கலந்துரையாடல் என்னும் தொடரோட்டம்

,வெளியிடப்பட்டது

20 அம்சக் கோரிக்கைகள் என்று பொதுவாகச் சொல்லிவிட்டாலும், அவற்றைப் படிக்கும் மாணவர்களுக்கானது, பணியை எதிர்நோக்கியிருப்பவர்கள் மற்றும் பணியிலுள்ளோருக்கானது என மூன்றாக வகைப்படுத்தியிருப்பது சிறப்பு.

பார்வையற்ற கல்லூரி மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் சங்கத்தினர் அரசியல் கட்சிப் பிரதிநிதிகளை அழைத்துத் தங்களின் கோரிக்கைகளை முன்வைத்து நடத்திய ஜூம் வழிக் காணொளிக் கூட்டம் ஒரு முக்கியமான முன்னெடுப்பு என்றே சொல்லவேண்டும். கலந்துரையாடலில் பங்கேற்ற இந்தியக் கம்னியூஸ்ட் கட்சி, காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் ஆகிய மூன்று கட்சிகளும் இன்றைய சூழலில் ஆளும் கூட்டணியில் இடம்பெற்று இருப்பவை. எனவே,சங்கத்தின் 20 அம்ச கோரிக்கைகளை சட்டமன்றத்தில் அரசின் கவனத்திற்கு மிக எளிதாகவே கொண்டுசெல்ல இயலும். அவர்கள் மனது வைத்தால், மக்கள் உரிமை பாதுகாப்பு மையத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் திரு. ஜிம்ராஜ் மில்டன் அவர்கள் கேட்டுக்கொண்டதுபோல, சங்கத்தினரையும் அழைத்துக்கொண்டு, முதல்வரைச் சந்தித்து கோரிக்கைகளை எடுத்துரைப்பதும் சாத்தியமான ஒன்றே.

20 அம்சக் கோரிக்கைகள் என்று பொதுவாகச் சொல்லிவிட்டாலும், அவற்றைப் படிக்கும் மாணவர்களுக்கானது, பணியை எதிர்நோக்கியிருப்பவர்கள் மற்றும் பணியிலுள்ளோருக்கானது என மூன்றாக வகைப்படுத்தியிருப்பது சிறப்பு. அதனை உரிய அரசாணைகள், நீதிமன்றத் தீர்ப்புகளுடன் 267 பக்கங்கள் கொண்ட ஒரு புத்தகமாகக் கொண்டுவந்திருப்பது புதுமையானதும், எக்காலத்துக்கும் தேவையான ஒன்றாகவும்அமைந்திருப்பதைப் பாராட்டியே ஆகவேண்டும். அதனை மிகச் சுருக்கமாக எந்தவித அலங்காரமோ, ஆவேசமோ இன்றி சங்கத்தின் செயற்குழு உறுப்பினர் திரு. பாண்டியராஜன் விளக்கியது கேட்போரின் கவனத்தைக் கவர்ந்தது.

நிகழ்வில் அனைவராலும் வெகு ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட திரு. தொல். திருமாவளவன் அவர்களின் உரை இடம்பெறாமல் போனது ஏமாற்றமே. பங்கேற்றுக் கேட்கும் நமக்கே அது கடும் ஏமாற்றத்தைத் தந்தது என்றால், இதற்காகப் பெரும் முயற்சி எடுத்துக்கொண்ட சங்கத்தினர் அடைந்த மனநிலையை நாம் எளிதாகவே ஊகித்துவிடலாம். அதேநேரம், தன்னால் உறுதியளித்தபடி பங்கேற்க இயலாமல் போனது குறித்து நிச்சயம் திருமா அவர்கள் வருந்தவே செய்வார். அந்த வருத்தம் சங்கத்தினருக்கு ஏதேனும் செய்தே ஆக வேண்டும் என்கிற அவரின் தார்மீகத்திற்கு மேலும் தண்ணீர் வார்க்கவே செய்உம். எனவே சங்கத்தினர் கவலைகொள்ளத் தேவையில்லை. இதுவே தங்களின் முயற்சிக்குக் கிடைத்திருக்கிற பெருவெற்றிதான்.

இந்தியக் கம்னியூஸ்ட் கட்சியின் தலைவர் திரு. முத்தரசன் அவர்கள் பேச்சில் இயல்பும் நெகிழ்வும் ஏராளம். தாங்கள் அரசுக்கு வழங்கும் கடிதத்தின் நகலைச் சங்கத்துக்கும் அனுப்புவோம் ஏன்று சொல்வதெல்லாம் பொறுப்புவாய்ந்த கட்சித்தலைவர்கள் பேண வேண்டிய செயலொழுங்குக்கு சிறந்த சான்று.

இந்திய தேசிய காங்கிரஸின் தமிழக சட்டமன்றக் கட்சித்தலைவர் திரு. செல்வப் பெருந்தகை அவர்களின் பேச்சில் நமக்காக ஏதேனும் செய்தே ஆகவேண்டும் என்ற உந்துதலை உணர முடிந்தது. நிகழ்வில் பேசிய இரு வழக்கறிஞர்களுமே நமது பிரச்சனைகளை நன்றாக உள்வாங்கி, அவற்றைப் பொதுத்தளத்தில் அனைவரும் ஏற்கும் வண்ணம் எப்படி விளக்குவது என்பதை நன்கு சிந்தித்து, மனதில் நிறுத்திவைத்திருக்கிறார்கள். அப்படிப்பட்ட தனிநபர் தொடர்புகளை வளர்த்துக்கொள்வதும், அதனைத் தொடர்ந்து பேணுவதும் நாம் கைக்கொள்ள வேண்டிய முக்கியக் கடமைகளுள் ஒன்று.

சிறப்பழைப்பாளர்கள் சிரமமின்றிப் புரிந்துகொள்வதற்கு ஏதுவாக, எப்போதும் போலவே, சொல்லவேண்டியதை மட்டும் துல்லியமாகத் தொகுத்தளிப்பதாக அமைந்தது அகில இந்திய பார்வையற்றோர் கூட்டமைப்பின் துணைத்தலைவர் திருமதி. முத்துச்செல்வி பாண்டியராஜன் அவர்களின் சிறப்புரை. அதனை மெய்ப்பிக்கும் வகையில்தான், விசிகவின் சார்பில் பேசிய திரு. பாலசிங்கம் அவர்கள் அரசியல் அமைப்பு பிரிவு 15ல் திருத்தங்கள் மேற்கொள்ள தங்கள் கட்சி முயற்சிக்கும் என்று நினைவுபடுத்திச் சொன்னார்.

தலைமை உரையாற்றி, நிகழ்வைத் தொகுத்து வழங்கியசங்கத்தின் பொறுப்புத் தலைவர் திரு. அரங்கராஜா அவர்களை ஒவ்வொரு சிறப்பழைப்பாளர்களும் உரிமையோடே பெயர் சொல்லி அழைத்தபோது, அரங்கிற்கு வெளியேயும் அவர் வழங்கியிருக்கிற உழைப்பை அறிய முடிந்தது. இப்படி ஒரு ஒருங்கிணைப்பை செயல்படுத்தலாம் என்ற பொதுச்செயலாளர் மணிக்கண்ணனின் ஆலோசனைக்கு சபாஷ் போடவேண்டும்.

இறுதியாக ஒன்று, 20 அம்சக் கோரிக்கைகள் மூன்று பிரிவினருக்குமானது. ஆனால், 4000 உறுப்பினர்களில் பிரிவுக்கு 50 பேர் பங்கேற்றிருந்தால்கூட எண்ணிக்கை 150ஐ தொட்டிருக்கும். இதுதான் நம்மவர்களிடையே இருக்கும் மிகப்பெரிய குறை. ஆனால், இது இப்படித்தான் இருக்கும் என்ற புரிதலைக்கொண்டே இத்தகைய சோதனைகளை ஒவ்வொரு அமைப்பும் கடந்தாக வேண்டும்.

ஒரு சிறப்பான நிகழ்வை முன்னெடுத்து, அதனைப் பொதுச்சமூகமும் பங்கேற்கும்  தொடரோட்டமாகத் தொடங்கிவைத்திருக்கிற பார்வையற்ற கல்லூரி மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் சங்கத்தின் அனைத்து நிர்வாகிகளுக்கும் நன்றிகளும் வாழ்த்துகளும் பாராட்டுகளும்.

***

ப. சரவணமணிகண்டன்

பகிர

Be the first to leave a comment

உங்கள் கருத்தை உள்ளிடுங்கள்