அன்று எரிச்சல் வாக்கியம், இன்று இனிமை வாசகம்

செல்போனைக் கையில் வைத்திருக்கும் பார்வையற்றவர்
செல்போனைக் கையில் வைத்திருக்கும் பார்வையற்றவர்

சிறுவயதுமுதல் திரையரங்கமோ, தொலைக்காட்சியோ நான் பார்க்கும் திரைப்படங்களின் காட்சி விவரணையாளர் பெரும்பாலும் என் அம்மாதான். எப்போதாவது அப்பா. பொதுவாக நானாக எந்தக் காட்சி குறித்தும் கேட்டது கிடையாது. பார்த்த படங்கள் அதிகம் இசைஞானியின் இசையில் என்பதால், பின்னணி இசையைக் கொண்டே காட்சிகளை ஊகிப்பதே எனது பழக்கம். துல்லியமாக விளக்கிச் சொல்லிவிட முடியாது என்றாலும், பெரும்பாலும் உள்ளுணர்வால் நான் திரைப்படங்களைப் புரிந்துகொள்வது பின்னணி இசைவழியாகத்தான். மற்றபடி, கதையோடு ஒன்றி அடுத்து என்ன நிகழப்போகிறதோ என்ற பரிதவிப்பில் காட்சிக்குக் காட்சி தன்னளவிலேயே புலம்பத் தொடங்கிவிடுவார் அம்மா அதுதான் எனக்கான விவரணை. “ஐயோ! வாரானே. டேய் உன் பின்னாடிதாண்டா நிக்கிறான். கையில கத்தி வச்சிருக்கான். டேய் குத்தப் போறான் டா. ஓடிடு டா.” பெரும்பாலான விவரணைகள் பதட்டத்திலிருந்து பிறப்பவையாக இருக்கும்.

சில நேரங்களில் அம்மாவுக்கு உவக்காத காட்சி என்றாலும் ஆரம்பித்துவிடுவார். “ஐய நல்லாக் கொஞ்சு, மடில போட்டுக்கிட்டியாக்கும். போதும் போதும் ரொம்ப சினுங்காதீக. முடியும் ஆளும் அழகையும் பாரு” இப்படி நாயகன் நாயகி கூடலை விவரித்துக் கொண்டிருப்பார். அப்பா நான் ஏதாவது சந்தேகம் கேட்டால் விளக்கம் சொல்வார். “அது எப்படிப்பா கமலுக்குசமையல்க்காரன்தான் ஸ்பைனு தெரிஞ்சது?” டீவியில் விக்ரம் படம் பார்த்துக்கொண்டிருந்தபோது அப்பாவிடம் இதைக் கேட்டேன். அப்போது நான் எட்டாம் வகுப்புப் படித்துக்கொண்டிருந்ததாக நினைவு.

“கமல் விசாரிக்கிறத கேட்டுக்கிட்டிருந்த சமையல்க்காரன் பதட்டத்துல டீத்தூள தன் சட்டைல உதறிட்டான்”. அப்பா சொன்னார்.

அவரும் சில நேரங்களில் நான் எதுவும் கேட்காமலேயே எனக்குக் காட்சிகளை விவரிப்பது உண்டு. அதாவது, எனக்குப் புரியாத காட்சி அது என அவர் புரிந்துகொண்டால் நிச்சயம்அதைத் தானாக முன்வந்து விளக்குவார். அதுகூட என்னிடம் சொல்வதாக இல்லாமல் அவரே சொல்லிக்கொள்வார்.

நாயகன் படத்தில், கமல் முதன்முதலில் சரண்யாவைச் சந்திக்கும் காட்சி. “கொஞ்சம்சீக்கிரம் விட்டுடுறீங்களா?”சரண்யா கேட்பார்.

“ஏன் வெளில போய்சம்பாரிக்கப் போறியா?” இது கமல்.

“இல்ல, நாளைக்குக் கணக்குப்பரிட்ச…” அப்போது இளையராஜாவின் மெல்லிய பின்னணி இசை ஒலிக்கும். சரண்யா பாவாடை தாவணி போட்டிருப்பதாக அப்பா தனக்குத்தானே சொல்லிக்கொள்வதாக எனக்கும் சொன்னார்.

நான் 10ஆம் வகுப்புப் படித்துக்கொண்டிருந்தேன். ஒருநாள் இரவு பொதிகைத் தொலைக்காட்சியில் நானும் அப்பாவும் அலாவுதீனின் அற்புத விளக்கு படம் பார்த்துக்கொண்டிருந்தோம். படத்தின் ஒரு காட்சியில் ரஜினி புதைமணலில் மாட்டிக்கொள்வார். கயிற்றைப் பயன்படுத்தி ஸ்ரீப்பிரியா அவரைக் காப்பாற்றுவார். இருவருக்கும் இடையே கொஞ்சம் கசமுசா நடந்துவிடும். “கதையால ஓட்ட முடியாத படத்த கயிறு போட்டு இழுக்கிறான்களே!” அப்பா புலம்பினார். நான் புரிந்துகொண்டேன். இது நான் மறக்கவே முடியாத அவரின் சாதுரியமான காட்சி விவரணைகளில் ஒன்று.

திரைப்படம்தான் என்றில்லை, தான் காணும் காட்சிகளை எனக்கு விவரிக்கிற நண்பனோ, நண்பியோ வாய்க்க வேண்டும் என்பது எனது இளமைப் பிராயத்தின் பெருங்கனவாகவும் கற்பனையாகவும் இருந்தது. பெரும்பாலும் அது நிறைவேறவே இல்லையென்றுதான் சொல்லவேண்டும். நான் கேட்டால் சொல்வதற்கு நிறைய பேர் இருக்கிறார்கள். ஆனால், என் ரசனையைப் புரிந்துகொண்டு விவரிக்க இதுவரை எவரும் சிக்கவில்லை. ஒருநாள், வாழ்வின் ஒரே ஒரு நாள், என் கனவும் கற்பனையும் நிறைவேறியது. நான் வெளிப்படுத்தாமலேயே அதை நிறைவேற்றி வைத்தார் ஒரு அன்புத்தாய்.

எனக்குத் திருமணமாகி, நானும் விசித்ராவும் மட்டும் புதுக்கோட்டையில் வசித்தோம். அப்போது எங்களுக்கு வாசிப்பாளராக எங்கள் வீட்டுக்கே தினமும் ஒருமணி நேரம் வந்து வாசித்துக் காட்டுவார் புதுக்கோட்டை நகரைச் சேர்ந்த வங்கிப் பணியாளர்

திருமதி. விஜயசாந்தி பிரகாஷ்.

திரு. பிரகாஷ் சார் அவர்கள்தான் தினமும் தனது மனைவியை எங்கள் வீட்டில் கொண்டுவந்து விடுவதும், பின் கூட்டிச் செல்வதுமாக இருந்தார்.

அப்போது கமலின் விஸ்வரூபம் பெரும் சர்ச்சைகளைத் தாண்டி புதுக்கோட்டை சாந்தி திரையரங்கில் வெளியாகியிருந்தது. நான் கமல் படங்கள் விரும்பிப் பார்ப்பவன் என்பது விஜயா மேடத்துக்கு நன்றாகவே தெரியும். அதற்காகவே, முதல்நாள் அவர் தன் கணவரோடு அந்தப் படத்தை ஒருமுறை பார்த்துவிட்டு, அடுத்தநாள் எங்கள் இருவரையும் அழைத்துப் போனார். இருக்கையில் எங்கள் இருவருக்கும் நடுவே அவர் அமர்ந்துகொண்டு, காட்சிக்கு காட்சி இடவலம் திரும்பித் திரும்பி எங்களிடம் விவரித்தபடியே இருந்தார். அப்படி ஒருவர் விவரிக்கவில்லை என்றால், ஒரு பார்வையற்றவரால் அந்தப் படத்தையெல்லாம் ரசிப்பது இயலாத ஒன்று. இந்த இடத்தில் திருச்சியில் பரியேறும் பெருமாள் பார்த்தபோது, டைட்டில் கார்ட் தொடங்கி, ஒவ்வொரு காட்சியையும் விவரித்தபடியே இருந்த நண்பர் சுப்பிரமணியன் அவர்களையும் நன்றியோடு நினைவுகூர்கிறேன்.

தெய்வத் திருமகள் திரைப்படம் குரல்வழிக் காட்சி விவரணைகளுடன் சக்க்ஷம் அறக்கட்டளையால் டிவிடியில் வெளியிடப்பட்டுள்ளது. குலேபகாவள்ளி, கபாலீ, சைக்கோ ஆகிய திரைப்படங்களை காட்சி விவரணைகளுடன் சென்னையில் சில தன்னார்வ அமைப்புகள் திரையிட்டிருக்கின்றன. அதேபோன்ற முயற்சிகளை புதுக்கோட்டையில் செய்ய வேண்டும் என அவ்வப்போது நினைத்துக்கொள்வேன். ஆனால், அதற்குள் தொழில்நுட்பத்தின்  பெரும் பாய்ச்சலாக வளர்ந்திருக்கிற ஓடிடி தளங்களில் ஒலிவடிவக் காட்சி விவரணைகள் வரத் தொடங்கியிருப்பது பெருத்த மகிழ்ச்சியைத் தருகிறது.

பாவக்கதைகள் போஸ்டர்
பாவக்கதைகள் போஸ்டர்

இப்போது

பாவக்கதைகள் தொடர்

மற்றும்

ஜகமே தந்திரம் திரைப்படமும்

நெட் ஃப்லிக்ஸ் ஓடிடி தளத்தில்

ஒலிவழிக் காட்சி விவரணைகளுடன் (audio description) வெளிவந்திருப்பதாக

விரல்மொழியரைச்

சேர்ந்த நண்பர் யோகேஷ் மற்றும் பாலகணேசன் இருவரும் விரல்மொழியர் வாட்ஸ் ஆப்தளத்தில் சொல்லக் கேட்டேன். நண்பர் முனைவர் முருகானந்தன் அவர்களும் அவற்றைப் பார்க்குமாறு எனக்கு ஆர்வமூட்டினார். சந்தா செலுத்தி, இரண்டு நாட்களாக நடைபயிற்சி செய்கையில், சாப்பிடுகையில் என இடைமறிக்கும் ஃபோன் கால்களினூடே பார்த்து முடித்தேன்.

ஜகமே தந்திரம் போன்ற படங்களுக்கு நிச்சயம் ஒலிவழிக் காட்சி விவரணை தேவைப்படுகிறது. இல்லையென்றால், ஜோக்கர் பொம்மையின் அந்த திருப்புமுனைக் காட்சியை பார்வையற்றவர்கள் புரிந்துகொள்ள இயலாது. பாவக்கதைகள் தொடரிலும் கூட, எல்லாம் கதைவழிப்பட்டதே ஆனாலும், தங்கத்தின் பெயரை சர்தார் கல்லில் தீட்டியிருக்கும் செய்தியை ஒலிவழிக் காட்சி விவரணை இன்றி எப்படி அறிய முடியும்?

ஜெகமே தந்திரம் போஸ்டர்
ஜெகமே தந்திரம் போஸ்டர்

7G படத்தில் சோனியா அகர்வாலுக்கு வழங்கப்பட்ட அதே குரல்தான் நெட் ஃப்லிக்ஸ் தளத்தில் ஜெகமே தந்திரம் மற்றும் பாவக்கதைகளுக்கு ஒலிவழிக் காட்சி விவரணைக்கான குரலாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பது கேள்விஞானத்தின் வழியே விளைந்த எனது அறிய கண்டுபிடிப்பு. நன்றாகவே இருந்தது. கதாப்பாத்திரங்களின் பேச்சில்லா முகபாவனைகள் மற்றும் செயல்களை அவற்றிற்கான பின்னணி இசைகளுக்கிடையே குரல்வழி விவரணை நமக்கு எடுத்துச் சொல்கிறது. மிகமிகச் சில இடங்கள் தவிர, இந்த வசதி கதாப்பாத்திரங்களின் உரையாடல்களில் (dialogues ) எங்குமே குறுக்கிடுவதில்லை.

நான் முன்பே சொன்னதுபோல, திரைப்படங்களின் பின்னணி இசையைப் பெரிதும் ரசித்துப் படக்காட்சியைப் புரிந்துகொள்ள முயற்சிப்பவன் என்பதால், எனக்கு இந்த வசதி அவ்வளவு உணர்வுபூர்வ அனுபவத்தை வழங்கவில்லை. ஆனாலும், போகப்போக பழகிவிடும் என்றே தோன்றுகிறது. ஏனென்றால், எண்பதுகள் போலல்லாமல், தற்போது திரைமொழி அதிகம் காட்சிகளின் நுண்மையைச் சார்ந்ததாக மாறிவருவதால் ஒலிவழிக் காட்சி விவரணைகள் காலத்தின் கட்டாயம். தவிர, இங்கு எதற்கும் எவருக்கும் போதிய அவகாசம் இல்லாத போட்டிச் சூழலில் இது பார்வையற்றோருக்கான தற்சார்பு மற்றும் பொழுதுபோக்கு சமத்துவத்தைப் பெரிதும் வழங்குகிறது. இனி பார்வையற்றோரும் நேர்த்தியான திரைவிமர்சனங்கள் எழுதமுடியும் என்பதால் உளம் மகிழ்ந்து, கைகள் தட்டி வரவேற்கிறேன். அப்படியே ஒரு சின்ன விண்ணப்பம்.

கொஞ்சம் கொஞ்சமாக எண்பதுகள் மற்றும் தொன்னூறுகளின் முக்கியமான தமிழ்ப் படங்களையும் இந்த வசதிக்குள் கொண்டுவர முயற்சிக்கலாமே.

ஒலிவழிக் காட்சி (audio description) குறித்து போதிய அளவில் விளக்கியிருக்கிறேன் என்று நினைக்கிறேன். மேலும் இதுபற்றி கூடுதலாக அறியவும், உரையாடவும், இன்று காலை 11 மணிக்கு விரல்மொழியர் மின்னிதழால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள க்லப் ஹவுஸ் உரையாடலில் பங்கேற்கலாம்.

பங்கேற்க விரும்புபவர்கள்,

https://www.clubhouse.com/event/M6126X3z
இந்த இணைப்பைச் சொடுக்கி அனைவரும் கலந்து கொள்ளுங்கள்.

***

ஒலிவழிக் காட்சி விவரணைகளை எப்படிப் பெறுவது?

நெட் ஃப்லிக்ஸ் தளத்தில் நீங்கள் ஒரு திரைப்படத்தைத் தேர்ந்தெடுத்து ப்லே செய்தால், அதுவரை கிடைமட்டமாக (portrait) இருந்த மொபைலின் திரை படுக்கை வசமாக (landscape) மாறிவிடும். பிறகு, நீங்கள் ஸ்வைப் செய்து, change subtitles and audio source language என்ற மெனுவில் தட்டி, உங்கள் தெரிவை மேற்கொள்ளலாம் அல்லது அணைக்கலாம்.

எல்லாம் சரி, இந்த ஒரே பின்னணிக் குரலைப் பல கதாநாயகிகளுக்கும் பயன்படுத்தும் வழக்கத்தை எப்போ மாத்தப்போறீங்க தமிழ்ப்பட டைரக்டர்ஸ். அந்தக் காலம் மாதிரி, ஜெயசுதா, ஜெயந்தி, ஸ்ரீவித்யா;

ஸ்ரீதேவி, ஸ்ரீப்பிரியா, ரேவதி, ராதிகானு எப்போ வெரைட்டி காட்டப்போறீங்க?

குக்கூ படத்தில சொல்றமாதிரி இதுக்கும் ஒரு ஸ்ட்ரைக் பண்ணனும்போல.

“படம் பார்த்துக் கதை சொல்லுக”

சிறிய வகுப்புகளில் என்னை மிகவும் எரிச்சலூட்டிய வாக்கியம் இன்று இதமாக இனிக்கிறது காரணம் தொழில்நுட்பம். கொண்டாடுவோம்.

***

ப. சரவணமணிகண்டன்

தொடர்புக்கு: vaazhgavalluvam@gmail.com

சவால்முரசு

3 thoughts on “அன்று எரிச்சல் வாக்கியம், இன்று இனிமை வாசகம்

 1. ஒலி விவரனை பற்றிய அருமையான விளக்கப் பதிவு சார்!
  நான் முதல் முதலில் ஒலி விவரனையோடு பார்த்தப் படம் ஹரிதாஸ். இப்படத்திர்க்கு BBC தமிழோசை சாய்சுதா அவர்கள் ஒலி விவரிப்பு கொடுத்திருந்தார். அதர்க்கு பின்னரும் பல ஒலி விவரனை படங்களை சென்னை, மதுரை போன்ற ம்ாநகரங்களில் பார்த்திருக்கிறேன். ஆனால், ஜகமே தந்திரத்தில் விளக்கிய ஒலி விவரனை போல் யாரும் இவ்வளவு தெளிவாக விளக்கியது கிடையாது. தமிழில் ஒலி விவரனைக்கு எபிலிட்டி ஃபவுண்டேஷனுக்கு பிறகு அதிகம் பங்காற்றியவர்கள் என ரேடியோ மிர்ச்சியைச் சொல்லுவேன். மிர்ச்சியிடம் மட்டுமே 10 படங்களுக்கு மேல் இருக்களாம் என நினைக்கிறேன். இருதியாக: 7G ரைன்போ காலனி நடிகையின் குரல் ஜகமே தந்திரம் குரலோடு ஒத்து போவதாக எனக்கு தெரியவில்லை. ஜகமே தந்திரத்தில் ஒலி விவரனை கொடுத்தவரது குரலை சில ஆவனப் படங்களிலும், ஹாலிவுட் தமிழ் டப்பிங்கிலும்ிதர்க்கு முன்பு கேட்டிருக்கிறேன்.

  Like

 2. உங்களில் கட்டுரை மிகவும் அருமை வர்ணனை பற்றிய விளக்கம் மிகவும் அருமையாக இருந்தது வாழ்த்துக்கள் நன்றி.

  Like

 3. கட்டுரை மிக தெளிவாக ஒரு பார்வையற்றவனின் உணர்வை பிரதிபலித்தது.

  Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s