விதைக்க வாருங்கள்

,வெளியிடப்பட்டது

அறிவியல் கருத்தாக்கங்களை எங்கள் பார்வையற்ற மாணவர்கள் உள்வாங்கிக்கொள்ளும் வகையில் கற்பிக்க தன்னார்வமும் விருப்பமும் உள்ள யாரேனும் முன்வருவீர்கள் என்ற நம்பிக்கையின் விளைவே இந்த முறையீடு.

பயிற்சிமைய லோகோ
பயிற்சிமைய லோகோ

அன்புத் தோழமைகளே!

எப்போதும் எங்களின் நியாயமான முறையீடுகளுக்கு அன்போடும் பரிவோடும் மனமுவக்கும் உங்களிடம் மீண்டும் ஒரு விண்ணப்பம். நிச்சயம் இது பணமோ பொருள்சார் உதவிகளோ இல்லை. ஆனால், அதனினும் அவசியமானது, காலத்தால் நிலைபெறக்கூடியது.

தோழமைகளே! படித்த பார்வையற்றோருக்கான பணிவாய்ப்புகள் பெறுகிட வேண்டும், அதற்கான உரிய தகுதிகளை அவர்களிடம் வளர்த்த்எடுக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு, ஆர்வமும் விருப்பமும் கொண்ட பார்வையற்ற பணிநாடுனர்களைக் கண்டறிந்து, அவர்களுக்குப் போட்டித்தேர்வுகளுக்கான இணையவழிப் பயிற்சியினை எந்த ஒரு கட்டணமுமின்றி, தன்னார்வ முன்னெடுப்பாக கடந்த ஓராண்டாக நடத்திவருகிறோம்.

ஹெலன்கெல்லரை உலகறியச் செய்த ஒப்பற்ற ஆசிரியர் (the miracle worker) ஆன் சலிவன் அவர்களின் பெயரால் நடத்தப்படும் இப்பயிற்சி மையத்தில் தற்போது 50க்கும் மேற்பட்ட பார்வையற்றவர்கள் இணைந்து பயிற்சி பெற்றுவருகின்றனர்.

இந்தியக் குடிமைப்பணிகள் தேர்வில் வெற்றிபெற்று தற்போது இந்தியத் தகவல் தொடர்புப்பணியில் (IIS) பணியாற்றும் திரு. பாலநாகேந்திரன் அவர்கள் உட்பட போட்டித்தேர்வுகளில் வெற்றிபெற்று தற்போது அரசின் பல்வேறு துறைகளில் பணியாற்றும் பார்வையற்றவர்கள் எங்கள் பயிற்சி மைய மாணவர்களுக்குத் தன்னார்வத்துடன் வகுப்பெடுத்து வருகிறார்கள்.

தமிழ், வரலாறு, நடப்பு நிகழ்வுகள், அரசியல் அறிவியல், பொருளாதாரம் என அனைத்து பொருண்மைகளும் போட்டித்தேர்வு கண்ணோட்டத்தில் கற்பிக்கப்பட்டு வருகின்றன. ஆனால், உரிய பயிற்றுனர் இல்லாத காரணத்தால் அறிவியல் வகுப்புகள் மட்டும் அப்படியே தடைபட்டு நிற்கின்றன.

இந்நிலையில், அறிவியல் கருத்தாக்கங்களை எங்கள் பார்வையற்ற மாணவர்கள் உள்வாங்கிக்கொள்ளும் வகையில் கற்பிக்க தன்னார்வமும் விருப்பமும் உள்ள யாரேனும் முன்வருவீர்கள் என்ற நம்பிக்கையின் விளைவே இந்த முறையீடு. அத்தோடு, எங்கள் போட்டித்தேர்வுகளுக்கான அத்தனை மூலப் பாடங்களும் பார்வையற்றோர் எளிதில் அணுக இயலாத பிடிஎஃப் கோப்புகளாகவே இருக்கின்றன. அவற்றை வாசித்து ஒலிவடிவில் பதிவு செய்து தர விருப்பம் உள்ளவர்கள், மாணவர்களுக்கான பதிலி எழுத்தர்களாகத் தேர்வெழுத முன்வருபவர்கள் எனத் தன்னார்வமும் அர்ப்பணிப்பும் கொண்ட அனைவரையும் எங்களோடு இணைந்து பணியாற்ற அன்போடு அழைக்கிறோம்.

பணமும் உணவும் மட்டுமல்ல, உங்களின் திறனும், குரலும் கொஞ்சமே கொஞ்சம் உங்களுக்கான நேரங்களும்கூட உங்களின் ஆகச் சிறந்த கொடைகளாகலாம். இவை ஒருபோதும் தீர்ந்துபோகாத, தலைமுறைகள் கடந்தும் பயன்தரக்கூடிய விருட்சங்களை உண்டுபண்ணும் விதைகள். ஏனெனில்,

‘விதைத்தவன் உறங்கலாம், விதைகள் ஒருபோதும் உறங்காது.’

சேர்ந்து விதைக்க வாருங்கள், அல்லது விதைக்க விரும்பும் நண்பர்களுக்கு இதைப் பகிருங்கள்.

இவள்,

செல்வி U. [சித்ரா

ஒருங்கிணைப்பாளர், ஆன் சலிவன் போட்டித்தேர்வுகளுக்கான பயிற்சி மையம்.

தொடர்புக்கு: 9655013030

9789533964

பகிர

Be the first to leave a comment

உங்கள் கருத்தை உள்ளிடுங்கள்