அந்த பதினைந்து நாட்கள்: ஒரு நம்பிக்கைப் பதிவு

,வெளியிடப்பட்டது

“முதல் அலை வந்தபோதே எப்போதாவது தொண்டை கரகரப்பு ஏற்பட்டால் கோவிட் வந்துவிட்டதோ என நினைப்பு வந்துபோனதுண்டு. அதாவது ஒரு பாம்பு மீது நமக்கிருக்கிற இயல்பான பயம்போல. ஒரு கயிறை மிதித்தாலே திடுக்கிடுவோமே அப்படி.

கரோனா வைரஸ்
கரோனா வைரஸ்

கடந்துவிட்ட மே மாதத்தின் பெரும்பாலான நாட்கள் கொடுமையானவை. தினம் எவரேனும் ஒரு பார்வையற்றவர் மாநிலத்தின் ஏதோ ஒரு மூலையில் கரோனா பெருந்தொற்றுக்குப் பலியாகிவிட்டார் என்ற செய்தி வந்துகொண்டே இருந்தது. சில வேதனையளிக்கும் செய்திகள் என்றால், சில பதட்டம் கொள்ளும்படியான நன்கு அறிந்த நெருக்கமானவர்களின் மரணங்கள். இறந்தவர்களில் பெரும்பான்மையினர் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள். தன் குடும்பத்தின் துன்பம் துடைத்தூன்றும் ஒற்றைத் தூண்கள்.

நாளைக்கு ஒரு இறப்புச் செய்தியை சவால்முரசு புலனக்குழுவில் அறிவித்துக்கொண்டிருந்த நாங்கள், இறப்பு தரும்அதிர்ச்சிக்குக் கொஞ்சமும் குறையாத  அப்படி ஒரு செய்தியை எதிர்பார்க்கவில்லை. அதுதான் பூவிருந்தவல்லி பார்வைத்திறன் குறையுடையோருக்கான அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஆங்கிலப் பட்டதாரி ஆசிரியராகப் பணிபுரிபவரும், ஹெலன்கெல்லர் மாற்றுத்திறனாளிகள் நலச்சங்கத்தின் தலைவருமான எங்களின் பேரன்பிற்குரிய சித்ராக்கா கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார் என்ற செய்தி.

மே 12 பிற்பகல் சவால்முரசு புலனக்குழுவில் இந்தச் செய்தியை அவர் பகிர்ந்ததிலிருந்து நல்லெண்ண மன்றாட்டுக் குரல்ப்பதிவுகள் வந்தவண்ணம் இருந்தன. அதற்குச் சற்றும் குறையாதபடிக்கு, மே 27 அன்று தான் தொற்றிலிருந்து மீண்டுவிட்டதாக அவர் வழங்கிய குரல்வழிச் செய்தி கேட்டு ஒட்டுமொத்தக் குழுவும் குதூகலம் அடைந்தது. பலர் தங்கள் மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொண்டதோடு, சித்ராக்காவின் தொற்றுகால அனுபவத்தை ஒரு குரல்ப்பதிவாகத் தரும்படி கேட்டுக்கொண்டார்கள். வாசகர்களின் வேண்டுகோளுக்கு ஏற்ப, அவரின் அனுபவங்கள் ஒரு தொகுப்பாக இங்கே.

சித்ரா
சித்ரா

“முதல் அலை வந்தபோதே எப்போதாவது தொண்டை கரகரப்பு ஏற்பட்டால் கோவிட் வந்துவிட்டதோ என நினைப்பு வந்துபோனதுண்டு. அதாவது ஒரு பாம்பு மீது நமக்கிருக்கிற இயல்பான பயம்போல. ஒரு கயிறை மிதித்தாலே திடுக்கிடுவோமே அப்படி.

மே மாதம் 8ஆம் தேதி தொண்டை கரகரப்பும், கடுமையான உடல்வலி சலி இருந்தது. போட்டித் தேர்வுகளுக்காக தினந்தோறும் நடக்கிற பயிற்சி வகுப்பில் ஹோஸ்ட் கொடுத்துவிட்டு தூங்கிவிட்டேன். வகுப்பு முடிந்ததும் இருக்கும் அறிகுறிகளை அப்பாவிடம் சொன்னேன். கோவிட் இருக்குமோ என அவருக்கு இலேசான ஐயம். அம்மா உடனே கற்பூர வல்லி இலைகளைப் பறித்து, அதில் நிறைய மிளகு வைத்து, நன்கு அதைச்சுருட்டி மெல்லும்படி  கொடுத்தார்கள். பிறகு கொஞ்சம் உடல் சரியாக இருந்ததுபோல் தெரிந்தாலும், அடுத்தநாள் மீண்டும் அதே அவதி. டெஸ்ட் எடுத்துக்கொள்ளும்படி மணிகண்டன் சொன்னான். முதலில் லட்சியம் செய்யவில்லை. காரணம், ஏப்ரல் 28ற்குப் பிறகு நான் எங்குமே வெளியே செல்லவில்லை. ஆனால், தொடர் உடல்வலி மற்றும் சலி காரணமாக செ்வாய்க்கிழமை கரோனா பரிசோதனை செய்துகொண்டேன். புதன்கிழமை மே 12 ஆம் தேதி பாசிட்டிவ் என முடிவு வந்தது. என்னிடம் செய்தியைச் சொன்ன அப்பாவை வெகுநாட்களுக்குப் பிறகு சில நிமிடங்கள் உறைந்து நின்றவராகப் பார்த்தது அப்போதுதான்.

எனக்கும் அதிர்ச்சி. உள்ளுக்குள் பதட்டம். ஒரு பார்வை மாற்றுத்திறனாளியாக மருத்துவமனை சென்று தனியாக இருப்பதெல்லாம் முடியாதே என்கிற தவிப்பு. அடுத்து என்ன செய்வது? யாரிடம் என்ன கேட்படு எனத் தெரியவில்லை. ஆனால், என்னைவிட மிக வேகமாக என் வீட்டில் வேலைகள் நடந்தன.

மதுரையில் இருக்கும் என் மாமா மகள் ஹெப்சிபாவிடம் பேசினோம். அவள் சொன்னபடி, தொலைபேசி வழியாகவே ஒரு டாக்டரின் அறிவுரையைப் பெற்றோம். உட்கொள்ள வேண்டிய மாத்திரைகள், கடைபிடிக்க வேண்டிய உணவுமுறைகள் என எல்லாவற்றையும் அக்காமகள் மோனிஷா குறிப்பெடுத்துக்கொண்டாள். என் நிமித்தம் என் குடும்பத்தில் அனைவரும் கரோனா பரிசோதனை செய்துகொண்டார்கள். பயிற்சி வகுப்புகளை மணிகண்டனும் ஷியாமலாவும் பார்த்துக்கொள்வதாக தைரியம் சொன்னார்கள். என் சங்கத் தோழமைகள் அதிர்ச்சியடைந்தபோதும், அதை வெளிக்காட்டிக்கொள்ளாமல் தொடர்ந்து சங்கக்குழுவில் எனக்கு தைரியம் சொல்லிக்கொண்டே இருந்தார்கள். குறிப்பாக நண்பர் விஜய் ஆனந்த் தினமும் வாட்ஸ் ஆப் குரல் செய்தி மூலம் என் உடல் நலம் விசாரித்தபடியே இருந்தார்.

எனக்காக எங்கள் அடுக்ககத்தின் மாடியிலிருந்த  என் அக்கா வீட்டின் ஒரு தனியறைவேகவேகமாகத் தயாரானது. மிளகுப் பால், சுக்குமல்லி காப்பி, சுடுதண்ணீர் என மூன்று பிலாஸ்குகள் என் அறையில் வைக்கப்பட்டன. அறைமணி நேரத்திற்கு ஒரு தடவை இவற்றில் ஒன்றை குடிக்க வேண்டுமென ஹெப்சி அறிவுறுத்தியிருந்தாள். காய்ச்சல், சலி இருக்கிறதா என சோதனை செய்ய மாநகராட்சி ஊழியர்கள் தினமும் எங்கள்ள் தெருவிற்கு வந்து செல்வது வழக்கம். அப்படி வரும் ஊழியரிடம் எனக்கு கரோனா தொற்று உறுதியானதை் சொன்னதும் அவர் பதினைந்து நாட்களைக் கணக்கிட்டு என் பெயரோடு 26.மே.2021 என எழுதி ஸ்டிக்கரை எங்கள் வீட்டு முகப்பில் ஒட்டிவிட்டு சென்றுவிட்டார்.

அடுத்து வந்த 15 நாட்களும் உணவை மருந்தாய், மருந்தை உணவாய் அமைத்தும், சமைத்தும் தர அடுக்கலையில் மோனிஷா உள்ளிட்ட குழு சுற்றிச் சுழலத் தொடங்கியது.

தினமும் காலையில் எழுந்ததும் பல் துலக்கி, உப்பு மஞ்சள் கலந்த சுடு தண்ணீரில் வாய் கொப்பளித்தேன். கல் உப்பு, மஞ்சள் கலந்த வென்னீரில் ஆவி பிடித்தேன். ஆவி பிடித்தபிறகு உடல் ரொம்பவே சோர்வாக இருக்கும். அதன்பிறகு மிளகு, இஞ்சிச்சாறு, தேன் மூன்றும் கலந்த மருந்து. அதைச் சாப்பிட்டு முடிக்கும்போதே வேகவைத்த முட்டை வந்துவிடும். அடுத்து, தண்ணீரில் ஊறவைத்த பாதாமும் காய்ந்த திராட்சை கூடவே பேரீச்சை. அதற்கடுத்து நெல்லிக்காய் கசாயம். இவை எல்லாமே 10,20 நிமிட இடைவெளிகளில் சாப்பிட்டு ஒரு குட்டித் தூக்கம். ஒருவாரம் இப்படிக் கடந்தபோதும் உடல் களைப்பாகத்தான் இருந்தது.

காலை டிஃபன் முடிந்து 11 மணிக்கு சாத்துக்குடி ஜூஸ். 12 12.30 மணிக்கு வெஜ் அல்லது நான்வெஜ் சூப் கொடுப்பார்கள். அடுத்த ஒரு மணிநேரத்தில் மத்திய உணவு.

மாலை வேகவைத்த கொண்டைக்கடலை அல்லது பாசிப்பயறு. அடுத்து கபசரக் குடிநீர் அல்லது கற்பூரவல்லி, வெற்றிலை, மிளகு கசாயம். காலை மற்றும் இரவுச் சாப்பாட்டுக்க்உப்பின் டாக்டர் பரிந்துரைத்தபடி முதல் ஐந்து நாட்களுக்கு மட்டும் மாத்திரைகள் எடுத்துக்கொண்டேன்.

தொடர்ந்து ஐந்து நாட்கள் மத்தியம் அசைவ உணவு எடுத்துக்கொண்டதால், சரியான செரிமானம் இல்லாமல் கஷ்டப்பட்டேன். அப்போது டிசிஎஸ்ஸில் பணிபுரியும் நண்பர் மணிகண்டன் ஜீரகம் போட்டுக் கொதிக்க வைத்த நீரையே எப்போதும் குடிக்கச் சொன்னார். அதற்கு நல்ல பலன் கிடைத்தது. இந்தத் தருணத்தைப் பயன்படுத்தி அவருக்கு நன்றி சொல்லிக்கொள்கிறேன்.

தினமும் இரண்டு அல்லது மூன்று முறை ஆவி பிடித்தேன். காலையும் மாலையும் உடலின் தட்பவெப்பம் மற்றும் ஆக்ஸிஜன் அளவை மோனிஷா உதவியுடன் தொடர்ந்து கண்காணித்தேன். அறைக் கதவைத் தட்டி எனக்கு அவள் குரல் கொடுக்கும்போது நான் மாஸ்க் போட்டுக்கொள்வேன். மற்ற நேரங்களில் நான் மட்டுமே என்பதால் சாதாரணமாக இருப்பேன். என் துணிகளை அறைக்குப் பக்கத்தில் இருந்த துவைக்கும் இயந்திரத்தில் நானே போட்டு எடுத்துக்கொண்டேன். மற்றபடி உணவுப் பாத்திரங்களை நானே கழுவி வெளியே வைத்துவிடுவேன். என் அக்கா உணவு பாத்திரங்கள் மற்றும் என் சார்ந்த பொருட்களைக் கையாளும் ஒவ்வொரு முறையும் தன்னுடைய கைகளைச் சுத்தம் செய்வது, மாஸ்க் அணிந்து என்னை எதிர்கொள்வது என கவனமாக இருக்கும்படி தொடர்ந்து அக்காவை நான் அறிவுறுத்திக்கொண்டே இருந்தேன்.

முதல் இரண்டு நாட்கள் இரவு மட்டும் காய்ச்சல் கண்டது. மாத்திரை போட சரியானது. முதல் அல்லது இரண்டாவது நாள் எனக்கு திகைப்பு ஏற்பட்டபோது பயந்துவிட்டேன். பின்னர் அறையில் காற்று குறைவாக இருப்பதே காரணம்எனச் சொன்ன  மோனிஷா ஒரு டேபில் ஃபேன் வைத்ததில் அதுவும் இல்லாமல் போனது.

ஒவ்வொரு முறை உணவிற்குப் பிறகு சில நிமிடங்கள் மட்டுமே உட்கார முடியும். அதனால் கொஞ்ச நேரத்தில் படுத்துவிடுவேன். சாப்பிட்டு முடித்து சில நிமிடங்கள் நடக்குமாறு அக்கா சொன்னாள். எனக்கு அது மிகச் சிரமமானதாக இருந்தது. எல்லா நாளும், வென்னீர் வைத்து உடம்பு மட்டும் நனையக் குளித்தேன். கடைசி 15ஆம் நாள் தலை குளித்தேன்.

மூன்றாம் நாள் காலை உணவின்போது, எனக்கு சுவை தெரியவில்லை. இட்லிக்கு வைத்தது சட்டினியா சாம்பாரா என நான் குழம்பிக்கொண்டிருக்க, “குருமா நல்லா இருந்துச்சா” என அக்கா கேட்டதில் சிரிப்பும் அழுகையும் கூடியே வந்தது. பிறகு கொஞ்சம் கொஞ்சமாக சுவை மீண்டது. முதல் ஐந்து நாட்களுக்கு வாசம் தெரியவில்லை.

ஒரு வாரத்தில் உடல் சோர்விலிருந்தும் பிற சின்னச் சின்ன அவதிகளிலிருந்தும் மீண்டேன். அந்த ஒரு வாரத்தில் விஷயம் அறிந்து எனக்கு ஃபோன் செய்தவர்களின் எண்களை எடுத்துப் பேசத் தொடங்கினேன்.

குடும்பம்
குடும்பம்

இந்தப் பதினைந்து நாட்களும் என்னுடைய குடும்பம் நான் குணமாகி வந்துவிட வேண்டும் என்பதில் மிகுந்த சிரத்தை எடுத்துக்கொண்டார்கள். அப்பாவும் அம்மாவும் மூப்பு காரணமாக மாடிக்கு வரவில்லை என்றாலும், என் நினைப்பாகவே இருந்தார்கள் என்பதை அவர்கள் ஃபோனில் பேசியதிலிருந்தே தெரிந்துகொண்டேன். இந்தநாட்களில் அம்மாவுக்கும் வேறு உடல் உபாதைகள் அதிகமானபோதும், அவர் எனக்காக அல்லும் பகலும் ப்ரேயர் செய்துகொண்டிருந்தார்.

தினமும் இரவு குடும்ப ஜெபத்தில் நான் ஃபோன் மூலம் பங்கெடுத்துக்கொண்டேன். என் அக்கா பி்ள்ளைகளான மெடோனா, மோனிஷா கிரிஸ்டோபர் மூவரும் இரவு பிரேயர் முடிந்ததும், என்னோடு தினமும் அரைமணி நேரமாவது உரையாடிவிட்டுதான் படுப்பார்கள். அம்மாவுக்கு உடல்நிலை சரியில்லை என்பதை நான் அறியாதபடிக்கு அவர்கள் பார்த்துக்கொண்டதோடு, எனக்கு நிறைய தைரியம் சொல்லிக்கொண்டே இருந்தார்கள் என் செல்லங்கள்.

எத்தனை நம்பிக்கை தருவதாக இருந்தாலும், சமூக ஊடகங்களில் வரும் கரோனா குறித்த அனைத்துவிதமான செய்திகளையும் தவிர்ப்பது நல்லது என முடிவு செய்தேன். இந்த நாட்களில் நான் யூட்டூபில் மட்டும் தினம் ஒரு படம் பார்த்தேன் அவ்வளவுதான். எப்போதாவது வாட்ஸ் ஆப் பார்ப்பதுண்டு. அவ்வப்போது ஏற்படும் உடல்ப் பின்னடைவுகள் நமக்குள் தேவையற்ற அச்சத்தை விதைக்கும். அதற்கு நாம் இடம் கொடுக்கக்கூடாது. நமக்கு மிகுந்த நம்பிக்கை தருகிற ஒரு நட்போடு அடிக்கடி ஃபோனில் பேசி, தனிமை தருகிற மிரட்சியைக் கடக்கலாம்.

தொற்று உறுதியானபோது நான் அச்சமும் கலக்கமும் கொண்டது உண்மைதான். ஆனால், என்னைத் தூக்கிச் சுமக்கிற குடும்பம், என்மீது அன்புகொண்டிருக்கிற நிறைய நண்பர்கள், உலகின் ஏதேதோ மூலைகளிலிருந்து எனக்காக வேண்டியும், வாட்ஸ் ஆப் வழி எனை வாழ்த்திய என் நல விரும்பிகள் என அத்தனை இன்னல்களுக்குமிடையே ஒரு அன்புசூழ் உலகை இத்தனை நெருக்கத்தில் உணரச் செய்த கரோனா தொற்றுக்கு நன்றி சொல்லத்தான் வேண்டும். கரோனாவை முற்றும் முழுதாய் அழிக்கிற மருந்துகள் நிச்சயம் எதிர்காலத்தில் வரலாம். ஆனால், எக்காலத்தும், எந்த ஒரு வாதைக்கும் இருப்பு குறையாமல் நம்மிடம் இருக்கும் ஒரே அருமருந்து அன்பு. அந்த அன்பு என்னை மீட்டதுபோல் எல்லோரையிம் மீட்க நானும் ஜெபித்துக்கொண்டே இருப்பேன்.”

***

தொகுப்பு: ப. சரவணமணிகண்டன்

தாய் தந்தையை இழந்து நிற்கும் பார்வை மாற்றுத்திறனாளி சன்முகம்: தாயுள்ளம் கொண்ட தமிழக முதல்வரின் தயை வேண்டுகிறோம்

பகிர

Be the first to leave a comment

உங்கள் கருத்தை உள்ளிடுங்கள்