அதிர்ச்சி, வேதனை

வெள்ளைச்சாமி
வெள்ளைச்சாமி

அடுத்தடுத்த நாட்களில் இருவேறு இறப்புச் செய்திகள். நேற்று முன்தினம் என் உடற்கல்வி ஆசிரியரின் மரணம். எதிர்பார்த்தது, மூப்பு வழிப்பட்டது என்பதால் மனதில் அத்தனை தாக்கம் இருக்கவில்லை. ஆனால் நேற்று என்னிடம் படித்த, தற்போதுதான் புதுக்கோட்டை பார்வைத்திறன் குறையுடையோருக்கான அரசு நடுநிலைப்பள்ளியில் எட்டாம் வகுப்பு முடித்திருக்கிற மாணவன் வெள்ளைச்சாமி ஊரணியில் விழுந்து இறந்தான் என்ற செய்தி மிகுந்த அதிர்ச்சியையும் மன வேதனையையும் தருகிறது. உண்மையில், தன் ஆசிரியரைவிட தன்னிடம் படித்த மாணவனின் இறப்பு மிகுந்த துக்கத்தைத் தரும் விடயம் என்பதை உணர்கிறேன். ஒரு தந்தையின் புத்திர சோகத்திற்கு ஒப்பானதாக இருக்கிறது. அதிலும் ஒவ்வொரு ஆசிரியரும் அறிதல் புரிதல் திறன்களில் ஒளிர்கிற, தங்களால் தெரிந்துகொள்ளப்பட்ட மாணவர்கள் என்ற பட்டியலை மானசீகமாகச் சுமப்பார்கள். அந்தப் பட்டியலின் முன்வரிசையில் தன் வெண்பற்கள் காட்டிச் சிரித்து நிற்பவன் வெள்ளைச்சாமி.

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி வட்டம் வேங்கடகுளம் அருகிலிருக்கிற காடையாந்தோப்பு எனும் சிறு கிராமத்தைச் சேர்ந்த ஏழைக் குடும்பம் அவனுடையது. வேங்கடகுளத்திலிருக்கிற ஒரு கிறித்துவ அரசு உதவிபெறும் பள்ளியில் ஆறாம் வகுப்புப் படித்துக்கொண்டிருந்தவனை அவன் அப்பா அம்மாவிடம் நேரி் போய் பலமுறை பேசி, பள்ளிக்கு அழைத்து வந்தோம். அவன் குறைப்பார்வையுடைய (low-vision) மாணவன். கண்ணாடி உதவியால் அருகிருப்பவற்றை அறிந்துகொண்டிருந்தான். கண்ணாடியைக் கழற்றினால் அவன் ஒரு முழுப் பார்வையற்றவனாகிவிடுவான். மொத்தப் பார்வையும் எப்போதுவேண்டுமானாலும் போய்விடும் சாத்தியங்கள் கொண்டவன்.

 ஆறாம் வகுப்பில் சேர்ந்தவன், முதலில் அழுதுகொண்டே இருந்தான். பிறகு வீட்டுக்குப் போய்த் திரும்பும் காலங்களில் மட்டும் அழுவான். பின் அதுவும் இல்லை என்றானது. பிரெயில், கணக்கு சிலேட், கணினி என எல்லாவற்றையும் மிக வேகமாகக் கற்றுக்கொண்டான். குறைப்பார்வை அதற்கு ஒரு முக்கியக் காரணி என்றாலும், எவற்றையும் மிக எளிதில் உள்வாங்கிக் கொள்ளும் திறமையை அவன் பிறவியிலேயே பெற்றிருந்தான் என்பதும் அவனுக்குக் கைகொடுத்தது.

கிடத்தப்பட்டிருக்கும் வெள்ளைச்சாமியின் உடல்
கிடத்தப்பட்டிருக்கும் வெள்ளைச்சாமியின் உடல்

ஒல்லியான நெட்டை உருவம். ஆனால், “நா சொல்லல, அவுகதேன் சொன்னாக” கீச்சுக்குரல் பேச்சில்  புதுக்கோட்டை மண்வாசம் தூக்கலாக இருக்கும். பள்ளிக்கு வந்த புதிதில், மறுப்போ, ஆமோதிப்போ எதுவானாலும் எல்லாவற்றிற்கும் தலையாட்டல்தான். இது சாதாரணப் பள்ளிகளில் சில ஆண்டுகள் படித்துவிட்டு சிறப்புப் பள்ளிகளுக்கு வரும் மாணவர்களிடம் சிலகாலம் நீடித்துக் காணப்படும் பொதுவான பழக்கம். வாய் திறந்து அவனைப் பதில்சொல்லப் பழக்குவதே அவன் பொருட்டில் எங்களுக்கான முதல்சவாலாக இருந்தது.

மூன்றாண்டுகள் கழிந்தும்கூட அவன் தனக்குப் பார்வைக்குறைபாடு இருப்பதாகப் பெரிதும் உணரவே இல்லையோ என்றுதான் தோன்றுகிறது. தன்னந்தனியாக, ஊரணிக்குச் சென்றிருக்கிறான். நிச்சயம் வழுக்கியோ, கால் இடரியோதான் மூழ்கியிருக்க வேண்டும். பொதுவாகவே, பார்வையற்றோருக்கான சிறப்புப் பள்ளிகளில் தொடக்கத்திலிருந்தே படிக்கும் மாணவர்களுக்கு தங்கள் இயலாமை குறித்த போதிய புரிதல் எளிதில் வந்துவிடுகிறது. எதிலும் அதிக எச்சரிக்கையுடன் இருப்பார்கள். அது குறைப்பார்வையுடைய (low-vision) மாணவர்களானாலும் சரி. ஆனால், சாதாரணப் பள்ளியிலிருந்து இடைநிலை வகுப்புகளில் சிறப்புப் பள்ளிக்கு இடம்பெயரும் மாணவர்களிடம் அந்தப் புரிதல் அவ்வளவு எளிதில் கைகூடுவதில்லை. அதுவரை அவர்கள் கண்ட, கூடி விளையாடிய அந்ந்த உலகத்துக்கே அவர்களின் மனம் அவர்களை இட்டுச்செல்கிறது. பார்வையற்றோருக்கான கல்விப்புல ஆராய்ச்சிகளில் இத்தகைய உளவியல் ரீதியிலான கோணங்களையும் இணைத்துக்கொண்டு ஆராய்வது முக்கியம் எனக் கருதுகிறேன். “தம்பி பார்த்து” என எவராவது சொன்னால், நான் உட்பட பெரும்பாலான பார்வையற்றவர்கள் மனதுக்குள்ளேயோ அல்லது எள்ளலாகவோ அந்த வார்த்தையைக் கடப்பதுண்டு. ஆனால், “பார்த்து” என்கிற வார்த்தை வெறும் பார்வை சம்பந்தப்பட்டது மட்டும் இல்லை, அது ஒரு எச்சரிக்கைக்கூறு என்பதும் இப்போது மண்டைக்குள் உறைக்கிறது.

ஒவ்வொரு விடுமுறைக்கும் அவன் அம்மா அவனை கூட்டிச் செல்ல வரும்போது, “அம்மா வெள்ளைச்சாமி ரொம்பவே நல்லாப்படிக்கிறான். அவனப் படிக்க மட்டும் வச்சிருங்க. உங்க கண்ணு தெரிஞ்ச மூத்த பையனைக் காட்டிலும் ரொம்பப் பெரியாளா வருவான். அவன்தான் உங்க குடும்பத்தோட தலையெழுத்தையே மாத்தப்போறான் பாருங்க” என நான் அடிக்கடி சொல்வதுண்டு. அந்தத் தலையெழுத்து என்கிற வார்த்தைதான் இப்போது மனதுக்குள் மாறி மாறி எதிரொலித்துக்கொண்டே இருக்கிறது.

நான் சிறப்புப் பள்ளிகளில் பணியில் சேந்து இந்த 13 ஆண்டுகளில் விபத்து காரணமாக இழந்திருக்கிற இரண்டாவது மாணவன் வெள்ளைச்சாமி. முதல் மாணவி கந்தர்வகோட்டை வட்டம் வெள்ளாளவிடுதியைச் சேர்ந்த கஸ்தூரி என்ற முழுப் பார்வையற்ற சிறுமி. மிகத் தாமதமான தனது 10 வயதில் இரண்டாம் வகுப்புப் படித்துக்கொண்டிருந்த கஸ்தூரி ஒரு விடுமுறைக்குப் போனவள் திரும்ப வரவே இல்லை. நாங்களும் அடிக்கடி அவளின் தந்தைக்குப் போன் செய்து அழைத்துவரும்படி கூறினோம். சிலநாட்கள் ஊம் என்றவர், பிறகு ஊள்ளூர்் பள்ளியிலேயே சேர்த்துவிட்டதாகச் சொல்லி, எங்கள் தொடர்பையே துண்டித்துவிட்டார்.

ஓரிரு ஆண்டுகளுக்குப் பிறகு வேறோரு மாணவியைத் தேடி அந்த ஊருக்குச் சென்றபோதுதான் கஸ்தூரி ஆடு மேய்த்துக்கொண்டிருந்தபோது, கிணற்றில் தவறி இறந்துவிட்டதாக ஊரில் சொன்னார்கள். நாங்கள் பதறிவிட்டோம். தொடர்ந்து கஸ்தூரியைப் பற்றி சொன்ன அந்தக் கிராமத்துப் பெண்ணின் அதே வார்த்தைகளைச் சொல்லித்தான் இப்போது நானும், புதுக்கோட்டை பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் வெள்ளைச்சாமியை நினைத்துக் கதறிக்கொண்டிருக்கிறோம்.

அந்தப் பெண் சொன்னாள்.

“ஸ்கூலில இருந்திருந்தா கஸ்தூரி இந்நேரம் உயிரோட இருந்திருப்பா.”

***

ப. சரவணமணிகண்டன்

சவால்முரசு

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s