“பள்ளி விடுமுறை காலங்களில் ஊர்திப்படியைப் பிடித்தம் செய்யக்கூடாது” வெளியானது அரசின் கராரான உத்தரவு

,வெளியிடப்பட்டது

ஊர்திப்படி என்பதை மாற்றுத்திறனாளி ஆசிரியர்கள் தங்கள் பணியிடத்திற்குச்சென்றுவருவதற்கான போக்குவரத்துச் செலவை அரசே ஏற்பதாக மட்டும்தான் பெரும்பாலோர் புரிந்துவைத்திருக்கிறார்கள்.

கூகுல் செய்திகளின் வழியே எம்மைப் பின்தொடர இங்கே க்லிக் செய்யவும்.

காலாண்டு, அரையாண்டு மற்றும் முழு ஆண்டு விடுமுறைகளில் மாற்றுத்திறனாளி ஆசிரியர்களுக்கான ஊர்திப்படியினைப் பிடித்தம் செய்யக்கூடாது என வெளியாகியுள்ள அரசுக்கடிதம் மகிழ்ச்சியை அளிக்கிறது. பார்வையற்ற ஆசிரியர் சங்கம் இதற்காகத் தொடர்ந்து குரல்கொடுத்தும், கடிதங்கள் எழுதியும் வந்துள்ளமையை அங்கீகரிக்கும் வகையில் அரசே ஆசிரியர் சங்கத்தின் கடிதத்தை தனது கடிதத்தில் மேற்கோள் காட்டியிருக்கிறது.

ஊர்திப்படி என்பதை மாற்றுத்திறனாளி ஆசிரியர்கள் தங்கள் பணியிடத்திற்குச்சென்றுவருவதற்கான போக்குவரத்துச் செலவை அரசே ஏற்பதாக மட்டும்தான் பெரும்பாலோர் புரிந்துவைத்திருக்கிறார்கள். அதனால்தான் பள்ளிக்குத் தணிக்கை செய்யவரும் அலுவலர்கள் பள்ளியல்லாத நாட்களில் அந்தப் படியினைப் பிடித்தம் செய்ய வேண்டும் என பிடிவாதமாகச் சொல்வார்கள். பெரும்பாலான பள்ளிகளில் அப்படியான ஆண்டுத் தணிக்கையின்போதே இந்தப் பிரச்சனை கிளம்பியிருக்கிறது.

ஊர்திப்படியின் காரணமாகவே தன்னைவிட ஒரு மாற்றுத்திறனாளி ஆசிரியர் அதிகம் சம்பளம் பெறுகிறார் என்ற பொறுமலைக்கூட சில ஆசிரியர்களிடம் பார்க்க முடிகிறது. இன்னும் சிலர் “உங்களுக்குத்தான் பஸ் பாஸ் இருக்கிறதே பிறகெதற்கு ஊர்திப்படி?” என்றும் கேட்பார்கள். அப்படிக் கேட்கும் எவரும் சொந்த வீடு வைத்திருப்பதால் வீட்டு வாடகைப்படியை விட்டுக்கொடுத்தவர்கள் அல்லர்.

உண்மையில் மாற்றுத்திறனாளி ஆசிரியர்களின் கோணத்திலிருந்து அணுகினால் ஊர்திப்படியின் தேவை தெளிவாக விளங்கும். எந்தவகை மாற்றுத்திறனாளியானாலும் அவரின் இடப்பெயர்வு என்பது, மிகுந்த சிரமங்களும் செலவும் கொண்டதாகவே இருக்கிறது. உதாரணத்திற்கு ஒரு பார்வையற்ற ஆசிரியருக்குப் பள்ளிக்கு வந்து செல்ல இரண்டு வழிகள் இருக்கின்றன. அவர் பொதுப்பேருந்தை பயன்படுத்தலாம் அல்லது வாடகைக்கு மாதாந்திரக் கணக்கில் பேசி ஒரு ஆட்டோவை வைத்துக்கொள்ளலாம். அதாவது, வாடகை என்பதன் கணக்கு ஒரு மாதம்தான். அது நீங்கள் ஒரு நாள் சென்றாலும், 30 நாட்கள் பயன்படுத்திக்கொண்டாலும் தொகை மாறுபடாது.

முன்பு போலல்லாமல் இப்போதைய பள்ளிக்கல்வி நடைமுறைகளில் ஏராளமான மாற்றங்கள் வந்துவிட்டன. கோடை விடுமுறைகளில்தான் ஆசிரியர்களுக்குப் பல்வேறு பணியிடைப் பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. மேலும், கற்பித்தல் கடந்தும் ஆசிரியர்கள் பள்ளி அலுவல் சார் பணிகள்ளுக்கும் பயன்படுத்தப்படுவது கள எதார்த்தமாக இருக்கிறது.

இந்நிலையில்தான், பணிக்கு வந்து செல்வதில் ஒரு சாதாரண ஆசிரியர்களுக்கு இருக்கிற பல்வேறு தெரிவுகள் ஒரு மாற்றுத்திறனாளி ஆசிரியருக்கும் இருக்க வேண்டும் என்கிற சமத்துவப் பார்வைக்கான அரசின் குறைந்தபட்ச ஆதரவுகள்தான் பஸ் பாஸ், ஊர்திப்படிகள் எல்லாம் என நாம் புரிந்துகொள்வது அவசியம்.

அரசின் கடிதத்தில் தற்செயல் விடுப்பு நீங்களாக ஏனைய விடுப்புகளின்போது மட்டுமே ஊர்திப்படி பிடித்தம் செய்ய வேண்டும் எனச் சொல்லப்பட்டிருக்கிறது. அதற்கான மேற்கோளாக அரசாணை நிலை எண் 667 1989 சுட்டப்பட்டுள்ளது. மேலும், பள்ளி விடுமுறை நாட்கள் என்பவை பணிநாட்களாகவே கருதப்பட வேண்டும் எனவும் அரசு கடிதத்தில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

அனைத்துவகை மாற்றுத்திறனாளிகளுக்கான உரிமைகளை வெறும் களப்போராட்டங்களால் மட்டும் அல்ல, அரசுக்குக் கடிதம் எழுதுவது, அதைக் குறிப்பிட்ட இடைவெளிகளில் பின்தொடர்ந்து அரசு உயர் அலுவலர்களிடம் எடுத்துச் சொல்வது, அப்போதும் கனியவில்லை என்றால், சட்ட வாய்ப்புகளை நாடுவது என பார்வையற்ற சங்கங்கள் தங்களின் ஜனநாயக அடிப்படையிலான வழிகளை விடாது பின்பற்றி வெற்றிகொள்ளும்போதெல்லாம் ஒரு பார்வையற்றவனாகப் பெருமிதம் ஏற்படுகிறது. அதிலும் பார்வையற்ற கல்லூரி மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் சங்கமானாலும், பார்வையற்ற ஆசிரியர் சங்கமானாலும் அனைத்துவகை மாற்றுத்திறனாளிகளுக்கான கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் பணிப்பாதுகாப்பு போன்ற அடிப்படையான களங்களில் கொள்ளும் வெற்றி எல்லா மாற்றுத்திறனாளித் தரப்புகளுக்கும் நிலையான மற்றும் கண்ணியமான வாழ்வை என்றென்றைக்கும் உறுதி செய்யும் நோக்கத்தோடே இருப்பது கூடுதல் பெருமிதமாகும்.

இப்போதெல்லாம் மாற்றுத்திறனாளிகள் என்ற பொதுமைப்படுத்தல் காரணமாக பார்வையற்றவர்களின் நலன்கள் மற்றும் அவர்களுக்கான தனித்த சிக்கல்கள் அதிகம் பேசுபொருளாவதில்லை. இப்படிப்பட்ட தருணத்தில் எல்லா மாற்றுத்திறனாளித் தரப்புகளுக்காகவும் பார்வையற்ற சங்கங்கள் மேற்கொள்ளும் முயற்சிகள், அதன்வழியே பெறும் வெற்றிகள் மூலம் தங்களை ஒரு தவிர்க்க இயலாத தரப்பாக தொடர்ந்து அரசிடம் பார்வையற்ற சங்கங்கள் முன்வைத்துக்கொண்டே இருப்பது போற்றுதலுக்குரியது.

எல்லா வகையான மாற்றுத்திறனாளி ஆசிரியர்களுக்கான நீண்ட நாளைய சிக்கல் ஒரு முடிவுக்கு வந்திருக்கிறது. பார்வையற்ற ஆசிரியர் சங்கத்திற்கு நன்றிகளும், பாராட்டுகளும், வாழ்த்துகளும்.

***

ப. சரவணமணிகண்டன்

தொடர்புக்கு: vaazhgavalluvam@gmail.com

https://drive.google.com/file/d/1RZJngbTGV7WYpmdzk6R4wVijZ858GJmI/view?usp=drivesdkஅரசுக் கடிதத்தைப் அரசுக் கடிதத்தை பதிவிறக்க இங்கே க்லிக் செய்யவும்.அரசு கடிதத்தை பதிவிறக்க இங்கே கிளிக் செய்யவும்

பகிர

Be the first to leave a comment

உங்கள் கருத்தை உள்ளிடுங்கள்