நினைவுகள்: எங்கள் பத்து சாரோடு மீண்டும் ஓர் பயணம்

,வெளியிடப்பட்டது

விடுதியில் படித்த மாணவிகளுக்குத் தெரியும் அவர் தாயுள்ளம் கொண்டவர் என்பது.

சோஃபியாமாலதி

கண்ணீர் கட்டுரை!

கூகுல் செய்திகளில் எம்மைப் பின்தொடர இங்கே க்லிக் செய்யவும்.

விடுதி மாணவிகளுடன் பத்மராஜன்
விடுதி மாணவிகளுடன் பத்மராஜன்

ஆடி ஓடிப் பாடித் திரிந்த பள்ளிப்பருவம் முடிந்து கல்லூரி நுழைகையில் எங்கு செல்வோம்? யாரோடு தங்குவோம்? போகும் இடம் எங்கே? பொல்லாங்கு வந்துவிடுமோ? என்றெல்லாம் யோசித்து மன பாரத்தோடு வந்த எங்களை, பார்வையற்ற பெண்கள் நீங்கள் எங்கு தங்குவீர்கள் என்று தாயுள்ளத்தோடு சிந்தித்து உங்களுக்கு பாதுகாப்பு நான் தருகிறேன் என்று இருகரம் நீட்டி சிறு குழந்தையாய் என்னை வாரி அணைத்துக்கொண்ட நெஞ்சம், இன்று துடிக்க மறந்து துவண்டு கிடக்கிறது.

50 ஆண்டுகளுக்கு முன்பு தன்னுடைய கல்லூரி படிப்பின் போது என்னைப்போல பார்வையற்றவர்கள் படிக்க வேண்டும் படித்தவர் வேலையில் அமர வேண்டும் என்று உறுதி மனதோடு உற்சாகமாய் களம் இறங்கி தன்னை வருத்தி தன்னோடு பிறரை சேர்த்துக்கொண்டு போராடிய நல் உளத்திற்குச் சொந்தக்காரர்தான் எங்கள் ஐயா! பத்மராஜன் அவர்கள். அவரால் பல பார்வையற்ற மாணவ மாணவிகள் பல பார்வையற்ற நண்பர்கள் பயனடைந்தனர் என்றால் அதில் மாற்று கருத்து இல்லை.

இன்று பல சாதனைகளை கண்டு வரும் எம் பார்வையற்ற கல்லூரி மற்றும் பட்டதாரிகள் சங்கமானது இவரால் 1980களில்  துவங்கப்பட்டது. இன்றும் அவர் புகழ் பாடியே எம் இளைய தலைமுறையினர் ஒவ்வொரு விஷயத்தையும் களம் காண்கின்றனர்.

அப்பப்பா எத்தனை எத்தனை போராட்டங்கள் எத்தனை எத்தனை முன்னெடுப்புகள். பார்வையற்றவருக்கு வேலைவாய்ப்பில் ஒரு சதவிகித இட ஒதுக்கீடு அரசாணை பெற்றதுதான் இவர்களது முதல் வெற்றி என்கிறார் திரு. பஞ்சாபிகேசன் ஐயா அவர்கள். தன்னுடைய நண்பர் குறித்து அவர் நினைவு கூறும் பொழுது அவர் கண்களில் இருந்து கண்ணீர் வழிகிறது.

“அவரில்லாமல் நாங்கள் இல்லை; அவரோடு இணைத்து எங்களையும் போராட வைத்தார். அந்த போராட்டங்கள் தான் பார்வையற்றவர் மீது அவர் கொண்ட அன்பு. அதை எமக்கும் ஊட்டினார். அவர் மரணத்தருவாயில் இருக்கும் வரை கூட பார்வையற்ற பெண்கள் குறித்து  தொடர்ந்து யோசித்துக் கொண்டும் பாடுபட்டு கொண்டும் இருந்தார் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை” என்கிறார்.

மேலும் அவர், “நாங்கள் ஒரு சிறு குடும்பமாய் இணைந்து தாமரை பார்வையற்றோருக்கான நல அறக்கட்டளையை துவங்கினோம். இது பார்வையற்ற பெண்களுக்கான அறக்கட்டளை. படிக்கும் பெண்கள் பள்ளிப் படிப்போடு நிறுத்தி விடக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தோம். பெண்கள் முன்னேற்றத்திற்காக ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைத்தோம். சென்னை தேடி வரும் பெண்கள் எங்கு தங்குவார்கள் அவர்களுக்கு பாதுகாப்பு எங்கே என்று சிந்தித்து அவர்களுக்காய் விடுதி அமைக்க வேண்டும் என்று உறுதியாய் நினைத்தோம். பல பிரச்சனைகள் வந்தன. பல எதிர்ப்புகள் எழுந்தன, இருந்த போதிலும் உறுதியாய் நின்று உறுதி கொண்ட நெஞ்சினாய் தாமரை நல அறக்கட்டளை துவங்கி அதன் வாயிலாக கிட்டத்தட்ட 300 பார்வையற்ற பெண்களுக்கு தங்கும் இடம் அளித்து அவர்களுக்கான உயர்கல்விக்கு ஒரு வித்திடும் தளமாய் இந்த அறக்கட்டளையை மாற்றினோம்” என்கின்றார் பஞ்சாபிகேசன் ஐயா அவர்கள்.

இதற்கெல்லாம் ஒரே காரணம் திரு பத்ம ராஜன் அவர்கள்தான். அவர் இல்லாமல் இந்த அறக்கட்டளை துவங்கப்பட்டு இருக்காது என்கிறார்.

விடுதியில் படித்த மாணவிகளுக்குத் தெரியும் அவர் தாயுள்ளம் கொண்டவர் என்பது. விடுதியில் படித்த ஒரு சகோதரியிடம் கேட்டபோது அவர் கூறியதாவது,

“எங்களைப்போல பார்வையற்ற பெண்கள் படிக்க வேண்டும் என்றால் அதற்குப் பலரது உதவி கட்டாயம் தேவைப்படுகிறது. அதில் முன்னோடியாக இருந்தவர் எங்கள் பத்து சார்தான். எங்களுக்கு ஏதாவது உடல்நலக் குறைவு என்று சொன்னாலோ அல்லது ஏதாவது பொருள் தேவை என்று சொன்னாலும் உடனடியாக எதையும் யோசிக்காமல் உதவும் மனப்பான்மை அவருக்கு உண்டு. தன்னுடைய சொந்தக்காசை தான் எடுத்து எங்களுக்காக கொடுப்பார். அவரை எங்களால் மறக்கவே முடியாது. அவர் இல்லாமல் எங்களுடைய கல்லூரிப் படிப்பு கிடையாது” என்கிறார்.

 ஒரு தந்தையிடம்  ஒரு மகள் உரிமையோடு கேட்பதுபோல எதைக் கேட்டாலும் எப்பொழுது கேட்டாலும் உடனே வாங்கித்தரும் குணம் அவருக்கு உண்டு என்கிறார் அவரால் உருவாக்கப்பட்ட விடுதியில் தங்கியிருந்த மாணவி சகோதரி சங்கீதா அவர்கள்.

பணம் பத்தும் செய்யும் என்பார்கள் ஆனால் எங்கள் பத்து சார் எங்களை எல்லா நேரங்களிலும் ஆதரித்தார்.

ஒவ்வொரு பார்வையற்ற பெண்ணின் மனதிலும் அவர் என்றென்றும் வீற்றிருப்பார் என்று அவரோடு இருந்த அனுபவங்களை பகிர்ந்து கொள்கிறார் திருமதி. விசித்ரா சரவணமணிகண்டன் அவர்கள்.

 பார்வையற்ற பெண்கள் தங்களுடைய கல்லூரி படிப்பிற்காக வரும்பொழுது எங்கு தங்குவோம் என்று எண்ணிக்கொண்டிருந்த வேளையில், “நான் இருக்கிறேன்” என்று அழைத்தவர் அவர்” என்கிறார். தங்களையெல்லாம் சொந்த மகளைப்போல ஆதரித்ததாக கூறுகிறார் திருமதி. விசித்ரா.

எனக்கும் அவருக்கும் உள்ள உறவும் அது தான். நான் 2004. 12ஆம் வகுப்பை முடித்தவுடன் கல்லூரிப் படிப்பை துவங்கிய காலம் அது. என்னுடைய தோழியின் வாயிலாகத்தான் அவரோடு எனக்கு பழக்கம். தங்குவதற்கு இடம் கேட்டு சென்றிருந்தோம். இடம் அளிக்கப்பட்டது விடுதியிலும் அவரது மனதிலும்.

அவர் கடுமையாகப் பேசி நான் ஒருநாளும் பார்த்ததில்லை. எங்களுடைய சீனியர் அக்காக்கள் கூட அவரிடம் ஜாலியாகப் பேசிக் கொண்டிருப்பார்கள். அறிவுரைகள் வழங்குவார், படிக்க வேண்டிய நேரத்தில் படிக்க வேண்டும் என்றும் வாழ்க்கையின் தத்துவங்களை சரியாக புரிதல் கொண்டு பயணிக்க வேண்டும் என்றும் அவர் எங்களுக்கு கற்றுக்கொடுத்தார்.

ஒரு முறை எங்களுக்கு விடுதியில் சமைக்க ஆள் இல்லை. அப்போது விடுதி பல்லாவரத்தில் இருந்தது. நாங்கள் ஒவ்வொரு குழுவாகத்தான் சமைக்க வேண்டும். அப்படி இருக்கும்பொழுது யார் செய்த சாப்பாட்டையும் அவர் சாப்பிட மாட்டார் என்ற  தகவல் எங்களை எட்டியது. அப்பொழுது அவரிடம் சென்று நேரடியாக கேட்டோம் நானும் என் தோழி விசித்ராவும்.

அவர் நகைத்துக்கொண்டே கூறியது “நல்லா செஞ்சா ஏன்மா  சாப்பிட மாட்டெனா? வாயில வைக்கிற மாதிரி செய்யணும்” என்றார்.

 அப்பொழுது நாங்கள் அவரிடம் கூறினோம். “நாங்க சமைச்சுத் தருவோம், நிங்க சாப்பிடணும்” என்றோம்.

“நீ செஞ்சு கொண்டு வாம்மா நான் சாப்பிடலைனா கேளு” என்றார்.

 காலம் ஓடியது. என் முறை வந்தபோது, நானும் என் தோழியும் இணைந்து பட்டாணி புதினா சாதம்  செய்திருந்தோம். காலை செய்தது. மாலை அவர் வந்தார். குக்கரில் இருந்த அடி சாதத்தை அவரிடம் கொண்டு நீட்டி “இத சாப்பிடுங்க. நீங்க நாங்க கொடுத்தா சாப்பிட மாட்டீங்கன்னு சொன்னாங்கல்ல சாப்பிட்டு காட்டுங்க பார்ப்போம்” என்றோம். அவர் சாப்பிடமாட்டார் ஏதாவது காரணம் சொல்லிப் புறக்கணிப்பார் என்று நினைத்தோம்.

 ஆனால் இல்லை. அந்த முழு டிபன் பாக்ஸ் சாப்பாட்டையும் அவர் ஒருவராகச்  சாப்பிட்டார். அவரது நண்பர் பஞ்சு சார் “எனக்கு ஒரு வாய் கொடு” என்று கேட்டபோதும், அவர் கொடுக்கவில்லை. அவர் முழுமையாகச் சாப்பிட்டார். சாப்பிட்டு முடித்து “பட்டாணியும் புதினாவும் சேர்த்து சுவையாக செய்திருந்தீர்கள். இதற்கு உருளைக்கிழங்கு மசாலா போட்டு வறுத்து இருந்தா இன்னும் சூப்பரா இருந்திருக்கும்” என்றார்.

இது எங்களை நெகிழவைத்தது. சீனியர் அக்காக்கள்கூட எங்களை கேலி பேசி நக்கல் அடித்தார்கள். இருந்தபோதிலும் அவர் சிறிய பிள்ளைகளான எங்களிடமிருந்து பெற்று சாப்பிட்டது எங்களை மகிழ்ச்சியடையச் செய்தது.

நானும் விசித்ராவும் ஓரளவிற்கு ஒரே குரலை ஒத்தவர்கள். பத்மராஜன் சாரும் பஞ்சாபிகேசன் சாரும் அருகில் அமர்ந்திருக்கும்போது, நாங்கள் இருவரும் சுட்டித்தனமாக மாற்றி மாற்றிக் கூப்பிடுவோம். அவர்கள் விசித்ரா என்பார்கள், நான் சென்று குரல் கொடுப்பேன். மறுமுறை கூப்பிட்டுவிட்டு அவர் “சோபியா” என்பார். நான் விசித்ரா என்று அவள் போய்விட்டாள் என்று கூறி விளையாடுவோம்.

 இதுபோன்றெல்லாம் அவரிடம் விளையாடி, சுட்டித்தனம் செய்திருக்கிறோம்.

 செல்லக் குழந்தைகளைப் போல பார்த்துக்கொண்டார்கள். எங்களுக்கு இடைநிலை ஆசிரியர்ப் பயிற்சியில் இடம்  கிடைத்தபோதும்கூட பலர் பயிற்சியில் சேர வேண்டாம் என்றார்கள். எங்கள் பத்து சார் மட்டும் “போய் படிங்க வேலை கிடைக்கும் வரை போராடுங்கள்” என்று நிறைந்த மனதோடு எங்களுக்கு சொல்லி அனுப்பினார்.

எனக்கும் விசித்ராவுக்கும் சிறுசிறு சண்டைகள் வரும்போதெல்லாம் கூப்பிட்டு அறிவுரை கூறி “உங்களைப் போல நண்பர்கள் எங்கும் பார்த்ததில்லை, உங்களுக்குள் சண்டை வரலாமா?” என்று சமாதானப்படுத்தி அனுப்புவார்கள். எனக்கு லோட்டஸ் ஹாஸ்டலில் இருந்தது சிறு காலமாக இருந்தாலும் அது ஒரு சொர்க்கம்தான்.

 பல பிரச்சனைகள் இருந்தாலும்கூட அது ஒரு சுகமான  காலமாகத்தான் இருந்தது. வாழ்க்கையில் ஏற்றத்தாழ்வுகளையும் கஷ்டநஷ்டங்களையும் சொல்லிக்கொடுத்த இடம்தான் எங்கள் தாமரை விடுதி.

அத்தகைய தந்தையின் அன்பு எங்களை விட்டுப் போய்விட்டது என்று நினைக்கும்போது மனம் வலிக்காமல் இல்லை.

தாமரை பார்வையற்றோர் நல பெண்கள் அறக்கட்டளை மட்டுமல்லாமல் பார்வையற்ற ஆசிரியர்களுக்கான சங்கத்தையும் உருவாக்கினார் திரு பத்மராஜ் அவர்கள்.

தனது வாழ்நாளில் கிட்டத்தட்ட 50 ஆண்டுகாலம் பார்வையற்றோர் நலன் குறித்துச் சிந்தித்தவர்.

பார்வையற்ற பெண்கள் வாழ்வில் முன்னேற வேண்டும் என்று போராடிக்கொண்டிருந்த அண்ணார் 10 /09/21 அன்று இரவு தன் இன்னுயிரை காலனிடம் கொடுத்து நித்திரைகொண்டார்.

லெனின் சொல்கிறார், ‘ஒரு மனிதனின் மரணம் என்பது 60 வயதுகளில்தான் நடப்பதாக நாம் நினைக்கிறோம். ஆனால் என்று அவன் சிந்திக்க மறுக்கிறானோ அன்றே அவன் இறந்துபோகிறான்’ என்கிறார்.

சில ஆண்டுகளாகத் தன்னிலை மறந்து இருந்தாலும் அவர் சிந்தனை மட்டும் பார்வையற்றோர் குறித்தே இருந்தது என்கிறார்கள் அவருடைய நண்பர்கள்.

கடைசியாக சென்று அவரை மருத்துவமனையில் பார்த்தபோதுகூட எங்கள் குரல் கேட்டவுடன் அன்பின் வெளிப்பாடாக அவர் விழிகள் மட்டும் கண்ணீர் வழிய பதில் கூறியது என்கிறார்கள் அவரின் நட்பு வட்டத்தார்.

திரு. பத்மராஜன் ஐயா அவர்கள் இந்த உலகத்தை விட்டு மறைந்திருந்தாலும், ஒவ்வொரு பார்வையற்றவருடைய நெஞ்சங்களில் இன்றும் என்றும் என்றென்றும் வாழ்ந்துகொண்டிருப்பார். அதிலும் பார்வையற்ற பெண்களின் வழிகாட்டியாக ஞானத்தந்தையாக என்றும் அவர்களுக்கு வழிகாட்டுவார்.

அவர் பூத உடல் இந்த பூமியில் விதைக்கப்பட்டிருக்கிறது. அவரால் தூவப்பட்ட விதைகள் விருட்சங்களாக பல பார்வையற்றவர்களுக்கு வழிகாட்டும் என நம்பிக்கையோடு கனத்த இதயத்தோடு முடிக்கிறேன்.

***

கட்டுரையாளர் தஞ்சைப் பார்வைத்திறன் குறையுடையோருக்கான அரசு மேல்நிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியர்.

தொடர்புக்கு: sophiamalathi77@gmail.com

செல்பேசி: 9629495808

Be the first to leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *