சிந்தனை: இன்னும் எத்தனை நாளைக்கு?

,வெளியிடப்பட்டது

உடலியக்கக் குறைபாடுகளை நடிகர்கள் திரையில் கிண்டல் செய்வதும், அதை உள்ளம் தொட்ட நகைச்சுவையாக ரசிகர்கள் கொண்டாடுவதும்தான் பல நேரங்களில் பேசுபொருளாக இருக்கிறது.

சவால்முரசு பதிவுகளை உடனுக்குடன் பெற கூகுல் செய்திகளில் எம்மைப் பின்தொடரவும்

டிக்கிலோனா படத்தில் மாற்றுத்திறனாளிகள் குறித்து சந்தானம் பேசிய வசனங்களுக்குக் கடும் கண்டனங்கள் வந்தன. அவற்றுள் முக்கியமானதுடிசம்பர் 3இயக்கத்தின் தலைவரான திரு. தீபக்நாதனின்

முகநூல்ப்பதிவு.

எத்தகைய சவால்களோடு மாற்றுத்திறனாளிகள் தங்கள் அன்றாட வாழ்வை எதிர்கொண்டு மேலெழுகிறார்கள் என்பதை அழுத்தமாகச் சொல்லியிருக்கிறார். அவரின் பதிவை ஒட்டி ஊடகவியலாளர் மதிப்பிற்குரிய திரு. ஜீவசகாப்தன் தனது யூட்டூப் தளத்தின் வழியாக எழுப்பியிருக்கிற கேள்விகள் ஆழமானவை. நாகரீகம் அடைந்த முற்போக்கான சமூகம் என்று சொல்லிக்கொள்ளும் நாம் முன்வந்து பரிசிலிக்க வேண்டியவை.

“நாங்கள் சமூகத்தையே பிரதிபளிக்கிறோம், சமூகத்தில் இல்லாத ஒன்றை திரையில் புதிதாகச் சொல்லிவிடுவதில்லை” என திரைப்படங்கள் சமூகத்தைக் கெடுக்கின்றன என்ற வாதத்தின் எதிர்வாதமாகத் திரைத்துறையினர் சொல்லக் கேட்டிருக்கிறோம். பெரும்பகுதி அதில் உண்மை இருப்பதாகவே தோன்றுகிறது. சந்தானம் போன்ற நடிகர்கள் நகைச்சுவை என்ற பெயரில் எதை வேண்டுமானாலும் பேசலாம் என்ற தைரியத்தைக் கொடுத்திருப்பது இந்தச் சமூகமன்றி வேறு யார்?

உடலியக்கக் குறைபாடுகளை நடிகர்கள் திரையில் கிண்டல் செய்வதும், அதை உள்ளம் தொட்ட நகைச்சுவையாக ரசிகர்கள் கொண்டாடுவதும்தான் பல நேரங்களில் பேசுபொருளாக இருக்கிறது. ஆனால், வாழ்க்கையில் நிலையழிந்த பல மனிதர்களின் தலைகோதி, அவர்கள் புத்துயிர் பெற பெருந்தூண்டலாக இருக்கும் சில தன்னம்பிக்கைப் பாடல்களைக்கூட நையாண்டி செய்யும் சமூகம் இது என்பதை வேறு எவரையும்விட பார்வையற்றவர்களே நன்கு உணர்ந்து வைத்திருக்கிறோம்.

சில ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்து பல மனிதர்களைத் தன்னம்பிக்கை கொள்ளச் செய்த ஆட்டோகிராஃப் படத்தின் ஒவ்வொரு பூக்களுமே பாடலை யாரால் மறக்க முடியும்? கவிஞர். பா. விஜய் அவர்களின் வரிகளும், சின்னக்குயிலின் ஆறுதலான குரலும் அசைத்துப் பார்த்த நெஞ்சங்கள் ஆயிரம். அந்தப் பாடல், தோல்விகளில் துவண்டு கிடந்த பல மனங்களின் புத்தாக்கப் பாயிரம்.

ஆனால், அந்தப் பாடல் பார்வையற்றவர்களிடம் கணிசமான வெறுப்பைச் சம்பாதித்து வைத்திருக்கிறது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? வெறுக்கக்கூடிய வரிகளா அவை? வெதும்பிய மனங்களுக்கெல்லாம் ததும்பத் ததும்பத் தன்னம்பிக்கையை ஊட்டிய பாடல் அல்லவா அது. அப்படியிருந்தும் பார்வையற்றவர்களுக்கு அந்தப் பாடல்மீது ஏன் அப்படி ஒரு விலக்கம், ஒரு உச்சு கொட்டல்? உபயம் இந்தச் சமூகம் என்ற நாளுபேர்தான்.

பார்வையற்றவர்கள் சாலையைக் கடக்க, பேருந்தில் ஏற என பல நல்ல உள்ளங்கள் தானாக முன்வந்து உதவிக்கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால், அவர்களைக் கலாய்க்கிறேன் என்ற பெயரில் அவர்களின் உடனுறைத் தோழர்கள்இந்தப் பாடலைக் கையிலெடுப்பார்கள் பாருங்கள். ‘உள்ளம் என்றும் எப்போதும் உடைந்து போகக்கூடாது’ என அவர்கள் ஆரம்பிக்கையில் சொல்ல முடியாத அவல உணர்ச்சி எனக்குள் குடியேறும். உதவ வந்தவருக்கும் அது தர்ம சங்கடமான நிலை. இது எனக்குப் பலமுறை நடந்திருக்கிறது. பல பார்வையற்றவர்களுக்கும் இது நடந்திருக்கக்கூடும்.

சரி, இவர்களையாவது “பிதாவே இவர்களை மன்னியும்’ என்ற ரீதியில் கடந்துவிடலாம். ஆனால், நாங்கள் நடத்தும் நிகழ்வுகளில் பங்கேற்கும் பல சான்றோர் பெருமக்கள், சமூகக் கேசரிகள் விழா முழுக்க எங்களுக்கே தன்னம்பிக்கை வகுப்பெடுப்பார்கள். ஹெலன்கெல்லர், பீத் ஓவன் என்றெல்லாம் தாங்கள் மண்டைக்குள் வைத்திருக்கும் பல்லாண்டுக் கட்டுச்சோற்றைப் பிரிப்பார்கள். அப்படியே அவர்களைப் பிரித்து மேய்ந்தால் என்ன எனத் தோன்றும். இத்தனை கொடுமைகளையும் தாண்டி, ‘ஊனம் ஊனம் ஊனம் இங்கே’ என ஆரம்பிப்பார்கள் பாருங்கள். கொண்டாட்டமாய் நாங்கள் நினைத்து ஏற்பாடு செய்த நிகழ்வில் கூனிக்குறுகி உட்கார்வதைத்தவிர எங்களுக்கு வேறு வழியில்லாமல் போகும்.

இதற்கெல்லாம் உச்சமாய் ஒரு சம்பவம். நான் முன்பு பணியாற்றிய பள்ளிக்கு அடிக்கடி கல்லூரிகளிலிருந்து ஸ்கூல் விசிட் என்ற பெயரில் மாணவ மாணவிகள் வருவதுண்டு. சிறப்புப் பள்ளி குறித்தும், சிறப்புக் கல்வி குறித்தும் அவர்களுக்கு சொல்வதற்கு என்னைத்தான் நிலைய வித்வானாக நிர்வாகம் வைத்திருந்தது. நானும் முடிந்தவரை, அவர்களிடம் பல கோணங்களில் பார்வையற்றவர்களின் எதிர்பார்ப்புகள், அபிலாஷைகள் பற்றி சில நிமிடங்கள் உரையாடுவேன். “நீங்கள் பார்வையற்றவர்களை இவர் நம்மைவிட அறிவானவர் என்று மேலே வைக்கவோ, பார்வையற்றவர் என்பதால், இவருக்கு எதுவும் தெரியாது என்று சாதாரணமாகக் கடந்துவிடவோ தேவையில்லை, நாங்களும் உங்களைப் போன்ற சாதாரண மனிதர்கள்தான். நீங்கள் உங்களைப் போன்ற சக மனிதர்களாக ஒரு பார்வையற்றவரை அணுகக் கற்றுக்கொள்ளுங்கள்” என்று முடிப்பேன்.

அந்த மாணவர்களும் அமைதியாகக் கேட்பார்கள். பின்னர் குழந்தைகள் பாடல் பாடுவது, பலகுரல் செய்வது என நிகழ்ச்சிகள் நடக்கும். அப்போது அந்த மாணவர்கள் சார்பாக யாரேனும் பாட முன்வரலாமே எனக் கேட்போம். “நீ, நீ” என பல ஆட்காட்டி விரல்கள் முட்டி மோதிக் கடைசியில் ஒரு மாணவரோ மாணவியோ முன்வருவார். அவர்தான் அந்தக் குழாமிலேயே இசை கற்றுக்கொண்டிருக்கிறாராம்.

சொன்னால் நம்பமாட்டீர்கள், அப்படி முன்வந்த மாணவக் கண்மணிகளில் பெரும்பாலானவர்கள் பாடிய பாட்டு ஒவ்வொரு பூக்களுமே. அந்தப் பாடல் காட்சியில் யாரை முன்வைத்து, யாருக்குப் போதிக்கப்படுகிறது என்பதுகூடப் புரியாமல், ஸ்ப்ப்ப்பா முடியல.

இன்னும் எத்தனை நாட்களுக்குத்தான் எங்களை இந்தச் சமூகம் தன்னம்பிக்கைக் காட்சி சாலையில் நிற்க வைத்து, அரங்கேற்றத்துக்குப் பின் ஒரங்கட்டிக்கொண்டே இருக்கப்போகிறது என்று தெரியவில்லை. ஒருபக்கம் கேலி, மறுபக்கம் அதீதப் புகழ்ச்சி.

சமத்துவ சக வாழ்வு என்று கிட்டுமோ?

***

ப. சரவணமணிகண்டன்

தொடர்புக்கு: vaazhgavallluvam@gmail.com

பகிர

Be the first to leave a comment

உங்கள் கருத்தை உள்ளிடுங்கள்