சிந்தனை: அக்டோபர் 15, உலக வெண்கோல் தினம்

,வெளியிடப்பட்டது

ஸ்டிக் என்றாலே வெட்கப்படும் பார்வையற்ற இளைஞர் சமூகத்தை உருவாக்கிக்கொண்டிருக்கின்றன இன்றைய பார்வையற்றோருக்கான சிறப்புப் பள்ளிகள்

நீண்ட வெண்கோல்
நீண்ட வெண்கோல்

இன்று உலக வெண்கோல் தினம். ஒரு பார்வையற்றவனுக்கு வெண்கோல் எத்தனை அவசியமானது என்பதை வாழ்வின் வேறெந்தத் தருணங்களையும்விட எனது தற்போதைய சென்னை வாசம் அன்றாடம் உணர்த்திக்கொண்டே இருக்கிறது. பூவிருந்தவல்லியின் குறுகிய தெருக்கள், போக்குவரத்து நெரிசல் நிறைந்த சாலைகள் என பாதுகாப்பான எனது மூன்றாவது காலாகவே நான் வெண்கோலை (white cane) கண்டுகொண்டிருக்கிறேன்.

முன்னேறிய சமூகமான அமெரிக்கர்கள் 1964லேயே வெண்கோலுக்காக ஒரு தினத்தைக் கொண்டாடுவது, அதன் மூலம் வெண்கோலின் முக்கியத்துவத்தை அதன் பயனாளிகளுக்கும் பொதுச்சமூகத்துக்கும் உரைப்பது என முடிவு செய்து, இந்த நாளை ஒவ்வொரு ஆண்டும் அனுசரித்து வருகிறார்கள்.

2011 ஆம் ஆண்டில் இதேநாள், அன்றைய அமெரிக்க அதிபரான பாரக் ஒபாமா அவர்களின் அறிவிப்பால் அமெரிக்க பார்வையற்றவர்கள் சமத்துவநாளாக (Blind Americans Equality Day) அனுசரிக்கப்பட்டது என்பதும் நிகழ்கால வரலாறு.

ஆனால், இங்கே இந்தியாவில், அதிலும் நமது தமிழ்நாட்டில் என்ன நடந்துகொண்டிருக்கிறது?

ஸ்டிக் என்றாலே வெட்கப்படும் பார்வையற்ற இளைஞர் சமூகத்தை உருவாக்கிக்கொண்டிருக்கின்றன இன்றைய பார்வையற்றோருக்கான சிறப்புப் பள்ளிகள். பார்வையற்றோருக்காக இயங்கும் 10 அரசு சிறப்புப் பள்ளிகளில் ஒன்பதில் உடற்கல்வி ஆசிரியர்ப் பணியிடங்கள் காலியாகவே இருக்கின்றன. ஏற்கனவே அந்தப் பணியில் இருந்தவர்களும் பெரும்பாலும் பள்ளி அலுவலகத்தில் அமர்ந்து சம்பளப் பட்டியல் தயார் செய்பவர்களாகவும், உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தைக் கொண்டாடும் பொருட்டு, டிசம்பர் 1ல் நடைபெறும் மாநிலம் தழுவிய பார்வையற்றோருக்கான விளையாட்டுப் போட்டிகளுக்குப் பயிற்சி அளிப்பவர்களாகவுமே இருந்திருக்கிறார்கள்.

இவர்களுக்கு எதிலும்ஏ ஒரு வரலாற்றுப் பார்வையோ, புதுமை நோக்கோ இருப்பதில்லை. ஊன்றுகொல் வரலாறோ, அதன் பயன்பாட்டு நுட்பங்கள் பற்றியோ அறிந்திருக்க மாட்டார்கள். பார்வையற்றோருக்காக சிறப்பாக மாற்றப்பட்டு வடிவமைக்கப்பட்ட கிரிக்கெட், வாலிபால் போன்ற விளையாட்டுமுறைகளை அறிந்து தங்கள் பள்ளி மாணவர்களிடையே அதனைப் புகுத்துவதற்கான எந்த முயற்சியும் எடுக்காதவர்கள்.

குறைப்பார்வையுடைய (low-vision) மாணவர்கள், தங்களின் எஞ்சிய பார்வையைக்கொண்டு இயல்பாகப் பெறும் வெற்றிகளைத் தனது பயிற்சியினால் விளைந்ததாக அறைகூவிக்கொள்வார்கள். அதனால் குறைப்பார்வையுடைய மாணவர்களும் அவர்களிடம் செல்வாக்கு பெறுவார்கள். உண்மையில் ஒரு முழுப்பார்வையற்றவனுக்கு இவர்களால் விளைந்த நன்மை என ஏதும் பெரிதாக இருக்காது. விதிவிலக்குகளை நான் அறிவேன். அவர்கள் பார்வையற்றோருக்கான அரசு உதவிபெறும் பள்ளிகளில் பணியாற்றினார்கள். அந்தப் பசுமைக் காலமும் அவர்களோடே முடிந்துபோயிற்று. இந்தத் தலைமுறை மாணவர்களுக்கு வாய்க்கவில்லை என்பதே இன்றைய நிதர்சனம்.

இப்போது சிறப்புக் கல்வி என்பதை உள்ளடங்கிய கல்விமுறை மிகவும் ஆக்ரோஷமான முறையில் அபகரிக்கத் தொடங்கிவிட்ட காலம். ஆகவே நிலைமை இன்னும் மோசமாக இருக்கிறது. ஸ்டிக் என்றால் என்னவென்றே அறியாத பல பார்வையற்ற பட்டதாரிகள் உள்ளடங்கிய கல்வியில் படித்து மேலே வருவதை அன்றாடம் பார்க்க முடிகிறது. மாற்றுத்திறனாளிகள் தினத்தை ஒட்டி மாவட்டந்தோறும் நடத்தப்படும் மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டுப்போட்டிகளில் பார்வையற்றோருக்கான விளையாட்டுப்போட்டிகள் எத்தனை கேலிக்கூத்துகளைச் சந்திக்கின்றன என்பதை ஒரு சிறப்புப் பள்ளி ஆசிரியனாக நான் நன்கு அறிவேன்.

வெண்கோல் பயன்படுத்தும் அறிவு என்பது பெரும்பாலான பார்வையற்றவர்களுக்கு அவர்களின் அனுபவத்தால் கைகூடியதாகவே இருக்கும். அதிலும் சென்னை வாழ் பார்வையற்றவர்களுக்கே இந்த அனுபவம் அதிகமாக இருக்கும் என நினைக்கிறேன். உண்மையில் தமிழகத்தின் வேறெந்தப் பெருநகரங்களைவிட சென்னை வந்தபிறகுதான் பெரும்பாலான பார்வையற்றவர்கள் வெண்கோலின் அவசியத்தை உணர்கிறார்கள்.

அந்த வகையில், நான் என் இடைநிலை ஆசிரியர்ப் பயிற்சி நாட்களில்தான் வெண்கோலின் மகத்துவம் அறிந்தேன். ஆனாலும் முறையான பயிற்சிகலெல்லாம் பெற்றதில்லை. புதுக்கோட்டையில் நான் பணிக்கு வந்து சில மாதங்களுக்குப் பிறகுதான், வலக்காலை முன்வைக்கயில் இடப்புறமாகவும், இடக்காலை முன்வைக்கையில் வலப்புறமாகவும் ஸ்டிக் போடவேண்டும் என்பதையே என் அனுபவ அறிவின் வழியே அறிந்தேன்.

நான் முன்பு பணியாற்றிய புதுக்கோட்டைப் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியர்ப் பணியிடமே தோற்றுவிக்கப்படவில்லை. ஆயினும் ஆறாம் வகுப்பு மாணவர்கள் தொடங்கி வாரத்தின் இரண்டு நாட்கள் அந்தப் பள்ளியில் ஊன்றுகோல் பயிற்சி வழங்கிவந்தோம். கடந்த 2019 ஆம் ஆண்டு இதேநாளில், வெண்கோல் குறித்துப் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், புதுக்கோட்டைப் பள்ளி மாணவர்களைக்கொண்டே அருகே இருக்கும் புதிய பேருந்து நிலையத்தில் ஊன்றுகொல் மற்றும் அதன் பயன்பாடுகள் குறித்த குறிப்புகளைக் கொண்ட துண்டுப் பிரசுரங்களை வினியோகித்தோம். இப்படித்தான் ஒவ்வொரு பார்வையற்றோருக்கான சிறப்புப் பள்ளிகளில் நீடிக்கும் போதாமைகளை முடிந்தவரை அங்கு பணியாற்றும் பார்வயற்ற ஆசிரியர்கள் நிரப்பிட முன்வர வேண்டும். அதற்கு பள்ளித் தலைமைகளும் மனமுவந்து ஒத்துழைக்க வேண்டும்.

ஆனால், இங்கு சில பள்ளித் தலைமைகள் தேமே என்றுதான் இருக்கிறார்கள். அன்றன்று வேண்டிய அப்பங்கள் கிட்டினால் போதும் ஆண்டவருக்குத் தோத்திரம் செய்உம் வகையராக்கல். இவர்களால் பள்ளிகளுக்கு எந்த நன்மையும் விளையப்போவதில்லை. மாறாக ஏற்கனவே இருக்கும் நல்ல ஒழுங்குகளையும் இவர்கள் சீர்குலைக்கிறார்கள்.

திறன் வாய்ந்த பார்வையற்றவர்களை இவர்கள் பயன்படுத்திக்கொள்வதில்லை. மாறாக நோகடிப்பார்கள். அதற்கு பணி முதுநிலையைக் காரணமாகச் சொல்வார்கள். இப்படிப்பட்ட சூழலில் சட்டத்தைக் கையிலெடுக்கும் அணுகுமுறையை அந்தப் பார்வையற்ற ஆசிரியர்கள் கைக்கொண்டால், அதற்கும் நிறையக் குடைசல்கள், பொறுமல்கள், வன்மங்கள் காத்திருக்கும். அவையும் உங்கள் சக பார்வையற்ற ஆசிரியர்களைக்கொண்டே நிகழ்த்தப்படும்.

ஆனால், அதையெல்லாம் கணக்கில் கொண்டால் வேலையாகாது. நாம் நம் கற்றல் வகுப்புகளின் ஒரு சிறு பகுதியை இதற்காக ஒதுக்கிட வேண்டும். அந்த வகுப்பில் வெண்கோல் பயன்படுத்தி நடப்பது எப்படி என்ற பயிற்சியை மாணவர்களுக்கு வழங்கிட வேண்டும். வெண்கோல் குறித்த பெருமிதத்தைமட்டுமல்ல, அதன் வரலாற்றை, உண்மையான பயன்பாட்டைப் பற்றி  நம் சொந்த அனுபவங்கள் வாயிலாக மாணவர்களிடம்  உரையாட வேண்டும்.

“அன்புள்ள மாணவர்களே! நீங்கள் வெட்கம் கொண்டு புறக்கணிக்கும் வெறும் குச்சியல்ல வெண்கோல், அது  உங்களைத் தலைநிமிரச் செய்யும் தன்னம்பிக்கை ஆயுதம்” என்பதை பார்வையற்ற ஆசிரியர்கள் ஒவ்வொருவரும் மாணவர்களுக்கு உணர்த்திட வேண்டும்.

அனைவருக்கும் உலக வெண்கோல் தின வாழ்த்துகள்.

***

ப. சரவணமணிகண்டன்

தொடர்புக்கு: vaazhgavalluvam@gmail.com

இதையும் படிக்கலாமே!

அன்பார்ந்த பொதுமக்களே, சக பயணிகளே!

வரலாறு: வெண்கோல் தினம் – ரா. பாலகணேசன்

பகிர

2 thoughts on “சிந்தனை: அக்டோபர் 15, உலக வெண்கோல் தினம்

  1. வெண்கோலின் சிறப்பை அனைவரும் உணர வேண்டும் என்ற இந்த கருத்து மிகவும் சிறப்பு. பார்வை மாற்றுத்திறனாளி ஒவ்வொருவரையும் தலைநிமிர்ந்து நிற்கச் செய்யும் ஒரு ஆயுதமாக வெண்கோல் உள்ளது என்பது உண்மை வாழ்த்துகள் சார்

  2. வெண்கோலின் சிறப்பை அனைவரும் உணர வேண்டும் என்ற இந்த கருத்து மிகவும் சிறப்பு. பார்வை மாற்றுத்திறனாளி ஒவ்வொருவரையும் தலைநிமிர்ந்து நிற்கச் செய்யும் ஒரு ஆயுதமாக வெண்கோல் உள்ளது என்பது உண்மை வாழ்த்துகள் சார்

உங்கள் கருத்தை உள்ளிடுங்கள்