அலுவலர் மாற மாற நடைமுறையிலும் சில மாற்றங்கள். நாளுக்குநாள் விரிவடைந்த நிலையிலே பணிகள்.

பள்ளிப் படிப்பு பார்வையற்றவர்கள் மட்டும் பயிலும் சிறப்புப் பள்ளி; பட்டப் படிப்பு மகளீர் மட்டும் பயிலும் அரசு கலைக் கல்லூரி; இவ்விரு சாராரைத் தவிர வேறோரிடமும் அவ்வளவாய் பழகியதில்லை;
அரசு அலுவலகத்திற்கு அடியெடுத்துவைத்த அனுபவம் இல்லை;
தந்தையை இழந்தபின் வாட்டிய வறுமை துடித்தது.
தமிழ்நாடு பணியாளர் தேர்வாணைய தேர்வை நோக்கி, இரண்டாம் ஆண்டின் இறுதி காலங்களில் தேர்விற்குத் தயாராக அடைந்தோம் அன்றாடம் அண்ணா நூற்றாண்டு நூலகம், வார இறுதி நாட்களின் வாசிப்பு மையங்கள் என
போட்டித்தேர்வு பாடமும் கல்லூரி பாடமும் மனதில் பதிய போட்டிபோட்டுக் கொண்டிருந்தது.
ஓரளவு தேர்வெழுதி ஓராண்டு ஆனபின்பு, கலந்தாய்வில் கலந்துகொள்ளுமாறு கடிதம் கிடைத்தது.
வேண்டி கேட்ட இரு துறைகள் வெட்டிக்கொண்டு போகையில், விளையாட்டாய் கேட்டதிலும் கிட்டியது வேலைவாய்ப்புத்துறை.
மூன்றாம் ஆண்டு தேர்வு முடித்து ஏப்ரல், மே மாதங்கள் நகர, ஜூன் மாதமும் மலர்ந்தது. உடன் பயின்றோரெல்லாம் உயர்கல்விக்கு வித்திட நான் மட்டும் எனோ அஞ்சல்க்காரர் அழைப்புமணிக்காய் செவிகளைத் தீட்டி, வீற்றிருக்க, வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறையிலிருந்து மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு ஆணை பெறப்பட்டது.
பெற்ற அவ்வாணையை ஏந்தி சென்றேன் அவ்வலுவலகத்திற்கு. தங்களால் பேச்சு மற்றும் செவித்திறன் குறையுடையோரிடம் உரையாட இயலுமா என்ற பேச்சு ஒருபுறம். இருக்கும் ஒவ்வொருவரின் கையைப் பிடித்து தொட்டுப் பார்த்து யாரென்று தெரிந்துகொள்ளுங்கள் என்ற கேலிப்பேச்சு மறுபுறம்.
இவை இரண்டிற்கும் சற்றும் சளைக்காமல் இறுதினங்களில் கிடைத்ததொரு குறிப்பாணை.
“தங்களால் மேற்கொள்ள இயன்ற பணியிடம் இவ்வலுவலகத்தில் ஏதுமில்லை
அவை எழும் நிலையில் தங்களுக்குத் தெரிவிக்கப்படும்” என்ற வரிகள் அடங்கிய குறிப்பாணையது.
வாசிக்கச் சொல்லிக் கேட்டுக்கொண்டிருக்கும்போதே கண்ணீர் முட்டியது.
இரு வாரங்கள் கடந்து மீண்டும் துறை தலைமை அலுவலகத்திலிருந்து ஆணை ஓன்று வந்தது என்னைத் தேடி. பிறிதொரு அலுவலகத்திற்கு பணியமர்த்தப்படும் ஆணை அது.
கிடைக்கப்பெற்ற பனி ஒதுக்கீடு ஆணையைக்கொண்டு, இதே ஜூன் மாதத்தின் 21ஆம் நாள், ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு அடைந்தேன் அவ்வலுவலகத்தை ஒரு பார்வையுள்ளவரோடு.
மேற்கூறிய புறக்கணிப்புக் குறிப்பாணையை வரைவுசெய்து அனுப்பியிருந்த அதெ அலுவலர் மீண்டும் இவ்வலுவலகத்தில்.
பணியேற்பு கடிதம் எழுதித் தந்து, சான்றிதழ்கள் எல்லாம் காண்பித்துவிட்டு சென்றோம் அவ்வலுவலரின் அரைக்கு.
“உங்களைக்கொண்டு அலுவலகப் பணிகளை மேற்கொள்வதெவ்வாறு போன்ற குழப்பங்களால் இரவெல்லாம் உறக்கமில்லை. பகிர்ந்துகொண்டேன் எனது கணவரிடம். அவர் அதற்க்கு உடன் வருபவரிடம் உரையாடிப் பார் என்றார். ஆகையால், உங்களை கேட்கிறேன், என்னவெல்லாம் இவர்களால் இயலும்?” என்று கேட்க, “அடிப்படைக் கணினி அறிவு உண்டு. அதுதொடர்புடைய பணி ஏதெனும் இருப்பின் மேற்கொள்ள இயலும் என்றார்” என்னுடன் வந்த பார்வையற்றவரை மணமுடித்திருந்த அந்த ஜூலியட் மங்கள ராணி.
ஒரு பணியும் செய்யாது ஒரு வாரகாலம், தொலைபேசி அழைப்பிற்கு மட்டும் பதிலளித்து இரு வாரகாலம், அலுவலக மின்னஞ்சலுக்குப் பதிலளிப்பது ஒருவார காலம், இவ்வாறே என்னுடன் மடிக்கணினியும் பயணித்தது பலகாலம்.
வழங்கப்பட்ட வேலைவாய்ப்பு வலைதளப் பயனர் குறியீட்டைக் கொண்டு மெல்ல மெல்லப் பயன்படுத்திப் பார்த்து, வருகை புரியும் பதிவுதாரருக்கு பதிவுகள் மேற்கொண்டேன்.
நாள்தோறும் மடிக்கணினியை சுமப்பதற்கு சோர்வாகிப் போகவே, அலுவலகக் கணினியில் திரைவாசிப்பான் நிறுவ அழைத்தேன் ஐயா ஷங்கர் அவர்களை.
வந்து பார்த்தால் அனைத்தும் linux இயங்குதள கணினி. மடிக்கணினியை சுமந்தபடியே நகர்ந்தது சில காலம். அலுவலகக் கணினி ஒன்று பழுதடைந்து போகவே, Windows இயங்குதளமாக மாற்றப்பட்டது அக்கணினி. திரைவாசிப்பான் நிறுவப்பட்டு கைவசம் ஆனது அக்கணினி.
இதற்கிடையே ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது இளநிலை உதவியாளருக்கான எழுத்துப்பணியும். விடுப்பு விண்ணப்பம்கூட எழுதித்தர பணியாளர் ஒருவர் மறுக்கவே, எனக்கு ஆணையிடப்பட்ட எழுத்துப் பணிகளுக்கு உதவுமாறு பணித்தார் அலுவலர் அலுவலக உதவியாளரை.
புதிதாய்ப் பிறப்பித்த திட்டத்தின் பெயரால் கிடைத்தது அலுவலகத்திற்கு கணினியும், அச்சு இயந்திரமும். அதைக்கொண்டு கொஞ்சம் கொஞ்சமாய் ஆங்கிலத் தட்டச்சுப் பணிகளையும், சில காலம் கழித்து தமிழ் தட்டச்சுப் பணிகளையும் என் சொந்த மற்றும் அலுவலக தட்டச்சுப் பணிகளைத் தானே தயார் செய்து, தன்னிறைவுகொண்டேன்.
பதிவேடுகள் சிலவற்றை அச்சுப் பிரதியில் பராமரிக்க அனுமதியும் பெற்றென்.
அலுவலர் மாற மாற நடைமுறையிலும் சில மாற்றங்கள். நாளுக்குநாள் விரிவடைந்த நிலையிலே பணிகள். சென்னையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் மின் இயந்திரங்கள் அனைத்தும் பழுதடைய, வாலாயப் பணிகளுக்கு மடிக்கணினி மீண்டும் என்னுடன் பயணிக்க, பின்னர் கிடைத்தது Windows இயங்குதள புதிய கணினிகள்.
அனைத்திலும் திரைவாசிப்பான் நிறுவி, ஒவ்வொரு இருக்கைக் கோப்பு, அறிக்கை போன்றவற்றை படிக்க முயன்று, அதிலும் சற்று ஏமாற்றமே மிஞ்சியது.
பாமினி, வானவில் அவ்வையார், ELCOT ANSI என்ற விதவித பெயரில் எழுத்துருக்கள்
எவையும் தமிழ் எழுத்தாய் செவிக்கு எட்டவில்லை.
தமிழ் எழுத்துரு மாற்றி வலைதளத்தைப் பயன்படுத்தி, மின்னணுக் கோப்புகளைப் படித்துவிட்டு, தேவையானபோது அவ்விருக்கைப் பணிகளையும் மேற்கொள்ளத் தொடங்கினேன்.
உதவியாளராய்ப் பதவி உயர்வு பெற்று பிறிதொரு அலுவலகத்தில் பணியமர்த்தப்பட்டபோது மீண்டும் புறக்கணிக்கப்பட்டேன் பார்வை இன்மையால்.
முன்பு என்னுடன் பணியாற்றிய அலுவலர் ஒருவர் தலைமை அலுவலகத்தை அணுகிக் கோரியதால் மீண்டும் அதே அலுவலகத்திற்குப் பணியமர்த்தப்பட்டேன்.
சம்பளப் பட்டி தயார்செய்வது, பரிந்துரைப் பணிகள் என அலுவலக ஆணைகள் மாறிக்கொண்டே வந்தது.
பல நாட்கள் கழிந்து, மீண்டும் புறக்கணிக்கப்பட்ட அதே அலுவலகத்தில் நிர்வாகப் பிரிவு உதவியாளராகப் பணி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
முன்பு ஆற்றிய பணிகள் அனைத்தும் கைகொடுக்க, Epayrol முடக்கப்பட்டு IFHRMS நடைமுறைப்படுத்த பட்டியல் தயாரிப்பதிலும், வேலைவாய்ப்பு வலைதளப் பணிகளிலும், முன்மாதிரி எனத் துறையில் பலர் அணுகும்போதும்,
அவர்களது பாராட்டு என் செவிக்கு எட்டும்போது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியே.
பதிவேடுகள் ஆய்விற்குச் சமர்ப்பிக்கும் வேளையிலும், அணுகுதலுக்கு ஏற்றதாக அமையாத சில வலைதளங்களாலும், ஒருங்குறி எழுத்துருவாள் அமையாத சில கோப்புகளாலும் உள்ளத்தில் சற்று சுணக்கம் வந்துதான் போகிறது.
இவையனைத்தும் மாறினால் அமைச்சுப்பணி இன்னும் சுகமே!
இது எனது ஒன்பது ஆண்டுகால அனுபவமே!
இன்னும் முப்பதாண்டுகள் செம்மையாக கழியனுமே !
***
செல்வி. K. ஷியாமலா
தொடர்புக்கு: shyamalak1991@gmail.com
‘கைவசமானது விரைவில் வேண்டும்!’ ஒரு பார்வையற்ற மாணவியின் அனுபவப் பகிர்வு
ஆரம்பத்தில் நீங்கள் படும் துன்பம் அனைத்தும் உங்களுக்கு ஒரு நல்ல அடித்தளமாக அமையும் இவை அனைத்திற்கும் நல்ல பலன் தொடர்ந்து கிடைக்கும் மென்மேலும் வளர்ச்சி பெற வாழ்த்துகள்.
ஆரம்பத்தில் நீங்கள் படும் துன்பம் அனைத்தும் உங்களுக்கு ஒரு நல்ல அடித்தளமாக அமையும் இவை அனைத்திற்கும் நல்ல பலன் தொடர்ந்து கிடைக்கும் மென்மேலும் வளர்ச்சி பெற வாழ்த்துகள்.