செப்டம்பர் 23: உலக சைகைமொழி நாள்

,வெளியிடப்பட்டது

சைகைமொழிதான் மனிதன் முதன்முதலில் கைக்கொண்ட ஆதிமொழி. அதற்கு நாடு, இனம், மதம் என எந்த பேதமும் கிடையாது. இன்றளவும் உலகில் வசிக்கும் ஏழு கோடி காதுகேளாதோருக்கான சிறப்பு மொழி சைகைமொழியாகும்.

சைகை மொழி பயன்படுத்தி உரையாடும் நபர்
சைகை மொழி பயன்படுத்தி உரையாடும் நபர்

1951 செப்டம்பர் 23ஆம் நாளில், உலகில் முதன்முறையாக காதுகேளாதோருக்கான கூட்டமைப்பு ஏற்படுத்தப்பட்டது. இதை நினைவுகூரும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 23ஆம் நாளை உலக சைகைமொழி தினமாகக் கடைபிடிக்க வேண்டும் என ஐக்கிய நாடுகள் அவை உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து கடந்த 2018 ஆம் ஆண்டுமுதல் செப்டம்பர் 23ஆம்  நாள் உலக சைகைமொழி தினமாக உலக நாடுகளால் அனுசரிக்கப்படுகிறது.

சைகைமொழிதான் மனிதன் முதன்முதலில் கைக்கொண்ட ஆதிமொழி. அதற்கு நாடு, இனம், மதம் என எந்த பேதமும் கிடையாது. இன்றளவும் உலகில் வசிக்கும் ஏழு கோடி காதுகேளாதோருக்கான சிறப்பு மொழி சைகைமொழியாகும்.

அதேநேரம், முழுப் பார்வையற்றவர் கொஞ்சம் விலக்கத்தோடே பார்க்கும் மொழி இது. தன்னுடன் இருக்கும் இருவர் சைகை மொழியில் பேசிக்கொள்வதைப் பெரும்பாலும் முழுப் பார்வையற்றவர்கள் ஒருவித ஒவ்வாமையுடன்தான் பார்ப்பார்கள். அந்தச் சூழலில் ஒருவகை புறக்கணிப்பு மனநிலை அந்தப் பார்வையற்றவரிடம் எட்டிப் பார்ப்பது இயல்பே.

ஆனால், சின்னச் சின்னச் சைகைகளை முழுப் பார்வையற்றவர்களுக்குக் கற்பிப்பது அவசியம் என்பதை ஒரு நிகழ்வு எனக்கு உணர்த்தியது. கல்வித்துறையால் மாவட்ட அளவில் நடத்தப்பட்ட பேச்சுப்போட்டிக்கு முழுப் பார்வையற்ற புதுக்கோட்டை பள்ளி மாணவி ஒருவரை அழைத்துப்போனோம். குரல் ஏற்ற இறக்கத்துடன் அவள் பேசியது அனைவருக்குமே பிடித்திருந்தது. ஆனாலும், பரிசு கிடைக்கவில்லை. நடுவர்களில் ஒரு ஆசிரியை மனம் திறந்து அதற்கான காரணத்தைச் சொன்னார்.

“சார் பொண்ணு சூப்பராப் பேசுறா. என்ன வேகம், நல்ல குரல் வளம். ஆனா அப்படியே ஏதோ சிலைபோல நின்னு பேசுறதுதான் கொஞ்சம் உறுத்தலா இருக்கு. அப்படி இப்படி கையாட்டி, கொஞ்சம் பாடி லாங்குவேஜ் கலந்து பேசினா இன்னும் சிறப்பா இருக்கும்” என்றார். உண்மைதான். நான் உட்பட பல பார்வையற்றவர்கள் சந்திக்கும் மிக எதார்த்தமான பிரச்சனை இது. நாம் பேசுவதைவிட முக்கியம், நம் பேச்சைக் கேட்போரின் கவனத்தை ஈர்ப்பது.

குறைப்பார்வை உடைய குழந்தைகள் பிறரைப் பார்த்து, உடல்மொழி, சைகைமொழிகளைத் தானாகவே கற்றுக்கொள்கிறார்கள். ஆனால், முழுப் பார்வையற்றவர்களுக்கு இதற்கான வாய்ப்புகள் குறைவு. சிறப்புப் பள்ளிகளில் பார்வையற்றோருக்கு உடல்மொழி, சைகைமொழி தொடர்பான பயிற்சிகளும் வழங்கப்பட வேண்டியது காலத்தின் தேவையாக இருக்கிறது.

குழந்தைப் பருவத்திலிருந்தே அதற்கான பயிற்சிகள் தொடங்கப்பட வேண்டும். ஏனென்றால், என்னைப் போன்றவர்களுக்கு என்னதான் உடல்மொழியை இப்போது கற்பித்தாலும், ஏதோ பொம்மைபோலத்தான் அதனை எதிரொலிப்போம். இதையெல்லாம் நான் எழுத சிலர் படிக்க எனக் கடந்து போகாமல் அரசுக்கு யாரேனும் இதையும் ஒரு கோரிக்கையாக முன்வையுங்கள்.

இல்லையென்றால், “சிறப்புப் பள்ளிக் குழந்தைகளுக்கு வயிறாறச் சாப்பாடு போடுகிறோம்” எனத் தங்கள் நிதிநிலை அறிக்கையில் குறிப்பிட்டுப் புலகாங்கிதம் அடைவதிலேயே தேங்கிப்போய்விடும் அரசும் அதிகாரமும்.

அனைவருக்கும் உலக சைகைமொழி நாள் வாழ்த்துகள்.

*

தொடர்புக்கு: vaazhgavalluvam@gmail.com

பகிர

5 thoughts on “செப்டம்பர் 23: உலக சைகைமொழி நாள்

  1. முதன்முதலில் மனிதன் பயன்படுத்திய சைகை மொழியை சாதி மதம் இனம் மொழி இவற்றிற்கு அப்பாற்பட்டு பயன்படுத்தும் மக்களுக்கு உலக சைகை மொழி தின நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.

  2. முதன்முதலில் மனிதன் பயன்படுத்திய சைகை மொழியை சாதி மதம் இனம் மொழி இவற்றிற்கு அப்பாற்பட்டு பயன்படுத்தும் மக்களுக்கு உலக சைகை மொழி தின நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.

உங்கள் கருத்தை உள்ளிடுங்கள்