சமத்துவத்தின் காற்று

,வெளியிடப்பட்டது

கல்வி பயிலும் மாணவர்கள்தான் என்றில்லாமல், பார்வையற்ற ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு எளிய கடன் வசதித் திட்டத்தில் இந்தக் கருவியினை அரசு வழங்கலாம்.

ஆர்பிட் ரீடர்
ஆர்பிட் ரீடர்

இந்தப் புகைப்படத்தில் இருப்பது என்ன தெரியுமா? இதுதான் ஆர்பிட் ரீடர் (orbit Reader). அப்படியென்றால், ஒரு டெக்ஸ்ட் வடிவ மின் கோப்பினை தனக்குள் வாங்கி, அதனை பிரெயில் எழுத்துகளாக மாற்றியமைக்கும் தொழில்நுட்பத்தால் வடிவமைக்கப்பட்ட கருவி. அதாவது, பார்வையுள்ளவர்களால் படிக்கப்படும் எழுத்து வடிவங்களைப் பார்வையற்றோர் தடவிப் படிக்கும் பிரெயில் புள்ளிகளாக மாற்றக்கூடியது.

ஏன் இந்தக் கருவி அவசியமாகிறது?

பொதுவாகப் பார்வையற்றோரின் கல்வி பெரிதும் கேட்டல் வழியிலேயே நிகழ்கிறது என்றாலும், தங்களுக்கே உரித்தான பிரெயில் எழுத்துகளைத் தடவிப் படித்தும், எழுதியும் கற்கும்போதுதான் ஒரு பார்வையற்றவரின் அகம் நிறைவடைகிறது. புள்ளிகளில் உறைந்திருக்கும் மொழியின் வடிவம், விரல்களின் வழியே எதன் குறுக்கீடும் இன்றி சிந்தையை நிறைக்கிறது. அவ்வாறு பெறப்பட்ட அறிதல்களே மிகக் கூர்மையானதாக, நினைவாற்றல் பகுதியில் ஆழப் பதிந்தும் நிலைக்கின்றன. நீங்கள் ஒரு வார்த்தையை உச்சரிக்கும் தருணத்தில், உங்களின் கண்கள் வழியே உங்கள் மனதுக்குள் நுழைந்துவிட்ட அதன் எழுத்து வடிவங்்கள் மனதுக்குள்ளிருந்து எட்டிப் பார்ப்பதுபோல, எங்களையும் உணரவைப்பது இந்த பிரெயில் மொழிதான்.

ஒலிப்புத்தகங்கள் (audiobooks), கணினித் திரைவாசிப்பான்கள் (screen-readers) எனப் பெரும்பாலும் தான் சார்ந்திருக்கும்  கேட்டல் புலக்  கற்றலில் ஒரு பார்வையற்றவரால் இத்தகைய தனித்த அனுபவத்தை ஒருபோதும் பெற முடியாது. அதனால்தான் பார்வையற்றோருக்கான சிறப்பு்ப் பள்ளிகளில் பிரெயில்வழிக் கல்விக்கே முன்னுரிமை வழங்கப்படுகிறது. தங்கள் இடைநிலைக் கல்விவரை, பாடம் சார்ந்த புத்தகங்களைப் பிரெயில் வழியில் படிக்கும் ஒரு பார்வையற்றவர், மேல்நிலை வகுப்புகள் மற்றும் கல்லூரிகளில் தனக்கான அனைத்துப் பாடப் புத்தகங்கள் பிரெயிலில் கிடைக்கச் சாத்தியமில்லை என்பதால், கேட்டல் புலத்தை நாட வேண்டியிருக்கிறது. எனவேதான் பள்ளி வயதில் ஒரு பார்வையற்றவரிடம் காணப்பட்ட நினைவாற்றலும், கூர்மதியும் படிப்படியாக மங்கத் தொடங்கிவிடுகின்றன.

ஏன் உயர் வகுப்புகளில் பிரெயில் புத்தகங்கள் கிடைப்பதில்லை?

பிரெயில் புத்தகங்கள் தயாரிப்பு என்பது, விலை உயர்ந்த பிரெயில் அச்சுப் பொறிகளைக் கொண்டு, அதற்கென்றே இருக்கிற பிரத்யேகமான தாள்களில் அச்சடிக்கப்பட்டு உருவாவதாகும். இது செலவு மிகுந்த ஆனால் மிக மிக மிகக் குறைந்த அளவிலேயே தேவைப்படும் ஒன்றாக இருக்கிறது. அளவில் ஒரு அச்சுப் புத்தகத்தைக் காட்டிலும் மூன்று மடங்கு பெரியதாக இருக்கும். அதாவது, 150 பக்கங்கள் கொண்ட ஒரு அச்சு நூலைப் பிரெயிலாக மாற்றினால், அதன் பக்கங்கள் அச்சுப் புத்தகங்களைவிட இரு மடங்கு அளவில் பெரிய தாள்களுடன், சுமார் 350 பக்கங்களைக் கொண்டதாக வெளிவரும். எனவேதான் மேல்நிலை வகுப்புகள்வரை பிரெயில் புத்தகங்களை இலவசமாக அச்சடித்துத் தரும் அரசு, கல்லூரி வகுப்புகளுக்கு அதனை நீட்டிப்பதில்லை. நடைமுறையில் அது அத்தனை எளிய செயலும் அன்று.

பிரெயில் புத்தகங்கள் இடத்தை அடைக்கக்கூடியவை. நெருக்கியடித்து பத்து பிரெயில் புத்தகங்களை அடுக்கும் ஒரு அலமாரியில் நூறு அச்சுப் புத்தகங்களைத் தாராளமாக அடுக்கிவிடலாம். அளவில் பெரியதும் பருத்ததும் என்பதால், எளிதில் எங்கும் எடுத்துச் செல்ல முடியாது. மேலும், காலப் பழமையால் புத்தகத் தாள்கள் கிழிந்துபோவதும், புள்ளிகள் மங்கிப் போவதும் இயல்பு. அதனால் ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு, பெரும் செலவில் தயாரிக்கப்பட்ட பிரெயில் புத்தகங்கள் அதன் பயன்பாட்டை இழந்து மட்கும் குப்பைகள் ஆகிவிடுகின்றன.

பிரெயிலை அணுகுவதில் பார்வையற்றவர்களுக்கு காலங்காலமாக நீடிக்கிற மேற்சொன்ன நடைமுறைச் சிக்கல்களை எளிதில் களையக்கூடிய தொழில்நுட்பக் கருவியாக மலர்ந்திருக்கிறது இந்த ஆர்பிட் ரீடர். ஆயிரக்கணக்கான ஒருங்குறி வடிவிலான மின் புத்தகங்களை (text formats) ஒரு மெமரிக் கார்டில் ஏற்றி, இந்தக் கருவியின் உதவியோடு அவற்றைப் பிரெயிலில் படிக்கலாம். கருவி அளவில் மிகச் சிறியது என்பதால், செல்லும் இடம் எல்லாம் அந்த ஆயிரக்கணக்கான புத்தகங்களை கூடவே கூட்டியும் செல்லலாம். தாள்கள் கிழிந்துவிடும்என்ற அச்சமோ, புள்ளிகள் மங்கிவிடும் என்ற பதட்டமோ தேவையே இல்லை.

ரூ. 35000 விலைகொண்ட இந்தக் கருவியை பட்டப் படிப்புப் பயில்கிற, போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகிக் கொண்டிருக்கிற சுமார் 200 பார்வையற்றவர்களுக்கு விலையின்றி வழங்குகிறது தமிழக அரசு. பார்வையற்ற கல்லூரி மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் சங்கத்தின் (CSGAB) தொடர் வலியுறுத்தலின் விளைவாக, கடந்த அதிமுக ஆட்சியில் அறிவிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான முக்கியமான திட்டங்களில் இதுவும் ஒன்று என நினைவுகூர்கிற அதேசமயம், பிரெயில் முறையை நவினப்படுத்துகிற, பார்வையற்றோரின் கல்விப் புலத்தில் பெரிய உத்வேகத்தை ஏற்படுத்த வல்ல அரசின் இந்தத் திட்டத்தின் சில அமலாக்கக் குறைகளைச் சுட்டுகிற சில குரல்களையும் பிரதிபளிப்பது இங்கு அவசியமாகிறது.

பட்டப் படிப்பு படிக்கிற, போட்டித் தேர்வுகளுக்குத் தன்னைத் தயார்படுத்திக் கொண்டிருக்கிற பார்வையற்றவர்களுக்கு இந்தக் கருவி வழங்கப்படும் என அரசின் வழிகாட்டு நெறிமுறைகள் தெரிவிக்கின்றன. ஆனால், போட்டித் தேர்வுகளுக்கான கற்றல் புத்தகங்களுக்கு அந்த மாணவன் எங்கே போவது?

மணிக்கண்ணன்
மணிக்கண்ணன்

தமிழ்நாடு அரசு தேர்வாணையத்தின் (TNPSC) மூலம் நடத்தப்படும் போட்டித் தேர்வுகளுக்கு 6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்புவரையிலான பாடப் புத்தகங்களைப் படித்தாலே போதுமானது என்ற நிலையில், அந்தப் பாடப்புத்தகங்கள் அனைத்தும் ஒருங்குறி வடிவில் (Unicode text) முறையில் கிடைக்க அரசு வழிசெய்ய வேண்டும் என்கிறார் பார்வையற்ற கல்லூரி மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் சங்கத்தின் பொதுச்செயலாளர் மணிக்கண்ணன். அதற்காக தமிழ்நாடு அரசு பாடநூல்க்கழகம் தன்னிடம் இருக்கும் சமச்சீர் கல்வி பாடப்புத்தகங்களின் மென்பதிப்பை (soft copy) ஒருங்குறி வடிவில் மாற்றி, பாடப்புத்தகங்களுக்கான அதன் இணையதளத்தில் வெளியிட வேண்டும் என்கிறார் அவர். மேலும், பாடப் புத்தகங்களை பிரெயிலில் அச்சடித்துத் தருகிற மதுரையைச் சேர்ந்த இந்தியப் பார்வையற்றோர் சங்கம் (IAB) கோவை ராமகிருஷ்ண வித்யாலயா, மற்றும் பூவிருந்தவல்லி பார்வையற்றோருக்கான தேசிய நிறுவனத்தின் மண்டலமையம் (NIEPVD) ஆகியவை தங்களிடம் இருக்கிற ஒருங்குறி வடிவத்திற்கு மாற்றப்பட்ட (converted) மின் புத்தகங்களை அரசுக்குத் தந்து உதவலாம் என்கிறார்.

ரகுராமன்
ரகுராமன்

பட்டப் படிப்பு பயிலும் மாணவர்கள்தான் என்றில்லாமல், ஒவ்வொரு சிறப்புப் பள்ளிகளுக்கும் இந்தக் கருவிகள் கணிசமான எண்ணிக்கையில் வழங்கப்பட வேண்டும். அந்தக் கருவியினைக் கையாள்வதற்கான உரிய பயிற்சியினை பள்ளி மாணவர்களுக்கு வழங்குவதோடு, அவை அந்தப் பள்ளிகளின் நூலகங்களில் பராமரிக்கப்பட வேண்டும் என தன் விருப்பத்தை வெளிப்படுத்துகிறார் கர்ணவித்யா அமைப்பின் ஒருங்கிணைப்பாளரான பேராசிரியர் ரகுராமன். கருவிகளின் எண்ணிக்கை 200லிருந்து அதிகரிக்கப்பட வேண்டும் எனவும், உடல்ச்சவால்கொண்ட மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் மூன்று சக்கர மோட்டார்கள் போல, ஒவ்வொரு ஆண்டும் தகுதியுடைய பார்வையற்றோருக்கு இந்தக் கருவிகள் அதிகரிக்கப்பட்ட எண்ணிக்கையில் வழங்கப்பட வேண்டும் என்பதை அரசுக்குத் தன் கோரிக்கையாக முன்வைக்கிறார் அவர்.

கல்வி பயிலும் மாணவர்கள்தான் என்றில்லாமல், பார்வையற்ற ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு எளிய கடன் வசதித் திட்டத்தில் இந்தக் கருவியினை அரசு வழங்கலாம். அரசு ஊழியர்கள் இருசக்கரம் வாங்குவதற்காக அரசால் ஏற்படுத்தப்பட்டுள்ள கடன்வசதித் திட்டங்களில் இந்தக் கருவியினையும் சேர்க்கலாம். அத்தோடு, ஒவ்வொரு மாவட்டத்தின் தலைமை நூலகங்களுக்கும் குறைந்தபட்சம் ஒரு ஆர்பிட் ரீடர் கருவியையாவது அரசு வழங்க வேண்டும்.

RPD சட்டத்தின் 12ஆம் பிரிவு 4ஆவது சரத்து
RPD சட்டம்

மேலும், மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் சட்டம் 2016 பிரிவு 12ல் உட்பிரிவு 4ஐ நிறைவேற்றும் பொருட்டு, அரசுடைமையாக்கப்பட்ட நூல்கள், அரசின் தினசரி செய்திக் குறிப்புகள், அவ்வப்போது வெளியிடப்படும் அரசாணைகள், முக்கிய அறிவிப்புகள் அனைத்தையும் ஒருங்குறி வடிவில் வெளியிடுவதோடு, அதனை உரிய மென்போருள்களைப் பயன்படுத்தி, பிரெயில் வடிவில் மாற்றி அரசு வெளியிட வேண்டும். அத்தகைய பணிகளுக்கு கணினி தொழில்நுட்பத்தில் தேர்ச்சி பெற்ற பணிவாய்ப்பு நாடும் பார்வையற்றவர்களை அரசு நியமிக்க வேண்டும்.

சக மனித நேசம், மானுட சமத்துவத்தை தனது எழுத்தின் வழியே உலகத்தின் ஒவ்வொரு மனிதனிடமும் விதைக்க விழைகிற அனைத்து எழுத்தாளர்கள், படைப்பாளர்கள் மற்றும் பதிப்பாளர்களிடமும் இதே கோரிக்கையினை முன்வைக்கிறோம். பேருந்து பயணங்களில், இரயிலில் என  உங்களின் அவ்வப்போதைய எழுத்துகளைச் சுடச்சுட தரிசிக்கிற வாய்ப்பும், உரிமையும் ஒரு பார்வையற்றவருக்கும் கிட்ட வேண்டும் என்பதைக் கருத்தில்கொள்ளுங்கள்.

சமத்துவத்தின் காற்றாய் தொழில்நுட்பம் வருகிறது. திறந்துகொள்ள வேண்டியது மனதின் கதவுகளே.

***

ப. சரவணமணிகண்டன்

வெளியானது ஆர்பிட் ரீடர் வழங்குவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள்

பகிர

2 thoughts on “சமத்துவத்தின் காற்று

  1. ஆர்பிட் ரீடர் பள்ளி மாணவர் பருவத்தில் பழகிவிட்டால் மேலும் பயண் தரும் இத்தகைய வாய்ப்பு கிடைத்தால் அனைவருக்கும் மகிழ்ச்சி.

  2. ஆர்பிட் ரீடர் பள்ளி மாணவர் பருவத்தில் பழகிவிட்டால் மேலும் பயண் தரும் இத்தகைய வாய்ப்பு கிடைத்தால் அனைவருக்கும் மகிழ்ச்சி.

உங்கள் கருத்தை உள்ளிடுங்கள்