“ஈரோடு அரசு சிறப்புப் பள்ளியைத் தரம் உயர்த்துங்கள்.” தமிழ்நாடு முதல்வருக்கு மாற்றுத்திறனாளிகள் கோரிக்கை

,வெளியிடப்பட்டது

ஈரோடு பள்ளி, சொந்தக் கட்டடத்தில் இயங்கிவரும் உண்டு உறைவிடப் பள்ளியாகும். போதுமான கட்டட வசதி, சரியான மாணவர் மற்றும் ஆசிரியர் எண்ணிக்கை எனத் தன்னிறைவிலும் தரத்திலும் குன்றாத பள்ளியாக செயல்பட்டு வருகிறது.

ஈரோடு பள்ளியின் முகப்புப்படம்
ஈரோடு பள்ளி முகப்பு

பதினோராம் வகுப்பு மாணவர்கள் சேர்க்கை அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளிலும் தொடங்கப்பட்டுவிட்டது. மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்புப் பள்ளிகளிலும் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. ஆனால், ஈரோடு செவித்திறன் குறையுடையோருக்கான அரசு உயர்நிலைப் பள்ளி மேல்நிலைப்பள்ளியாகத் தரம் உயர்த்தப்பட வேண்டும் என்கிற கோரிக்கை மட்டும் கடந்த பல ஆண்டுகளாகவே ஏனோ அரசால் கண்டுகொள்ளப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது.

சுமார் 80ற்கும் மேற்பட்ட செவித்திறன் குறையுடைய மாணவ மாணவிகள் தங்கிப் பயிலும் உண்டு உறைவிடப் பள்ளியான ஈரோடு செவித்திறன் குறையுடையோருக்கான அரசு உயர்நிலைப்பள்ளியை மேல்நிலைப்பள்ளியாகத் தரம் உயர்த்த வேண்டும் என மாணவர்கள், பெற்றோர்கள், மற்றும் ஆசிரியர்கள் எனப் பல்வேறு தரப்பிலும் தொடர்ச்சியாக அரசுக்குக் கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது. ஆனால், கோரிக்கையை நிறைவேற்றுவதற்கான சிறு முயற்சியையும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில்  இதுவரை தொடங்கப்படவே இல்லை என்பது மிகுந்த வேதனையளிப்பதாக உள்ளது.

தமிழ்நாட்டில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் கட்டுப்பாட்டில், தற்போது செவித்திறன் குறையுடையோருக்கென்று அரசால் நடத்தப்படும் சிறப்புப் பள்ளிகளில் 3 நடுநிலைப்பள்ளிகள், 5 உயர்நிலைப்பள்ளிகள் மற்றும் இரண்டே மேல்நிலைப் பள்ளிகள் முறையே தஞ்சாவூர் மற்றும் தர்மபுரியில் என மொத்தம் 10 பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. 11ஆம் வகுப்பு மாணவர் சேர்க்கையின்போது, ஈரோடு பள்ளியில் படித்த மாணவர்கள் ஏற்கனவே தஞ்சாவூர் மற்றும் தர்மபுரி மேல்நிலைப்பள்ளிகளில் இடம் கிடைக்காமல் சென்னை வரை சென்று தங்கள் மேல்நிலைக்கல்வியை அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயில வேண்டிய சூழல் பல ஆண்டுகளாக நீடிக்கிறது.

அரசு சிறப்புப் பள்ளிகளில் பயிலும் மாற்றுத்திறனாளி மாணவர்கள் வறுமையுடன் போராடும் குடும்பப் பின்னணியைச் சேர்ந்தவர்கள் என்பதால், நெடுந்தொலைவு சென்று, விடுதிக்கட்டணம், கல்விக்கட்டணம் செலுத்திப் படிப்பது பல மாணவர்களுக்கு இயலாத ஒன்றாக இருக்கிறது. எனவே, நிறைய மாணவர்கள் தங்களின் பள்ளிப் படிப்பை 10ஆம் வகுப்போடு முடித்துக்கொள்வதையும் காணமுடிகிறது.

இத்தகைய சூழலில்தான், ஈரோடு செவித்திறன் குறையுடையோருக்கான அரசு சிறப்புப் பள்ளியை உயர்நிலையிலிருந்து மேல்நிலைப்பள்ளியாகத் தரம் உயர்த்த வேண்டும் என்கிற கோரிக்கை கடந்த 2016ஆம் ஆண்டுமுதல் முன்வைக்கப்பட்டு வருகிறது. இதோ! இந்த நிதியாண்டில், அடுத்தாண்டில் எனக் காலங்கள் ஒடிக்கொண்டிருக்கின்றனவேயன்றி உத்தமமாய் ஒன்றும் நடைபெறவில்லை. ஒவ்வொரு ஆண்டும் மாணவர்கள் “இந்தாண்டு இந்தாண்டு” என சிலநாட்கள் அங்கலாய்ப்பதும் பிறகு வேறுவழி பார்ப்பதும் வாடிக்கையாகிவிட்டது.  

ஈரோடு பள்ளி, சொந்தக் கட்டடத்தில் இயங்கிவரும் உண்டு உறைவிடப் பள்ளியாகும். போதுமான கட்டட வசதி, சரியான மாணவர் மற்றும் ஆசிரியர் எண்ணிக்கை எனத் தன்னிறைவிலும் தரத்திலும் குன்றாத பள்ளியாக செயல்பட்டு வருகிறது.

எனவே, மாண்புமிகு முதல்வர் அவர்கள், தற்போதைய நிலையிலேயே பள்ளியில் பதினோராம் வகுப்பு மாணவர் சேர்க்கையை மேற்கொள்ள ஆணையிட்டு, மாணவர்களின் சேர்க்கைக்கு ஏற்ப பிற்காலங்களில் பள்ளிக்கான தேவையைக் கணக்கிட்டு, பணியிடங்களை அனுமதிக்கலாம். முன்பும் இதே நடைமுறையைப் பயன்படுத்தி, புதுக்கோட்டை பார்வைத்திறன் குறையுடையோருக்கான அரசுப்பள்ளி தொடக்க நிலையிலிருந்து நடுநிலைப்பள்ளியாகத்  தரம் உயர்த்தப்பட்டு செயல்பட்டு வருகிறது. அதனை முன்னுதாரணமாகக் கொண்டு, 2021-22 இந்தக் கல்வியாண்டே ஈரோடு செவித்திறன் குறையுடையோருக்கான அரசு உயர்நிலைப்பள்ளியை மேல்நிலைப்பள்ளியாகத் தரம் உயர்த்தி, மாற்றுத்திறனாளி மாணவர்களின் கல்வி பாதுகாப்பை உறுதி செய்திட வேண்டும் என மாண்புமிகு முதல்வர் அவர்களைப் பணிந்து கேட்டுக்கொள்கிறோம்.

***

இவர்கள்,

ஹெலன்கெல்லர் மாற்றுத்திறனாளிகள் நலச்சங்கம்

பகிர

4 thoughts on ““ஈரோடு அரசு சிறப்புப் பள்ளியைத் தரம் உயர்த்துங்கள்.” தமிழ்நாடு முதல்வருக்கு மாற்றுத்திறனாளிகள் கோரிக்கை

  1. Good news,

    I am Gobi from Erode.

    I feeling to teacher sign language interpreter full people students learning benefit.. access helpful

  2. Good news,

    I am Gobi from Erode.

    I feeling to teacher sign language interpreter full people students learning benefit.. access helpful

உங்கள் கருத்தை உள்ளிடுங்கள்