம்

வங்கிப் பணியாளரான குமார் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) கடந்த நவம்பர் 13ஆம் தேதி சனிக்கிழமை திருச்சி செல்வதற்காக மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்திற்குச் சென்றுள்ளார். நிலையத்திற்குள் செல்வதற்குப் பதிலாக சிக்னலிலேயே இறங்கிவிட்ட அவரை, ஒருவர் பேருந்து நிலையத்திற்குள் அழைத்துச் செல்வதாகக் கூறியுள்ளார்.

குமாருக்கு உதவி செய்வதுபோல் நடித்து, குமாரை அந்த நபர் நிலையத்தின் ஆள் நடமாட்டமில்லாத இடத்தை நோக்கி அழைத்துச் சென்றுள்ளார். இதை யூகித்த குமார், ஏன் எனக் கேட்டுள்ளார். அதற்கு அந்த நபர், மழைபெய்து தண்ணீர் தேங்கியிருப்பதால் ஓரமாக அழைத்துச் செல்வதாகச் சொல்லியுள்ளார்.

திடீரென்று குமாரின் பாக்கெட்டில் கைவைத்த அவர் செல்போனை எடுத்துள்ளார். குமார் சுதாரிப்பதற்குள் குமாரின் பின்னே நின்ற இருவர் அவரின் கழுத்தில் கத்தியை வைத்து இரண்டு கிராம் மோதிரம், 5000 பணம் மற்றும் தொடுதிரை மொபைலையும் பறித்துச் சென்றுள்ளனர். இந்தச் சம்பவம் காலை 8.30 மணிக்கு நடந்துள்ளது.

பேருந்து நிலையத்திலிருந்த பாலு என்கிற காவலரிடம் புகார் செய்துள்ளார் குமார். அவரும் செல்போன் ஈஎம்ஐ எண்ணை வாங்கிக்கொண்டு சைஃபர் கிரைமுக்கு அனுப்பியிருப்பதாகவும் விரைவில் கண்டுபிடித்துத் தருவதாகவும் கூறியுள்ளார். ஆனால் இதுவரை எந்த முன்னேற்றமும் இல்லை.

தாக்குதலுக்கு்ள்ளானவர் எளிதில் அடையாளம் காணக்கூடிய ஒரு பார்வையற்றவர். கையில் ஊன்றுகோல் பிடித்தபடி சனிக்கிழமை காலை 8.30 மணிக்கு இன்னோருவரின் உதவியோடு பேருந்து நிலையத்தில் நடந்து சென்றுள்ளார். மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தின் கண்காணிப்பு கேமராக்களை ஆராய்ந்தாலே குற்றவாளிகளை எளிதில் கண்டுபிடித்துவிடலாம் என்கிறபோது, காவல்த்துறையின் தாமதம் ஏமாற்றத்தையும் வருத்தத்தையும் தருகிறது.

மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் என்பது லட்சக்கணக்கான மக்கள் அன்றாடம் வந்து செல்லும் இடம். அப்படியிருந்தும் பட்டப்பகலிலேயே ஒரு பார்வையற்றவரிடம் நடத்தப்பட்டுள்ள துணிச்சலான வழிப்பறி ஏனைய பார்வையற்றவர்களையும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

        இதுபோன்ற விரும்பத்தகாத நிகழ்வுகள் இனிமேலும் நடக்காமல் இருக்க, பெருநகரங்களின் அனைத்துப் பேருந்து நிலையங்களிலும் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவிட சிறப்புக் காவல் அலுவலர் ஒருவர் நியமிக்கப்பட வேண்டும். அத்தோடு, குமாரிடம் வழிப்பறி செய்தவர்களை விரைந்து கண்டுபிடித்து ஏனைய பார்வையற்றோரின் பாதுகாப்பை காவல்த்துறை உறுதிசெய்ய வேண்டும்.

பகிர

Be the first to leave a comment

உங்கள் கருத்தை உள்ளிடுங்கள்